
Search This Blog
Thursday, 22 September 2016
திருவிடைக்கழி
தல வரலாறு:
- தெய்வயானை இறைவனிடம் திருப்பரங்குன்றம் செல்ல விடை கேட்டதாலும், முருகனுக்கு இரணியாசுரனைக் கொன்ற பழி கழிந்ததாலும் இத்தலம் விடைக்கழி என்னும் பெயர் பெற்றதாகக் கூறுவர்.
- அம்பாள் தரங்கம்பாடிக்குச் சென்றதால் இக்கோயிலில் அம்பாள் சந்நிதி இல்லை.மூலத்தானத்தில் முதற்கண் பிரதான மூத்தியாக சுப்பிரமணியப் பெருமானும், பின்னால் உள்ளடங்கிச் சிவலிங்க மூர்த்தமும் காட்சி தருகின்றனர். இருமூர்த்தங்களுக்கும் உள்ள தனித்தனி விமானங்களில், முருகனுடைய விமானம் சற்று உயரமாகவும், இறைவனுடைய விமானம் சற்று தாழவும் உள்ளது.
சிறப்புக்கள்:
- இத்தலத்திற்கு - ஒன்பதின்மரில் சேந்தனார், திருவிசைப்பா பாடியுள்ளார்; இவர் பாடியுள்ள திருவிசைப்பா பதிகம் முருகனைப் பற்றியது. அந்தாதி அமைப்பில் பாடப்பட்டுள்ளது.
- இப்பதிகம், தலைவனிடம் அன்பு கொண்ட தலைவியின் துன்பத்தையும் - ஆற்றாமையையும் கண்டு, நற்றாய் இரங்கிக் கூறுவதாக அமைந்துள்ளது.
- ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பா திருப்பல்லாண்டுப் பதிகங்கள் பொதுவாக - சிவபெருமானின் திருமேனிச் சிறப்பு, அடியார்க்கருளிய அப்பெருமானின் நலங்கள் முதலியவற்றையும் எடுத்துரைப்பதோடு, ஆங்காங்குச் சைவசமயத் தத்துவக் கருத்துக்களையும் புகழ்ந்தோதுகிறது.
- அழகான ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் வண்ணப் பொலிவுடன் கண்ணுக்கு விருந்தாகக் காட்சியளிக்கின்றது.
- தற்போது முருகன் தலமாகப் பிறசித்தி பெற்றுள்ளது.
- சுப்பிரமணியக் கடவுள் மூலத்தான மூர்த்தியாக விளங்கும் இத்தலத்திற்கு 'மகிழவனம்' என்ற பெயருமுண்டு.
- தெய்வயானைக்குத் தனிச் சந்நிதி; தவக்கோல தரிசனம்.
- சேந்தனார் முத்தி பெற்ற தலம்.
- திருமுறைகளில் இடம்பெற்றுள்ள முருகன் தலம்.
- கோயிலுள் நுழைந்தால், முன்பண்டபத்தில் திருப்புகழ், வேல் விருத்தம் முதலியவை பதித்த கல்வெட்டுக்கள் உள்ளன.
- இத்தலத்தில் இரண்டு வெவ்வேறு தலமரங்கள் உள்ளன; இவற்றுள் குரா மரம் முருகப் பெருமானுக்கும், மகிழ மரம் இறைவனுக்கும் தல மரங்களாம்.
- தல மரமாகிய "குராமரம்" தழைத்துக் காட்சித் தருகிறது. பங்குனியில் பூக்கும் என்று கூறுகின்றனர். மலைகளில் மட்டுமே தோன்றக்கூடிய இக்குராமரம் இத்தலத்தில் நிலத்திலும் தோன்றி வளர்ந்துள்ளது. இதன் கீழமர்ந்து பலரும் தியானம் செய்கின்றனர்.
- சுப்பிரமணியக் கடவுள் இக்குராமரத்தின் கீழ் யோக நிட்டையில் இருக்கின்றாராதலின் இங்கமர்ந்து தியானம் செய்தல் சிறப்புடையதாகின்றது - மனமும் ஒன்றி, சாந்தத்தையும், சத்துவகுணங்களையும் அருளுகின்றது.
- சண்டேசுவர மூர்த்தங்களும் இரண்டு உள்ளன. சிவச்சண்டேசுவரர், குகச்சண்டேசுவரர் என்று இறைவனுக்கும் முருகனுக்கும் உரியவர்களாக பெயர்கள் சொல்லப்படுகின்றன.
- இரண்டாம் பிராகாரத்தில் வடக்கு மதிற்சுவரில் இரு உருவங்கள் செதுக்கப்பட்டு அவைகளின் மேல் பொற்கோயில் நம்பி, தில்லை மூவாயிரநம்பி என்னும் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றின் கீழ் ஒரு மேடையில் ரிஷபம், இடையன், குடம், பாம்பு முதலிய உருவங்களும், சற்றுத் தள்ளி மன்னன் ஒருவன் உள்ளிட்ட பல உருவங்களும் உள்ளன. இவற்றின் விவரம் சரியாகத் தெரியவில்லை. ஒருவேளை தலபுராணத்துடன் தொடர்புடையனவாக இருக்கலாம்.
- கோயிலில் தேசாந்திரி கட்டளை உள்ளது. நான்கு கால பூசைகள் நடைபெறுகின்றன.
- கல்வெட்டில் முருகனுடைய பெயர் "திருக்குராத்துடையார்" என்று குறிக்கப்பட்டுள்ளது.
- கல்வெட்டுக்களிலிருந்து அங்கு பல மடங்கள் இருந்ததாகவும், வேதமோதுவார்க்கும் வழிபாட்டுக்கும் இறையிலியாக நிலங்களை அளித்ததும் ஆகிய செய்திகள் தெரியவருகின்றன.
- அண்மையில் உள்ள திருமுறைத் தலம் திருக்கடவூர் ஆகும்.
குலம் தழைக்க குலதெய்வ வழிபாட்டு முறைகள்
- குலதெய்வம் என்பது ஜோதிட சாஸ்திரத்தில் மிக முக்கியமானதாகவும் தவிர்க்க முடியாததாகவும் சொல்லப்படுகிறது. ஒருவர் எவ்வளவு பூஜைகள் செய்தாலும் எத்தனை பரிகாரங்கள் செய்தாலும் குலதெய்வ அனுக்கிரகம் இல்லாமல் போனால் அந்த பூஜைகளும் பரிகாரங்களும் பலன் தராது என்பதே ஜோதிட சாஸ்திரத்தின் அசைக்க முடியாத கருத்து. இதற்காகத்தான் குலதெய்வ அனுக்கிரகம் இல்லையேல் எந்த தெய்வ அனுக்கிரகமும் இல்லை என்றும் குல தெய்வ வழிபாடு கோடிதெய்வ வழிபாடு என்றும் சொல்லப்படுகிறது.
- ஜாதக கட்டங்களில் குறைகள் இல்லாத நிலையிலும் கிரக சஞ்சாரங்களில் பாதக சூழ்நிலைகள் இல்லாத நிலையிலும் ஒரு மனிதனுக்கு பாதிப்புகளும் பிரச்சனைகளும் தொடர்கின்றது என்றால் அதற்கு குல தெய்வ தோஷம் காரணமாக இருக்கும். அதே போல கிரகங்களின் கோசார பலன்களும். கிரக பெயர்ச்சியின் நல்ல பலன்களும் முழுமையாக பலன் தர வேண்டுமென்றால் அதற்கு குலதெய்வ அனுக்கிரகம் என்பது மிக முக்கியமான அம்சமாகும்.
- பொதுவாக குலதெய்வ வழிபாடு என்பது இனத்திற்கு இனம். ஜாதிக்குஜாதி குலத்துக்கு குலம் மாறுபடும். ஒரே ஜாதியில் இருப்பவர்களில் கூட குடும்பத்துக்கு குடும்பம் வழிபாட்டு முறைகளும் சம்பிரதாயங்களும் மாறுபடுகின்றன. இதனால் தான் ஆகமசாஸ்திரத்தினாலும், புரோகிதர்களாலும், ஜோதிடர்களாலும் குலதெய்வ வழிபாட்டினை வரையறுத்து கூறமுடிவதில்லை.
- பல இடங்களில் குலதெய்வம் என்பது பல தலைமுறைகளுக்கு முன் வாழ்ந்து மறைந்தவர்களாகவும் தங்களின் குல மக்களுக்களின் நன்மைக்காக உயிர்தியாகம் செய்தவர்களாகவும் இருப்பதுண்டு. அந்த குலத்தினரால் அவர்களுக்கு செய்யும் நன்றிக்கடனாகவே குல தெய்வ வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இதனால் தான் குலதெய்வ வழிபாட்டினை ஒரு கடமையாகவும் கடனாகவும் சம்பிரதாயங்கள் சொல்கின்றன.
- பொதுவாக குலதெய்வ தோஷம் இருந்தால் எந்த முயற்சிகளிலும் வெற்றி கிடைக்காது, காரணமற்ற காரியதடைகள் அதிகமாகும், உறவுகளில் ஒற்றுமையின்மையும் குடும்ப அமைதியின்மையும் இருக்கும். குறிப்பாக திருமணம் வீடுகட்டுதல் போன்ற சுபகாரிய தடைகள் தொடரும்.
வழிபாட்டு முறைகள்:
- குல தெய்வ வழிபாடுகளை அடிக்கடி செய்ய வேண்டிய அவசியமில்லை அந்தந்த குடும்பத்தின் சம்பிரதாய பின்பற்றுதல்களுக்கு ஏற்றவாறு வருடத்திற்கொருமுறை செய்தாலே போதுமானது. காலகட்டளை இருக்கும் குலதெய்வ வழிபாடுகளுக்கு குறிப்பிட்ட நாளில் மட்டுமே செய்ய வேண்டும். அந்த நாள் தவிர்த்து செய்யகூடாது. காலகட்டளை இல்லாத தெய்வங்களுக்கு சௌகர்யமான நாளில் வழிபாடு செய்யலாம். ஆனால் தமிழ்நாட்டில் கால கட்டளை இல்லாத குல தெய்வங்கள் குறைவு.
- குலதெய்வ பூஜைகளை பொருத்தவரை சுத்த பூஜை ..உதிர பூஜை என்று இருவகைகளில் நடத்தப்படுகின்றன. சுத்த பூஜை என்றால் உயிர்பலி கொடுக்காமலும் உதிர பூஜை என்றால் உயிர்பலியுடனும் நடத்தப்படுவதாகும். எந்த பூஜையாக இருந்தாலும் அந்த முறையில் சரியாக பின்பற்றப்பட வேண்டும்.
- கணித ஜோதிடத்திலோ எண்கணிதத்திலோ குலதெய்வம் கண்டுபிடிப்பது என்பது சற்று சிரமமானது. குலதெய்வம் தெரிந்து கொள்ள வம்சகள பிரசன்னம் எனப்படும் பிராணதேவதா பிரசன்னத்தின் மூலம் சரியாக கண்டுபிடிக்கலாம். அவ்வாறு கண்டுபிடிக்கும் போது வெறுமனே குலதெய்வத்தின் பெயர் மட்டுமல்லாது இருக்கும் இடம், தற்போதைய நிலை, படைக்கவேண்டிய பொருட்கள், வஸ்திரத்தின் நிறம்,வழிபாட்டிற்குறிய நாள், நேரம் ஆகியவற்றை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். பல சந்தர்ப்பங்களில் குலதெய்வ கோவிலுக்கு போக முடியாத நிலையோ அல்லது கோவில் சிதிலமடைந்த நிலையோ இருக்கும் அத்தகைய சூழ்நிலையில் குலதெய்வத்தின் அம்சபீடம் வைத்து வீட்டிலேயே வழிபடுவது பலன் தரும்.
திருவெண்காடு – புதனுக்கான நவக்கிரக கோயில்!
இங்கு தான் சிவபெருமான் தன் ஆறு விதமான தாண்டவங்களை நிகழ்த்தியதாக கருதப்படுகிறது. இது “ஆதி சிதம்பரம்” என்றும் அழைக்கப்படுகிறது.
திருவெண்காட்டின் வரலாறு:
- முருதுவன் என்னும் அசுரன் சிவபெருமானிடம் இருந்து நிறைய வரங்களைப் பெற்று, அவற்றைக் கொண்டு, தேவர்களை பலவாறாக துன்புறுத்தி வந்தான். அவனிடமிருந்து தம்மை காத்தருளுமாறு, தேவர்கள் சிவபெருமானை வேண்டினர்.
- சிவபெருமான், தேவர்களை திருவெண்காட்டுக்குச் சென்று மறைவாக இருக்கும்படி அறிவுறுத்தி விட்டு, தன் வாகனமாகிய நந்தியை அவ்வசுரனை அழிப்பதற்கு அனுப்பினார். நந்தியும், அவ்வசுரனை தோற்கடித்து, பின் அவனை கடலுக்குள் தூக்கி எறிந்தது.
- அதன் பின், அந்த அசுரன் சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்து, அதன் பலனாக, அவரது சூலாயுதத்தை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டான். சூலாயுதத்தோடு திரும்பிய அசுரன், பெரும் பலத்தோடு தேவர்களை தாக்கத் துவங்கினான். மீண்டும் தேவர்கள் சிவனை நாடி, தங்களை காக்கும்படி வேண்டினர். இம்முறையும், சிவன் நந்தியை அனுப்பி வைத்தார்.
- ஆனால், இம்முறை அசுரனிடம் சிவபெருமான் அளித்த சூலாயுதம் இருந்ததனால், நந்தியால் அவனை தோற்கடிக்க முடியவில்லை. அவன் அந்த சூலாயுதத்தைக் கொண்டு நந்தியை படுகாயமுறச் செய்தான்.
- அவ்வாறு பெற்ற விழுப்புண்களை இக்கோயிலில் உள்ள நந்தி சிலையில் இன்றும் காணலாம். நந்தி காயமுற்றதைக் கண்ட சிவன், பெருங்கோபமுற்று, தன் மூன்றாவது கண்ணாகிய நெற்றிக் கண்ணைத் திறந்து, அவ்வசுரனை வதம் செய்தார்.
- அகோரமூர்த்தி வடிவில் உள்ள சிவனின் சிலை, அவரது இப்பெருங்கோபத்தினை நன்கு வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. இந்த அகோரமூர்த்தி வடிவில் உள்ள சிவனை வழிபடுவோருக்கு எப்போதும் எதிரிகளே இருக்கமாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
- நவகிரகங்களில் நான்காவதாக இடம் பெற்றிருப்பவர், புதன். ‘‘பொன் அகப்பட்டாலும், புதன் அகப்படாது’’ என்ற பெருமைக்குரியவர். மற்ற கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லாத போதுகூட, புதன் அதைச் சரிசெய்து நமக்கு அருள் செய்வார். இதன் காரணமாகவே, புதனுக்குக் கிரக பீடாஹரன் என்ற பெயர் உண்டு. அறிவுத் தெய்வம் இவர். கையில் புத்தகம் வைத்திருப்பார். இவரை வழிபட்டால், கவிபாடும் திறமை வரும். புதனுக்கு பலவிதமான திருநாமங்கள் உள்ளன. அவற்றிலிருந்து, புதனுடைய இயல்புகள் பலவற்றை நாம் அறியலாம்.
- புதன் அறிவில் சிறந்தவராக இருப்பதால் புத்திமதாம் சிரேஷ்டன், புதன், ஞானி, ஞானிநாயகன் ஆகிய பெயர்கள் அவருக்கு உண்டாயின. அறிவை வழங்குவதால் புத்திதாதா எனவும் அறிவை வளர்ப்பதால் புத்தி விவர்த்தனன் எனவும் புதன் அழைக்கப்பட்டார். பொருள் முதலான செல்வ வளங்களை வழங்குவதால், தனப்ரதன், தயாகரன், தார புத்ர தான்ய பசுப்ரதன் என்ற திருநாமங்களாலும் புதன் அழைக்கப்பட்டார். புதன் மிகுந்த அழகு கொண்டவராக இருப்பதால் கஞ்சநேத்ரன், மனோகரன், சௌமிய மூர்த்தி என்றும் திருநாமங்கள் கொண்டார்.
- விஷ்ணுவைப் போன்ற திருவுருவம் உடையவர் ஆதலால், விஷ்ணுரூபி என்றும் இவர் அழைக்கப்பட்டார். நட்சத்திரேசன், லோகப்ரியன் என்ற பெயர்களும் புதனுக்கு உண்டு. இவற்றைத் தவிர ஞானரூபன், ப்ரியாங்கன், சாந்தரூபி, குதிரை வாகனன் என்ற திருநாமங்களையும் கொண்டவர் அவர். மஞ்சள் நிறக் குடையும் சிங்கக் கொடியும் கொண்ட தேரில், புதன் வலம் வருவார். அத்தேரில் நான்கு குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். (எட்டுக் குதிரைகள் என்றும் சொல்வதுண்டு). புதன், ஒருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டவர். மேல் வலக்கையில் வாளையும் இடக்கையில் கேடயத்தையும் ஏந்தி இருப்பார். கீழ் கைகளில் கதையும் வரதமும் இருக்கும்.
- சங்கீத மூம்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீமுத்துசாமி தீட்சிதர், புதனைப் பற்றி விரிவாகவே பாடியிருக்கிறார். அவர் சொல்லும் தகவல்கள்: புத பகவான், தேவர்களால் துதிக்கப்படுபவர். சந்திரனுக்கும் தாரைக்கும் திருமகன். புலவர் தெரிந்து போற்றும் பிரான். அந்தணரால் மகிழ்ச்சியைப் பெறுபவர். சீரும் செல்வமும் வழங்குபவர். குஜனுக்கு (அங்காரகனான செவ்வாய்க்கு)ப் பகைவர். மணி பதித்த திருமுடி கொண்டவர். மணிமாலை, மணிவளையம் , மணிக்காப்பு ஆகியவற்றை அணிந்தவர். மிதுன ராசிக்கும் கன்னி ராசிக்கும் தலைவர். புத்தகத்தைக் கையில் கொண்டவர்.
- ஆணும், பெண்ணும் அல்லாத வடிவினர் (ஏன் என்பதற்கான விளக்கம், புதன் வரலாற்றைக் கூறும்போது, பின்னால் வரும்). அடியவர் போற்றும் புகழ் கொண்டவர். சிவனடியார் நலனை விரும்புபவர். எப்போதும் ஆனந்தத்தோடு இருப்பவர். சகல கலைகளையும் கற்று, அறிவில் தலை சிறந்தவராக விளங்கி ஞானி என்ற பெயரைப் பெற்ற புதனின் மனைவி பெயர் ஞானதேவி. இவள் தவிர பிரசங்கி, அப்ரசங்கி என வேறு இரு தேவியர்களும் உண்டு என சித்தாந்த சேகரம் என்னும் நூல் குறிப்பிடுகிறது. புதனுக்கு, அர்த்தப் பிரகரணன் என்ற புதல்வன் ஒருவன் உண்டு என, ஜோதிட நூல் கூறுகிறது. (அப்புதல்வனுக்கு வேறு பெயரும் உண்டு).
புதனுக்கு உரியவை:
வாகனம்- குதிரை;
தானியம் - பச்சைப்பயறு;
மலர் - வெண்காந்தள்;
ஆடை - பசுமை வண்ணஆடை;
மணி - மரகதம்;
உலோகம் - பித்தளை;
அன்னம் - பச்சைப்பயிறு பொடி அன்னம், வெல்ல அன்னம்;
சமித்து - நாயுருவி;
சுவை - உவர்ப்பு;
கோத்திரம் - ஆத்திரேய;
இனம் - வைசியர்;
நாடு - மகதம்;
மனைவி - ஞானதேவி;
மகன் - கர்த்தவாசுரன்;
வடிவம் - நெடியது;
குணம் - சமத்துவம்;
ராசி - மிதுனம், கன்னி;
திசை - வடகிழக்கு;
அதிதேவதை - திருமால்;
பிரத்யதி தேவதை - இரு கரங்கள் கொண்ட நாராயணர்;
தலம் - திருவெண்காடு, மதுரை.
- ஜோதிட நூல்களின்படி புதன், சுபகிரகம். ஞானத்தையும் அறிவையும் கொடுக்கக்கூடியவர். வாக்கு சாதூரியத்தை அளிப்பவர். மேலும், தாய்மாமன் வகையினர், கல்வி வளர்ச்சி, மகாவிஷ்ணுவின் அருள், வியாபார சம்பந்தமானவை, தூதுவன், தேர்ப்பாகன், ஜோதிட அறிவு, பிரசங்கம் செய்யும் ஆற்றல், வியாபாரத்திறமை, சிற்பத் தொழில் செய்வது, தேர் வாகனம் அமைப்பது ஆகியவற்றிற்கெல்லாம் புதனே காரணமானவர். நவகிரக மண்டலத்தில் சூரியனுக்கு வடகிழக்காக, புதன் அமர்ந்திருப்பார். அவருக்கு வலப்பக்கத்தில் அவரது அதிதேவதையாகிய விஷ்ணு, தன் பரிவாரங்களுடனும், மனைவி மக்களுடனும் எழுந்தருளி இருப்பார்.
- புதனுடைய பிரத்தியதிதேவதையான நாராயணன், இரண்டு திருக்கரங்களோடு இருப்பார். பிருகு முனிவர், நாராயணருடைய சாந்த இயல்பைச் சோதனை செய்வதற்காக அவரைத் தன் வலது காலால் உதைத்தார். அதனால் சிறிதும் கோபம் கொள்ளாமல், நாராயணன், ‘‘தேவரீர் திருவடிகன் நோகுமே’’ என்று பிருகு முனிவரின் பாதங்களை வருடினாராம். பிருகு முனிவருடைய வலது திருவடியின் சுவடு, நாராயணரின் இடது தோள் அருகில் இருக்கும். இந்த வர்ணனையின்படி அமைந்த, பழைய கால ஓவியம் ஒன்று உண்டு.
புதன் ஸ்தலம் :::: திருப்புளியங்குடி காய்சினவேந்தப் பெருமாள் திருக்கோயில்

தெளியும் பசும்பொன் சிறைகாற்று வீச
விளியுந் துயர் போய் விடுமே யெளியேற்
கருளப் புளிங்குடி வாழச்சுதனைக் கொண்டு
கருளப் புளிங்கு வந்தக்கால்!!
(108 திருப்பதி அந்தாதி)
விளியுந் துயர் போய் விடுமே யெளியேற்
கருளப் புளிங்குடி வாழச்சுதனைக் கொண்டு
கருளப் புளிங்கு வந்தக்கால்!!
(108 திருப்பதி அந்தாதி)
திருக்கோயில் அமைவிடம்:
நவதிருப்பதிகளில் புதன் ஸ்தலமாக விளங்கும் இந்த திருப்புளியங்குடி, திருநெல்வேலியில் இருந்து 32 km தொலைவிலும், திருவரகுணமங்கையில் இருந்து 1 km தொலைவிலும் அமைந்துள்ளது.

திருத்தலக் குறிப்பு:
தல இறைவன்: காய்சினவேந்தப் பெருமாள், புஜங்க சயனம் (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு), (உற்சவர்: எம் இடர் களைவான்)
தல இறைவி: மலர்மகள், திருமகள் (உற்சவத் தாயார்: புளியங்குடிவல்லி)
தல தீர்த்தம்: வருணநீருதி தீர்த்தம்
விமானம்: வதசார விமானம்
கிரகம்: புதன் ஸ்தலம்

திருத்தல வரலாறு:
ஒரு சமயம் ஸ்ரீ லக்ஷ்மி தேவியுடன் திருமால், கருடன் மேலேறி இப்பூவுலகைச் சுற்றி வரும்போது தாமிரபரணி நதிக்கரையில் அழகிய மணற்பரப்பைக் கண்டு மகிழ்ந்து அங்கேயே தங்கி விட்டார். பூலோகம் வந்தும் தன்னை கவனிக்கவில்லையே என்று மனம் வருந்திய பூமாதேவி, லக்ஷ்மி தேவி மீது பொறாமைக் கொண்ட பூமாதேவி, கோபித்துக் கொண்டு பாதாள லோகம் சென்று விட்டாள். இதனால் உலகம் தன் நிலை மாறி வறட்சி அடைந்தது. அனைத்து ஜீவராசிகளும் துன்புற்றனர். இதனைக்கண்ட தேவர்கள் திருமாலிடம் வந்து முறையிட்டனர்.
தன்னை வந்து சந்தித்த தேவர்களை சமாதானம் செய்துவிட்டு பின் லக்ஷ்மி தேவியுடன் பாதாள லோகம் சென்று பூமாதேவியை தேற்றி, பூமாதேவியின் மன வருத்தத்தைப் போக்கி மீண்டும் பூலோகம் அழைத்து வந்தனர். இவ்வாறாக பூமாதேவியை அழைத்து வந்து பூலோகம் காத்ததால் பூமிபாலகர் என்ற நாமத்துடன் நமக்கெல்லாம் அருள்பாலிக்கிறார். திருப்புளியங்குடியில் மண்மகள், மலர்மகள் இருவருடனும் பூமிபாலகராய் இங்கு எழுந்தருளியுள்ளார்.

இந்திரனுக்கு சாபம் நீங்கிய வரலாறு:
இமயமமலையில் ஒரு முனிவரும் அவரது மனைவியும் மானுருவில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது இந்திரன், மானுருவில் இருந்த முனிவரை தனது ஆயுதத்தால் கொன்று பிரம்மஹத்தி தோஷத்திற்கு ஆளானான். வியாழ பகவானின் ஆலோசனைப்படி, இந்திரன் இத்தலத்திற்கு வந்து பூமிபாலகனை வணங்கி வேண்டி இத்தல தீர்த்தத்தில் நீராடி தன் தோஷம் நீங்கப் பெற்றான். அது முதல் இத்தீர்த்தம் இந்திர தீர்த்தம் என பெயர் கொண்டது. தனது தோஷம் நீங்கிய மகிழ்ச்சியில் இந்திரன் இந்த புண்ணிய தீர்த்தக் கரையில் யாகம் ஒன்றினை நடத்த நினைத்து அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தான். அந்த நேரத்தில், இந்திரன் நடத்தும் யாகத்தினை தடுக்கும் நோக்குடன் அரக்கன் ஒருவன் அங்கு வந்து இந்திரனுக்கு பல்வேறு இடையூறுகளைச் செய்தான். அந்த அரக்கனால் இன்னலுக்கு ஆளான இந்திரன் பூமிபாலகரை மனதார நினைத்து மனமுருக வேண்டி நின்றான். இந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க பூமிபாலகரும் அந்த அரக்கனைக் கொன்றார்.
அதன்பிறகு அந்த அரக்கன் தனது சுய உருவத்தைப் அடைந்தான். அப்போது பூமிபாலகர், அவனை நோக்கி, நீ யார்? என்று கேட்க "நான் முன்ஜென்மத்தில் யக்ஞ சர்மா என்ற பெயரில் ஒரு பிராமணனாகப் பிறந்தேன். நான் எனது இல்லத்தில், வசிஷ்ட புத்திரர்களால் செய்யப்பட்ட யாகத்திற்கு உரிய மரியாதை செய்யாமல் அவர்களை அவமதித்ததன் காரணமாக, அவர்கள் என்னை கொடிய அரக்கனாக ஆகும்படி சாபமிட்டனர். நான் என் தவறை உணர்ந்து அவர்களிடம் மன்னிப்பு கேட்டு சாப விமோசனம் கூறும்படி கேட்டேன். அதற்கு அவர்கள் பூலோகத்தில் பொருநை ஆற்றின் நதிக் கரையோரமாக இந்திரன் தனது பாவத்தைப் போக்கிக் கொள்ள யாகம் மேற்கொள்வான். அந்த சமயம் நீ போய் யாகத்தை நடத்த விடாமல் தடுக்கும் நேரத்தில் திருமால் உன்னை கதையால் தாக்குவார். அன்றைய நாளில் இருந்து உன் பழைய உருவம் பெற்று நீ வாழ்வாய்" எனக் கூறினார். அரக்கனும் தன் நிஜ உருபெற்று மகிழ்ச்சியுடன் சென்றபின் இந்திரன் தான் செய்ய நினைத்த சதிபதிவேள்வியினை சிறப்புடன் செய்து முடித்தான்.
இங்கே திருமால் ஆதிசேஷன் மீது 12 அடியில் பள்ளிகொண்ட நிலையில் காட்சி தருகிறார். சயனப் பெருமாளின் திருப்பாத தரிசனத்தை மூலவர் சன்னதியைச் சுற்றி வரும்போது உள்ள சிறிய சாளரம் வழியாக தரிசிக்கலாம். இத்தகைய பெரிய திருமேனியைக் கொண்ட பெருமாளுக்கு எண்ணைகாப்பு சாத்துவதற்கு 128 படி எண்ணெய் தேவைப்படுகிறது. லக்ஷ்மி தேவியும் பூமாதேவியும் பெரிய திருவுருவங்களாக பெருமாளின் திருப்பாதத்தின் அருகில் அமர்ந்த கோலத்தில் உள்ளனர். பெருமாளின் நாபிக் கமலத்தில் இருந்து தாமரைக்கொடி சுவற்றில் பிரம்மன் அமர்ந்திருக்கும் தாமைரையுடன் சேரும் வண்ணம் அமைக்கப் பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)