Search This Blog

Monday, 29 August 2016

மூன்றாம் படை வீடு :::: அருள்மிகு வேலாய்தசுவாமி, திருஆவினன்குடி, பழநி.



தமிழகத்தில் உள்ள மலைக்கோவில்களில் பழநி முருகன் கோவிலும் ஒன்று. பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.  முருகனுக்கு உரிய அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடு பழநி ஆகும். 


கோவில் அமைந்திருக்கும் மலையின் உயரம் 150 மீ. மொத்தம் 693 படிக்கட்டுகள் ஏறினால் கோவிலை அடைந்துவிடலாம்.  மலையைச் சுற்றி 2.4 கி.மீ கிரிவலப் பாதை உள்ளது. இனி கோவிலைப் பற்றி பார்க்கலாம். 




தல வரலாறு:
          இந்தக் கோவிலின் வரலாறு ஞானப்பழத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. கலகம் பண்ணுவதற்கென்றே பிறந்தவர் நாரதர்.  ஞானப்பழத்தை எடுத்துக்கொண்டு கைலாச மலையில் இருக்கும் சிவபெருமானையும் பார்வதியையும் காண சென்றார். பழத்தை கொடுத்து இந்தப் பழத்தை உண்டால் அதிக ஞானம் பெறலாம் என்று கூறினார். மேலும் முழுப்பழத்தையும் ஒருவரே உண்ணவேண்டும் என்றும் விதி விதித்தார். சிவபெருமானோ தன் மகன்களான முருகனுக்கும், பிள்ளையாருக்கும் பகிர்ந்தளிக்க விரும்பினார். 


பின்னர் தன் மகன்கள் இருவரையும் அழைத்து உலகத்தை மூன்று முறை சுற்றி முதலில் வருபருக்கு ஞானப்பழம் பரிசு என்றார் சிவபெருமான். இதனைக் கேட்டு முருகன் தன் வாகனமான மயிலை எடுத்துக்கொண்டு உலகத்தை சுற்ற கிளம்ப, பிள்ளையாரோ தந்தையும் தாயுமே உலகம் என்று கூறி சிவபெருமானையும் பார்வதியையும் சுற்றி வந்து ஞானப்பழத்தை பெற்றுக்கொண்டார். உலகத்தை வலம் வந்து ஞானப்பழத்தை கேட்ட முருகன், நடந்தது அறிந்து, கோபமுற்று இந்த மலையில் வந்து தங்கிவிட்டார். 




சிவனும் பார்வதியும் இங்கு வந்து முருகனை சமாதானபடுத்தினர்.  ஞானப்பழமான உனக்கு எதற்கு இன்னொரு பழம் என்று கூறி சமாதானம் செய்தனர். முருகனை "பழம் நீ" என்றதால் இந்த இடம் பழநி என பெயர் பெற்றது. மலை அடிவாரத்தில் திருஆவினன்குடி குழந்தை வேலாய்தசுவாமி கோவிலும் உள்ளது.  இந்தக் கோவிலே அறுபடை வீடுகளில் மூன்றாவதாக் கருதப்ப்டுவது. 


அமைவிடம்:
                 இதற்கும் ஒரு கதை உண்டு. அகஸ்திய மாமுனிவர் தன் இருப்பிடத்திற்கு சிவகிரி, சக்திகிரி என்னும் இரண்டு மலைகளை எடுத்துச் செல்ல விரும்பினார். தன் சேவகனான இடும்பனிடம் இந்த மலைகளை தூக்கி வரச்சொன்னார். அவனும் காவடி போல் இரண்டு மலைகளையும் கம்பில் கட்டி தோளில் சுமந்து சென்றான். செல்லும் வழியில் தூக்கமுடியாமல் சோர்வுற்று மலையைக் கீழே வைத்தான். அச்சமயம் பார்த்து முருகன் ஞானப்பழம் கிடைக்காத கோபத்தில் சிவகிரி மலையின் மீது ஏற, இடும்பனால் மலையை தூக்க முடியவில்லை. கோபமுற்ற முருகன் இடும்பனை அழிக்க, இடும்பன் இறந்தான். 




பின்னர் இடும்பனை தன் பக்தனாக ஏற்றுக் கொண்டான் முருகன். இடும்பனைப் போல் காவடி சுமந்து தன்னை வழிபடுவருக்கு சகல செளபாக்கியங்களும் உண்டாகும் என வரமளித்தான். இன்றும் மலை ஏறும் வழியில் இடும்பனுக்கு கோவில் உண்டு. 


மூலவர் சிற்பம்:
          இங்கு இருக்கும் மூலவர் சிலை பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான போகர் என்பவரால் உருவாக்கப்பட்டது. 4448 அறிய மூலிகைகளை கொண்டு இவர் ஒன்பது விதமான நஞ்சு பொருட்களை உருவாக்கினார். பின்னர் இந்த ஒன்பது விதமான நஞ்சு பொருட்களை கலந்து நவபாஷானம் என்னும் மூலிகையை உருவாக்கினார். பல்வேறு நோய்களுக்கு இந்த மூலிகையை பயன்படுத்தலாம் என்றும் கண்டறிந்தார். 




அப்படி சிறப்பு வாய்ந்த நவபாஷாணத்தைக் கொண்டு முருகன் சிலையை அவர் உருவாக்கினார். அவர் உருவாக்கிய அந்த சிலையே தற்போது பழநி முருகனாக நமக்கு காட்சியளிக்கிறது. 


பஞ்சாமிர்தத்தாலும், பாலாலும் அபிஷேகம் செய்தால் மருந்து வெளிவரும் என்பதை உணர்ந்து, தினமும் சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தார் போகர். தன்னுடையே சமாதியை போகர் பழநி கோவிலிலேயே அமைத்துக்கொண்டார். 


சிறப்புகள்:
             கையில் கோலுடன் ஆண்டியை காட்சியளிக்கும் முருகன் சிலை நமக்கு உணர்த்துவது யாதென்றால் "அனைத்தையும் துறந்தால் கடவுளை அடையலாம்" என்பதாகும்.




முன்னர் கோவில் மூலவர் சிலை காணமல் போயிற்று. அச்சமயம் முருகன் அவ்வழியே வந்த சேர மன்னன் சேரமான் பெருமாள் கனவில் தோன்றி, சிலையை மீட்டு மலை மீது கோவில் அமைக்குமாறு கட்டளையிட்டான். அதன் பின்னர் சேர மன்னனே இந்தக் கோவிலை கட்டினான் என்ற வரலாறும் உண்டு. 


பெரும்பாலும் தமிழக கோவில்களில் மூலவர் சிலை கிழக்கு பார்த்தே அமைந்திருக்கும்.  ஆனால் இங்கு வடக்கு பார்த்து அமைந்துள்ளது.  இதற்கு காரணம் சேர மன்னர்கள் வடக்கு திசையில் ஆதிக்கம் செலுத்தியதே!


பூஜைகள் மற்றும் விழாக்கள்:
         தினசரி இங்கு ஆறு கால பூஜைகள் நடைபெறுகிறது.  விழாக்களை பொறுத்த வரையில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, கந்த சஷ்டி விழா ஆகிய விழாக்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படும். 


பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் பொருட்டு இங்கு தங்கத் தேர் பவனியும் தினந்தோறும் மாலை நடைபெறுகிறது. வேண்டியவர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம். 


பழநி கோவில் கட்டுப்பாட்டில் இயங்கும் மற்ற கோவில்கள்:
  • திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவில், பழநி அடிவாரம்.
  • பெரிய நாயகி அம்மன் கோவில், அடிவாரத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில்.
  • மாரியம்மன் கோவில்
  • பெரிய ஆவுடையார் கோவில், சண்முக நதி அருகில்.
  • குறிஞ்சி ஆண்டவர் கோவில், கொடைக்கானல்.
  • வேலப்பர் கோவில், கொடைக்கானல்.
வசதிகள்:
  •  வழிபாடு செய்ய ஏற்ற வகையில் பொது தரிசன வழி மற்றும் சிறப்பு தரிசன வழிகள் உள்ளன. 
  • முடிக்காணிக்கை செலுத்துவதற்கு அடிவாரத்தில் பல்வேறு இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
  • பழநியின் சிறப்பான பஞ்சாமிர்தத்தை வாங்க மலையிலும் அடிவாரத்திலும் கடைகள் உள்ளன. 
  • பக்தர்கள் தங்குவதற்கு ஏற்ப தண்டபானி நிலையம், கார்த்திகேயன் விடுதி, கோஷால விடுதி, வேலவன் விடுதி ஆகியனவும் உள்ளன. 

எப்படி செல்வது?
  • பழநிக்கு திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், சென்னை, கொடைக்கானல், தாராபுரம், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் உண்டு.
  • அருகில் உள்ள ரயில் நிலையம் - திண்டுக்கல், 48 கி.மீ தொலைவில்.
  • அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை, 85 கி.மீ தொலைவில். 
மலையேறுவதற்கு படிக்கட்டுகள், யானைப் பாதை, வின்ச் ரயில், ரோப் கார் போன்றவற்றை பயன்படுத்தலாம். 


தொடர்புக்கு: +91-04545-242236, 242467, 241417

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்



🙏திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவில் இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஒரு புகழ்பெற்ற இந்துக்கள் வழிபடும் கோயிலாகும். திரு அனந்த பத்மனாபசுவாமி கோயில் என்பது இதன் மற்றொரு பெயராகும். மூலவர் பகவான் மகா விஷ்ணு வின் கோவிலாகும், இக்கோவில் கேரளாவில் திருவனந்தபுரம் நகரத்திலுள்ள கோட்டைக்குள் அமைந்துள்ளது. இக் கோயில் விஷ்ணுவுக்கு உரிய 108 திவ்ய தேசங்கள் எனப்படும் புனித வழிபாட்டிடங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இக்கோவிலில் மூல நாதரான பத்மனாபசுவாமி மகா விஷ்ணுவின் அவதாரமாக அனந்தசயனம் எனப்படும் யோகநித்திரையில் (முடிவற்ற உறக்கநிலை, துயிலும் நிலை)ஆழ்ந்திருக்கும் வண்ணம் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.  திருவனந்தபுரம் (திரு+அனந்த+புரம்) என்னும் பெயரும் இக்கோயிலில் உள்ள இறைவனின் பெயரைத் தழுவியே ஏற்பட்டது. திருவிதாங்கூர் அரசர்கள் காலத்தில் இக்கோயில் பெரும் புகழுடன் விளங்கியது.

🙏தல வரலாறு🙏
வில்வமங்கலத்து சாமியார் என்பவர், நாராயணனுக்கு தினமும் பூஜை செய்து வந்தார். பூஜை நடக்கும் நேரங்களில் பகவான், ஒரு சிறுவனின் வடிவில் வந்து சாமியாருக்கு தொந்தரவு கொடுப்பார். சாமியாரின் மீது ஏறி விளையாடுவதும், பூஜைக்குரிய பூக்களை நாசம் செய்வதும், பூஜை பாத்திரங்களில் சிறுநீர்கழிப்பதும் மாயக்கண்ணனின் லீலைகளாக இருந்தன. சாமியாரின் சகிப்புத் தன்மையை பரிசோதிக்க இப்படி நடந்ததாக வரலாறு கூறுகிறது.

🙏ஒரு நாள் கண்ணனின் தொந்தரவை சகிக்க முடியாத சாமியார் கோபத்தில், "உண்ணீ! (சின்ன கண்ணா) தொந்தரவு செய்யாமல் இரு' எனக் கூறி அவனைப் பிடித்து தள்ளினார். கோபம் அடைந்த கண்ணன் அவர் முன் தோன்றி, ""பக்திக்கும், துறவுக்கும் பொறுமை மிகவும் தேவை. உம்மிடம் அது இருக்கிறதா என சோதிக்கவே இவ்வாறு நடந்தேன். இனி நீர் என்னைக் காண வேண்டுமானால், அனந்தன் காட்டிற்குத் தான் வரவேண்டும், எனக் கூறி மறைந்து விட்டார். தன் தவறை உணர்ந்த சாமியார் அனந்தன் காடு என்றால் எங்கிருக்கிறது என்றே தெரியாதே என்ற கவலையில் புறப்பட்டார்.

🙏பலநாள் திரிந்தும், காட்டைக் கண்டு பிடிக்க முடியவில்லை. பலரிடம் கேட்டும் அனந்தன் காடு எங்கிருக்கிறது என அறியமுடியவில்லை. ஒரு நாள் வெயிலில் நடந்து தளர்ந்து ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்தார். பக்கத்தில் இருந்த குடிசை வீட்டில் கணவன் மனைவிக்கிடையே சண்டை நடந்து கொண்டிருந்தது. அப்போது கணவன் மனைவி யிடம், "இனியும் நீ என்னிடம் சண்டைக்கு வந்தால், உன்னை அடித்து கொன்று, அனந்தன் காட்டில் கொண்டு எறிந்து விடுவேன், என மிரட்டினான். சாமியார் மகிழ்ச்சியுடன் அந்த வீட்டுக்கு சென்றார். அவர்களைச் சமாதானம் செய்து வைத்த சாமியார், அனந்தன் காட்டை பற்றிகேட்டார். அந்த வாலிபனும் காட்டை காட்டினான்.

🙏அங்கு கல்லும், முள்ளும் ஏராளமாக இருந்தது. என்றாலும் பகவானை காணும் ஆவலில் அவற்றை கடந்து முன்னேறினார். இறுதியில் பகவானை கண்டார். அப்போது அவர் "உண்ணிக் கண்ணனாக' இருக்கவில்லை, அனந்த சயனத்தில் வீற்றிருக்கும் இறைவன் விஷ்ணுவின் ரூபத்தில் காட்சி அளித்தார் -(அனந்தா என்ற பாம்பின் மேல் படுத்தவாறு காட்சியளித்தார்). அவரது உருவம் மிகப்பெரியதாகக் காணப்பட்டது.மேலும் அவர் அத்தனை பெரிய ரூபம் எடுத்ததால், முனிவரால் விஷ்ணுவை சரியாக தரிசனம் செய்ய இயலவில்லை என்றும், அதே போல் அவரை பிரதக்ஷணம் அதாவது வலம் வர முடியவில்லை என்றும் மன்றாடினார். மேலும் அவர் இறைவனிடம் தமது கையில் இருக்கும் தண்டத்தின் மூன்று மடங்கு அளவில் சுருங்கி, அவருக்காக காட்சி அளிக்குமாறு வேண்டிக்கொண்டார்.

🙏இறைவனும், உடனுக்குடன் அவர் வேண்டிக்கொண்ட போலவே காட்சி அளித்தார் மேலும் பக்த கணங்கள் அவரை மூன்று வாதில்கள் வழியாகவே வழிபடவேண்டும் என்று கற்பித்தார். இந்த வாதில்கள் வழியாகவே இன்று நாம் இறைவனை சேவித்து வருகிறோம். முதல் வாதில் வழியாக. நாம் பரம சிவனை வணங்குகிறோம், இரண்டாம் வாதில் வழியாக நாம் நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மனை வழிபடுகிறோம் மற்றும் மூன்றாவது வாதில் வழியாக நாம் விஷ்ணுவின் பாதங்களை சேவிக்கிறோம், அப்படி செய்வதால் நாம் முக்தி அடையலாம் என்று நம்புகிறோம்.

🙏மீண்டும் சாமியாரை பகவான் சீண்டினார். தனக்கு பசிஎடுப்பதாக கூறிய பகவானுக்கு, காட்டில் கிடைத்த மாங்காயில் உப்பு சேர்த்து, ஒரு தேங்காய் சிரட்டையில் வைத்து கொடுத்தார். பின்னர் திருவிதாங்கூர் மன்னருக்கு தகவல் தெரிவித்தார். மன்னர், எட்டு மடங்களில் உள்ள பிராமண பூஜாரிகளை அழைத்துக் கொண்டு, அனந்தன் காட்டுக்கு புறப்பட்டார். ஆனால், அங்கே சுவாமி இல்லை. என்றாலும் மன்னர், அந்த இடத்தில் அனந்த பத்மநாபனுக்கு கோயில் கட்ட ஏற்பாடு செய்தார். அங்கு, அனந்தன் பாம்பு மீது பள்ளி கொண்ட பரந்தாமனின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. "பத்மநாப சுவாமி' என்ற திருநாமம் சூட்டப்பட்டது.

🙏கோவில் முன்புள்ள சாலை
சேரமான் பெருமான் இக்கோயிலை முதன் முதலில் எழுப்பி, பூஜை முறைகளுக்கும் திருவிழாக்களுக்கும் ஆலய நிர்வாகத்திற்கும் ஏற்பாடுகள் செய்ததாகவும் ஓலைச்சுவடிகள் வாயிலாக அறிய முடிகிறது. தொள்ளாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அதன் பின் ஸ்ரீ பத்மநாபர் கோவில் மற்றும் அதன் சொத்துக்களை எட்டுவீட்டில் பிள்ளமார் என்ற சக்தி வாய்ந்த ஜமீன்தார்கள் ஆண்டுவந்தனர்,

🙏மேலும் எட்டர யோகம் என்ற அமைப்பு அவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தது. பிறகு மார்த்தாண்ட வர்மன், பிள்ளமார்கள் மற்றும் அவர்களுடைய வம்சத்து "குஞ்சு தம்பிகளை" போரில் தோற்கடித்து, கோவிலைக் கைப்பற்றினார். முந்தைய திருவாங்கூர் சமஸ்தான த்தின் மகாராஜாவான மார்த்தாண்ட வர்மன் இந்தக் கோவிலை கடைசியாக புதுப்பித்தார்.ஒரு முறை 1686-ல், கோவில் வளாகத்தில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்ட பொழுது, அந்த இலுப்பை மரத்தால் ஆன விக்ரக மூர்த்தியின் ஒரு பாகம் எரிந்து அழிந்தது, அப்பொழுது, இறைவன் அந்நாளில் இராஜ்ஜியத்தை பரிபாலித்து வந்த அரசரிடம் சிறிது கோபமாக இருந்ததை அந்நிகழ்ச்சி தெரிவிக்கிறது.

🙏தீப்பிடித்துக் கோயில் அழிந்து விட்டதால், மீண்டும் மன்னர் மார்த்தாண்ட வர்மரின் முயற்சியால் 1729-இ அது புதுப்பிக்கப்பட்டது. அச்சமயத்தில்தான் இலுப்பை மரத்தாலான மூல மூர்த்தி அகற்றப்பட்டு, 10008 சாளக்கிராமத்தினாலும் "கடுசர்க்கரா" என்ற அஷ்டபந்தனக் கலவையாலும் நிறுவப்பட்ட புது "அனந்தசயன மூர்த்தி" பிரதிஷ்டை செய்யப்பட்டது.பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. அனந்தன் மீது பள்ளி கொண்ட அனந்த பத்மநாபன் விக்ரகம் 18 அடி நீளம் உடையது குறிப்பிடத்தக்கது.
🙏🙏🙏🙏🙏

🙏கல்விச் செல்வம் அளிக்கும் அருள்மிகு எழுத்தறிநாதர் கோயில், இன்னம்பூர், தஞ்சாவூர் மாவட்டம்🙏.


மூலவர்                 –         எழுத்தறிநாதர்(அட்சரபுரீஸ்வரர்)
அம்மன்                 –         நித்தியகல்யாணி, சுகந்த குந்தளாம்பாள்
தல விருட்சம்     –         செண்பகமரம்
தீர்த்தம்                  –         ஐராவத தீர்த்தம்
பழமை                    –         1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர்    –         திருஇன்னம்பூர், திருவின்னம்பர்
ஊர்                           –         இன்னம்பூர்

🙏சோழமன்னனின் கணக்கரான சுதன்மன் ஒருமுறை காட்டிய கணக்கில் சந்தேகம் ஏற்பட்டது. உரிய கணக்கை சரியாகக் காட்டும்படி கடுமையான உத்தரவிட்டான். சரியான கணக்கு காட்டியும், தன் மீது பழி வந்துவிட்டதே என எண்ணிய அவர், சிவனை வேண்டினார். உடனே சிவன் சுதன்மனின் வடிவத்தில் மன்னனிடம் சென்று ஐயத்தைப் போக்கினார். சுதன்மன் சற்றுநேரம் கழித்து கணக்குடன் செல்லவே,”ஏற்கனவே காட்டிய கணக்கை மீண்டும் ஏன் காட்ட வருகிறீர்?” என மன்னன் சொல்ல, தனக்குப் பதிலாக இறைவனே வந்து கணக்கு காட்டிய விபரத்தை மன்னனிடம் எடுத்துரைத்தார். வருத்தப்பட்ட மன்னன், சுதன்மனிடம் மன்னிப்பு கேட்டதுடன், ஈசனுக்கு கோயிலும் எழுப்பினான். சுவாமிக்கு “எழுத்தறிநாதர், அட்சரபுரீஸ்வரர்” என்ற திருநாமம் ஏற்பட்டது. “அட்சரம்” என்றால் “எழுத்து.” இது சுயம்புலிங்கம் என்பதால் “தான்தோன்றீயீசர்” என்றும் பெயர் உள்ளது. அகத்தியருக்குத் இறைவன் இலக்கணம் உபதேசித்த தலம் இது. அம்பாள் “கொந்தார் குழலம்மை” என்னும் சுகந்த குந்தளாம்பாளுக்கு தனி சந்நிதியும், நித்திய கல்யாணி அம்மனுக்குத் தனி சந்நிதியும் ஆக இரண்டு அம்பாள் சந்நிதிகள் உள்ளன.

🙏சூரியன் இத்தலத்தில் வழிபட்டு அதிக ஒளியைப் பெற்றான். அவனுக்கு “இனன்” என்றும் பெயர் உண்டு. இறைவனை சூரியன் நம்பி வழிபட்டதால், “இனன் நம்பு ஊர்” என்று பெயர் ஏற்பட்டு “இன்னம்பூர்” என்று மாறிவிட்டது.

🙏பேச்சு சரியாக வராத குழந்தைகளுக்கும், பேசத் தயங்கும் குழந்தைகளுக்கும் இக்கோயிலில் அர்ச்சனை செய்தால் நல்வாக்கு பெறுகிறார்கள். கல்வியில் முன்னேற்றம் ஏற்படுகிறது. குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் முன்பு இங்கு வந்து வழிபட்டு செல்லலாம். இங்கே அம்பாள் தினமும் கல்யாண கோலத்தில் காட்சி தருகிறாள். திருமணமாகாத பெண்கள் இந்த அம்பிகையை வழிபட்டு நல்ல கணவனை அடைகின்றனர். இவளை “நித்தியகல்யாணி” என அழைக்கின்றனர்.

🙏 மற்றொரு அம்பாளான “சுகந்த குந்தள அம்பாள்” தவக்கோலத்தில் காட்சி தருகிறாள். திருமணம் செய்துகொள்ள விரும்பாமல் தனித்து வாழ்க்கை நடத்த விரும்பும் பெண்கள் இவளை வழிபடலாம். இது சூரியன் பூஜித்த தலமாகும். பங்குனி 13,14,15, ஆவணி 31, புரட்டாசி 1,2 ஆகிய தேதிகளில் சூரிய வெளிச்சம் சுவாமிமீது படுகிறது.

🙏கோரிக்கைகள்:
பள்ளியில் சேர உள்ள குழந்தைகள் முன்னதாக இங்கு வந்து அர்ச்சனை செய்து கொள்ளலாம். இங்கு நெல்லில் எழுதப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஐந்து வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு செம்பருத்தி பூவை தட்டில் பரப்பி எழுத பயிற்சி தரப்படுகிறது. பேச்சுத்திறமை இல்லாதவர்கள், படிப்பறிவு இல்லாதவர்களுக்கு நாக்கில் நெல் கொண்டு எழுதப்படுகிறது. இதனால் அறிவு கூர்மை பெறும் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியத்துக்காக இங்குள்ள அர்த்தநாரீஸ்வரருக்கு எண்ணெய் அபிஷேகம் செய்கின்றனர்.

🙏நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.அம்பாளுக்கு திருமாங்கல்ய பூஜை செய்யலாம்.

🙏வழிகாட்டி:
கும்பகோணத்திலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் புளியஞ்சேரி சென்று அங்கிருந்து திருப்புறம்பியம் செல்லும் சாலையில் வலதுபுறமாக 3 கீ மீ சென்றால் இத்தலத்தை அடையலாம். கோயில்வரை பேருந்துகள் செல்லும். சாலையிலிருந்து பார்த்தாலே கோயில் தெரிகிறது. இதே பாதையில் மேலும் 3 கீ மீ சென்றால் திருப்புறம்பியத்தை அடையலாம்.

🙏🙏🙏🙏🙏
[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]