🙏புகழ்ச்சோழ நாயனார் ஆண்டபதி; எறிபத்த நாயனார் பிறந்த தலம்;
சிவகாமியாண்டார் மலர்த்தொண்டு செய்த திருத்தலம்; தேவாரம், திருப்புகழ் பாடல் பெற்ற தலம்; திருவிசைப்பா பாடிய கருவூர் தேவரின் அவதாரத் தலம்; முசுகுந்த சக்கரவர்த்தியால் திருப்பணி செய்யப்பட்டது போன்ற புராதனச் சிறப்புகளைப் பெற்றது கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயில். கருவறையில் ‘ஆனிலை’ எனும் லிங்கம், சதுர வடிவ ஆவுடையார் மீது அமைந்த சுயம்பு மூர்த்தியாகும். மூலவர் பசுபதீஸ்வரர் என்றும், பசுபதிநாதர் என்றும், ஆனிலையப்பர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவிகள் சௌந்தரநாயகி (வடிவுடையாள்), கிருபாநாயகி (அலங்காரவல்லி).
🙏படைப்புத் திறனால் கர்வம் கொண்ட பிரம்மனின் கர்வத்தை, காமதேனுவைக் கொண்டு போக்க எண்ணம் கொண்டார் சிவபெருமான். அதன்படி, காமதேனு பசு, நாரதர் கூறியபடி பூலோகத்தில், வஞ்சிவனமாக இருந்த இத்தலத்தில் தவம் செய்தது. அப்போது, ‘புற்று ஒன்றுக்குள் ஆதிலிங்கம் உள்ளது. அதை வழிபடு’என்று அசரீரி உரைக்க, காமதேனு புற்றின் மீது பாலை சொரிந்து இறைவனை வழிபட்டது.
🙏 ஒருநாள் இவ்வாறு பால் சொரியும்போது, இறைவன் திருமுடி மீது காமதேனுவின் குளம்பு பட்டுவிட, லிங்கத்தில் மீது ரத்தம் வழிந்தது. இதனால் மனம் வருந்திய காமதேனுவின் முன் சிவபெருமான் தோன்றி, நீ வழிபட்டதனால் இந்த உலகம் என்னை ‘பசுபதி’ என்ற பெயரால் அழைக்கும். என்மீது பாலைப் பொழிந்ததால் நீயும் பிரம்மனைப் போல் படைப்புத்தொழில் செய்யக் கடவாய்" என அருள் புரிந்தார். இதனால் பிரம்மன் கர்வம் நீங்கினான் என்கிறது தல வரலாறு. காமதேனு, ஈசனை வழிபடும் போது அதன் குளம்பு சிவலிங்கத்தின் மீது பட்டதால் உண்டான தழும்பை இன்றும் காண முடிகிறது.
🙏பதினெண் சித்தர்களில் ஒருவரான கருவூரார் வாழ்ந்து, ஈசனோடு ஐக்கியமானதால் கருவறையில் உள்ள லிங்கம் சற்றே சாய்ந்தவாறு உள்ளது. கோயிலின் தென்மேற்கு மூலையில் கருவூராருக்கு சன்னிதி உண்டு.
கோயிலின் உட்புறம் செல்கையில் வாயிலின் வலப்பக்கத் தூண் ஒன்றில் நாலாயிர சக்கர பந்தனம் செதுக்கப்பட்டுள்ளது. இதை அனைவரும் அவசியம் தரிசிக்க வேண்டும். கருவறையின் பின்புறத்தில் அர்த்த நாரீஸ்வரர் அருள்பாலிப்பது விசேஷம். இத்தலத்தில் உள்ள நூற்றுக்கால் மண்டபம், ‘புகழ்ச் சோழர் மண்டபம்’ எனப்படுகிறது. சூரியன் வழிபடும் தலங்களில் இதுவும் ஒன்று.
🙏கோயிலுக்கு வடபுறத்தில் தெற்கு நோக்கியவாறு அம்பாள் சௌந்திரநாயகி காட்சி தருகிறாள். இவள் கருவூருக்கு மேற்கே நான்கு கல் தொலைவில் உள்ள அப்பிபாளையம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த வேடுவ இனத்துப் பெண். பசுபதீஸ்வரரையே மணாளனாக தியானித்து, பங்குனி உத்திரத் திருவிழாவில் ஏழாம் நாள் ஈசனை மணந்து இறைவனோடு ஐக்கியமான மானுடப் பெண் இவள் என்று தல புராணம் சொல்கிறது.
🙏இத்தலத்து ஈசனை வணங்குவோருக்கு மன அமைதி கிடைக்கிறது. தவிர, கல்யாண வரம், குழந்தை வரம், வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு வேண்டுவோரும் இவரை வழிபடுகின்றனர்.
🙏ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இக்கோயிலின் தல விருட்சமாக வஞ்சி மரமும், தல தீர்த்தமாக அமராவதி நதியும் உள்ளன. தைப்பூசத்தன்று கருவூரார் ஆனிலையப்பருடன் கலந்ததால் அன்று விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. பங்குனி உத்திரம், மார்கழி, ஆருத்ரா மற்றும் பிரதோஷ நாட்கள், குரு, சனி பெயர்ச்சிகள், பிரதி பௌர்ணமி நாட்கள் விசேஷமாகும்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷