- திருப்பூர் நகரில் நடுநாயகமாக அமைந்திருக்கும் வீரராகவ பெருமாள் கோவில் மிகவும் பழமையானதாகும். இந்த கோவிலில் வீரராகவ பெருமாள், கனகவல்லித்தாயார் மற்றும் பூமிதேவித்தாயாருடன் எழுந்தருளியுள்ளார். ஆதியில் இந்த கோவிலுக்கு மைசூர் மகாராஜாவால் நிலம் அளிக்கப்பட்டு, பின்னர் வந்த ஆங்கில அரசால் 29 இனாம் சாசனங்கள் படி, நிலங்கள் கோவிலுக்கு உரிமையாக்கப்பட்டன. 1847–ம் ஆண்டில் திப்பு சுல்தான் காலத்தில்தான் நிலங்கள் பெருவாரியாக மானியமாக இந்த கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பாண்டவர்கள் வழிபட்ட தலம்:
- மகாபாரத காலத்தில் பஞ்சபாண்டவர்கள் இந்த கோவிலுக்கு வந்து, வீரராகவ பெருமாளை வழிபட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. பெருமாளின் அடியார்களில் ஒருவரான ராமானுஜர் இந்த கோவிலுக்கு வந்து வணங்கி மங்களா சாசனம் செய்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
வீரராகவ பெருமாள்:
- ஸ்ரீகனகவல்லித்தாயார் தனி சன்னிதி யில் அமர்ந்த நிலையிலும், ஸ்ரீபூமாதேவி தாயார் நின்ற கோலத்திலும் தனி சன்னிதியில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் கள். அடுத்த நிலையில் உற்சவர் மற்றும் சேனாநாயகர் தரிசனம் செய்கிறோம். தற்போது இரு சன்னிதிகளுக்கும் புதிய விமானங்கள் கட்டப்பட்டுள்ளன. அடுத்து மூலவர் சன்னிதியை அடைகிறோம். ஸ்ரீவீரராகவ பெருமாள் பிரமாண்டமாக காட்சியளிக்கிறார். அவரின் திருக்கோலம் நம் கண்களை கடந்து நமது நெஞ்சினை நிரப்புகிறது. குடையென விரிந்திடும் 5 தலை ஆதிசேஷன் பாம்பணை மீது பள்ளி கொண்ட பரமனை காண கண் கோடி வேண்டும். புயங்க சயனமாக தென் திசை சிரம் வைத்து, வடக்கு திசை திருப்பாதம் நீட்டி,மேற்கே முதுகு காட்டி, கிழக்கு திசையில் திருமுகம் காட்டி ஆனந்தமான நிலையில் தன்னை நாடி வரும் அடியவர்களுக்கு அருள் பார்வையால் ஆட்கொள்ளும் இந்த அற்புதக் கோலம் வேறு எந்த தலத்திலும் காண்பதரிது. நாடிவரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வீரராகவபெருமாளின் திருப்பாதங்கள் பத்ம பீடத்தில் வைத்திருக்கும் அமைப்பு தனிச்சிறப்பு கொண்டதாகும்.
- இந்த தலத்தின் ஆலய விருட்சங்கள் மகிழ மரமும், வில்வ மரமும் ஆகும். ஈசானியத்தில் இருக்கும் வில்வம் மிகப்பழமையானதாகும். சிவனுக்குரிய வில்வம் விஷ்ணு ஆலயத்தில் இருப்பது சிறப்பு மிக்கதாகும். மற்றொரு விருட்சமான மகிழ மரம் ஆலயத்தின் தென்புறத்தில் உள்ளது.
ராமானுஜர் வழிபட்ட திருத்தலம்:
- வைணவம் என்ற ஈடு இணையற்ற இறைத் தத்துவத்தை சாதாரண ஏழை எளியவருக்கும் எடுத்துரைத்து சமய புரட்சிக்கு வித்திட்டவர் ஸ்ரீமத் ராமானுஜர். உலகம் சத்தியம் பொய்யல்ல. மனிதன் வாழப்பிறந்தவன். கைங்கர்யமே அவனுடைய மோட்சத்துக்கான வழி என்பது அவர் தத்துவம். ‘வாழ்க்கை என்பது கனவல்ல. மனிதனுக்கென்று சில கடமைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன’ என்று அவர் கூறினார். இவரது தத்துவம் ‘விசிஷ்டா த்வைதம்’ எனப்படும். ‘ஞான மார்க்கத்துடன் பக்தி மார்க்கத்தை சேர்த்தால், எளிதில் பிரம்மத்தை உணரலாம்’ என்று போதித்தார். வேத சாஸ்திர நுணுக்கங்களையும், ரகசியங்களையும் திருக்கோட்டியூர் நம்பியிடம் கற்றுக்கொள்ள, 18 முறை நடையாய் நடந்தார். இறுதியில் அவற்றை பூரணமாக கிரகித்துக் கொண்டார்.
- சைவ சமய பற்றாளரான சோழ மன்னரின் ஆட்சி பீடத் தலையீடும், பூசல்களும், அவரை மைசூர் மேல் கோட்டைக்கு செல்ல தூண்டின. மைசூர் செல்லும் வழியில் ராமானுஜர் திருப்பூர் வீரராகவப் பெருமாள் சன்னிதியில் எழுந்தருளியதாக கூறப் படுகிறது. அவர் திருப்பாதம் பட்ட திருத்தலம் என்ற பெருமைக்கு உரியது இந்த ஆலயம்.
- கொங்கு வனப்பகுதியாக இருந்த இத்தலத்துக்கும், ராமாயண காவிய நாயகன் ராமபிரானுக்கும் மிகுந்த தொடர்பு உண்டு. ராமாயண காலத்தில் வாலியின் இருப்பிடமான, நொய்யல் நதியின் தென்பகுதி தற்போது ‘வாலிபாளையம்’ என்று அழைக்கப்படுகிறது. வாலியின் மனைவி தாரையின் இருப்பிடமே தாராபுரமானது. சுக்ரீவன் வழிபட்ட தலம் ஒன்று, சர்க்கார் பெரியபாளையத்தில் ‘சுக்ரீஸ்வரன் கோவில்’ என்ற பெயரில் உள்ளது.
🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🙏🙏🙏🙏
No comments:
Post a Comment