Search This Blog

Tuesday, 20 September 2016

செவ்வாய் தலம் :::: வைத்தீஸ்வரன் கோவில்

"இத்திருக்குளத்தில் குளித்தெழுந்தால் 
சகல நோய்களும் தீரும் என்பது திண்ணம். 
இத்தலத்தில் அடி வைப்பதால் பில்லி சூனியம் 
முதலானவையும் கூட அகலும் என்பர்." 
 
  • தென் நாட்டின் தலைசிறந்த பிரார்த்தனைத் தலங்களுள் ஒன்றானது. புள்ளிருக்கு வேளூர் எனப்படும் பாடல் பெற்ற தலம். பலராலும் பொதுவாக வைத்தீஸ்வரன் கோயில் என்றே அழைக்கப்பெறுகின்றது. சோழ வளநாட்டில் தஞ்சை மாவட்டத்தில் காவிரியின் வடகரைத் தலங்களில் 16வது தலமான இத்திருத்தலம் இந்திய இருப்புப் பாதையில் வைத்தீஸ்வரன் கோயில் எனும் பெயருடன் புகை வண்டி நிலையமாகவும் அமைந்துள்ளது. தருமையாதீனத்திற்குச் சொந்தமான 27 கோயில்களுள் மிகவும் புராதனமான, பிரபலமான ஒன்றாகும் இங்குள்ள கோயில்.
  • பெயர்க் காரணம்: புள்(ஜடாயு). இருக்கு(ரிக்வேதம்), வேள்(முருகன்), ஊர்(சூரியன்) ஆகிய இந்நால்வரும் பூசித்ததால் புள்ளிருக்கு வேளூர் எனும் பெயர் கொண்டது. மற்றும் சடாயு புரி, கந்தபுரி,வேதபுரி என்றும் அங்காரகன் வழிபட்டமையால் அங்காரகபுரம் என்றும் , அம்பிகையைப் பூசித்தமையால் அம்பிகாபுரம் எனவும் அழைக்கப்பெறும். வினைதீர்த்தான் கோயில், தையல்நாயகி கோயில் மற்றும் வழக்கில் உள்ள வைத்தீஸ்வரன்கோயில் எனப் பல பெயர்களும் உண்டு.  
  • கோயில் அமைப்பு: நான்கு கோபுரங்களுடனும் உயர்ந்த மதில்களோடும் கூடிய கோயில். மேற்கு நோக்கிய இறைவன் சந்நிதி கொண்டது. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. தெற்கில் கணேசன் திகழ் மேற்கில் பைரவரும். தொக்கவடக்கில் தொடர்காளிமிக்க கிழக்கு உள்ளிருக்கும் வீரனையும் உற்றுப் பணிந்துய்ந்தேன். புள்ளிருக்கு வேளூரிற்போய். எனும் பாடலின் மூலம் வைத்தியநாத ஸ்வாமி ஆலயத்தைத் தெற்கில் கணபதியும்,மேற்கில் பைரவரும், வடக்கில் காளியும், கிழக்கில் வீரபத்திரரும் காவல் புரிகின்றனர் என்று அறியலாம்.
  • தீர்த்தம்: கோயிலுக்குள் விளங்கும் சித்தாமிர்த்த தீர்த்தம் விசேஷமானது. நான்கு புரங்களிலும் மண்டபத்தோடும் படிக்கட்டுகளோடும் நடுவில் நீராழி மண்டபத்தோடும் விளங்குகின்றது. இங்கே கிருத யுகத்தில் காமதேனு இறைவனைத் தன் முலைப்பால் கொண்டு திருமஞ்சனம் ஆட்டிய சம்பவம் நிகழ்ந்தது. அதுவே புனித தீர்த்தமாக பெருகி இங்கு அமைந்ததென்பர். இதன் காரணமாக கோக்ஷர தீர்த்தம் என்று பெயர்ப் பெறலாயிற்று. சதானந்த முனிவர் இங்கு தவம் செய்து கொண்டிருந்தபோது பாம்பால் துரத்தப்பெற்று தவளை ஒன்று தண்ணீரில் குதித்து அவர் தவத்தை கலைத்தது. முனிவர் குளத்தில் பாம்பும் தவளையும் வாசஞ் செய்யக்கூடாது என்று சபித்ததால் இக்குளத்தில் தவளைகள் வசிப்பதில்லை என்பர். இத்திருக்குளத்தில் குளித்தெழுந்தால் சகல நோய்களும் தீரும் என்பது திண்ணம். நோய்தீரக் குளத்தில் வெல்லம் கரைத்து விடுவதும் பிரகாரத்தில் உள்ள மரப்பெட்டியில் உப்பு, மிளகு இரண்டையும் கலந்து கொட்டுவதும் இன்றும் உள்ள ஒரு பிராத்தனை வழக்கம். சித்தாமிர்த்த தீர்த்தம் தவிர கோதண்ட தீர்த்தம், கௌதம தீர்த்தம், வில்வ தீர்த்தம், அங்கசந்தனத் தீர்த்தம், முனிவர் தீர்த்தம் என்று வேறு தீர்த்தங்களும் இங்கு உள.
  • மூர்த்திகள்: சுவாமி பெயர் ஸ்ரீவைத்தியநாதன், வைத்தீஸ்வரன், அம்பாள் பெயர் ஸ்ரீதையல்நாயகி, முருகன் செல்வமுத்துக் குமரன் எனும் பெயரோடு விளங்குகின்றார். கோளிலித்தலம் என்று அழைக்கப்படும் வைத்தீஸ்வரன் கோயிலில் நவக்கிரகங்கள் வக்கிரமில்லாமல் வரிசையாக ஈஸ்வரன் சந்நிதிக்கு பின்புறம் நோய்கள் தீர வேண்டி பிரார்த்தித்திருக்கும் காட்சியைக் காணலாம். அங்காரகனின் செங்குஷ்டநோயைத் தீர்த்தபடியால் அங்காரகத் தலமாகின்றது. அங்காரகனுக்குத் தனிச் சந்நிதி உண்டு. மூல விக்கிரகத்தோடு உற்சவ விக்கிரகமான அங்காரகனும் உண்டு. இரண்டும் தனித்தனிச் சந்நிதிகளாக உள்ளன. அங்காரக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடுவதால் தோஷம் நீங்கப் பெறுவர். நவக்கிரகங்களுக்கு அடுத்தாற்போல் 63 நாயன்மார்கள், ஸப்த கன்னியர் ஆகியோரையும் மற்றும் ஆயுர்வேதத்தின் தலைவனான தன்வந்திரி சித்தர் விஷ்ணு ஸ்வரூபத்தில் அமர்ந்திருக்கும் வடிவத்தையும் காணலாம். துர்க்கை மற்றும் சஹஸ்ர லிங்கமும் விசேஷமானவை.
  • தலப்பெருமை: முருகன் சூரபத்மனை வெல்ல வேல் வாங்கிய தலம் இது. இறைவன் 4448 நோய்களையும் அதோடு ஊழ்வினைகளையும் தீர்க்கவல்ல வைத்தியநாதராய் எழுந்தருளியுள்ளார்.அவருக்கு உதவியாய் அம்பாள் கையில் தைல பாத்திரமும், அமிர்த சஞ்சீவியும், வில்வமரத்தடி மண்ணும் ஏந்தி வர, இருவரும் தீராத நோய்களையும், வினைகளையும் தீர்த்து வைக்கும் வேதியத் தம்பதிகளாகின்றனர். இத்தலத்தில் அடி வைப்பதால் பில்லி சூனியம் முதலானவையும் கூட அகலும் என்பர். 
  • சடாயு குண்டம்: சீதையை இராவணன் சிறையெடுத்துச் சென்றபோது, அதனைத் தடுத்த ஜடாயுவின் சிறகுகளை இராவணன் வெட்டி வீழ்த்தினான். பின்னர் இராமன் அவ்வழியில் சீதையைத் தேடி வந்த நேரத்தில், நடந்தவற்றைச் சொல்லிய ஜடாயு இராமனது காலடியில் உயிர்ததுறந்தான். இராமபிரான் ஜடாயுவின் வேண்டுகோள்படி சிதையடுக்கி அவனது உடலைத் தகனம் செய்த இடம் ‘ஜடாயு குண்டம்’ என்று அழைக்கப் பெறுகின்றது. இன்றும் இக்குண்டத்தில் உள்ள திருநீற்றினை அணிந்தால் தீராத நோய்களும் தீரும் எனும் நம்பிக்கை உண்டு. ஜடாயு குண்டத்திற்கு அருகில் ஜடாயு மோட்சத்தைச் சிலை வடிவில் காணலாம். ஜடாயு உற்சவ மூர்த்தியாகவும் இருக்கின்றார்.
  • திருச்சாந்துருண்டை: இது வைத்தியநாதப் பெருமானின் பிரசாதமாக நோய் நீங்கும் பொருட்டு அளிக்கப்பெறுவது. ஆலயத்தில் விபூதி குண்டத்தில் (ஜடாயு குண்டத்தில்) உள்ள விபூதியையும் சித்தாமிர்த தீரத்த நீரையும் சேர்த்துக் குழைத்து, ஐந்தெழுத்து மந்திரமாகிய ‘நமசிவாய’ என்பதனை ஓதிக்கொண்டே முத்துக்குமார சுவாமி சந்நிதியில் உள்ள குழியம்மியில் அரைத்து உளுந்தளவில் உருட்டி, அம்பாள் திருவடியில் வைத்து அர்ச்சித்து எடுத்துச் சேகரித்து வைத்துக் கொண்டு வேண்டியவர்களுக்கு அந்த உருண்டை வழங்கப் பெறுகின்றது. இதனை உண்டோர் நோய் (தீவினை) நீங்கி வாழ்வாங்கு வாழ்ந்து, பின் முக்தி எய்துவர். இங்கு அர்த்த சாமப் பூஜை செல்வ முத்துக்குமார சுவாமிக்குச் செய்த பின்புதான் ஸ்வாமிக்குச் செய்யப் பெறுகின்றது. அர்த்தசாமப் பூஜையின்போது முத்துக்குமார சுவாமிக்கு அணிவிக்கப் பெறும் சந்தனமான ‘நேத்திரிப்படி’ சந்தனமும் வேண்டிய வரம் தரவல்ல மகிமையுடையது. இந்தச் சந்தனத்தை ‘புழுகாப்பு’ என்பர்.
  • தல விருட்சம்: கிழக்குக் கோபுர வாயிலில் உள்ள வேம்பு தல விருட்சமாகும். இதனை ‘வேம்படிமால்’ என்கின்றனர். ஆதிவைத்தியநாதபுரம் இதுதான் என்பர். 
  • மாதந்தோறும் வரும் கார்த்திகைவிழா இங்குச் சிறப்பானது. இந்நாளில் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளைத் தரிசிக்க மக்கள் பல்லாயிரக்கணக்கில் கூடுவர். அபிஷேகங்களில் சந்தன அபிஷேகம் மிகவும் சிறப்புடையது. தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் மாதந்தோறும் கார்த்திகையன்று எழுந்தருள, அவர்கள் திரு முன்னி லையில் இந்த அபிஷேகம் நடைபெறுவது கண்கொள்ளக் காட்சி. அங்காரக் க்ஷேத்திரமாதலால் செவ்வாயக் கிழமைகளில் அங்காரகர் பிரகாரத்தில் வலம் வருவார். கார்த்திகை மாத சோம வாரங்களில் ஈசுவரனுக்குச் சங்காபிஷேகமும் உண்டு.

செவ்வாய் தலம் :::: வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில், திருக்கோளூர்.


பிறப்பற்று மூப்புப் பிணியற்றுநாளு
மிறப்பற்று வாழவிருப்பீர் புறப்பற்றுத்
தள்ளுங்கோ ளுராவிற்றாமோதரன் பள்ளி
கொள்ளுங் கோளூர் மருஷங்கோள்!!
(108 திருப்பதி அந்தாதி 58)

திருக்கோயில் அமைவிடம்:

  • நவதிருப்பதிகளில் செவ்வாய் தலமாக விளங்கும் இந்த திருக்கோளூர் திருத்தலம், திருநெல்வேலியில் இருந்து சுமார் 36 km தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து சுமார் 34 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான தென்திருப்பேரையில் இருந்து ஆழ்வார்திருநகரி செல்லும் சாலையில் 3 km வந்து பின்னர் கிளைச் சாலையில் சுமார் 2 km சென்றால், இந்த திருக்கோளூர் திருத்தலத்தை அடையலாம்.

திருத்தலக் குறிப்பு:
தல மூர்த்தி: வைத்தமாநிதி பெருமாள் (நிஷேபவித்தன்), புஜங்க சயனம் (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: கோளூர்வல்லி நாச்சியார், குமுதவல்லி நாச்சியார்
தல தீர்த்தம்: குபேர தீர்த்தம், தாமிரபரணி
விமானம்: ஸ்ரீகரவிமானம்
கிரகம்: செவ்வாய் ஸ்தலம்


திருத்தல வரலாறு:

  • பல கோடி வருடங்களுக்கு முன்பாக செல்வத்திற்கு அதிபதியான குபேரன், அளகாபுரியில் சிறப்புடன் வாழ்ந்து வந்தான். குபேரன் மிகுந்த சிவ பக்தனும் ஆவான். ஒரு சமயம் மிகுந்த அன்புடனும், பக்தியுடனும் சிவபெருமானைத் தரிசிக்க கைலாயம் சென்றான். அந்த அழகிய பொழுதில் சிவனும் பார்வதியும் குபேரனுக்கு ஒருசேரக் காட்சி தந்தனர். மிகுந்த பக்திப் பெருக்குடன் சிவனைக் காணச் சென்ற குபேரன், தன் தாய் போன்ற பார்வதி தேவியை தீய எண்ணத்துடன் நோக்கியதாக பார்வதி தேவி குபேரன் மீது கடும் கோபம் கொண்டார்.
  • அந்த கோபத்தின் உக்கிரத்தில் குபேரனுக்கு சாபமிட்டாள் பார்வதி தேவி. "குபேரனது உருவம் விகாரம் அடையவும், அவனிடம் உள்ள செல்வங்களும், நவநிதிகளும் குபேரனை விட்டு அகலட்டும் என்றும், குபேரனுக்கு ஒரு கண் பார்வை அற்றுப் போகட்டும்" என்றும் சாபமிட்டாள். குபேரனும் தனது தவறினை உணர்ந்து சிவனிடம் சென்று முறையிட, அவரும் அன்னை பார்வதியிடம் சென்று மன்னிப்புக் கோரச் சொன்னார். அவ்வாறே பார்வதியிடம் அடிபணிந்து மன்னிப்புக் கோரினார் குபேரன். அந்நிலையில் பார்வதி தாயார், குபேரனிடம், இனி உனக்கு கண் பார்வை வராது, உன் உடல் விகாரம் குறையாது, ஆனால் இழந்த நிதிகளை, அவை சென்று அடைந்துள்ள வைத்தமாநிதி பெருமாளை வேண்டி தவம் புரிந்து பெற்றுக்கொள் எனக் கூறி அனுப்பினாள்.
  • குபேரனும் அதுபோலவே வைத்தமாநிதி பெருமாளை வேண்டி தவம் புரிந்து பாதி நிதியைப் பெற்றான். பெற்ற அந்த செல்வங்களை ஒரே இடத்தில் நிலைத்து இல்லாமல் எல்லோருக்கும் பரவலாகக் கிடைக்கும் வண்ணம் லக்ஷ்மி தேவியிடம் கொடுத்தான்.
  • தொடர்ந்து ஒரே நபரிடம் கொட்டிக் கிடக்கும் செல்வம் இருக்கும் இடத்தில் தர்மம் நிலைக்காது என்பதும், அங்கே அதர்மம் ஆள ஆரம்பித்துவிடும் என்பதும், அதனாலேயே செல்வம் ஒருவரிடத்தில் நிலையாக இல்லாமல் சுழன்று கொண்டே இருக்க வேண்டும் என்பது பெருமாள் அனுகிரகம். தர்மதேவன் நிலையாக இங்கேயே தங்கி இத்திருக்கோயில் பெருமாளை வழிபாடு செய்வதாக ஐதீகம்.
  • இவ்வாறாக தர்மம் அதர்மத்தை வென்று இத்தலத்திலேயே தங்கி விட்டதால், மற்ற இடங்களில் அதர்மத்திற்கு கொண்டாட்டமாகிவிட்டது. அதனால் அச்சம் கொண்ட தேவர்கள் தர்மத்தைத் தேடி நிதிவனத்திற்கு வந்தனர். இங்கும் தன்னைத் தேடி வந்த அதர்மத்தை, தர்மம் வென்றதனால், இத்தலத்திற்கு அதர்மபிசுனம் என்ற பெயர் உண்டானது.


  • இதற்கு முன்பாக, சுவர்த்தனன் என்பவரது பிள்ளையான தர்மகுப்தன், திருமண பந்தத்தின் வாயிலாக எட்டு பிள்ளைகளையும், இரண்டு பெண்களையும் பெற்று அதன் காரணமாக மிகுந்த வறுமைக்கு ஆட்பட்டான். தனது ஏழ்மை நிலையினை போக்கும் நோக்கத்தில் நர்மதா நதிக் கரையில் வாழ்ந்து வந்த பரத்வாஜ முனிவரை வேண்டி நின்றான். அவரும் தனது தவ வலிமையினால் தர்மகுப்தனது முன் ஜென்ம பாவங்களை அறிந்து கொண்டார். அதனை தர்மகுப்தனிடம், "நீ உனது முற்பிறவியில் அந்தணராகப் பிறந்து பெரும் செல்வந்தனாக வாழ்ந்தாய், அந்த சமயத்தில் அரசன் வந்து கேட்ட போது, அளவுக்கு மிஞ்சிய செல்வம் உன்னிடம் இருந்த போதும், அதனை மறைத்து உன்னிடம் எவ்வளவு செல்வம் உள்ளது என்பதை மறைத்து பொய் கூறினாய். உன்னுடைய செல்வத்தை நல்ல விதமாக யாருக்கும் உதவி செய்யும் நோக்கில் பயன்படுத்தாமல், பூட்டி வைத்து அழகு பார்த்தாய். அந்த செல்வம் உண்மையிலேயே கஷ்டப் படுகிறவர்களுக்குப் பயன்படாமல், அந்த செல்வங்கள் கள்வர்கள் கையில் சிக்கியது. அந்த வேதனையில் மனம் பாதிக்கப் பட்டு நீ உயிரிழந்தாய். தாமிரபரணியின் தென் கரையில், உள்ள திருக்கோளூரில் குபேரனது நவநிதிகளும் இருக்கின்றன. அங்கு சென்று வைத்தமாநிதி பெருமாளை வழிபட்டால் இழந்த செல்வத்தினைப் பெறலாம்" என்று கூறினார்.
  • தர்மகுப்தனும் அவ்வாறே திருக்கோளூர் வந்து பெருமாளை வணங்கி செல்வம் பெற்றான். இந்தக் கதையினைக் குபேரனிடம் பார்வதி தேவி சொல்லி "நீயும் அத்தலம் சென்று இறைவனை வேண்ட உன் செல்வம் திரும்பக் கிடைக்கும்" என்றாள் அன்னை பார்வதி.
  • இவ்வாறு தான் இழந்த செல்வத்தை, மாசி மாத சுக்லபட்ச துவாதசியில் பெருமாளிடம் இருந்து பெற்ற காரணத்தால் இன்றும் அந்த நாளில் குபேர தீர்த்தத்தில் நீராடி வைத்தமாநிதியை வழிபாடு செய்கின்றனர். அவ்வாறு செய்வதால் இழந்த செல்வம் திரும்பக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
  • இத்தலத்தில் பெருமாள் செல்வம் அளந்ததால், மரக்காலைத் தலைக்கு வைத்து படுத்திருக்கிறார். மரக்காலைத் தலைக்கு வைத்து, கையில் அஞ்சனம், மை தடவி நிதி எங்குள்ளது என பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
  • இங்கு வசித்த விஷ்ணுநேசர் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர்தான் மதுரகவி ஆழ்வார். இவர் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். இந்த மதுரகவி ஆழ்வார் அவதரித்த தலம் இந்த திருக்கோளூர் தலம் என்பது கூடுதல் சிறப்பாகும்.


  • மதுரகவி ஆழ்வாரைப் பற்றி சொல்லும் போது கேள்விப்படும்போது, குரு பக்தி என்னும் மேலான விஷயம் ஒருவரை வாழ்வில் எத்தனை உயரத்திற்கு கொண்டு செல்கிறது என்பதை உணர்த்தும் வண்ணம் உள்ளது. 80 வயதான மதுரகவி, தமது வடதேச பிரயாணத்தின்போது தன் வாழ்வில் தனக்கு ஒரு குரு கிடைத்தால்தான் உய்வடையலாம் என்று உணர்ந்து, பின்னர் தெற்கு நோக்கிப் பயணித்து, 16 வயதே நிரம்பிய நம்மாழ்வாரைக் குருவாக ஏற்றுக்கொண்டார். தனது ஆச்சார்யனின் அருளுக்குப் பாத்திரமாகி, அவரை மட்டுமே பாடியவர், பெருமாளைப் பற்றி ஒரு பாசுரம் கூடப் பாடவில்லை. தனக்குக் கடவுளை உணர்த்திய குருவைப் பாடினால் அவரே தன்னை மேன்மை அடையச் செய்வார் என்ற மாறாத நம்பிக்கையை அவர் மேல் கொண்டு 11 பாசுரங்கள் மட்டும் தன் குருவின் மேல் பாடி பரமனின் பாதங்களில் சரணடைந்தார். குருவின் மூலமாகவே, ஆழ்வார் என்ற பெரும் பேறு அவருக்குக் கிடைத்தது. இந்த மதுரகவி ஆழ்வாரின் உயர்ந்த செயல், நம் அனைவருக்கும் ஆச்சாரியனின் பெருமையை உணர்த்தும் என்பதில் துளியும் ஐயமில்லை.
உண்ணும் சோறும் பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர்வளம் மகிக் அவனூர் வினவி
தண்ணம் என் இளமான் புகும் ஊர் திருக்கோளூரே!!
- நம்மாழ்வார்

ஸ்ரீ மஹா சரஸ்வதி, கூத்தனூர்

திருக்கோயில் அமைவிடம்:
  •  மஹா சரஸ்வதி அம்மன் ஆலயம் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் பூந்தோட்டம் என்னும் ஊருக்கு அருகில் உள்ள கூத்தனூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையில் இருந்து சுமார் 22 km தொலைவில் அமைந்துள்ளது. திருவாரூரில் இருந்து சுமார் 20 km தொலைவில் அமைந்துள்ளது.

திருக்கோயில் அமைப்பு:
  • தமிழகத்தில் சரஸ்வதிக்கென உள்ள ஒரே கோயில் இந்த கூத்தனூர் மஹா சரஸ்வதி அம்மன் ஆலயம்தான். இக்கோயிலில் ராஜகோபுரம் தனியாக இல்லை. சரஸ்வதி தேவி குடியிருக்கும் கருவறைக்கு மேலே ஐந்து கலசங்களுடன் ஒரு கோபுரம் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் சரஸ்வதி தேவி வெண் தாமரைப் பூவில் அமர்ந்திருக்கிறார். வெண்பட்டு உடுத்தியிருக்கிறார். வலது கரத்தில் சின்முத்திரையுடனும், இடது கரத்தில் புத்தகத்துடனும், வலது மேல் கையில் அட்சர மாலையுடனும், இடது மேல் கையில் அமுத கலசத்துடனும், ஜடாமுடியுடனும் காட்சி தருகிறார் சரஸ்வதி தேவி. கையில் வீணையுடன் கிழக்கு திசையில் காட்சி தருகிறார். இக்கோயிலில் துர்க்கையும், மகாலட்சுமியும், பெருமாளும் வீற்றிருக்கின்றனர். ஆனாலும் சரஸ்வதிக்கேன்றே உள்ள தனிக் கோயிலாகவே இக்கோயில் அழைக்கப்படுகிறது.


  • கோயில் பிரஹாரத்தில் பிரம்மா, ஒட்டக்கூத்தர், நர்த்தன விநாயகர் சிலைகள் உள்ளன. அன்னைக்கு எதிரே பலிபீடத்தின் முன்னே அன்னையின் வாகனமான அன்னம் அன்னையைப் பார்த்த வண்ணம் அமைந்துள்ளது.

திருத்தல வரலாறு:

  • குலோத்துங்க சோழ மன்னனின் அவைப் புலவராக இருந்தவர் ஒட்டக்கூத்தர். இராமாயண காவியத்தில் ஏழாவது காண்டமாகிய உத்திரகாண்டத்தையும், குலோத்துங்க சோழனைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட தக்கயாக பரணி என்ற நூலையும் படைத்த பெரும் புலவர் ஓட்டக்கூத்தர். இவரது கவிபாடும் ஆற்றலைக் கண்ட குலோத்துங்க சோழன், ஒரு ஊரையே பரிசாகக் கொடுத்தார். அப்படி பரிசாக வழங்கப்பட்ட ஊர்தான் கூத்தனூர் என அழைக்கப்படுகிறது. இந்த கூத்தனூரில் குடிகொண்டுள்ள அன்னை சரஸ்வதி தேவியின் அதீத அன்பைப் பெற்ற புலவர் ஒட்டக்கூத்தர். ஒட்டாக்கூத்தர் பரணி நூல் பாட சரஸ்வதி தேவி உதவி புரிந்ததாக கூறப்படுகிறது.
  • உயிர்களைப் படைக்கும் பிரம்மாவின் மனைவி சரஸ்வதி தேவி. பிரம்ம லோகத்துக்கே தான்னால் தான் பெருமை என்று சரஸ்வதி, பிரம்மா என இருவருக்குள்ளும் சர்ச்சை ஏற்பட்டது. இதன் காரணமாக பூலோகத்தில், சோழநாட்டில் புண்ணியகீர்த்தி, சோமனை என்ற தம்பதிக்கு மகனாக பிரம்மா பிறந்தார். பகுகாந்தன் என்ற பெயர் சூட்டப் பெற்றார். சிரத்தை என்ற பெயருடன் சாஸ்வதி தேவி பிறந்தார். இருவருக்கும் திருமண ஏற்பாட்டை புண்ணியகீர்த்தி செய்யும் வேளையில், சிரத்தைக்கும், பகுகாந்தனுக்கும் முன்ஜென்ம நினைவு வந்தது. இருவரும் சிவனை வழிபட்டனர்.
  • சிவனின் அருள்பெற்ற சரஸ்வதி, கங்கையுடன் இணைந்தாள். கங்காதேவியின் ஒரு அம்சமாக மாறினாள். சரஸ்வதி தேவியும், பிரம்மனும் ஒன்று சேர்ந்தனர். கூத்தனூர் ஆபத்சகாயேஸ்வரர், பரிமள நாயகியின் அபிஷேக நீராக மாறினாள் சரஸ்வதி. கூத்தனூரில் மஹா சரஸ்வதி அம்மனாகக் குடிகொண்டாள். இந்த திருக்கோயில் கூத்தனூர் ஹரிச்சொல் நதிக்கரையில் அமைந்துள்ளது.

இக்கோயில் விஷேசங்கள்:
  • இத்திருக்கோயிலில் வசந்த நவராத்திரியும், புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விஜய தசமியன்று புருஷோத்தம பாரதிக்கு அன்னையின் அருள் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே பிள்ளைகளை அன்றைய தினம் பள்ளியில் சேர்ப்பது வழக்கமாக உள்ளது. அன்றைய தினம் இக்கோயிலில் மழலைகளுக்கு முதன் முதலாக கல்வி போதிக்கும் நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
  • தமிழ் வருடப் பிறப்பிலிருந்து தொடங்கி நாற்பத்தைந்து நாட்கள் லட்சார்ச்சனை நடைபெறும். ஆடி, தை வெள்ளிகளில் சந்தனக் காப்பு, மஞ்சள் காப்பு அலங்காரம் அன்னைக்கு செய்விப்பது வழக்கம். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று மாலை அன்னைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அன்னையின் மூல நட்சத்திர நாளிலும், கும்பாபிஷேக தினமான ஆனி மாதம் மக நட்சத்திர நாளிலும் ஸம்வத்ஸரா அபிஷேகம் நடைபெறுகிறது. சரஸ்வதிக்குரிய தினமான புதன் கிழமைகளிலும், பௌர்ணமி தினங்களிலும் தேனும் பாலும் அபிஷேகம் செய்வித்தால் நல்வித்தை பெறலாம் என்பது நம்பிக்கை.
  • இங்குள்ள நர்த்தன கணபதிக்கு சங்கடஹர சதுர்த்தியன்றும், விநாயகர் சதுர்த்தியின் போதும், சிறப்பு அபிஷேகங்கள் செய்யப் படுகின்றன. மூலைப் பிள்ளையாரிடம் தண்ணீரை நிரப்பி வைத்து வழிபட்டால் மழை பெய்யும் என்பது நம்பிக்கை. பிரம்ம புரீஸ்வரருக்கு மகா சிவராத்திரியன்று சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெறுகிறது.

நவராத்திரி விழா வரலாறு

  • சுபாகு என்பவர் ஆதி பராசக்தி அன்னையின் தீவிர பக்தராக விளங்கினார். சுபாகுவின் மகள் சசிகலையும் அப்படியே. சுபாகுவின் முறை மாமன் சுதர்சனன் என்பவரும் பராசக்தயின் பக்தராகவே விளங்கினார். ஆகவே சுதர்சனனுக்கு தன் மகள் சசிகலையை மணம் முடித்து வைத்தார் சுபாகு. இதனைக் கண்டு கோபம் கொண்ட யுதாஜித் மற்றும் அவரது மகன் சந்திரஜித் ஆகியோரை பராசக்தியே நேரில் தோன்றி வதம் செய்தார்.
  • பிறகு பராசக்தி அன்னை சுதர்சனனிடம், அயோத்தி சென்று, அங்கு நீதியுடன் அரசாளவும், தினமும் நாள் தவறாமல் தனக்கு பூஜை செய்யும் படியும் கட்டளை இட்டாள். வசந்த காலத்தில் வரும் நவராத்திரி விழாவின் போதும், அஷ்டமி , நவமி, சதுர்த்தி தினங்களில் தனக்கு சிறப்பு பூஜைகள் செய்யும் படியும் அன்னை கேட்டுக் கொண்டாள். அவ்வாறே அன்னையின் ஆணைப்படி, ஆகம முறைப்படி அனைத்துவிதமான பூஜைகளையும் அன்னைக்கு செய்து வழிபட்டார் சுதர்சனன். அம்பிகையின் பெருமைகளை ஊர் ஊராகச் சென்று பரவச் செய்தனர். இப்படி சுதர்சனனாலும், சுபாகுவினாலும் செய்விக்கப்பட்டதுதான் நவராத்திரி விழா.
  • நவராத்திரி ஒன்பது நாட்களிலும் முறையே மூன்று நாட்களுக்கு பார்வதி, லட்சுமி, சரஸ்வதி என வழிபடுவது நன்மையை அளிக்கும். ஸ்ரீ ராமரும், ஸ்ரீ கிருஷ்ணரும் நவராத்திரி வழிபாடு செய்துதான் தங்களது கஷ்டங்களில் இருந்து விடுபட்டதாக புராணங்கள் கூறுகின்றன. இத்தகைய மகிமையைக் கொண்டது நவராத்திரி விழா. கலைமகளான சரஸ்வதியை வழிபடும் தினமான சரஸ்வதி பூஜையன்று மாலை கொண்டாடப்படும் விழாவே ஆயுத பூஜை.
  • செய்யும் தொழிலே தெய்வம் என்ற புனிதத் தத்துவத்தை உணர்த்தும் விழாவே இந்த ஆயுத பூஜை. இந்த ஆயுத பூஜை நம் நாட்டில் மத வேறுபாடின்றி எல்லோராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாம் செய்யும் தொழிலுக்கு உதவக் கூடிய ஆயுதங்களுக்கு நன்றி சொல்லும் விதமாகவே இந்த விழா கொண்டாடப்படுகிறது.
[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]