Search This Blog

Friday, 23 September 2016

குரு பகவான்

  •  வியாழனுக்கு "குரு" என்றும் "பிரகஸ்பதி" என்றும் சிறப்புப் பெயர்கள் உண்டு. பிரகஸ்பதி என்றாலே, அறிவில் மிகச்சிறந்தவன் என்ற அர்த்தம் தொனிக்கும். நவக்ரகங்களில் தலை சிறந்தவராக குரு கருதப்படுகிறார்.
  • பிரகஸ்பதி, தேவர்களுக்கு தலைவராகவும், குருவாகவும் இருப்பவர். பிரம்மாவுக்கும் பிடித்தமானவர். மிகச்சிறந்த தபச்வியான ஆங்கிரச முனிவருக்கும் ச்ரத்தா தேவிக்கும் புதல்வராக உதித்தவர் வியாழ பகவான். இவருடைய ஸ்வரூப லக்ஷணம் மிகவும் அற்புதமானது.
  • விந்திய மலைக்கு மேல் குருவிற்கு ஆஸ்ரமம் உண்டு. சிந்துதேச அதிபதியாக இருப்பவர். ஆங்கீரச கோத்ரம் இவருடையது.வடக்கு ஈசான்ய திக்குகளுக்கு அதிபதி. புஷ்பராக மாலையை  கொண்டிருப்பவர். தண்டம், கமண்டலம், மாலை, வரத ஹஸ்தம் உடையவர்.
  • எட்டு குதிரைகள் பூட்டிய தேரில் மேரு மலையை வலம் வருபவர். இவருடைய நன்மதிப்பை பெற வேண்டுமானால் இந்திரனையும், பிரம்மனையும் வழிபட்டு வரவேண்டும்.
  • சூரியனுக்கு வடக்கில், நீளமான சதுர மண்டலத்தில், வடக்கு முகமாக வீற்றிருப்பவர். பாஷைகளில் சமிஸ்கிரதத்தை தன்னுடையதாக கொண்டவர். குளுமையான வஸ்துவில் மிகப் ப்ரியம் உண்டு.
  • குரு என்ற சொல்லுக்கு அஞ்ஞாநத்தைப் போக்குகிறவர் என்ற பொருள் உண்டு. ஜோதிட சாஸ்த்திரத்தில் "குரு" என்றால் வியாழ பகவானையே குறிக்கும். எண்ணகளில் "3" என்கிற மதிப்பை இவருக்கு ஜோதிட சாஸ்த்திரம் கொடுத்துள்ளது.
  • குரு மூலம் யாராவது எந்த மந்திரத்தைப் பெற்று தினமும் ஜெபித்து வந்தால், அவர்களுக்கு சந்தோஷத்தையும், செல்வத்தையும் கொடுப்பவர்.
  • பசு மாட்டை ரட்சிக்கிற இடத்தில், குருபகவான் பிரத்தியட்சமாகக் காணப்படுவதாக சொல்லப்படுகிறது. குருவிற்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. பிருஹத் ஜோதிஸ், பிருஹத் பிரம்மா, பிருஹன் மனஸ், பிருஹன் மந்திர, பிருஹத்பாஸ என்பவர்கள் அவர்கள்.
  • பிருஹஸ்பதியாகிய குருபகவான், தாரா என்பவளை மணந்து கொண்டார். இவர்களுக்கு, சம்யூ நிஸ்யவன், விஸ்வஜித், விச்வபுக், வடபாக்னி, ஸ்விச்ட க்ருதி என்ற புத்திரர்களும், "ஸ்வாகா" என்ற பெண்ணும் உண்டு.
  • ஒருமுறை பரீட்சித்தின் குமாரனாகிய ஜனமே ஜெயன் ஒரு பெரிய யாகம் செய்ய விரும்பினார். அதற்கு சர்ப்ப யாகம் என்று பெயர். அப்படி அந்த யாகத்தை ஜனமே ஜயன் செய்தால், உலகத்தில் உள்ள பாம்புகள் எல்லாம் அழிந்து போகும் என்பதை உணர்ந்த குரு பகவான், ஜனமே ஜயனின் சர்ப்ப யாகத்தை தன அறிவாற்றலால் தடுத்து நிறுத்தினார்.
  • ஒரு சமயம் இந்திரன், தெய்வத்தின் திருவருளை வேண்டி தீவிரமான த்யானத்தில் ஈடுபட்ட பொழுது, தேவர்களுக்கு சங்கடம் வந்தது. அசுரர்கள் அளவுக்கு மீறி ஆட்டம் போட்டனர்.இந்த நிலை நீடித்தால், என்ன ஆகுமோ என்று தேவர்கள் பயந்து ப்ரஹஸ்பதியான வியாழ பகவானிடம் வந்து முறையிட்டனர்.
  • குருபகவான், இந்திரனை, தன் சாமர்த்தியத்தால் சுயநிலைக்கு கொண்டு வந்தார். தேவர் குலம் பிழைத்தது. குருவுக்கும் சுக்கிரனுக்கும் பல விதத்தில் கருத்து வேறுபாடு உண்டு. இருந்தாலும் குருவின் மகனாகிய அசன் என்ற விஸ்வஜித் சுகிரனிடம் மாணவனாகச் சேர்ந்து "சஞ்சீவனி" என்னும் வித்தையைத் தெரிந்து கொண்டான்.
  • குருபகவான் காசியில் வெகுகாலம் தங்கியிருந்து, அங்கே ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்திருக்கிறார். அதுமட்டுமல்ல, அந்த லிங்கத்தின் அருகேயே இருந்து பதினாயிரம் தேவ ஆண்டுகள் பூசித்து, தவம் செய்திருக்கிறார்.
  • குருபகவானின் தவத்தைக் கண்டு மகிழ்ந்து அவர் முன்னே காட்சி தந்த சிவபெருமான், "மிகப் பெரிய தவத்தைச் செய்து, உன் மனதை இந்த லிங்கத் தானத்திலே நிறுத்திய சாதனைக்காக நீ நித்திய ஜீவனாக என்றென்றும் புகழ் பெற்று விளங்குவாய். அதுமட்டுமல்ல, உன்னுடைய திறமை, அறிவாற்றல், குணங்களினால், இன்றுமுதல் நீவிர் இந்திரனுக்கும் குருவாக விளங்கக் கூடிய பாக்கியம் பெறுவீர்" என்று வரம் கொடுத்தார்.
  • குருவானவர் பொன் வண்ண மேனியர். நான்கு திருக்கரங்கள் உண்டு. கமண்டலம், அட்சமாலை, யோகதண்டம், அபயம் என்பவற்றை அந்தக் கரங்களில் காணலாம். ஆனால், விஷ்ணு தர்மோத்தரம் என்னும் நூலில் ப்ருஹஸ்பதியை இரண்டு கரம் உடையவர் என்றும் அவற்றில் புத்தகமும் அட்சமாளையும் ஏந்திக் கொண்டிருப்பார் என்று செய்தி குறிப்பிடப்பட்டிருக்கிறது.
  •  சாந்த மூர்த்தியாகத் திகழும் குருபகவான், சதுரமான பீடத்தில் இருப்பவர். கிழக்கு நோக்கி இருப்பவர். முடியுடையவர், பொன்னிறத்தினர், பொன்னிறச் சந்தனம் பூசுபவர், பொன்னிற மலர், பொன்மாலை, பொன்னாய், பொற்குடை, பொன்னிறதுவசம், கொண்டு காட்ச்சியளிப்பவர்.
  • குருவின் அதிதேவதை பிரம்மன். ப்ரத்யாதி தேவதை இந்திரன் ஆகும். நீதிகாரகர், தாராபதி, கற்க பீடாபஹாரர், சௌம்யா மூர்த்தி, த்ரிலோகேசர், லோகபூஜ்யர், கிரகாதீசர் என்பவை வியாழ பகவானை குறிக்கும் சொற்களாகும்.
  • ஏழைக்கு இறங்குபவர், பறை, பைசாந்தி, மத்திமை, விகாரி என்ற நான்கு வகை வாக்குகளின் உருவை விளக்கிக் காட்டியவர். கருணைக்கடல், தூயவர், நீதி சாஸ்த்திர ஆசிரியர், களங்கமற்றவர் என்றெல்லாம் குருபகவானை பெருமையுடன் சொல்லப்படுவதுண்டு.
  • ப்ரஹஸ்பதி நீதி என்ற நூலில் "நகுஷன்" என்ற அசுரன் இந்திரன் மனைவியாகிய இந்திராணியை கவர்ந்து அவளை தன மனைவியாக்கிக் கொள்ள விரும்பினான். செய்தியை அறிந்த குருபகவான், நகுஷனை சப்தரிஷிகள் சுமக்கும் பல்லக்கில் ஏற்றி தன்னிடம் வரச் சொன்னார்.
  • தேவர்களின் குருவே தன்னை மதித்து, சப்தரிஷிகளை அனுப்பி, அவர்கள் தூக்கும் பல்லக்கில் வரச் சொன்னதை, கர்வம் கொண்டு திமிர் பிடித்து வந்த பொழுது, தன சக்தியால் நகுஷனை பாம்பாகா மாற்றி காட்டில் அலையை விட்டார், குருபகவான்.
  • குருவின் பார்வை ஒருவனுக்குக் கிடைக்குமானால், அவன் மூடனாக இருந்தாலும், அறிவாளியாக விளங்குவான்.விஷ்ணு தர்மோத்திரத்திலுள்ள ஒரு சுலோகம் குருவிற்காக உள்ளது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் எழுந்து, பக்தி ஸ்ரத்தையோடு சொன்னால், அவர் குருபகவானின் பேரருளைப் பெறுவார்.
ப்ருஹஸ்பதி ஸீராசார்யோ தைவான் சுபலக்க்ஷண:
லோகத்ரய குரு ஸ்ரீமான் சர்வஞ்ஞா: சர்வகோவித:
ஸர்வேச: சர்வா தீபீஷ்ட சர்வஜித் சர்வ பூஜித:
அக்ரோதனோ முனி சிரேஷ்ட நீதிகர்த்தா குரு: பிதா 
விஸ்வாத்மா விச்ச ஆரித்தா ச விஸ்வயோனி ரயோனிஜ:
பூர்வ வஸ்ஸுவப்ரபுச் சைவ பார்த்தா சிவமகா பல:
  • இந்த அற்புதமான ஸ்லோகத்தை, கிருஷ்ணா பகவான், நந்த கோபன் வீட்டில் கூறியதாக வரலாறு.
  • குருபகவான் இந்த பூலோகத்தில் வந்து இறைவனை பூசித்த திருத்தலங்களில் மூன்று மிகவும் குறிப்பிடத்தக்கவை.
  1. தென்குடித்திட்டை - தஞ்சாவூரிலிருந்து மாயாவரம் செல்லும் இருப்பு பாதையில் ஒன்பது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.
  2. திருவலிதாயம் (பாடி) - சென்னைக்குப் பக்கத்தில் 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
  3. திருசெந்தூர் - குருபகவான் மிகவும் விரும்பி பூசித்த முருகப் பெருமானின் அறுபடைவீடுகளில் ஒன்று. திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கிறது.
வ்ருஷப த்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி 
தந்நோ குரு ப்ரசோதயாத்:
  • இந்த குரு காயத்ரியை தினமும் பாராயணம் செய்கிறவர்களுக்கு எந்த குறையும் வராது, இருக்கின்ற குறைகளும் நீங்கிவிடும்.
  • தெய்வீக அறிவுக்கும், வேதாந்த ஞானத்திற்கும், முக்கரணங்களின் தூய்மைக்கும் பொருளாக உள்ளவர்.மேதைகள், ஞானிகள், பக்தர்கள் இவர்களுக்கு மூலகர்த்தா. அந்தணர்களுக்கும், பசுக்களுக்கும் ஆதிமூலவர். உடல் வலிமை, உள வலிமையைத் தருபவரும்  இவரே.தலைவணங்கா தலைமைப் பதவியையும்  தருபவர். மாபெரும் சாதனைகளை படைப்பவரும் இவர்தான். நாட்டை ஆளவைப்பதும், நவீன யுக்திகளை கொடுப்பதும் இவர்தான். மென்மைக்கும், அற்புதமான குணத்திற்கும் சொந்தக்காரர்.
  • விவேகத்தை  அளிப்பவர்,மந்தகாச முகத்தி உடையவர். இனிப்பில் பிரியர். மஞ்சள் நிறத்தவர். உடலில் சதையாக இருப்பவர். வாதம், பித்தம், கபம் இவற்றில் கபம் இவருடைய கையில் உள்ளது. புஷ்பராக கல்லுக்குரியவர். கஜானாவை விளங்க வைப்பவர். ஆண் கிரகம் இவர். பஞ்ச பூதங்களில் ஆகாயம் இவர்.
  • வடகிழக்கு இவரது திசை. தனுசு, மீனம் ஆகிய ராசிகளுக்கு அதிபதி. கடகம் உச்ச வீடு, மகரம் நீச வீடு. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி  ஆக்கிய மூன்று நட்சத்திரங்களுக்கு அதிபதி. இவர் தசை நடக்கும் பொழுது நன்மைகளே நடக்கும். பகலில் இவருக்கு பலம் அதிகம். இவரது பார்வை பட்டால் அத்தனையும் நன்மையாகும்.

குரு தலம் :::: தென்குடித்திட்டை

 
  • குரு தலங்களாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் ஆகியவை விளங்குகின்றன. இவற்றுள் திட்டை திருத்தலம் தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
  • பிரளய காலத்தில் அழியாமல் இருந்து, மந்திர ஒலிகள் தோன்றிய மகத்தான தலம் என்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு. இந்தக் கோவிலில் வசிஷ்டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இறைவியின் நாமம் மங்களாம்பிகை என்பதாகும். இறைவனுக்கும், இறைவிக்கும் நடுவில் நின்ற நிலையில் குருபகவான் ராஜ குருவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்த தலத்தில் காண முடியாத தனிச்சிறப்பாகும்.

பஞ்சலிங்க தலம் :
  • திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில், ஒரு பஞ்சலிங்க ஸ்தலமாக விளங்கி வருகிறது. இந்தக் கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. மத்தியில் மூலவர் ஐந்தாவது லிங்கமாக உள்ளார். பஞ்ச பூதங்களுக்கும் உரிய தலமாகவும் இது விளங்குகிறது.

மங்களம் தரும் மங்களாம்பிகை :
  • மகாப்பிரளய காலத்தில் உலகைக் காக்க இறைவனுடன் ஓடம் ஏறி வந்ததால், இத்தலத்தில் உள்ள இறைவியை லோகநாயகி என்று அழைக்கின்றனர். சகல மங்களங்களையும் தருவதால் மங்களாம்பிகை என்றும், மங்களேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறார்.
  • கும்பகோணத்தில் சோமநாதன் என்பவர் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் இவரது வீட்டுக்கு வந்த ஜோதிடர் ஒருவர், ‘உங்கள் மகள் மங்களா 16-வது வயதில் விதவையாகி விடுவாள்’ எனக் கூறினார். அதைக்கேட்டு சோமநாதன் வருந்தினார்.
  • சிறிது காலத்தில் தஞ்சைக்கு அருகே உள்ள திட்டையில் உள்ள ஒருவருக்கும், மங்களாவிற்கும் திருமணம் நடைபெற்றது. திட்டைக்கு வந்த நாள் முதல் மங்களா, தனது கணவன் நீண்டநாட்கள் வாழ வேண்டும் என திட்டையில் உள்ள லோகநாயகி அம்மனை வணங்கி வந்தாள். பவுர்ணமி தினத்தன்று எமன் மங்களாவின், கணவனின் உயிரை பறிக்க நெருங்கினான்.



  • இதனை அறிந்து அலறித் துடித்த மங்களா, லோகநாயகி அம்மனை சரணடைந்து, ‘எமனிடம் இருந்து என் கணவனின் உயிரை காப்பாற்றி, எனக்கு மாங்கல்ய பிச்சை கொடு’ என கண்ணீர் மல்க வேண்டினாள். அவளது பிரார்த்தனைக்கு மனம் இரங்கிய லோகநாயகி, மங்களாவின் கையில் விபூதியை கொடுத்து ‘இதை எமன் மீது இடு. உன் கணவன் நீண்ட ஆயுளுடன் இருப்பான். நீயும் நீண்ட நாட்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாயாக’ என ஆசி கூறி மறைந்தார்.
  • மங்களாவும், இறைவியின் ஆணைப்படியே செய்தாள். எமன் மறைந்தான். பின்னர் மங்களா நீண்ட நாட்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்தாள். மாங்கல்ய பிச்சை கொடுத்ததால் இத்தலத்தில் அன்னை மங்களாம்பிகா, மங்களேஸ்வரி என அழைக்கப்படுகிறார்.

குரு பகவான் :
  • நவக்கிரகங்களில் மகத்தான சுப பலம் கொண்டவர் குரு. தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இடங்களை தன் பார்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை படைத்தவர். மேலும் ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களை, தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர். எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி ஏற்பட்டது.
  • இத்தகைய குருபகவான் திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். நவக்கிரகங்களின் வரிசையில் ஐந்தாவதாக இருப்பவர் வியாழ பகவான் எனப்படும் குரு. மற்ற கிரகங் களுக்கு இல்லாத சிறப்பு குருவுக்கு உண்டு. நவக்கிரகங்களில் சூரியன் ராஜா. சந்திரன் ராணி. செவ்வாய் கிரகம் சேனாதிபதி. புதன் இளவரசர். குரு பகவான் ராஜ மந்திரி. மதி நிறைந்த அமைச்சர் என்ற அந்தஸ்தில் உள்ளவர் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
  • இவருக்கு இந்தத் தலத்தில் ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழாவும், அதனையொட்டி லட்சார்ச்சனையும் குருபரிகார ஹோமங்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இங்குள்ள குரு பகவானை வேண்டினால் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இறைவன் மீது சொட்டும் நீர்:
  • நமசிவாய என்பது ஐந்தெழுத்து மந்திரம். அந்த ஐந்து எழுத்தை மனதில் நிறுத்தும் அற்புத வடிவம் லிங்க உருவம். திட்டையில் லிங்க வடிவமாக எழுந்தருளியிருக்கும் மூலவர் வசிஷ்டேஸ்வரர் விமானத்தில், சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. அதற்கும் ஒரு வரலாறு உண்டு.
  • தன் மாமனார் தட்சனால் தினம் ஒரு கலையாக தேய்ந்து அழியும் சாபம் பெற்றார் சந்திர பகவான். தினமும் தேய்ந்து கொண்டே வந்த அவர் திங்களூர் வந்து கயிலாயநாதரை, வணங்கி தவம் இருந்தார். கயிலாயநாதரும் சந்திரனின் சாபத்தை நீக்கி, மூன்றாம் பிறையாக தனது தலையில் சந்திரனை அணிந்து கொண்டார்.
  • திங்களூரில் தன் சாபத்தை போக்கிய சிவபெருமானுக்கு திட்டையிலே தன் நன்றிக் கடன் செலுத்துகிறார் சந்திரன். இறைவனுக்கு மேலே சந்திரக்காந்தக் கல்லாக அமர்ந்து காற்றிலிருந்து ஈரப்பதத்தை ஈர்த்து ஒரு நாழிகைக்கு ஒரு சொட்டாக இறைவனுக்கு நித்யாபிஷேகம் செய்கிறார். 24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒரு முறை இறைவன் மீது ஒரு சொட்டு நீர் விழுவதை இன்றும் காணலாம். உலகில் வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாத அற்புதம் இது.

மகாவிஷ்ணு உருவாக்கிய தீர்த்தம் :
  • இந்த தலத்தில் பசு தீர்த்தம், சூல தீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. பசு தீர்த்தத்தில் ஒரு துளி நீரானது, நம்முடைய சகல பாவங்களையும் போக்கிவிடும் வல்லமை கொண்டது. சூல தீர்த்தமானது சிவ பக்தியில் நம்மை திளைக்கச் செய்து சிவனின் திருப்பாதத்தில் நம்மை ஆட்கொள்ள செய்யும் வல்லமை கொண்டது என்று புராணங்கள் கூறுகின்றன.
  • மகாவிஷ்ணு ஒரு சமயம் யோக நித்திரையில் இருக்கும் போது, மது, கைடவர் என்ற இரு அரக்கர்கள் தோன்றி தேவர்களை துன்புறுத்தினர். நித்திரை அகன்று எழுந்த மகாவிஷ்ணு, அசுரர்களை எதிர்த்து போர் புரிந்தார். அப்போது விஷ்ணு தன் பலம் குறைவதை உணர்ந்தார். தன் பலத்தை புதுப்பித்துக்கொள்ள திட்டையில் தன் சக்ராயுதத்தால் ஒரு குளம் உண்டாக்கி, அதில் நீராடி இறைவனை வழிபட்டார். அதனால் பலம் ஏற்பட்டு அரக்கர்களை அழித்தார். மகாவிஷ்ணுவால் உருவாக்கப்பட்ட குளம் ‘சக்கர தீர்த்தக்குளம்’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.

குரு கிரக பரிகாரங்கள் :
  • வியாழ பகவானுக்குரிய நாளாகிய வியாழக்கிழமையில் விரதம் இருந்து பரிகாரம் செய்யலாம். நீராடி மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து வழிபட வேண்டும். குருபகவானுக்கும் மஞ்சள் நிற ஆடையும், சரக்கொன்றை, முல்லை மலர் களும் கொண்டு அலங்கரிக்க வேண்டும். கடலைப்பொடி சாதம், வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட்ட பின்னர், மற்றவர்களுக்கு தானம் செய்தல் அவசியம்.
  • மஞ்சள் நிற ஆடையையும் தானம் செய்யலாம். கடலை, சர்க்கரை கலந்து குருவுக்கு நிவேதனம் செய்து குழந்தைகளுக்கு தானம் செய்வது சிறப்பு தரும். குரு பகவானின் அதி தேவதைகளான பிரம்மன், இந்திரன் ஆகியோரை வழிபட்டாலும் குரு மகிழ்ச்சி கொண்டு பலன்களை வழங்குவார். ‘அடாணா’ ராகத்தில் குருபகவானின் கீர்த்தனைகளைப் பாடி பிரார்த்தனை செய்வதும் நலம் தரும். ஜாதகத்தில் குரு பலவீனமாகவோ, தோஷத்துடனோ இருந்தால், நவமி அன்று சண்டி ஹோமம் செய்வது சிறப்பான பலனை தரும்.

அமைவிடம் :
  • தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் திட்டை என்னும் கிராமத்தில் இத்தலம் அமைந்துள்ளது. தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பள்ளியக்கிரகாரம் என்ற பகுதியில் இருந்து திட்டைக்கு சாலை பிரிந்து செல்கிறது. தஞ்சையில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது.



குரு ஸ்தலம் :::: ஆழ்வார் திருநகரி

  • நவதிருப்பதிகளில் குரு ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில், ஆழ்வார் திருநகரி, திருச்செந்தூர் வட்டம், தூத்துக்குடி மாவட்டம்.


திருத்தல வரலாறு:
  • இந்த ஆழ்வார் திருநகரி என்ற பெருமை மிகு ஊருக்கு தன்பொருநல், ஆதிசேத்ரம், குருகாசேத்ரம், திருக்குருகூர் என பல்வேறு பெயர்கள் உள்ளன. குருகு என்றால் சங்கு என்பது பொருள். அவ்வாறு ஆற்றில் மிதந்து வந்த சங்கு, இத்தல பெருமாளை வணங்கி மோட்சம் பெற்றதால் திருக்குருகூர் என்ற பெயர் வந்தது என்றும், பெரும் வெள்ளத்தால் உலகமே அழிந்து, மீண்டும் உருவானபோது முதலில் உண்டான இடம் என்பதால் ஆதிசேத்ரம் என்றும், நாம்மாழ்வார் கோயில் கொண்டு இருந்ததால் ஆழ்வார் திருநகரி என்றும் பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது.
  • ஒரு சமயம் மகாவிஷ்ணுவின் அம்சமாக விளங்கும் வியாச முனிவரை அவரது பிள்ளையாகிய சுகமுனிவர், இந்த குருகாசேத்ரத்தின் மகிமையினைக் கூறுமாறு கேட்டுக் கொண்டார். அதற்கிசைந்து வியாச முனிவரும் திருமாலுக்கு மிகவும் பிரியமான இந்த திருத்தலத்தின் மகிமையை கூறத் தொடங்கினார்.

குருகாசேத்திர மகிமை:
  • பரந்தாமனுக்கு பல அவதாரங்கள் எடுத்து தன் பக்தர்களிடம் திருவிளையாடல்கள் புரிவதே வேலை. அதுபோல் தன் பரம பக்தன் நான்முகனிடம் உயிர்களை படைக்கும் பவித்ரமான பணியினை பரந்தாமன் அளித்தாலும், பிரம்மனுக்கு அதனை செய்ய சிறிது ஐயம் ஏற்பட்ட காலத்தில் திருமாலின் உதவியை நாடினான். அதன்படி விஷ்ணுபிரானை சந்தித்து தனக்குள்ள அச்சத்தைப் போக்கிக் கொண்ட பிறகு தன்படைப்புத் தொழிலில் அதிகாரம் செலுத்த விரும்பினான். அவ்வாறு திருமாலைச் சந்திக்க எண்ணி ஓராயிரம் வருடங்கள் கடும் தவம் புரிந்தான். தனது கடும் தவத்தின் பலனாக நான்முகன் முன் விஷ்ணு தோன்றினார். பின்னர் பிரம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க அவனது படைப்புத் தொழிலுக்கு எல்லாக் காலத்திலும் உறுதுணையாக இருப்பேன் என வாக்களித்தார். அதோடு உன் தவத்தின் வலிமையால் உன் படைப்புத் தொழிலுக்கு உதவி புரியும் வண்ணம் நான் இப்போது அவதரித்ததால், அதுவும் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள அழகிய இந்த ஸ்தலத்தில் முதன் முதலாக அவதரித்தத்தால், இந்த சேத்திரம் ஆதிசேத்திரம் என்ற பெயருடன் விளங்கும் என்றும் என் நாமம் ஆதிநாதன் எனவும் விளங்கட்டும் என பெருமாள் கூறி அருளினார். மேலும் நான்முகன் நாராயணனிடம், எனக்கு குருவாக இருந்து உபதேசித்ததனால் இச்சேத்திரம் குருகாசேத்திரம் என விளங்க வேண்டும் என கேட்க அப்படியே ஆகட்டும் என்றார் திருமால்.
  • அதன்பின் பிரம்மாவிடம் விஷ்ணு, நீ ஆதிசேத்திரம் சென்று ஆதிநாதனை வழிபட நீ நினைக்கும் காரியங்கள் கைகூடும் எனவும், யாரும் காணாத எனது திருமேனியை உனக்குக் காட்டியது மட்டுமல்லாமல், எல்லோரும் பார்க்கும் வண்ணம் குருகாசேத்திரத்தில் அவதரிக்கப் போகிறேன் என்றும், கலியுகத்திலே சடகோபர் என்னும் திருப்பெயருடன் யோகியாய் அவதரித்து வடமொழி வேதங்களைத் தமிழில் மொழிபெயர்த்து, அந்த வேதமறைகளைப் படிக்கும் மாந்தர் அனைவரும் முக்தியடையும் வண்ணம் சித்தம் செய்யப் போகிறேன் என்றும் கூறினார்.

யானையும் வேடனும் முக்தி அடைந்த வரலாறு:
  • முன்னொரு காலத்தில் புனித யாத்திரை செல்ல எண்ணிய மகான்கள் பலரும் ஆதிசேத்திரம் வந்து அத்தல தீர்த்தங்களில் நீராடி நாராயணனின் பெருமைகளை பேசித் தீர்த்து, அன்றைய வேலைகளை செய்து முடித்து பொழுதும் விடிந்தது. இத்தலத்திற்கு வந்து தங்கள் பொழுதைக் கழித்த முனிவர்களுக்கு அந்த பொழுது மிக இனிமையாகக் கழிந்தது மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தது. அவ்வாறு மனம் மகிழ்ந்திருந்த நேரத்தில், அத்திருத்தலம் வந்த ஒரு யானைக்கும் வேடனுக்கும் பெரும் சண்டை ஏற்பட்டு இருவரும் பலமாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு மாண்டனர். ஆனாலும் கூட தேவலோகத்தில் இருந்து இந்த யானையையும், வேடனையும் மேலோகம் அழைத்துச் செல்ல சுவர்க்கத்தில் இருந்து தூதுவர்கள் வந்திருந்தனர். அதே நேரத்தில் யானையும் வேடனும் சண்டையிட்டு செய்த பாவத்தின் பலனாக இருவரையும் நரகத்திற்கு அழைத்துச் செல்ல எமதூதர்களும் வந்திருந்தனர். எமதூதர்களால் விஷ்ணுதூதர்களை எதிர்க்க வழியில்லாமல் தங்களது கடமையைச் செய்யாமல் வருத்தத்துடன் திரும்பிச் சென்றனர். ஆறறிவு இருந்தும் பாவம் புரிந்த வேடனுக்கும், ஐந்தறிவு படைத்த யானைக்கும் இந்த சேத்திரத்தில் முக்தி கிடைத்த அரிய நிகழ்வைக் கண்ட முனிவர்கள் ஆச்சர்யத்துடன் இந்நிகழ்வை வசிஷ்ட முனிவரிடம் கூறினர். அவரும் இத்தல பெருமையினை மேலும் கூறலானார்.

தாந்தன் முக்தி பெற்ற வரலாறு:
  • பல காலங்களுக்கு முன்பு மந்தன் என்ற அந்தண சிறுவன் வேதம் கற்க ஆசைப்பட்டு வேத பாட சாலையில் சேர்ந்தான். ஆனால் அவன் ஆசைப்பட்ட விதத்தில் அவனால் வேதங்களை மனம் ஒன்றி படிக்க முடியவில்லை. இதனால் கோபமுற்ற அவனது குரு, மந்தனை சபித்து பாடசாலையில் இருந்து அனுப்பிவிட்டார். அதன்பிறகு அவன் திருக்கோயில்களில் வேலை செய்து தன் காலத்தைக் கழித்து பின் உயிரிழந்தான். அடுத்த பிறவியில் தாந்தன் என்ற பெயருடன் ஒழுக்க சீலனாக வாழ்ந்து வந்தான். ஆனால் அவனை யாரும் மதிக்காத சூழ்நிலையில், அவனை அனைவரும் ஒதுக்கிய சூழ்நிலையில், குருகூர் தலம் வந்து ஆதிநாதனை வழிபட்டு அங்கேயே தனது வாழ்வை தொடர்ந்தான். இந்நிலையில் தாந்தனை ஒதுக்கியவர்களுக்கு திடீரென கண் பார்வை இல்லாமல் போனது. அவர்கள் அனைவரும் திருமாலைச் சரணடைந்தனர். நீங்கள் எல்லோரும் தாந்தனை ஒதுக்கிய காரணத்தினால் தான் உங்களுக்கு கண் தெரியாமல் போனது, நீங்கள் அனைவரும் தாந்தனிடம் மன்னிப்பு கேட்க உங்களுக்கு மீண்டும் கண் பார்வை கிடைக்கும் என திருமால் அசரீரியாய்க் கூறினார். அவ்வாறே நடந்தபின் திருமாலும் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் ஒன்றாய் தாந்தனுக்குக் காட்சிகொடுத்து தாந்தனை முக்தி அடையச் செய்தார். அதன் காரணமாக இத்தலம் தாந்தசேத்திரம் எனவும் பெயர் பெற்றது.

சங்கமுனிக்கு அருள் கிடைத்த வரலாறு:
  • பின்னொரு சமயம் தாந்தன் தங்கிய ஆலமரத்தின் கீழ் வேடன் ஒருவன் தங்கிய காரணத்தினாலேயே அவனது அடுத்த பிறவியில் சங்கன் என்னும் முனிவராக பிறந்து இறைவனடி சேர கடும் தவம் புரிந்தான். அவ்வாறு தவம் புரியும் வேளையில், சங்கு முனிவரை நாரத முனிவர் சந்தித்து, சங்கன் தவம் புரியும் காரணம் கேட்க, முக்தி அடையும் பொருட்டே தவமிருப்பதாக அவர் கூற, "நீ குருகூர் சென்று பெருமாளை வேண்ட முக்தி கிடைக்கும்" என நாரதர் கூறினார். அவ்வாறே சங்கனும், சங்காக மாறி குருகூர் சென்று திருமாலை வழிபட்டு முக்தி அடைந்தார். அந்த இடம் இன்றும் திருச்சங்கண்ணி துறை என அழைக்கப்படுகிறது.

பஞ்ச சேத்திரமாக விளங்கும் குருகாசேத்திரம்:
  • ஆதி சேத்திரம்: பூலோகத்தில் உள்ள திருமால் ஆலயங்களில் மகாவிஷ்ணு முதன் முதலாக வாஸம் செய்த தலம் என்பதால் ஆதி சேத்திரம் எனவும், இத்த இறைவனுக்கு ஆதிநாதன் எனவும் பெயர் வந்தது.
  • வராக சேத்திரம்: பெரும் வெள்ளத்தில் அழிய இருந்த பூமியை, திருமால் வராக அவதாரம் எடுத்து காப்பாற்றிய ஸ்தலம் என்பதாலும், பூமாதேவிக்கு ஞான உபதேசம் செய்வித்த ஞானபிரான் குடிகொண்ட ஸ்தலம் என்பதாலும், வராக சேத்திரம் என்ற பெயர் வந்தது. இந்த ஞானபிரான் சன்னதி திருக்கோயிலின் உள்ளே முதல் பிரகாரத்தில் அமைந்துள்ளது.
  • சேச சேத்திரம்: ஆதிசேஷன் உறங்காப்புளியாக வாழும் ஸ்தலம் என்பதாலும், அதன் அருகிலேயே நம்மாழ்வார் பிறந்து வளர்ந்து குடிகொண்ட திருத்தலம் என்பதாலும் சேச சேத்திரம் என வழங்கப்படுகிறது.
  • தீர்த்த சேத்திரம்: தாமிரபரணி ஆறும், அதில் உள்ள திருச்சங்காணித் துறையும் தீர்த்தங்களாக விளங்குவதால் தீர்த்த சேத்திரம் என அழைக்கப்படுகிறது.
  • தாந்த சேத்திரம்:  தாந்தன் என்னும் மானிடனை திருமாலின் அருளினால் தேவர்களும் வணங்கும் வண்ணம் உயர்த்திய ஊர் என்பதால் தாந்த சேத்திரம் என பெயர் வந்தது.

நம்மாழ்வார் வரலாறு:
  • பெருமாள் முன்பு, "கலியுகத்திலே வடமொழி வேதங்களை தமிழில் உருவாக்க சடகோபன் என்ற பெயரில் அவதரிப்பேன்" என்று கூறியதுபோல, பாண்டியநாட்டில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அழகிய ஆழ்வார்திருநகரி என்ற ஊரில் காரியர், உடையநங்கை தம்பதிகளுக்கு, அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க, மகனாக வந்து அவதரித்தார். அவ்வாறு பிறந்த குழந்தை பாலுண்ணுதல், அழுதல் என எந்த இயற்கையான செயல்களையும் செய்யாமல் இருந்தது. வழக்கத்திற்கு மாறாக வளர்ந்த அக்குழந்தையை மாறன் என்றும் பாராங்குசன் என்றும் பெயரிட்டு அழைத்து வந்தனர். தன் குழந்தையின் இந்த நிலை கண்டு கவலையுற்ற பெற்றோர், குழந்தையை திருக்குருகூர் கோயில் கொண்டு வந்து, ஆதிசேஷன் புளிய மரமாக உள்ள மரத்தில் தொட்டில் கட்டிப் போட்டனர்.

  • இந்நிலையில் சடகோபன் பிறப்பதற்கு முன்பாக, திருக்கோளூரில் பிறந்த மதுரகவி, திருமாலை வணங்கி வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அவரது வயலில் மேய்ந்த பசு மாட்டினை மதுரகவி விரட்ட, அப்பசு ஓடிய வேகத்தில் கால் இடறி கீழே விழுந்து இறந்தது. தான் செய்த பாவத்திற்கு வருந்திய மதுரகவி, அப்பாவத்தைப் போக்க எண்ணி புனித நீராடும் பொருட்டு வடநாட்டுப் பக்கம் செல்லத் துவங்கினார். அவ்வாறு வடக்கில காசியில் தவம் இருந்த ஒரு இரவு நேரத்தில், வானத்தில் பேரொளியைக் கண்டார். அந்த ஒளி செல்லும் பாதையிலேயே பல நாட்கள் நடந்து வந்து கொண்டே இருந்தார். அந்த ஒளியானது திருக்குருகூர் வந்ததும் மறைந்து போனது. ஜோதியாக வந்து தன்னை ஆட்கொண்டது திருக்குருகூர் புளிய மரத்து ஆழ்வார்தான் என்பதை மதுரகவி கண்டுகொண்டார். அதன்படியே சடகோபரை அடைந்து தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். அவ்வாறே அவரை சீடராக ஏற்றுக்கொண்டு திவ்யப்பிரபந்தத்தை உபதேசித்தருளினார். மேலும் ரிக், யஜூர், அதர்வண வேதங்களின் சாரத்தை முறையே திருவிருத்தம், திருவாசிரியம், பெரியதிருவந்தாதி போன்றவற்றையும் உபதேசித்தார். எனவே சடகோபராகிய நம்மாழ்வார் வேதம் தமிழ் செய்த மாறன் என்ற புகழுக்கு உரியவரானார். அறிவாலும், ஞானத்தாலும், பக்தியாலும் சிறந்து விளங்கிய சடகோபரை அனைவரும் இவர் நம்மவர் என விரும்பி அழைக்க நம்மாழ்வார் என்ற பெயர் உருவானது. திருமால் இவருக்குத் தந்தருளிய மகிழமாலையை அணிந்திருந்த காரணத்தால், வகுளாபரணர் என்ற பெயரும் உண்டானது.

  • ஆழ்வார்கள் அனைவருக்கும் குருபோல நம்மாழ்வார் விளங்கிய காரணத்தால் மற்ற ஆழ்வார்களைத் தனது அங்கங்களாகக் கொண்டிருந்தார். அந்த வகையில் பூதத்தாழ்வாரை தலையாகவும், பொய்கையாழ்வார், பேயாழ்வாரை கண்களாகவும், பெரியாழ்வாரை முகமாகவும், திருமழிசையாழ்வாரை கழுத்தாகவும், குலசேகர ஆழ்வார், திருப்பாணாழ்வார் என இருவரையும் கைகளாகவும், தொண்டரடிப் பொடி ஆழ்வாரைத் திரு மார்பாகவும், திருமங்கையாழ்வாரை வயிறாகவும், மதுரகவி ஆழ்வாரை பாதமாகவும் கொண்டு விளங்கினார்.
  • நம்மாழ்வார் 36 திவ்ய தேசங்களைப் பாடியுள்ளார். 31 ஆண்டு காலம் இந்த புளிய மரத்தடியில் 36 பெருமாளைப் பற்றி பாடியதால் இந்த மரத்தினைச் சுற்றி 36 திவ்ய தேசப் பெருமாளின் திருவுருவங்கள் பொறிக்கப் பட்டுள்ளன. நம்மாழ்வார், தனது 35-வது வயதில் இறைவனடி சேர்ந்தார். அவரது பூத உடல் பள்ளிகொண்டுள்ள இடத்தில் திருக்கோயில் அமைத்து வைகாசித் திருவிழாக் கொண்டாடினார் மதுரகவி ஆழ்வார். வட மொழியில் நான்கு வேதங்கள் உள்ளது போல் தமிழில் நான்கு வேதங்களை உருவாக்கியுள்ளார் நம்மாழ்வார். இவர் இயற்றிய திருவாய்மொழி, திராவிட வேதம் என அழைக்கப்படுகிறது.

 திருப்புளிய மர வரலாறு:
  • ஸ்ரீராமர் தனது அவதாரப் பயனை உலகத்திற்கு வழங்கி மனநிறைவு பெற்று, வைகுண்டம் செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பாக, அயோத்தியில் ஸ்ரீராமரைக் காண எமதர்மராஜா வந்திருந்தார். நாங்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும் போது யார் வந்தாலும் உள்ளே விட வேண்டாம் என ராமர், இலக்குவனுக்கு ஆணையிட்டார். அந்த சமயத்தில், கோபத்திற்குப் பேர் போன துர்வாச முனிவர் அங்கு வர, அவரது கோபத்தைப் பற்றி நன்கு அறிந்த இலக்குவன், ராமரது ஆணையை மீறி முனிவரை உள்ளே விட்டான். அப்போது ராமன் முனிவரை நல்ல விதமாக உபசரித்து பேசி வழியனுப்பி வைத்தாலும், தனது பேச்சை மீறிய இலக்குவன் மீது கோபம் கொண்டார். எமதர்மராஜரும் சென்றபின், இலக்குவனைப் பார்த்து "நீ அசையாப் பொருளாக ஆவாயாக" என சாபமிட்டார்.
  • இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இலக்குவன் தன் சகோதரனிடம் மன்னிப்பு கோரினார். மனமிரங்கிய ராமர், நான் அளித்த சாபம் நடந்தே தீரும் எனக் கூறினார். உனக்கு மட்டுமல்ல, இந்தப் பிறவியில் நிரபராதியும், கர்ப்பிணியுமான சீதா தேவியை காட்டுக்கு அனுப்பிய காரணத்தால், உறங்காப் புளியாக, அசையாப் பொருளாக மாறப் போகும் உன் அருகிலேயே ஐம்புலன்களையும் வென்ற பிரம்மச்சாரியாக சடகோபன் என்ற பெயருடன் அவதரிக்கப் போகிறேன் எனக் கூறினார். வானுலகத்திற்கு கற்பக விருட்சம் போல் பூலோகத்திற்கு இந்த உறங்காப்புளி மரம் அமைந்துள்ளது. இதன் இலைகள் இரவிலும் மூடாது. உறங்காமல் இவ்வுலகைக் காக்கும். இந்த உறங்காப் புளியமரம், ஸ்ரீ இலக்குவனின் அவதாரமாகவே காட்சி அளிக்கிறது. இந்தப் புளிய மரம் பூக்கும், காய்க்கும், ஆனால் ஒருபோதும் பழுத்ததில்லை. பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்து இன்றும் நமக்குக் காணக் கிடைக்கிறது. சுவாமி நம்மாழ்வார் தவம் செய்த இம்மரம், சுமார் 5100 ஆண்டுகள் பழைமை உடையது. ஆனால் இன்றும் செழுமையுடன் உள்ளது என்பது ஆச்சர்யம் அளிக்கிறது. இந்த மரத்தினைச் சுற்றி 36 திருக்கோயில்களின் பெருமாள் திருவுருவங்கள் பொறிக்கப் பட்டுள்ளதால், இங்கு வந்து வழிபட 36 திவ்விய தேசங்களுக்கு சென்று வந்த பலன் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
  • இந்த குருகூர் ஸ்தலம், கம்பர், ராமானுஜர் வழிபட்ட பெரும் சிறப்பு பெற்ற ஸ்தலங்களாகும். மணவாள மாமுனிகள் அவதரித்த தலமும் ஆகும்.
[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]