Search This Blog

Friday, 28 July 2017

ஸ்ரீ ஆண்டாள் கோவில் - ஸ்ரீவில்லிபுத்தூர்

  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. மேலும் பெரியாழ்வாரும்  ஆண்டாளும் அவதரித்த திருத்தலம். வில்லி என்ற வேடனின் காட்டை அழித்து கோவில் எழுப்பியதால் இந்த ஊருக்கு வில்லிபுத்தூர் என பெயர் அமைந்தது.
  • இங்கு மூலவர் பெயர் வடபத்ராசாயி. மூலவருக்கு இன்னொரு பெயர் ரெங்கமன்னார். மூலவர் சுயம்பு மூர்த்தி. ஸ்ரீதேவி பூதேவி அடிவருட பெருமாள் மூலஸ்தானதில் சயன கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள சக்கரத்தாழ்வார் சன்னதி மிகவும் பழமையானது.
  • ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த விஷ்ணு சித்தர் எனபவர் மதுரையில் நடந்த போட்டியில் பொற்கிழி பரிசு வெல்கிறார். பெருமாள் கருட வாகனத்தில் தோன்றி இந்த பரிசை அவருக்கு கிடைக்க செய்ததாக சொல்லப்படுகிறது. அப்பொழுது கண் முன்னே தோன்றிய பெருமாளின் அழகை பார்த்து பக்தர்கள் கண் பட்டு விடுமோ என அஞ்சி விஷ்ணு சித்தர் பெருமாள் பல்லாண்டு வாழ்வேண்டும் என வாழ்த்தி பாடுகிறார். இந்த பக்தியை மெச்சி திருமால் அவருக்கு நீரே பக்தியில் பெரியவர் என சொல்கிறார் . அன்று முதல் விஷ்ணு சித்தர் பெரியாழ்வார் என அறியபட்டார் என்பது கதை. இந்த திருபல்லாண்டு பாட்டு தான் உலகம் முழுவதும் உள்ள பெருமாள் கோவிலில் இன்றும் தினமும் பாடபட்டு வருகிறது. உலகில் எந்த மூலையிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்றாலும் தமிழில் பல்லாண்டு பாடல்களை கேட்கலாம். எல்லா பெருமாள் கோவில்களிலும் நடை திறப்பின் போது திருபல்லாண்டும் திருபாவையும் பாடுவதை கேட்கலாம். இவை இரண்டும் இயற்றிய பெரியாழ்வாரும் ஆண்டாளும் பிறந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்.
  • மகாலக்ஷ்மியே விஷ்ணு சித்தரின் வளர்ப்பு மகளாக ஆண்டாளாக அவதரித்ததாக  கருதப்படுக்கிறது. பெருமாள் மீது பக்தி கொண்ட ஆண்டாள் அவரையே மணக்க விரும்புகிறார். பெருமாளை மணக்க விரும்பிய ஆண்டாள் மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருக்கிறாள். பங்குனி உத்திரத்தில் ரெங்கமன்னார் ஆண்டாளுக்கு அருள் செய்து மணம் செய்து கொள்கிறார்.
  • உற்சவ ஆண்டாள் அணிந்த மாலை சித்ராபவுர்ணமியன்று மதுரை கள்ளழகருக்கும் திருப்பதி பிரம்மோத்சவத்தின் 5 ஆம் நாளன்று வேங்கடபதிக்கும் கொண்டு சென்று அணிவிக்கப்படுகிறது. அந்த மாலையுடன் ஆண்டாள் பட்டுபுடவையும் கிளியும் கொண்டு செல்லபடுகிறது. பெரியாழ்வார் வளர்த்த நந்தவனத்திலிருந்து கிடைக்கும் பூக்களை கொண்டே ஆண்டாளுக்கு மாலை கட்டப்படுகிறது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது ஆண்டாள் கொடுத்தனுப்பும் புடவையை அணிந்து கொண்டே ஆற்றில் இறங்குகிறார்.
  • ஆண்டாளுக்கு இன்னொரு பெயர் சூடி கொடுத்த சுடர் மங்கை. நந்தவந்த்தில் பூத்த மலர்களை கொண்டு தினமும் மாலைகள் செய்த பின்பு அதை தான் சூடி விட்டு பின்பு ஆழ்வாரிடம் கொடுத்து பெருமாளுக்கு சார்த்த கொடுத்து வந்தாள். இது தெரியாமல் ஆழ்வாரும் அந்த மாலையை தினமும் பெருமாளுக்கு அணிவித்து வந்தார் .ஒரு நாள் மாலையில் கோதையின் (ஆண்டாளின் இயற்பெயர்) முடி இருப்பதை பார்த்த ஆழ்வார் அதை விடுத்து வேறு மாலை கொண்டு போகிறார் . பெருமாள் உடனே கோதை சூடிய மாலையே வேண்டுமென கேட்கிறார் . இதை கேட்டு ஆழ்வார் கோதையை இறைவனுக்கு மணமுடிக்க காத்திருக்கிறார். ரெங்கமன்னார் ஸ்ரீரெங்கத்தில் வந்து சந்திக்க சொல்ல அங்கு சென்று ஆண்டாள் இறைவனுடன் ஐக்கியமாகிறாள். பெரியாழ்வாரின் வேண்டுதலுக்கு இணங்கி வில்லிபுத்தூரிலும் இறைவன் எழுந்தருளினார் என்பது தலவரலாறு.
  • 61 வகை மூலிகைகளில் தைலம் செய்து அதை, நல்லெண்ணெய், பசும்பால், நெல்லிக்காய்,தாழம்பூ,இளநீர் முதலான பல பொருட்கள் சேர்த்து ஏழுபடி எண்ணெயில் 40 நாட்கள் காய்ச்சி அந்த எண்ணெயையை மார்கழி மாதம் ஆண்டாள் எண்ணெய் காப்புக்கு பயன்படுத்துவார்கள். மார்கழி மாதம் 8 நாட்களுக்கு இதை ஆண்டாளுக்கு சார்த்துவார்கள். பின்பு அது பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய்க்கு சகல நோய்களையும் தீர்க்கும் சக்தியுள்ளதாக நம்பபடுகிறது.
  • தமிழக அரசின் முத்திரை சின்னமாக இருப்பது ஆண்டாள் கோவில் கோபுரம் தான். ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் தேர் தமிழகத்திலுள்ள கோவில் தேர்களிலயே மிகவும் பிரசித்தமான ஒன்று. மிகவும் பழமைவாய்ந்த இந்த கோவில் தேரில் அருமையான வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்கள் பல உள்ளது. 

பாபநாசம் ராமலிங்கசுவாமி கோயில்

  • சிவபெருமானுடைய திருக்கல்யாணத்தைத் தரிசிக்க கயிலாசம் சென்ற தேவர்கள், முனிவர்கள் ஆகியோர் கூட்டத்தைத் தாங்கமாட்டாது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது.அதைச் சமன் செய்யுமாறு திருவுளங்கொண்டு அகத்திய முனிவரை அழைத்து தென் திசைக்கு ஏகும்படிச் சிவபெருமான் கட்டளையித்தார், அதன்படி தென் திசையிலுள்ள பொதிய மலைக்கு எழுந்தருளீய அகத்தியருக்கு கையிலையிலிருந்த தம்முடைய திருக்கல்யாணக் கோலத்தைக் காட்சி கொடுத்தருளினார். தமிழ் முனிவரான அகத்தியருக்கு அம்மையும்-அப்பனும் திருக்காட்சி கொடுத்த இடம் பாபநாசம் என்னும் இத்தலத்தில் தான் என்பது இதின் சிறப்பாகும், பாபநாசத்திற்கு மேற்கே ஒரு மைல் தூரத்தில் உள்ள நீர்வீழ்ச்சியும் இதனால் 'கல்யாண தீர்த்தம்' என்று பெயர் பெற்றது. 
  • இங்கு அகத்திய முனிவருக்கு தனிக்கோயில் உள்ளது. அகத்தியர் கோயில் உள்ள இடம் பழைய பாவநாசம் என்றழைக்கப்படுகிறது. மலையுச்சியில் உற்பத்தியாகும் தாமிரபரணி சமபூமியில் இறங்குமிடமே பழைய பாவநாசமாகும். ஒவ்வொரு ஆண்டும் உள்ளூர் கோயிலில் நடைபெறும் திருக்கல்யாணத்தின் போது அகத்திய முனிவர் அவரது கோயிலில் இருந்து அழைத்து வரப்படுவார். அவர் வந்து சேர்ந்தபிறகு தான் அம்மையப்பர் திருக்கல்யாணம் நடைபெறும்.
  • அகத்திய முனிவரின் முதல் சீடர் உரோமச முனிவர் பிறவிப் பெரும் பயன் அடைவதைப் பற்றி அகத்தியரிடம் கேட்க, அவர் பாபநாசம் தொடங்கி தாமிரபரணி ஆறு செல்லும் பாதையில் மலர்கள் ஒதுங்கும் இடங்களில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபடுமாறு கூறினார். அவ்வாறு பூக்கள் சேர்ந்த இடங்களில் உள்ள சிவஸ்தலங்கள் நவ கைலாயத் தலங்கள் என்றும் திருநெல்வேலியைச் சுற்றி உள்ள நவக்கிரக தலங்கள் என்றும் பெயர் பெற்றன. அவற்றுள் பாபாநாசம் சூரியனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது.
  • திருப்புகழ் தலம்: இத்தல முருகப் பெருமான் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்றவர். நிருப்புகழில் இரு பாடல்கள் உள்ளன. இங்கு முருகர் ஒரு திருமுகம், நான்கு கரங்களுடன் வள்ளி தெய்வானையுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
  • இத்தலத்திற்கு அருகிலுள்ள விக்ரமசிங்கபுரத்தில் "நமசிவாயக் கவிராயர்" என்பவர் (ஸ்ரீமத் சிவஞான சுவாமிகளின் சிறிய தந்தையார்) வாழ்ந்து வந்தார். இவர் அம்பாள் உலகநாயகி மீது அளவிலா பக்தி கொண்டு வாழ்ந்து வந்தார். இவர் தினந்தோறும் அர்த்தசாமத்தில் பாவநாசத் திருக்கோயிலுக்குச் சென்று அம்பிகையைத் தொழுதுவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது பரவசத்தில் பக்திப் பாடல்களைப் பாடிகொண்டே வருவார். 
  • ஒரு நாளிரவு இவர் பாடியவாறே வீடு திரும்பும்போது அம்பாள் இவர் பாடல்களைக் கேட்டவாறே இவருக்குத் தெரியாமல் பின்தொடர்ந்தார். கவிராயர் தரித்திருந்த தாம்பூலத்தின் எச்சில் அவர் பாடி வரும்போது தெரித்து அம்பிகையின் மீது பட்டது. அக்கோலத்துடனேயே அம்பிகையும் கோயிலுக்கு எழுந்தருளினாள். மறுநாள் காலை அர்ச்சகர் அம்பாள் ஆடையில் படிந்திருந்த எச்சில் திவலைகளைக் கண்டு மனம் வருந்தி, மன்னனிடம் முறையிட, அரசனும் பிராயச்சித்தம் செய்யப் பணித்து, இப்பாதகச் செயலைச் செய்தவரைத் தண்டிப்பதாகக் கூறினான். 
  • அன்றிரவு மன்னன் கனவில் அம்பிகை தோன்றி, நடந்ததைக் கூறினாள். விழித்த மன்னன் மறுநாள் காலை கவிராயரை அழைத்து வரச்செய்து, அவருடைய பக்தியை அளவிட எண்ணி, அம்பாளின் கரத்தில் பூச்செண்டு ஒன்றை வைத்துப் பொன் கம்பிகளால் சுற்றிக்கட்டி, அப்பூச்செண்டு வருமாறு பாடக் கவிராயரைப் பணித்தான். அவரும் கலித்துறையில் அந்தாதி யொன்றை அமைத்துப் பாடினார். அம்பிகையின் கரத்தில் கட்டப்பட்டிருந்த பொன் கம்பிகள் கவிக்கொருச் சுற்றாக அறுந்து கவிராயரின் பெருமையை வெளிப்படுத்தியது.

காசி விஸ்வநாதர் கோயில் - தென்காசி


  • இந்த கோவில் சுமார் 700 ஆண்டு களுக்கு முன்பு கட்டப்பட்டது என்பதை கோவிலில் உள்ள கல்வெட்டுகள் மூலம் அறியப் படுகிறது. இந்த இடத்தை முன்பு ஆட்சி புரிந்த பராக்கிரம பாண்டிய மன்னன் தீர்த்த யாத்திரையாக வடக்கே உள்ள காசிக்கு புறப்படத் தயாரானார். 
  • அன்று இரவு அவரது கனவில் சிவபெருமான் தோன்றி, பக்தனே ! என்னைக் காண பல நூறு கல் கடந்து பயணம் செய்வதற்கு பதிலாக இங்கேயே ஒரு கோவில் எழுப்பினால், நான் வந்து அருள் புரிகிறேன். என் சன்னிதானம் அமையும் இடத்தை உன் அரண் மனையின் வாசலில் உள்ள எறும்புக் கூட்டம் வழி காட்டும்” என்று கூறி மறைந்தார். சுயம்புவாக சுவாமி தோன்றினார்
  • மன்னர் விழித்து எழுந்து அரண்மனை வாசலுக்கு சென்று பார்த்தபொழுது, முன்பு காணாத எறும்பு கூட்டம் சாரை, சாரையாக, சென்றது. அதைப் பின் தொடர்ந்து செல்கையில் சிற்றாறு நதிக்கரையில் செண்பக மரங்கள் அடர்ந்த காட்டில் ஒரு எறும்பு புற்று இருந்தது. அத்துடன் எறும்பு கூட்டம் நின்றுவிட்டது. அந்த இடத்தில் சுவாமி, சுயம்புவாக தோன்றினார். அதை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்து இந்த கோவிலை கட்டி முடித்தார்.
  • 1967-ம் ஆண்டு வரை கோபுரம் இல்லாமல் இருந்தது. 1990ம் ஆண்டு 9 அடுக்குகளுடன், 180 அடி உயரத் தில் கலை வேலைப்பாடுகளுடன் கட்டி முடிக்கப்பட்டு, கம்பீரமாக தோற்றமளிக்கின்றது. கோபுரத்தின் 9 கோணங்களிலிருந்தும் வீதியை காணும் அமைப்பும், அகலமான வீதியும், சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திலிருந்தும் சுவாமியைக் காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
  • 9வது அடுக்கில் ஒரு பால்கனி கட்டப்பட்டு அதிலிருந்து பார்த்தால் பச்சைப்பசேல் என்ற சுற்றுப்புறம் காண்பதற்கு ரம்மியமாய் உள்ளது. இக்கோவில் திரிகூட மலையின் அடிவாரத்தில் உள்ளது. (மூன்று மலைகள் சேர்ந்து இருப்பதால் திரிகூடம் என்று அழைக்கப்படுகிறது)
  • சுயம்புவான ஈசனார் லிங்க வடிவத்தில் கிழக்கு நோக்கிருக்கிறார். அருகில் பார்வதி தேவி உலகம்மனாக இருக்கிறார்.உடன் பாலசுப்ரமணியரும் உள்ளார்.
  • நெல்லை மாவட்டத்தில் உள்ள சிவபக்தர்கள்,தங்கள் குடும்பங்களின் நடக்கும் அனைத்து சுப காரியங் களுக்கும் இங்கு வந்து காசி விஸ்வநாதரை வணங்கி, ஆசி பெற்று செல்கின்றனர். அதனால் வாழ்க்கை வளம் பெறும், தொழில் வளம் உயரும், ஆரோக்கியம் பெருகும், வேலை வாய்ப்பு தேடுபவர்களுக்கு உகந்த வேலை கிட்டும், திருமணம் கை கூடும், புத்திரபாக்கியம் தருவார், இல்லற வாழ்க்கையில் நிம்மதி வந்து சேரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
  • இங்கு ஈஸ்வரனுக்கும், அன்னைக்கும் வஸ்திர வழிபாடு செய்து ஆராதிக்கின்றனர். மிகவும் அபூர்வமாக எல்லா தலங்களிலும், தெற்கு நோக்கி இருக்கும் துர்க்கா தேவி இங்கு மேற்கு நோக்கி இருக்கிறார். நாரதர், அகத்தியர், மிருகண்டு முனிவர், இந்திரன், வாலி, நந்தி ஆகியோர் வழிபட்ட தலம் என்கின்றனர். மூன்று முக்கிய காரணங் களுக்காக இத்தலம் கீர்த்தி பெற்றது. பூர்வஜன்ம பாவங்கள் நீங்குதல், தோஷ நிவர்த்தி, புத்திர பாக்கியம் பெறுதல் ஆகியவைகள் ஆகும்.
  • தீர்த்த குளங்களாக, காசி தீர்த்தம், சித்திர குளம், அன்னபூரணி தீர்த்தம், ஆனந்த தீர்த்தம் ஆகிய 4 தீர்த்தங்கள் இருக்கின்றது. சிற்றாறு நீர், கங்கைக்கு ஒப்பான சக்தி வாய்ந்ததாகும்.
  • இந்த கோவிலின் தல விருஷம் செண்பக மரம். இங்குள்ள சிற்பங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை என்று கூறப்படுகின்றது. குறிப்பாக, இரட்டை சிற்பங்களாகிய வீரபத்திரன்-வீரபாகு, இரண்டு தாண்டவ மூர்த்திகள், இரண்டு தமிழ் அன்னைகள், ரதி- மன்மதன் ஆகியவைகளும் மிகவும் நேர்த்தியான மஹாவிஷ்ணு, கம்பீரமான காளி தேவி அனைத்தும் வியக்கத்தக்க சிற்ப வேலைப்பாடுகள் கொண்டவைகள் ஆகும்.
  • மதுரை நகரைப் போன்று, இந்த கோவிலைச் சுற்றிலும் பல கோவில்கள் இருக்கின்றன. மேற்கு பிரகாரத்தில் மூலை விநாயகர் வெகு அழகாய் அமர்ந்து அருள் தருகிறார். பஞ்சலிங்க அய்யனார், மஹாலஷ்மி, சந்தன மாரீஸ்வரர், நடராஜ பெருமான், சண்டீஸ்வரர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளது.
  • அர்த்த மண்டபம், மணிமண்டபம், பஞ்ச பாண்டவர் மண்டபம், மஹா மண்டபம், இசை எழுப்பும் கல் தூண் மண்டபம் ஆகியவைகளும், பராக்கிரம பாண்டியன் சுவாமியை வணங்குவது போன்ற தத்ரூபமான சிலைகளும் காண்போரை வியக்க வைக்கும்.

நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி

  •  முன்னொரு காலத்தில் வேதபட்டர் என்கிற பட்டர் சிவபெருமானிடம் அதிக பக்தி கொண்டவராக திகழ்ந்தார். தன் மேல் அளவுகடந்த பக்தி வைத்திருக்கும் வேதபட்டரின் பக்தியை சோதிக்க சிவபெருமான் எண்ணினார். அதன் காரணமாக சிவபெருமான் வேதபட்டரை வறுமைக்குள்ளாக்கினார். வேதபட்டரும் தினமும் வீடுவீடாக சென்று நெல் சேகரித்து இறைவனின் நைவேத்தியத்திற்காக பெற்ற நெல்லை சந்நிதி முன் உலரப் போட்டு குளிக்கச் செல்வது அவரது வழக்கம். அவ்வாறு செய்து வந்த நாளில் ஒரு நாள் திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது. 
  • குளித்துக் கொண்டிருந்த வேதபட்டர் மழை தண்ணீரில் நெல் நனைந்து விடப்போகிறது என்று எண்ணி வேகமாக ஓடி வந்து பார்க்கையில் நெல்லைச் சுற்றி மழை நீர் நெல்லை கொண்டு செல்லாத படி இருப்பதையும் நடுவே நெல் வெயிலில் காய்வதையும் கண்டு வியப்புற்றார். மழை பெய்தும் நெல் நனையாததைக் கண்டு ஆச்சரியப்பட்ட வேதபட்டர் இந்த அதிசயத்தை அரசரிடம் தெரிவிக்க ஓடினார். மன்னன் ராம பாண்டியனும் இந்த அதிசயத்தை காண விரைந்தார். நெல் நனையாமல் இருப்பதைக் கண்ட மன்னனும் வியப்புற்றார். உலகிற்காக மழை பெய்வித்து வேதபட்டரின் நெல் நனையாது காத்த இறைவனின் சிறப்பை உணர்ந்து மெய்சிலிர்த்தார். நெல்லுக்கு இறைவன் வேலியிட்டு காத்ததால் இறைவனின் திருநாமத்தை அன்று முதல் நெல்வேலிநாதர் என்றும், அதுவரை வேணுவனம் என்றிருந்த அப்பகுதியை நெல்வேலி என்றும் அழைக்கலானார்கள்.
  • தமிழ் நாட்டில் இறைவன் சிவபெருமான் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற முக்கியமான ஐந்து சிவசபைகளில் இரண்டு சபைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தாமிர சபையாகவும் ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர சபையாகவும் உள்ளன. ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் சுமார் 14 ஏக்கர் நிலப்பரவளவில் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது. அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப் பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப் பட்டுள்ளது. இக்கோயிலில் நெல்லையப்பர் என்கிற பெயரில் மூலவரும், காந்திமதி என்கிற பெயரில் அம்பாளும் வீற்றிருக்கின்றனர். புராணகாலத்தில் இவ்வூர் வேணுவனம் என்றே அழைக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது. அம்பாள் சன்னதியில் உள்ள ஆயிரம் கால் மண்டபமும் அதில் நடைபெறும் சுவாமி அம்பாள் திருகல்யாணமும் கண்கொள்ளாக் காட்சியாகும்.
  • மூன்றாவது பிரகாரத்தில் முருகப்பெருமானுக்கு தனியாக பெரிய சந்நிதி உள்ளது. ஒரே கல்லில் ஆறுமுகமும் பன்னிரு கரங்களும் கொண்டு மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருபுறமும் வள்ளி தெய்வானையுடன் ஆறுமுக நாயினார் என்னும் திருநாமத்துடன் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயம் திருப்புகழ் வைப்புத் தலங்களில் ஒன்றாகும்.
  • இக்கோயிலில் உள்ள சுரதேவர் சந்நிதி மிகவும் சிறப்புடையது. மூன்று தலைகள், மூன்று கால்கள், மூன்று கைகளுடன் இம்மூர்த்தி, கையில் தண்டம், மணி, சூலத்துடன் காட்சி தருகின்றார். எவருக்கேனும் சுரம் இருப்பின், இம்மூர்த்திக்கு மிளகு அரைத்துச் சார்த்தி வெந்நீரால் அபிஷேகம் செய்தால் தீரும் என்பது மக்களின் நம்பிக்கை. நடராஜர் நடனம் ஆடிய பஞ்ச சபைகளுள் இத்தலம் தாமிரசபையாகும். இச்சபை தனியே உள்ளது. இங்குள்ள நடராசர் ‘தாமிர சபாபதி’ என்றழைக்கப்படுகிறார். சபைக்கு மேலே தாமிரத் தகடு வேயப்பட்டுள்ளது. இச்சபையின் உள்ளே ருத்திர விஷ்ணு, பேதங்கள், ரிஷிகளின் உருவங்கள் உள்ளன. கீழே மரத்தாலும் மேலே தாமிரத்தாலும் ஆக்கப்பட்டு ஏழு அடுக்குகளைக் கொண்டு திகழும் இச்சபை சித்திர வேலைப்பாடுகளுடன் அருமையாகத் திகழ்கின்றது.பின்னால் உள்ள நடராஜர் சிலாரூபத்தில் சந்தன சபாபதி என்றழைக்கப்படுகிறார்.

திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு

பழநி முருகன் கோவில்

தமிழகத்தில் உள்ள மலைக்கோவில்களில் பழநி முருகன் கோவிலும் ஒன்று. பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.  முருகனுக்கு உரிய அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடு பழநி ஆகும். 


தல வரலாறு:
  • இந்தக் கோவிலின் வரலாறு ஞானப்பழத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. கலகம் பண்ணுவதற்கென்றே பிறந்தவர் நாரதர்.  ஞானப்பழத்தை எடுத்துக்கொண்டு கைலாச மலையில் இருக்கும் சிவபெருமானையும் பார்வதியையும் காண சென்றார். பழத்தை கொடுத்து இந்தப் பழத்தை உண்டால் அதிக ஞானம் பெறலாம் என்று கூறினார். மேலும் முழுப்பழத்தையும் ஒருவரே உண்ணவேண்டும் என்றும் விதி விதித்தார். சிவபெருமானோ தன் மகன்களான முருகனுக்கும், பிள்ளையாருக்கும் பகிர்ந்தளிக்க விரும்பினார். 
  • பின்னர் தன் மகன்கள் இருவரையும் அழைத்து உலகத்தை மூன்று முறை சுற்றி முதலில் வருபருக்கு ஞானப்பழம் பரிசு என்றார் சிவபெருமான். இதனைக் கேட்டு முருகன் தன் வாகனமான மயிலை எடுத்துக்கொண்டு உலகத்தை சுற்ற கிளம்ப, பிள்ளையாரோ தந்தையும் தாயுமே உலகம் என்று கூறி சிவபெருமானையும் பார்வதியையும் சுற்றி வந்து ஞானப்பழத்தை பெற்றுக்கொண்டார். உலகத்தை வலம் வந்து ஞானப்பழத்தை கேட்ட முருகன், நடந்தது அறிந்து, கோபமுற்று இந்த மலையில் வந்து தங்கிவிட்டார். 
  • சிவனும் பார்வதியும் இங்கு வந்து முருகனை சமாதானபடுத்தினர். ஞானப்பழமான உனக்கு எதற்கு இன்னொரு பழம் என்று கூறி சமாதானம் செய்தனர். முருகனை "பழம் நீ" என்றதால் இந்த இடம் பழநி என பெயர் பெற்றது. மலை அடிவாரத்தில் திருஆவினன்குடி குழந்தை வேலாய்தசுவாமி கோவிலும் உள்ளது.  இந்தக் கோவிலே அறுபடை வீடுகளில் மூன்றாவதாக் கருதப்ப்டுவது. 

அமைவிடம்:
  • இதற்கும் ஒரு கதை உண்டு. அகஸ்திய மாமுனிவர் தன் இருப்பிடத்திற்கு சிவகிரி, சக்திகிரி என்னும் இரண்டு மலைகளை எடுத்துச் செல்ல விரும்பினார். தன் சேவகனான இடும்பனிடம் இந்த மலைகளை தூக்கி வரச்சொன்னார். அவனும் காவடி போல் இரண்டு மலைகளையும் கம்பில் கட்டி தோளில் சுமந்து சென்றான். செல்லும் வழியில் தூக்கமுடியாமல் சோர்வுற்று மலையைக் கீழே வைத்தான். அச்சமயம் பார்த்து முருகன் ஞானப்பழம் கிடைக்காத கோபத்தில் சிவகிரி மலையின் மீது ஏற, இடும்பனால் மலையை தூக்க முடியவில்லை. கோபமுற்ற முருகன் இடும்பனை அழிக்க, இடும்பன் இறந்தான். 
  • பின்னர் இடும்பனை தன் பக்தனாக ஏற்றுக் கொண்டான் முருகன். இடும்பனைப் போல் காவடி சுமந்து தன்னை வழிபடுவருக்கு சகல செளபாக்கியங்களும் உண்டாகும் என வரமளித்தான். இன்றும் மலை ஏறும் வழியில் இடும்பனுக்கு கோவில் உண்டு. 

மூலவர் சிற்பம்:
  • போகர் என்பவரால் உருவாக்கப்பட்டது. 4448 அறிய மூலிகைகளை கொண்டு இவர் ஒன்பது விதமான நஞ்சு பொருட்களை உருவாக்கினார். பின்னர் இந்த ஒன்பது விதமான நஞ்சு பொருட்களை கலந்து நவபாஷானம் என்னும் மூலிகையை உருவாக்கினார். பல்வேறு நோய்களுக்கு இந்த மூலிகையை பயன்படுத்தலாம் என்றும் கண்டறிந்தார். 
  • அப்படி சிறப்பு வாய்ந்த நவபாஷாணத்தைக் கொண்டு முருகன் சிலையை அவர் உருவாக்கினார். அவர் உருவாக்கிய அந்த சிலையே தற்போது பழநி முருகனாக நமக்கு காட்சியளிக்கிறது. 
  • பஞ்சாமிர்தத்தாலும், பாலாலும் அபிஷேகம் செய்தால் மருந்து வெளிவரும் என்பதை உணர்ந்து, தினமும் சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தார் போகர். தன்னுடையே சமாதியை போகர் பழநி கோவிலிலேயே அமைத்துக்கொண்டார். 
சிறப்புகள்:
  • கையில் கோலுடன் ஆண்டியை காட்சியளிக்கும் முருகன் சிலை நமக்கு உணர்த்துவது யாதென்றால் "அனைத்தையும் துறந்தால் கடவுளை அடையலாம்" என்பதாகும்.
  • முன்னர் கோவில் மூலவர் சிலை காணமல் போயிற்று. அச்சமயம் முருகன் அவ்வழியே வந்த சேர மன்னன் சேரமான் பெருமாள் கனவில் தோன்றி, சிலையை மீட்டு மலை மீது கோவில் அமைக்குமாறு கட்டளையிட்டான். அதன் பின்னர் சேர மன்னனே இந்தக் கோவிலை கட்டினான் என்ற வரலாறும் உண்டு. 
  • பெரும்பாலும் தமிழக கோவில்களில் மூலவர் சிலை கிழக்கு பார்த்தே அமைந்திருக்கும்.  ஆனால் இங்கு வடக்கு பார்த்து அமைந்துள்ளது. இதற்கு காரணம் சேர மன்னர்கள் வடக்கு திசையில் ஆதிக்கம் செலுத்தியதே!

பூஜைகள் மற்றும் விழாக்கள்:
  • தினசரி இங்கு ஆறு கால பூஜைகள் நடைபெறுகிறது.  விழாக்களை பொறுத்த வரையில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, கந்த சஷ்டி விழா ஆகிய விழாக்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படும். 
  • பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் பொருட்டு இங்கு தங்கத் தேர் பவனியும் தினந்தோறும் மாலை நடைபெறுகிறது. வேண்டியவர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம். 

[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]