Search This Blog

Saturday, 5 August 2017

துளசியின் கதை


  • பார்வதி தேவி, துளசி பூஜை செய்ததால் சிவபெருமானின் இடப்பாகத்தைப் பெற்றாள். அதைப்போல் துளசி பூஜை செய்ததால் அருந்ததிதேவி வசிஷ்டரை மணந்தாள். ருக்மணி கிருஷ்ணரை மணவாளனாக அடையும் பேறு பெற்றாள். கருட பகவான் விஷ்ணுவுக்கு வாகனமாக மாறியதும், அவர் செய்த துளசி பூஜையின் மகிமையால் தான். சாவித்திரி துளசி பூஜை செய்ததால் தான் தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்தாள். விநாயகர் கஜாக சூரனை வென்று விக்னேஷ்வரன் என்ற பட்டத்தை பெற்றதும் துளசி பூஜையால் தான்.
  • இத்தனை மகிமையும் மகத்துவமும் வாய்ந்த துளசி, பூலோகம் வந்த கதை தெய்வீகமானது.
  • துளசித்தாய் பூமியில் ‘பிருந்தை’ என்ற பெயரில் பிறந்து, ஜலந்தரன் என்ற அரக்கனை திருமணம் செய்து இருந்தாள். ஜலந்தரன் கடும் தவம் செய்து அதனால் பெற்ற வரத்தால் தேவர்களை கொடுமைப்படுத்தினான். இதனால் தங்களை காப்பாற்றும்படி தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர்.
  • இதைத்தொடர்ந்து, ஜலந்தரன் சிவனிடம் போரிட வேண்டி கயிலைக்கு புறப்பட்டு கொண்டு இருந்தான். அவன் முன் ஒரு அந்தணர் வேடத்தில் தோன்றிய சிவன் அவனிடம் பேசினார். அப்போது ஜலந்தரன் தன்னால் எதையும் செய்யமுடியும். என்னால் முடியாதது எதுவும் இல்லை என்று இறுமாப்புடன் கூறினான்.
  • உடனே அந்தணர் வடிவில் இருந்த சிவபெருமான் தன் கால் பெருவிரலால் மண்ணில் ஒரு வட்டமிட்டு, அந்த வட்டத்தை பெயர்த்து எடுத்து தலைமீது வைக்கவேண்டும் என்று கூறினார். ஜலந்தரன் அந்த வட்டத்தை பெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டான். இருகரங்களாலும் அதனைப் பெயர்த்து தலைக்கு மேல் தூக்கி தாங்கினான். உடனே அந்த வட்ட சக்கரம் அவன் உடலை இரு கூறுகளாக பிளந்து, மீண்டும் அனல்கக்கும் தீப் பிழம்பாக மாறி சிவனின் திருக்கரத்தை சென்றடைந்தது. இதற்கிடையில் கயிலைக்குச் சென்ற கணவன் திரும்பி வராததை கண்ட பிருந்தை கவலை அடைந்தாள். அவளது கற்பு என்று அழிகிறதோ அன்று தான் ஜலந்திரன் அழிவான் என்ற நிலை இருந்தது. இதைத் தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் தெரிவித்தனர். உடனே அவர் பிருந்தையின் கற்பைச் சோதிக்க ஒரு தவ முனிவர் வடிவில் பிருந்தை முன் சென்றார். அப்போது அவர் ஜலந்தரன் இருகூறாகி இறந்து விட்டதை கூறி அவள் முன் அந்த இருகூறுகளும் மாயையினால் வரும்படி செய்தார்.
  • பிருந்தை தன் கணவன் மீண்டும் உயிர் பெற்று வர வேண்டும் என மன்றாடி கேட்டுக்கொண்டாள். உடனே திருமால் ஜலந்தரனின் உடற்கூறுகளை ஒன்றாகச் சேர்த்து, தான் அந்த உடலில் புகுந்து ஜலந்தரனே மீண்டும் வந்து விட்டதாக நம்பும்படி செய்தார்.
  • பின்னர் திருமால் சிலகாலம் பிருந்தையுடன் குடும்பம் நடத்தினார். காலப்போக்கில் தன்னுடன் வாழ்பவர் தன் கணவன் இல்லை. மாயையில் வந்தவர் என்பதை அறிந்து கொண்ட பிருந்தை தீயில் புகுந்து உயிர் துறந்தாள்.
  • இதனால் மிகவும் மனம் வருந்திய திருமால் பிருந்தை தீக்குளித்த இடத்திலேயே அமர்ந்து இருக்க, இதை பார்த்த பார்வதி தேவி தனது இடது கை சிறு விரலில் இருந்து ஒரு விதையை உண்டாக்கி சிவபெருமானிடம் கொடுக்க, அதை பிரம்மா பெற்று பிருந்தை இறந்த இடத்தில் ஊன்றி தண்ணீர் வார்த்தார். அங்கே துளசி செடி உண்டாயிற்று. திருமால் அந்தத் துளசியை எடுத்து தன்மேல் அணிந்து மீண்டும் சகஜ நிலையை அடைந்தார்.
  • இந்தச் சம்பவம் நடந்த இடம் ‘திருவிற்குடி’ என்றத் திருத்தலமாகும். துளசித்தாய் தோன்றிய திருவிற்குடி சிவதலம் நாகப்பட்டினத்தில் இருந்து திருவாரூருக்கு செல்லும் வழியில் உள்ளது. ஜலந்தரனை சம்ஹாரம் செய்த திருவிற்குடி சிவபெருமானின் அட்டவிராட்டான தலங்களுள் ஒன்றாகும். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற இக்கோவில் பிருந்தையை திருமால் துளசியாக ஏற்றுக் கொண்ட தலம். இக்கோவிலில் இறைவன் பெயர் விரட்டானேசுவரர். இறைவியின் நாமம் ஏலவார் குழலி பரிமளநாயகி. தலமரம் துளசி.

திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்!


  • தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.
  • திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏனெனில், ஏழுமலையான் சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹுட் வெப்பத்திலேயே இருக்கும் இது ஒரு அதிசயம் தானே! ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.
  • இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று விளங்குகிறது.
  • ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ளகுலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.
  • பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
  • உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பர். இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.
  • பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.

ஏழுமலையானின் அபிஷேகத்திற்கு எங்கிருந்து பொருட்கள் வருகிறது தெரியுமா? 
  • ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், புனுகும் சாத்துவர்.தினமும் காலை 4.30- 5.30 மணிக்குள் அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு ஆகும் செலவு ஒரு லட்சம். பணம் செலுத்தியவர்கள் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.
  • பெருமாளுக்குரிய ரோஜாப்பூக்கள் ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்படுகின்றன. ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.80. பக்தர்களின் செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன.
  • சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.
  • ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை.
  • ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது.
  • பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ராஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் ஆகியோருடைய திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
  • மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார். இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம்.
  • அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கான வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் 966ம் ஆண்டில் செய்யப்பட்டதாகும். பல்லவ மன்னன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள் தந்துள்ளார்.
  • வெள்ளிக்கிழமைகளிலும், மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது.
  • மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை. 
  • அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது.திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் புளியமரம்.
  • சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம் பெற்றிருக்கும். ஆனால், திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்.
  • ஆங்கிலேயர்களில் சர்தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற வீரர் ஆகியோர் பெருமாளின் பக்தர்களாக இருந்ததோடு பல நேர்த்திக்கடன்களைச் செலுத்தியுள்ளனர். இதில் இன்று வரை பெருமாளுக்கு மன்றோ தளிகை என்றொரு ஒரு நிவேதனம் ஆங்கிலேயர் பெயரால் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
  • திருப்பதி அலமேல்மங்கைக்குரிய ஆடைகத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். தாயாரின் திருமேனியில் படும் இந்த ஆடையை நெய்யும் போது மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகின்றனர்.
  • ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே (கோயிலை ஒட்டிய தெப்பக்குளம்) மீண்டும் கலக்கிறது. ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
  • 1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளன.

மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள்!!!

முதல்நாள் – பிரதமை – பணம் சேரும்
2ம் நாள் – துவிதியை – ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல்
3ம் நாள் – திரிதியை – நினைத்தது நிறைவேறுதல்
4ம் நாள் – சதுர்த்தி – பகைவர்களிடமிருந்து தப்பித்தல்
5ம் நாள் – பஞ்சமி – வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல்
6ம் நாள்சஷ்டி – புகழ் கிடைத்தல்
7ம்நாள் – சப்தமி – சிறந்த பதவிகளை அடைதல்
8ம் நாள் – அஷ்டமி – சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்
9ம்நாள் நவமி – சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல்.
10ம் நாள் தசமி – நீண்நாள் ஆசை நிறைவேறுதல்
11ம்நாள் – ஏகாதசி – படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி
12ம் நாள் – துவாதசி – தங்கநகை சேர்தல்
13ம்நாள் – திரயோதசி – பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்
14ம்நாள் – சதுர்த்தசி – பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை.
15ம் நாள் – மகாளய அமாவாசை – முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்.
எனவே, மகாளய பட்சம் என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால் லாபம் நமக்கு மட்டுமல்ல! நம் தலைமுறைக்கும் சேர்த்து தான்.

மஹாளய பட்சம் எனும் மகத்தான புண்ணிய தினங்கள் – ஏ.எம்.ஆர்

  • நம்மீது வைத்துள்ள ஈடிணையற்ற கருணையினால், பித்ருக்கள் எனப் பூஜிக்கப்படும் நம் முன்னோர்கள் எங்கோ கற்பனைகளுக்கும் மீறிய பலப் பல கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள பித்ருக்களின் உலகத்தில் இருந்து, ஸ்வர்ணமயமான விமானங்களில், சூர்ய கதிர்களின் வழியாக பூவுலகிற்கு எழுந்தருளி, மஹாளய பட்சம் எனும் அந்த பதினைந்து புனித தினங்களிலும் நம்முடன் தங்கியிருக்கிறார்கள் என்று வேதகால மகரிஷிகள் அருளியுள்ளனர்.
  • கிடைத்தற்கரிய புண்ணிய பலனை நமக்கு அளித்தருளும் அந்தப் பதினைந்து நாட்களும் - நாம் தூய்மையான உள்ளத்துடன் இருக்க வேண்டும். வீட்டை தூய்மைப்படுத்தி, சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பதினைந்து நாட்களிலும், வீட்டில் எவருடனும் சண்டையிடுவதோ, அல்லது தவறான வார்த்தைகள் பேசுவதோ அல்லது அசைவ உணவு உண்பதோ கண்டிப்பாகக் கூடாது. ஏனெனில், அப்போது நம் முன்னோர்கள் நம் வீடுகளில் தங்கியிருக்கிறார்கள். அவர்களது தேஜஸ்ஸை (தெய்வீக ஒளி) நம் ஊனக்கண்களில் பார்த்தால், அந்த ஒளியின் பிரகாசத்தினால் நம் பார்வை போய் விடும். ஆதலால்தான் அப்பெரியோர்கள் தங்கள் ஒளியை மறைத்துக் கொள்கிறார்கள்.
  • சக்தி உள்ளவர்கள் தினமும் சிராத்தம் செய்யலாம். இதற்கு வசதியில்லாத அன்பர்கள் அவரவர்கள் தங்கள் தந்தை இறைவனடி சேர்ந்த திதியன்று செய்யலாம். தந்தை காலமான தினத்தின் திதி தெரியாதவர்கள் ஏகாதசி அல்லது மஹாபரணி ஆகிய தினங்களில் செய்யலாம். புண்ணிய நதிக்கரையில் செய்வது மிகச் சிறந்த நற்பலனை அளிக்கும்.
தான பலன்!
  • மஹாளய பட்சம் புண்ணிய தினங்களில் ஏழைகளுக்கும், ஆசார அனுஷ்டானங்களில் சிறந்த பெரியோர்களுக்கும் வஸ்திர தானம், அன்னதானம், கன்றுடன் கூடிய பசு தானம், தீப தானம் ஆகியவற்றை அளிப்பது மகத்தான புண்ணிய பலனை அளிக்கும்.
ஸ்நானம்!
  • இந்த மஹாளய அமாவாசை தினத்தில் புண்ணிய நதிகள், சேது, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய திருத்தலங்களில் சமுத்திர ஸ்நானம் செய்வது, காசி, கயை, குருக்ஷேத்திரம், சூர்ய குண்டம், பிரம்ம சரஸ் ஆகிய தீர்த்தங்கள், கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி, நர்மதை, துங்கபத்ரா போன்ற மகா புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்து, பித்ருக்களுக்காக அவரவரது சக்திக்கேற்ப தானம் கொடுப்பது அளவற்ற புண்ணிய பலனைத் தரும்.
சிராத்த பலன்!
  • மஹாளய பட்சத்தில் செய்யும் சிராத்தம், மற்றும் பித்ரு பூஜைகள் ஆகியவற்றின் புண்ணிய பலன் நமக்குப் பல பிறவிகளுக்குத் தொடர்ந்து கிடைக்கும். தர்ம தேவதைக்கு தீப தானம் அளிப்பது மகத்தான புண்ணிய பலனை அளிக்கும். மஹாளய பட்சத்தில் சிராத்தம் செய்து, பித்ருக்களை பூஜிக்கும் புண்ணிய பலன் எத்தகைய கொடிய கிரக தோஷங்களானாலும், ஒரு நொடியில் போக்கி விடும்.
பித்ருக்களை வழி அனுப்புதல்!
  • மஹாளய அமாவாசை அன்றுதான் பித்ருக்கள் அவர்களது உலகங்களுக்குத் திரும்பிச் செல்கின்றனர். ஆதலால், அன்று அவர்களை விசேஷமாக பூஜித்து, நமஸ்கரித்து, அவர்களை வழி அனுப்ப வேண்டும். கிடைத்தர்க்கரியது பித்ருக்களின் ஆசி. அதிலும் மஹாளய பட்சம் 15 நாட்களும் அவர்கள் நம்முடன் பரம கருணையுடன் தங்கியிருப்பதால், அதற்கேற்ப நாம் பக்தியுடன் நடந்து கொள்ள வேண்டும். கிடைத்தற்கரியது மஹாளய பட்ச புண்ணிய காலம்.
–நன்றி குமுதம் ஜோதிடம்

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா மஹா தந்திர யுக்தி

கீழ்க்கண்ட வீரர்களில், யாருடைய வீழ்ச்சிக்காகக் ஸ்ரீ கிருஷ்ணன் தீட்டிய திட்டம், Master Plan என்ற பாராட்டைப் பெறும்.?
1) ஜயத்ரதன்,
2) பீஷ்மர,
3) துரோணர்
4)கர்ணன்,
5) ஜயத்ரதன்,
6) துரியோதனன்
7) விதுரர்...
  • அநேகப் பேர் கர்ணனின் வீழ்ச்சிக்குக் ஸ்ரீ கிருஷ்ணன் தீட்டிய யுக்தி தான் சரி என்று நினைப்பார்கள். இன்னும் சில பேர் ஜயத்ரதனைக் கொல்ல சூரியனை மறைத்தது தான் உயர்ந்தது என்று நினைக்கலாம். இதே மாதிரிதான், பீஷ்மர், துரோணர் - இவர்களுக்கு எதிராக எடுத்த முயற்சிகள். ஆனால் சரியான விடை விதுரருக்காகத் தீட்டிய திட்டம்தான்.
யார் இந்த விதுரர்.?
  • விதுரர், திருதராஷ்டிரருக்கும், பாண்டுவுக்கும் தம்பி (Step Brother) என்றும், பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும்சித்தப்பா என்றும் அவருடைய தாயார் ஒரு பணிப்பெண் என்றும் அநேகமாக எல்லோருக்கும் தெரியும். மகாநீதிமான், தருமத்திலிருந்து சிறிதளவும் நழுவாதவர் அவர், என்பது மஹாபாரதத்தில் நடந்த அநேக சம்பவங்களிலிருந்து தெரியவருகிறது.
  • கெளரவர் பக்கத்திலிருந்து போராடும் பெரிய வீரர்களை வீழ்த்தக் ஸ்ரீ கிருஷ்ணன் போட்ட திட்டங்கள் அவ்வளவு கடினமானது இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு பலஹீனம் . பீஷ்மருக்குப் பெண்களுடன் போராட முடியாத மனநிலை. துரோணருக்குப் புத்திர பாசம். கர்ணனுக்கு அவனுடைய தயாள குணம். மேலும் இவர்கள் எல்லாரும் யுத்தத்தில் மரணம் அடைய வேண்டும் என்று நியதி. 
  • சாஸ்திரம் சொல்கிறது. எல்லா சமயங்களிலும் அப்பாமார்களும், சகோதரர்களும், கணவன்மார்களும், மச்சினர்களும், பெண்களை கெளரவித்து, அவர்களை உயர்ந்த நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
  • மேலே சொன்ன வீரர்கள் யாராவது இதன்படி நடந்துகொண்டார்களா.? திரெளபதியை துச்சாதனன் துகில் உரியும்போது வாய் திறக்காமல் மெளனமாகத்தானே இருந்தார்கள்அதற்கான தண்டனை — யுத்தத்தில் மரணம்.
சரி, இப்போது கேள்வி. விதுரருக்காக ஏன் திட்டம் தீட்ட வேண்டும்.?
  • விதுரர் அப்பழுக்கில்லாதவர். மற்ற பெரியவர்கள் செய்த பிழையை அவர் செய்யவில்லை. துணிந்து, துரியோதனனையும் அவன் சகோதரர்களையும் கண்டித்து திரெளபதிக்காக வாதாடினார். அதனால் தருமம் தவறாத அவரை எப்படி யுத்தத்தில் சாகடிக்க முடியும். மேலும் பாண்டவர்கள் பக்கத்தில் தரும புத்திரர் (எமனின் மகன்) எதிர்பக்கம், அவர் தந்தை - தர்மராஜர் (விதுரர்) சமநிலை சரியாக வராதே.?
  • எவ்வளவு அவமானப்பட்டாலும் யுத்தம் என்று வந்தால், மற்ற பெரியவர்கள் - பீஷ்மர், துரோணர் - போல் விதுரரும் செஞ்சோற்றுக் கடனுக்காக., துரியோதனனுக்காகத்தானே போராட வேண்டிய கட்டாயத்துக்குள்ளாவார். முன்னமேயே சொல்லியிருக்கிறோம். அவர் வில் எடுத்தால் அவரை ஜெயிக்கவே முடியாது. இப்பொழுது புரிகிறதா.?
  • விதுரர், கெளரவர்கள் பக்கம் நின்று போரிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெறுவது நிச்சயம் இல்லை. மஹாபாரதப் போரின் முடிவே வேறே மாதிரி ஆகிஇருக்க வாய்ப்பு உண்டு. அதனால் எல்லோரையும்விட மிக முக்கயமான நபர், விதுரர்தான். அவர் கெளரவர்களுக்காக நிச்சயம் போராடக் கூடாது.
எப்படி தடுப்பது.?
  • இதோ ஸ்ரீ கிருஷ்ணனின் யுக்தி .... ஸ்ரீ கிருஷ்ணா், விதுரரை கெளரவர்களிடமிருந்து விலக்கிவைக்கப் போட்ட திட்டம், ரொம்ப ரொம்ப சிம்பிள். Human Psychologyஐ நன்கு பயன்படுத்தி செயல்பட்டார். எல்லோருக்கும் தெரிந்த கதை ஸ்ரீ கிருஷ்ணன் தூது. பாரதப் போரைத் தடுக்க, ஸ்ரீ கிருஷ்ணன் பாண்டவர்களுக்காகத் தூது சென்றான். அவன் வருகிறான் என்று தெரிந்த திருதராஷ்டிர மகாராஜா தடபுடல் வரவேற்பு எற்பாடு செய்திருந்தார்.
  • சபைக்குச் செல்லும் நாளுக்கு முந்தின இரவு, ஸ்ரீ கிருஷ்ணன் யார் வீட்டில் தங்குவார் என்ற கேள்வி பிறந்தது. நான், நீ என்று எல்லோரும் அவரை அழைத்தார்கள். ஸ்ரீ கிருஷ்ணரோ., “நான் தூதுவன். என் வேலை வெற்றி பெற்றால்தான் உங்கள் உபசரணைகளை ஏற்றுக்கொள்வேன். இப்போது இந்த இரவில் நான் விதுரர் வீட்டுக்குச் சென்று என் பொழுதைக் கழிக்கிறேன்” என்றார். விதுரருக்கு மகா சந்தோஷம். தனக்கு பிரியமான கிருஷ்ணன் தன் விருந்தினராக வருவதைப் பெரும் பாக்கியமாகக் கருதினார். இரவு பொழுது நன்றாகவே இருந்தது — விதுரருக்கும் கிருஷ்ணருக்கும்.
  • மறுநாள், அரச சபையில் ஸ்ரீ கிருஷ்ணன் பாண்டவர்களுக்காக வாதாடினான். துரியோதனன் ஒரு ஊசி முனை நிலத்தைக்கூடப் பாண்டவர்களுக்குக் கொடுக்க முடியாது என்று சொல்லி கிருஷ்ணனையும் அவமதித்துப் பேசினான். கிருஷ்ணனும் "யுத்தம் நிச்சயம்" என்று சொல்லிவிட்டு பாண்டவர் முகாமுக்குத் திரும்பினார். 
  • திரும்பும்முன், கிருஷ்ணருடைய சாரதி கேட்டான். சுவாமி, எந்த நோக்கத்தில் நீங்கள் விதுரர் மாளிகையில் தங்க நிச்சயத்தீர்கள்.?” என்றான். கிருஷ்ணா் சொன்னார், என் மனதில் ஒரு திட்டம் இருக்கிறது. அது நடக்குமா.? என்பது இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரியும்” என்று சிரித்தார்.
  • கிருஷ்ணன் சென்ற பின் துரியோதனன் சபையில் எல்லோரும் அவனிடம் கெஞ்சி, கிருஷ்ணா் பேச்சைக் கேட்டு யுத்தத்தை தவிர்க்க வேண்டும் என்று வாதாடினார்கள். அதில் விதுரர் குரல் ஓங்கி ஒலித்தது.
  • ஏற்கனவே துரியோதனனுக்கு விதுரர்மேல் ஒரு கடுப்பு. அவர் பாண்டவர்கள் கட்சி என்று ஒரு நினைப்பு. போதாக்குறைக்கு விதுரர் பாண்டவ தூதரான கிருஷ்ணனை தன் வீட்டில் உபசாரம் செய்தது. விதுரர் பேச்சைக் கேட்டவுடன், துரியோதனனுக்குக் கோபம் பொத்துக் கொண்டுவந்தது. என்ன பேசுகிறோம் என்ற நினைப்பில்லாமல் நாக்கில் நரம்பின்றி விதுரரை அவமானப் படுத்திப் பேசினான். குறிப்பாக, அவரை ‘தாசி புத்திரன்’ என்று திட்டித்தீர்த்தான். (ஏற்க்னவே இருந்த மாண்டவ்யர் சாபம் முற்றிலும் பலித்து விட்டது)
  • விதுரருக்கு கோபம், வருத்தம். சபையோர்கள் நடுங்க சபதமிட்டார். எனக்கு இங்கே இனிமேல் வேலையில்லை. அழிவு காலம் நெருங்கி கொண்டிருக்கிறது. என்னை அவமானப் படுத்திய இந்த துரியோதனனுக்காக நான் என் வில்லை எடுத்துப் போராட மாட்டேன். அதே சமயம் நான் பாண்டவர்கள் பக்கமும் செல்ல மாட்டேன்” என்று சொல்லித் தன்னுடைய வில்லை இரண்டாக உடைத்துவிட்டுச் சபையிலிருந்து வெளியேறினார்.
  • யுத்தம் முடியும்வரை அவர் தீர்த்த யாத்திரையிலிருந்து திரும்பவில்லை என்பது வேறு கதை. இப்பொழுது உங்களுக்கு புரிந்து இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணன், விதுரர் வீட்டில் தங்காமல் இருந்தால், விதுரர் வில்லை உடைத்து வெளியேறியிருப்பாரா.? துரியோதனனுக்காகப் போராட வேண்டிய ஒரு கட்டாயம் அவருக்கு வந்திருக்கும் அல்லவா.? 
  • விதுரர் வைத்திருந்த வில் மஹாவிஷ்ணுவின் வில். கோதண்டம் எனப்படும் அந்த வில்லை எவராலும் வெல்ல முடியாது. அர்ஜுனன் கையில் உள்ள வில் பிரம்மாவுடையது. காண்டீபம் என்பது அதன் பெயர். போர் என்று வந்து விதுரர் கோதண்டத்துடன் வந்து நின்று விட்டால் ஆனானப்பட்ட அர்ஜுனனால் கூட தன் வில்லான காண்டீபம் கொண்டு அவரை வெல்ல முடியாது.! இதனை அறிந்திருந்த ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, தான் விதுரர் மாளிகையில் தங்கி, துரியோதனனுக்கு சினமூட்டி அவனை அப்படிப் பேச வைத்து., விதுரர் வில்லை முறிக்க வைத்து விட்டார். இதுவும் பாண்டவர்களுடைய வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்து விட்டது..!!
இதுதான் ஸ்ரீ கிருஷ்ணனுடைய மஹா தந்திர யுக்தி 


திருப்பதி - தினசரி சேவை முறைகள்!


  • திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும். காலையில் சுவாமியை எழுப்புவதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என 6 பேர் சன்னதி முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள். 
  • முதலில் துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள். பின்னர் அர்ச்சகர் ஒரு ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னதியை திறப்பார். பின்னர் சுவாமியை வணங்கிவிட்டு சன்னதி கதவை சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள். அந்நேரத்தில் ""கவுசல்யா சுப்ரஜா ராம... என்ற சுப்ரபாதம் வெளியே நிற்கும் ஒரு குழுவினரால் பாடப்படும். சன்னதிக்குள் தீப்பந்தம் கொண்டு செல்பவர் அங்குள்ள விளக்குகளை எல்லாம் ஏற்றுவார். பின்னர் வீணையை இசைக்க வெங்கடாசலபதி அருகில் போக சீனிவாச மூர்த்தி என்பவரை கொண்டு வந்து அமர்த்துவார்கள். 
  • அவரை முதல்நாள் இரவில் ஒரு தொட்டிலில் படுக்க வைத்திருப்பார்கள். அந்த தொட்டிலிலிருந்து சுவாமியை எடுத்து மூலவர் அருகில் அமரவைப்பர். சுப்ரபாதம் பாடி முடித்ததும் சன்னதி திறக்கப்படும். சுவாமிக்கு பாலும் வெண்ணெயும் படைத்து "நவநீத ஹாரத்தி எனப்படும் தீபாராதனை செய்யப்படும். "விஸ்வரூப தரிசனம் என்றும் இதை சொல்வதுண்டு. இந்த சேவையைக் காண ஒரு நபருக்கு கட்டணம் ரூ.120/-. மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள்.
  • திருப்பதி மலை யிலுள்ள ஆகாயகங்கை தீர்த்தத்திலிருந்து மூன்று குடங்களில் புனிதநீர் வந்துசேரும். ஒரு குடம் நீரை காலை பூஜைக்கும், மற்றொன்றை மாலை பூஜைக்கும், இன்னொன்றை இரவு பூஜைக்கும் எடுத்து வைப்பார்கள். (பிரம்மோற் ஸவ காலத்தில் மட்டும் யானைமீது தீர்த்தம் எடுத்து வரப்படும்). 
  • ஒரு குடம் தண்ணீரை ஐந்து வெள்ளி பாத்திரங்களில் நிரப்புவார்கள். பின்னர் உத்தரணி(ஸ்பூன் போன்றது)யில் தண்ணீர் எடுத்து சுவாமி முன்பு அர்ச்சகர் நீட்டுவார். சுவாமி அதில் முகத்தை அலம்பிக் கொள்வார் என்பது ஐதீகம். பின்னர் மீதி உள்ள தண்ணீரை சுவாமியின் பாதத்தில் அபிஷேகம் செய்வார்கள். முழு மூர்த்திக்கும் அபிஷேகம் நடப்பதில்லை. மூலவருக்கு பதிலாக அருகிலுள்ள போகசீனிவாச மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்படும். அப்போது சுவாமியின் இடுப்பில் ஒரு துண்டை கட்டி வாசனை தைலம் தேய்த்து, மஞ்சள் கலந்த நீரால் அபிஷேகம் நடத்துவார்கள். பிறகு பசும்பால், சந்தனம், தேன், மீண்டும் மஞ்சள் தண்ணீர் என வரிசையாக அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு பிறகு வஸ்திரம் சாத்தப்படும். சுவாமிக்கு நெற்றியில் நாமம் இடுவார்கள். பிறகு அவர் முன்னால் கண்ணாடியை காட்டுவார்கள். குடைபிடித்து, சாமரத்தால் விசிறுவார்கள். இதன்பிறகு தீபாராதனை நடக்கும்.இத்துடன் காலை சுப்ரபாத பூஜை நிறைவடையும்.
  • சுப்ரபாத பூஜையை அடுத்து, காலை 3.30 முதல் 3.45 வரை சன்னதியை திரை போட்டு மறைத்து, சுத்தி எனப்படும் தூய்மை செய்யும் பணி நடக்கும். அந்த நேரத்தில் முதல் நாள் சுவாமிக்கு அணிந்த மாலைகளை கோயிலுக்கு பின்னால் உள்ள பூக் கிணறில் கொண்டு சேர்ப்பார்கள். பின்னர் புதிய மாலைகள் சுவாமிக்கு கொண்டு வரப்படும். இதைக் கொண்டுவர ஜீயங்கார் என்பவர் உள்ளார். ஜீயங்காருக்கு உதவியாக ஏகாங்கி என சொல்லப்படுபவர் இருக்கிறார். ஜீயங்கார் முன்னால் நடக்க ஏகாங்கி பின்னால் வருவார். கூடவே முரசு வாத்தியத்துடன் ஒருவர் செல்வார். இவர்களுக்கு பின்னால் பள்ளி எழுச்சி பாட இருவர், திருப்பாவை பாட இருவர், புருஷ ஸுக்தம் சொல்ல இருவர் என ஒரு கோஷ்டியே திரண்டு வரும். பூ கட்டுவதற்கு என யமுனாதுறை என்ற இடம் கோயிலில் இருக்கிறது. அங்கிருந்து பூமாலைகள் சுவாமிக்கு அணிவதற்காக எடுத்து வரப்படும். காலை 3.45 மணிக்கு தோமாலை சேவை ஆரம்பமாகும். 
  • சன்னதிக்கு பூக்கூடை வந்தவுடன் அர்ச்சகர் சுவாமியின் மார்பில் இருக்கும் மகாலட்சுமிக்கு முதலில் பூச்சரத்தை சாத்துவார். பின்னர் சுவாமிக்கு மாலைகள் சாத்தப்படும். பெருமாளுக்கு மாலை சாத்தி முடித்து அடுக்கு தீபாராதனை செய்யப்படும். இதற்கு 25 நிமிடம் ஆகும். அதுவரை ஜீயங்காரும் மற்றவர்களும் திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை பாசுரங்களை பாடுவார்கள். இதை பார்ப்பதற்கு ஒரு நபருக்கு கட்டணம் ரூ.220. இதற்கும் மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். இந்த சேவை ராமானுஜர் காலத்தில், "தோள் மாலை சேவை என சுத்த தமிழில் அழைக்கப்பட்டது. பின்னர் தெலுங்கில் "தோமாலா சேவா என மாறிவிட்டது.
  • கொலுவு தர்பார்: ஏழுமலையான் கோயிலில் தோமாலை சேவை காலை 4.30 மணிக்கு நிறைவுபெறும். இதையடுத்து கொலுவு நிகழ்ச்சி 15 நிமிடங்கள் நடக்கும். இதற்காக கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி விக்ரகம் ஏழுமலையான் சன்னதிக்குள் இருக்கிறது. இந்த விக்ரகத்தை வெள்ளி பல்லக்கில் வைத்து, வெள்ளி குடை பிடித்து சன்னதியில் இருந்து வெளியில் எடுத்து வருவர். ஒரு மறைவிடத்தில் வைத்து, எள்ளுப்பொடி, வெல்லம், வெண்ணெய் நைவேத்தியம் செய்து அர்ச்சனை நடத்தி ஆரத்தி காட்டுவர். பிறகு அர்ச்சகர் ஒரு பஞ்சாங்கத்தை பிரித்து அன்றைய நாள், நட்சத்திரம், திதி உள்ளிட்ட விவரங்களை வாசிப்பார். அதன்பிறகு முதல்நாள் உண்டியலில் எவ்வளவு பணம் சேர்ந்தது, தங்கம், வெள்ளி வரவு ஆகிய விபரங்களை சுவாமியிடம் சொல்வர். மூலவரே கொலுவு ஸ்ரீநிவாசமூர்த்தியின் வடிவில் வெளியே வருவதாக ஐதீகம் உண்டு. மூலவரிடமே நேரடியாக கணக்கு வழக்குகளைச் சொல்வதாக நம்பிக்கை. இந்த காட்சியைக்காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
  • முதல் மணி: அர்ச்சனாந்திர தரிசனம் முடிந்ததும், வெங்கடாசலபதிக்கு முதல் நைவேத்தியம் படைக்கப்படும். அப்போது இரண்டு மணிகள் ஒலிக்கப்படும். அவருக்கு முதலில் தயிர்சாதம் படைக்கப்படும். மூலவருடன் விஷ்வக்சேனர், கருடன் மற்றும் நித்யசூரிகளுக்கும் (முக்தி பெற்றவர்கள்) இதே நைவேத்தியம் படைக்கப்படும்.
  • இரண்டாவது மணி: இதையடுத்து மீண்டும் மணி அடிக்கப்பட்டு 2வது முறையாக நைவேத்தியம் படைக்கப்படும். அப்போது வராக புராணத்தில் உள்ள 108 நாமாக்களை கொண்ட அஷ்டோத்திர நாமா வாசிக்கப்படும். இதை பக்தர்கள் யாரும் பார்க்க முடியாது. ஆனால், சுவாமிக்கு நைவேத்தியம் செய்யப்படும் செருப்புலு மற்றும் பணியார வகைகள் ஒரு குறிப்பிட்ட அளவு பக்தர்களுக்கு மட்டும் பிரசாதமாக வழங்கப்படும்.
  • சகஸ்ரநாம அர்ச்சனை: கொலுவு தரிசனத்தை அடுத்து சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கும். விஷ்ணு சகஸ்ரநாமம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் வெங்கடாசலபதிக்கென தனியாக ஆயிரத்தெட்டு பெயர் சொல்லி சகஸ்ரநாமம் இருக்கிறது. இதை செய்வதற்கு ஒரு நபருக்கு ரூ.120 கட்டணம். காலை 4.45 மணி முதல் 5.30 வரை இந்த அர்ச்சனை நடக்கும். நமது பெயர், குலம், கோத்திரம் ஆகியவற்றை முன் கூட்டியே சொல்லிவிட்டால் நமது பெயரில் அர்ச்சனை செய் வார்கள். இந்த தரிசனத்தின் போது பக்தர்களை அங்குள்ள ஊழியர்கள் யாரும் தள்ளி விட மாட்டார்கள். 
  • சகஸ்ரநாம அர்ச்சனை முடிந்து பூஜை நடத்தப்படும். இந்த பூஜைக்கு அர்ச்சனாந்தர தரிசனம் என்று பெயர். இதை பார்க்க ஒரு நபருக்கு ரூ.200 கட்டணம். மூன்று மாதங் களுக்கு முன்பே பதிவு செய்துகொள்ள வேண்டும். காலை 5.30க்கு துவங்கும் இந்த பூஜை 6.30 மணி வரை நடக்கும்.
  • சகஸ்ர தீப அலங்கார சேவை: ஊஞ்சல் மண்டபத்தில் தினமும் மாலை 5.30 மணிக்கு சகஸ்ர தீப அலங்காரம் (ஆயிரம் தீபங்கள்) செய்யப்படும். அப்போது அன்னமயா சங்கீர்த்தனம் பாடப்படும். இதற்கும் ஆயிரம் ரூபாய் கட்டணம் உண்டு. 5 பேர் பங்கேற்கலாம். அவர்களுக்கு வஸ்திரம் பிரசாதமாக வழங்கப்படும். திருமணமானவர்கள் இந்த வைபவத்தில் பங்கேற்பது சிறப்பானது.
  • ஆபரணம் இல்லாத நாள்: வியாழக்கிழமைகளில் வெங்கடாசலபதிக்கு முக்கிய ஆபரணங்கள் எதுவுமின்றி வேட்டி மற்றும் வெல்வெட் அங்கி அணிவிக்கப் படும். அதன் மேல் அங்கவஸ்திரம் மட்டும் சாத்துவார்கள். இந்த நிகழ்ச்சிக்கு "சாலிம்பு என்று பெயர். மேலும் சுவாமிக்கு வழக்கமாக அணிவிக்கப்படும் திருநாமத்திற்கு பதிலாக நெற்றியின் மத்தியில் மெல்லிய நாமம் மட்டும் அணிவிக்கப்படும்.
  • கல்யாண உற்சவம்: திருப்பதி கோயிலில் உள்ள சம்பங்கி பிரகாரத்தில் திருமண ஹால் இருக்கிறது. அங்கு உற்சவரான மலையப்ப சுவாமிக்கும் ஸ்ரீதேவி, பூதேவிக்கும் திருமணம் நடத்தப்படும். பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்து இந்த திருமணம் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. திருமண தடை உள்ள ஆண், பெண்கள் இந்த நிகழ்ச்சியில் முக்கியமாக கலந்துகொள்கிறார்கள். சுவாமிக்கும் தாயார்களுக்கும் மத்தியில் ஒரு திரை போடப் படும். பின்னர் அந்த திரை அகற்றப்பட்டு ஹோமங்கள் நடக்கும். ஒரு புரோகிதர் தாயார்களுக்கும் சுவாமிக்கும் திருமணம் செய்துவைப்பார். விழாக்காலங்களில் மட்டும் இந்த திருமணம் நிறுத்தி வைக்கப்படும். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு இரண்டு லட்டு, ஐந்து வடை, ஒரு பட்டு அங்கவஸ்திரம் மற்றும் ரவிக்கைத் துணி பிரசாதமாக தரப்படும். கல்யாண வைபவம் ஒருமணி நேரம் நடக்கும். பகல் 12 மணிக்கு திருமண உற்சவம் துவங்கும். திருமண உற்சவத்திற்கு கட்டணம் ரூ.1000/-. இரண்டுபேர் அனுமதிக்கப்படுவார்கள்.
  • ஊஞ்சல் சேவை: மாலை 4 மணிக்கு கோயிலுக்கு வெளியே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஊஞ்சலில் ஆடும் காட்சியை பார்க்கலாம். இதை டோலாத்ஸவம் என்பர். அப்போது வேத பாராயணம் செய்யப்படுவதுடன் மங்கள வாத்தியங்களும் முழங்கும். ஆயிரம் ரூபாய் செலுத்தி ஐந்து பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். அவர்களுக்கு 5 லட்டு, ஒரு அங்கவஸ்திரம் மற்றும் ரவிக்கைத்துணி தரப்படும். மாலை 5 மணிக்கு இந்த நிகழ்ச்சி நிறைவடையும்.
[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]