- விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.
- பரமசிவன் கணேசனை கணங்களின் தலைவனாக ‘கணபதி'யாக நியமித்தார். அவருக்கு அனிமா, மகிமா முதலிய அஷ்டசித்திகளையும் மனைவிகளாக பிரம்மதேவன் அளித்து கணபதியைப் பலவாறு துதி செய்தார். கணபதியும் மகிழ்ந்து ‘பிரம்மனே, வேண்டிய வரம் கேள் ' என்று கூற பிரம்மன் ‘என் படைப்பெல்லாம் தங்கள் அருளால் இடையூரின்றி நிறைவேற வேண்டும்' என்று வரம் கேட்க விநாயகரும் பிரம்மனுக்கு வரமளித்தார்.
- பூஜையில் பிரம்மன் அளித்த மோதகங்களை (கொழுக்கட்டை) கையில் எடுத்துக் கொண்டு, உயரக் கிளம்பி உலகெல்லாம் சுற்றி, சந்திரலோகம் சென்றார். அங்கு பெருத்த தொந்தியும், ஒடிந்த தந்தமும், நீண்ட தும்பிக்கையும், கையில் கொழுக்கட்டையும் தாங்கி வருகின்ற விநாயகனைக் கண்டு சந்திரன் வாய் விட்டுச் சிரித்துப் பரிகசித்தான். அதைப் பார்த்த விநாயகர் கோபம் கொண்டு, ‘ஏ! சந்திரனே நீ தான் அழகன் என்று கர்வம் கொண்டிருக்கிறாய். இன்று முதல் உன்னை யாரும் பார்க்கக் கூடாது. அப்படி யாராவது உன்னைப் பார்த்தால் அவர்களுக்கு வீண் அபவாதம் ஏற்படுவதாகுக' என்று சபித்தார். சந்திரனும் ஒலி மழுங்கித் தண்ணீருக்குள் ஆம்பல் மலரில் மறைந்தான்.
சாபம் நீங்கிய விதம்!
- சந்திரன் அழிந்ததைக் கண்டுவருந்திய தேவர்களும் முனிவர்களும் இந்திரன் தலைமையில் பிரம்மாவிடம் சென்று முறையிட்டனர். பிரம்மனோ, தானோ, ருத்திரனோ, விஷ்ணுவோ இதற்கு ஒன்றும் செய்ய முடியாதென்றும், கணபதியையே சரணடைவது தான் ஒரே வழியென்றும் கூறினார். எந்த முறையில் வழிபட்டால் சந்திரனின் சாபம் நீங்கும் என்று தேவர்கள் கேட்க ‘ஒவ்வொரு கிருஷ்ணபக்ஷ சதுர்த்தியன்றும் (பௌர்ணமிக்குப் பின் வருவது) விரதம் ஏற்று, பலவகையான பழங்கள், அப்பம், மோதகம் இவைகளுடன் சித்ரான்னங்கள் முதலியவற்றை கணபதிக்கு அளித்து, அந்தணருக்கு பக்தியோடு தாம்பூல, தக்ஷிணைகளை அளித்தால் எண்ணிய வரங்களை அளிப்பார் ' என்று பிரம்மன் கூறினார்.
- பிறகு தேவர்கள் பிருகஸ்பதி(குரு)யைச் சந்திரனிடம் அனுப்பி விவரம் தெரிவித்தனர். சந்திரனும் இந்த முறையில் பூஜை செய்ய, கணபதியும் மகிழ்ந்து பாலகணபதியாக, விளையாட்டு விநாயகனாக அங்கே காட்சியளித்தார். சந்திரனின் மனம் களிப்புற்று, அவரைப் பணிந்து தன் செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டான்.
- பிரம்மாதி தேவர்களும் சந்திரனுக்கு கணபதியிட்ட சாபத்தை நீக்கியருள வேண்டினர். கணபதியும் அவ்வாறே சாபவிமோசனம் அளித்தார். ‘ஒவ்வொரு கிருஷ்ணபக்ஷ சதுர்த்தி'யிலும் மோதகம், அப்பம் முதலியவைகளுடன் என்னைப் பூஜித்த பின், ரோகிணியுடன் கூடிய சந்திரனான உன்னைப் பூசிப்பவர்களுக்கு கஷ்ட நிவாரணம் செய்கிறேன்' என்று விநாயகரே கூறினார். இது சங்கடஹரண சதுர்த்தி எனப்படுகிறது.
- பொதுவாக சதுர்த்தி தினங்களில் சந்திரனைக் கண்டால் ஓர் ஆண்டு வரை தெடர்ந்து வீண் அபவாதங்கள் வந்து சேரும் என்பது சிலரின் நம்பிக்கை.
விநாயக சதுர்த்தி!
- எனவே, ஆண்டு தோறும் ‘ஆவணி மாத சுக்ல சதுர்த்தியன்று மண்ணாலான என் உருவத்தை பொன்னால் செய்த பாவனையுடன் அமைத்து பல பூக்களால் பூஜித்த பின் இரவில் கண் விழித்து முறையாகப் பூஜித்தால் அவ்வாறு செய்பவனுக்கு அவன் தெடங்கிய காரியத்தில் வெற்றியையும், ஸகல காரியங்களில் சித்தியையும் அளிக்கிறேன்' என்று விநாயகரே சந்திரனுக்குக் கூறுவதாக அமைந்துள்ளது.
- சியமந்தக மணி என்ற ரத்தினத்தின் காரணமாகப் பல அபவாதங்களுக்கு ஆளான கிருஷ்ணனுக்கு நாரதர் இக்கதையைக் கூறி, கிருஷ்ணனே சங்கடஹரண சதுர்த்தி பூஜை செய்து அவப்பெயர் நீங்கப் பெற்றார் என்று அறிகிறோம்.
- விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களாகிய உள்ளத்தையும், உடலையும் சுத்தம் செய்த பின்பு விநாயகரை மனம் உருகப் பிரார்த்தனை செய்ய வேண்டும். சூரியன் உதிக்கும் வரை எந்த உணவையும் உட்கொள்ளாமல் விநாயகரை நினைத்திருந்து என் சங்கடங்களை நீயே தீர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூஜையைத் தொடங்க வேண்டும்.
- முதலில் விநாயகர் பூஜை செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு விநாயகரிடம் நான் என்னுடைய சதுர்த்தி விரதத்தை முறைப்படி அனுஷ்டிக்கப் போகிறேன். எனவே நீ எந்தவித தடைகளும் இல்லாமல் அருள்புரிய வேண்டுகிறேன் என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பின் தங்கத்தாலோ அல்லது தாமிரத்தாலோ அல்லது படத்திலோ விநாயகர் செய்து பூஜை செய்ய வேண்டும்.
- விதிமுறைப்படி நெய், சர்க்கரை, எள் சேர்த்த கொழுக்கட்டைகளைத் தயாரித்து கொண்டு விநாயகருக்கு நிவேதனம் செய்ய வேண்டும். மேலும் தரித்திரம் நீங்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் காலணி, குடை, பசு மாடு ஆகியவற்றை சக்திக்கேற்றவாறு தானம் செய்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.
- இவ்வாறு பூஜை செய்து வந்தால் விநாயகப் பெருமான் கட்டாயம் வேண்டிய வரங்களைத் தருவார். விநாயகர் சதுர்த்தியை மிகவும் சிரத்தையுடன் கடை பிடிப்பவர்கள் சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப் பேறும் துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள். காரிய அனுகூலமும் உண்டாகும்.
- இடையூறு விலகும். பெரும் புகழுடன் சகல நோய்களும் நீங்கி, சகல பாக்கியங்களுடன் வாழ்வார்கள். விநாயகர் விரதத்தை ஸ்ரீகற்பக விநாயகர் வீற்றிருக்கும் பிள்ளையார்பட்டியிலும் மற்றும் திருவலஞ்சுழி (கும்பகோணம்), உப்பூர் (ராமநாதபுரம்), ஈச்சனாரி (கோயம்புத்தூர்) ஆகிய இடங்களில் செய்யலாம்.
- சிலர் இந்த இடங்களில் விரதத்தை தொடங்கியும் அதே இடங்களில் நிறைவு செய்வதும் உண்டு. இவ்வாறு செய்ய இயலாதவர்கள் அவரவர் ஊர்களில் உள்ள கோவில்களிலும், வீடுகளிலும் விரதத்தை கடைபிடிக்கலாம். எங்கு விரதம் இருந்தாலும் அதற்கேற்ற பலன் உண்டு.*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment