Search This Blog

Monday, 12 September 2016

சூரிய பகவான் - சூரியனார் கோயில்


  • கும்பகோணத்துக்கு வடக்கே சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சூரியனார் கோயில். இங்கு நவக்கிரகங்களில் முதன்மையானவரும் உலகிற்கே ஒளி கொடுப்பவருமான சூரிய பகவான் சிவ சூரியப் பெருமாளாக எழுந்தருளியிருக்கிறார். சூரிய பகவானுக்குரிய நிறம், தானியம் போன்ற விபரங்கள் பின்வருமாறு:-
  • நிறம்: சிவப்பு
    தானியம்: கோதுமை
    வாகனம்: ஏழு குதிரைகள் பூட்டிய தேர்
    மலர்: செந்தாமரை
    உலோகம்: தாமிரம்
    கிழமை: ஞாயிறு
    ரத்தினம்: மாணிக்கம்
    பலன்கள்: சகல காரிய சித்திகள் மற்றும் ஆகர்ஷணம்
  • சூரியனார் கோயிலுக்கு வெகு அருகிலுள்ளது திருமங்கலக்குடி எனும் திருத்தலம். ஐதீகப்படி திருமங்கலக்குடியில் சென்று அங்குள்ள பிராணநாதர் எனப்படும் சிவபெருமானை தரிசனம் செய்த பிறகு தான் சூரியனார் கோயிலுக்கு செல்ல வேண்டும் என கேள்விப்பட்டதால் முதலில் திருமங்கலக்குடிக்கே நாங்கள் சென்றோம். இக்கோயிலை பற்றிய விபரங்கள் தனியாக பிரசுரித்துள்ளேன்.
  • உலகம் தோன்றிய பொழுது முதன்முதலாக உலகெங்கும் வியாபித்த நாதம் ஓம் எனும் ஓம்காரநாதமாகும். அதிலிருந்து தோன்றியவர் தான் சூரிய பகவான் என ஸ்ரீ மார்க்கண்டேய புராணம் கூறுகின்றது. மாரீசி எனும் மஹாரிஷியின் புதல்வரான கசியப முனிவருக்கு பிறந்தவர் தான் சூரிய பகவான் என்றும், விஸ்வகர்மாவின் புதல்வியான சூர்வர்சலா தான் சூரிய பகவானின் பத்தினி எனவும் புராணம் கூறுகின்றது. வைவஸ்வத மனு, யமதர்மன் என்ற புதல்வர்களும் யமுனை என்ற புதல்வியும் சூரிய பகவானின் குழந்தைகள் என அறிகிறோம். அதே நேரம் சாயா தேவியின் புதல்வராக சனி பகவானும், குந்தி தேவியின் புதல்வராக கர்ணனும், சூரிய பகவானுக்கு பிறந்தவர்கள் எனவும் மற்ற புராணங்களிலிருந்தும் மகா பாரதத்திலிருந்தும் அறிகிறோம்.
  • சூரிய பகவானின் தேருக்கு ஒரே ஒரு சக்கிரம் மட்டுமே உள்ளது என்றும் அத்தேரை இழுக்கும் குதிரைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறத்தை உடையவை என்பதும் சிலருக்கு தெரியாது. தனது பக்தர்களுக்கு ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் என்பவற்றோடு புகழையும் எதையும் சமாளிக்கும் ஆற்றலையும் வழங்குகிறார் சூரிய பகவான். அதர்வண வேதத்தின் படி சூரியனை தியானிக்கும் பக்தர்களுக்கு பார்வை மற்றும் இதய கோளாறுகள் நீங்குவதாக நம்பப்படுகிறது.
  • காலை 6-லிருந்து மதியம் 12:30 வரைக்கும் திறந்திருக்கும் இத்திருக்கோவில் மீண்டும் மாலை 4-லிருந்து இரவு 8-வரை தினமும் திறக்கப்படுகின்றது. மூன்று அடுக்குகளை கொண்ட இக்கோயிலின் கோபுரம் சுமார் பதினைந்தரை அடி உயரம் உள்ளதாகும். இராஜகோபுரத்தின் வடக்கே சூரிய புஷ்கரிணி என்ற திருக்குளம் உள்ளது. இங்கு குளித்து விட்டு தரிசனம் செய்தல் சாலச் சிறந்தது.
  • கோயிலுக்குள் நுழைந்தவுடன் பலிபீடத்தின் கிழக்கே ஒற்றைக் குதிரையை தரிசிக்கலாம். சூரிய பகவானின் வாகனமான குதிரைக்கு "சப்த" என்ற பெயரிடப்பட்டுள்ளது. கோயிலுக்குள் நுழையும் பக்தர்கள் முதலில் "கோள் தீர்த்த விநாயகர்" சன்னதியை தரிசித்த பின்னர் காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாக்ஷி தாயாரை தரிசித்து, உஷா மற்றும் பிரத்யுஷா (சாயா தேவி) ஆகியோருடன் சயனித்திருக்கும் சூரிய பகவானை தரிசிக்கலாம். இக்கோயிலின் சிறப்பு என்னவெனில் இங்கு மற்ற கிரகங்கள் யாவும் சூரிய பகவானை நோக்கிய படி இருப்பது தான். சூரிய பகவானுக்கு நேர் எதிரே அவரது உக்கிரத்தை தணிக்கும் படியாக குரு பகவான் நின்றிருப்பதை காணலாம். கிரக தோஷம் நீங்குவதர்க்காக வரும் பக்தர்களை இங்கு அதிகமாக காணலாம். குறிப்பாக, அஷ்டம சனி, ஜன்ம சனி மற்றும் சனியின் இதர தோஷங்களால் அவதியுறும் பக்தர்கள் இங்கு வந்து சூரிய பகவானை தரிசிதார்களேயானால் தோஷ நிவாரணம் பெற முடியும் என நம்பப்படுகிறது.
  • சூரிய பகவானை தரிசித்த பிறகு, இதர கிரகங்களையும் தரிசிக்கும் பக்தர்கள் மீண்டும் கோள் தீர்த்த விநாயகரை தரிசித்து பலிபீடத்துக்கு அருகில் நமஸ்கரித்து பிறகு கோயிலை வலம் வர வேண்டும் என்ற சம்பிரதாயம் இங்கு உள்ளது.
**************

ஸ்ரீ கள்ளபிரான் சுவாமி - ஸ்ரீ வைகுண்டம்.

  • தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அமைந்துள்ள நவதிருப்பதிகளில் முதலாவதாக அமைந்துள்ள ஸ்ரீ வைகுண்டம், ஸ்ரீ கள்ளபிரான் சுவாமி திருத்தலத்தைப் பற்றி  பார்ப்போம்.
திருத்தலம் அமைவிடம்:
  • ஸ்ரீ கள்ளபிரான் திருக்கோயில், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலிருந்து 1 km தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 30 km தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கோயில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
திருத்தலக் குறிப்பு:
  • தல மூர்த்தி : கள்ளபிரான் (ஸ்ரீ வைகுண்டநாதர்)
  • தல இறைவி : வைகுந்த நாயகி (கள்ளர்பிரான் நாச்சியார் , சோரநாத நாயகி)
  • தல தீர்த்தம் : தாமிரபரணி தீர்த்தம், ப்ருகு தீர்த்தம், கலச தீர்த்தம்
  • கிரகம் : சூரிய ஸ்தலம்


தலவரலாறு:

  • கோமுகன் என்னும் அசுரன், பிரம்மாவிடமிருந்து வேத நூல்களை அபகரித்துச் சென்றான். இதனால் பிரம்மனின் படைப்புத் தொழில் பாதிக்கப்பட்டது. பிரம்மா மனம் வருந்தி, மகாவிஷ்ணுவை மனதில் இருத்தி தாமிரபரணி ஆற்றங்கரையில் தவமிருந்தார். இதனைக் கண்ட பெருமாள், பிரம்மனுக்கு காட்சி தந்தார். பிரம்மனின் வேண்டுதலை ஏற்று கோமுகாசுரனை அழித்து வேத சாஸ்திரங்களை மீட்டுத் தந்தார். பிரம்மனின் வேண்டுகோளின்படி இங்கேயே வைகுண்டநாதர் என்ற பெயருடன் எழுந்தருளினார். பிரம்மனும் தாமிரபரணி தீர்த்தத்தினை எடுத்து பெருமாளுக்கு அபிஷேகம் செய்வித்த காரணத்தாலும், நதிக்கரையில் கலசத்தை நிறுவியதாலும் கலச தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.


  • பல வருடங்களுக்கு முன்பு இக்கோயில் வழிபாடுகளின்றி, பூமிக்குள் புதையுண்டு கிடந்தது. சுவாமி சிலையும் ஆற்றங்கரையில் மறைந்திருந்தது. இச்சமயத்தில், அரண்மனை மாடு, மேய்ச்சலுக்கு செல்லும் போது தினமும், அங்குள்ள ஒரு புற்றின்மேல் பாலை சுரந்துகொண்டு இருந்தது. இதனை அறிந்த பாண்டிய மன்னன் அந்த இடத்தை தோண்டச் செய்தார். அங்கே சுவாமி சிலை இருப்பதைக் கண்டு, புதையுண்டு கிடந்த திருக்கோயிலையும் புனர் நிர்மாணம் செய்து நாள்தோறும் பெருமாளுக்கு பால் அபிஷேகம் செய்வித்தார். பாண்டிய மன்னர் பால் அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்தமையால் பெருமாளுக்கு பால் பாண்டி என்ற பெயரும் உண்டானது.

தல பெருமை:

  • நவதிருப்பதிகளில் முதலாவதாகவும், நவகிரக ஸ்தலங்களில் சூரிய ஸ்தலமாகவும் இந்த ஸ்ரீ கள்ளபிரான் திருக்கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீ கள்ளபிரான் சுவாமி சந்திர விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். கையில் தண்டத்துடனும், ஆதி சேஷனைக் குடையாகவும் கொண்டு நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். பிரகாரத்தில் வைகுந்தவல்லித் தாயார் சன்னதி உள்ளது. சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில், பௌர்ணமி நாளன்று, சூரியனின் கதிர்கள் பெருமாளின் பாதத்தில் படும்படி, கோயிலின் கொடிமரம், பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது. அக்கால கட்டிடக் கலையின் நேர்த்தி இதன் மூலம் நமக்குத் தெரிய வருகிறது.

தலச்சிறப்பு:
  • வைகுண்டநாதப் பெருமாளின் பக்தர் காலதூஷகன் என்ற திருடன். இந்த காலதூஷகன் பல இடங்களில் திருடியவற்றில் பாதியை கோயில் சேவைக்கும், மீதியை மக்கள் சேவைக்கும் செலவிட்டான். ஒருமுறை மணப்படை என்ற ஊரில் அரண்மனைப் பொருள்களை திருடச்சென்ற போது காலதூஷகனின் ஆட்கள் அரண்மனை காவலர்களிடம் பிடிபட்டார்கள். அவர்கள் மூலம் காலதூஷகனின் இருப்பிடம் அறிந்த காவலர்கள், அவனை சிறை எடுக்கச் சென்றனர். அப்போது தானே திருடன் வடிவில் வைகுந்தப் பெருமாள் அவர்களுடன் அரண்மனைக்குச் சென்றார். அவரை விசாரித்த அரசரிடம், வயிற்றுக்கு இல்லாத குறைதான் திருடினேன் எனவும், நாட்டில் ஒருவனுக்கு உணவு, பொருள் பற்றாக்குறை என்றால் அதற்கு, அந்நாட்டை ஆளும் மன்னன் சரியான விதத்தில் அரசாளவில்லை என்றுதான் அர்த்தம். எனவே தான் திருடியதற்கு மன்னனே காரணம் என்று தைரியமாக கூறினார்.
  • இவ்வாறு தன் முன் நின்று ஒரு திருடனால் தைரியமாக பேச முடியாது என்பதை உணர்ந்த மன்னன், வந்திருப்பது பெருமாளே என அறிந்தார். தான் செய்த தவறையும் உணர்ந்தார். பெருமாள் திருடனது வடிவில் வந்தாலும் அனைவரையும் மயக்கும் அழகிய தோற்றத்தில் இருந்த படியால் அன்று முதல் கள்ளபிரான் என்று அழைக்கப்பட்டார்.


  • தை முதல் நாள் அன்று கள்ளபிரானை 108 போர்வைகளால் போர்த்தி, கொடிமரத்தை சுற்றி வந்த பின் பூஜை செய்து, ஒவ்வொரு போர்வையாக எடுத்து அலங்காரத்தை கலைப்பர். 108 திவ்ய தேசங்களிலும் உள்ள அனைத்துப் பெருமாளும் இந்த தினத்தில் கள்ளபிரானாக பக்தர்களுக்கு காட்சி தருவதாக ஐதீகம்.

வியப்பில் ஆழ்த்தும் சிற்பங்கள்:

  • நம் திருக்கோயில்களின் சிறப்பம்சமே உலகமே வியக்கும் சிற்ப வேலைப்பாடுகள்தான். இந்த ஸ்ரீ கள்ளபிரான் கோயிலும் அதற்கு விதி விலக்கல்ல. இக்கோயில் சிற்பங்களும் நமது கண்ணையும் கருத்தையும் கவருகின்றன. குறிப்பாக, ஆதிசேஷனைக் குடையாகக் கொண்டு தேவியருடன் காட்சி தரும் பெருமாள், மூவுலகமும் தன்னுள் அடக்கம் என்பதை உணர்த்தும் உலகளந்த பெருமாள், அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பதை உணர்த்தும் ராமர் அனுமார் சிற்பம், கணவரின் காலில் இருந்து முள்ளுடன் சேர்த்து வலியையும் எடுக்கும் மனைவி, யாழியின் வாலுக்குள்ளே ஆஞ்சநேயர், நம் மீது தாவத் தயாராக இருக்கும் வானரம் என, இது போல ஆயிரம் கதைகள் சொல்லும் சிற்பங்கள்.


நவதிருப்பதி திருத்தலங்கள்

தசாவதாரமும் நவகிரகங்களும்:
  • பொதுவாக சிவன் கோயில்களில் மட்டுமே நமக்கு நவகிரகங்களின் தரிசனம் கிடைக்கும். பெருமாள் கோயில்களில் நவகிரகங்களுக்கு பதிலாக, சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்வோம். வைணவ ஸ்தலமான மதுரை கூடலழகர் திருக்கோயிலில் நவகிரகங்களின் சன்னதி உள்ளது. ஒன்பது கிரகங்களையும் வணங்கும் விதமாக தசாவதார சுலோகம் உள்ளது.

ராமாவதார சூர்யஸ்ய சந்திரஸ்ய யதநாயக
நரசிம்ஹோ பூமிபுதரஸ்ய யௌம்ய சோமசுந்த்ரஸ்யச
வாமனோ விபுதேந்தரஸிய பார்கவோ பார்கவஸ்யச :
கேதுர்ம் நஸதாரய்ய யோகசாந்யேயிசேகர

என்ற ஸ்லோகத்தை அடிப்படையாகக் கொண்டு,

ஸ்ரீ ராமாவதாரம் - சூரியன்
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் - சந்திரன்
ஸ்ரீ நரசிம்மவதாரம் - செவ்வாய்
ஸ்ரீ கல்கியவதாரம் - புதன்
ஸ்ரீ வாமனவதாரம் - குரு
ஸ்ரீ பரசுராமாவதாரம் - சுக்ரன்
ஸ்ரீ கூர்மவதாரம் - சனி
ஸ்ரீ மச்சாவதாரம் - கேது
ஸ்ரீ வராகவதாரம் - ராகு
ஸ்ரீ பலராமவதாரம் - குளிகன்

என்று, பெருமாளின் அவதாரங்கள் கிரகங்களோடு தொடர்புடையவைகளாக கூறப்பட்டுள்ளது.


அதுபோலவே, சோழ நாட்டில் உள்ள நவகிரக ஸ்தலங்களைப் போல, பாண்டிய நாட்டில் உள்ள நவ திருப்பதிகளும் நவகிரக ஸ்தலங்களாகக் கருதப்படுகின்றன. அவை,

ஸ்ரீவைகுண்டம் - சூரிய ஸ்தலம்
வரகுணமங்கை (நத்தம்) - சந்திரன் ஸ்தலம்
திருக்கோளூர் - செவ்வாய் ஸ்தலம்
திருப்புளியங்குடி - புதன் ஸ்தலம்
ஆழ்வார்திருநகரி - குரு ஸ்தலம்
தென்திருப்பேரை - சுக்ரன் ஸ்தலம்
பெருங்குளம் - சனி ஸ்தலம்
இரட்டைத் திருப்பதி (தேவர்பிரான்) - ராகு ஸ்தலம்
இரட்டைத் திருப்பதி (அரவிந்த லோசனர்) - கேது ஸ்தலம்


*************

அலர்மேலு பத்மாவதி தாயார் - அலமேலு மங்காபுரம், திருப்பதி.

 

  • திருப்பதி திருமலையில், ஏழுமலையான் இருக்கிறார். இந்த மலையின் அடிவாரத்தில் இருந்து ஐந்து கி.மீ., தூரத்திலுள்ள அலமேலு மங்காபுரத்தில், பத்மாவதி தாயார் இருக்கிறார். இவளை, “அலமேலு’ என்பர். “அலர்மேலு’ என்பதே சரியான வார்த்தை. “அலர்’ என்றால், “தாமரை!’ “மேலு’ என்றால், “வீற்றிருப்பவள்!’ இதையே, “பத்மாவதி’ என்கின்றனர். “பத்மம்’ என்றாலும், “தாமரை!’ “வதி’ என்றால், “வசிப்பவள்!’ ஆக, தாமரையில் வீற்றிருப்பவள் என்பது இந்தச் சொல்லின் பொருள்.
  •  செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் லட்சுமியே, பத்மாவதியாக பூலோகத்தில் அவதாரம் செய்தாள். பூலோகத்தில் கலியுகம் தொடங்கி, அநியாயங்கள் பெருகின. இதைக் குறைக்க, இறைவன் பூமியில் அவதாரம் எடுக்க வேண்டி, காஷ்யப முனிவர் தலைமையில், முனிவர்கள் யாகம் தொடங்கினர். யாகத்தை காண வந்த நாரதர், “யாகத்தின் பலனை யாருக்குத் தரப் போகிறீர்கள்?’ என்று முனிவர்களைக் கேட்டார். இவ்வுலகிலேயே சாந்தமான தெய்வம் யாரோ, அவருக்கு யாக பலனைத் தருவதென்று முடிவு செய்தனர்.
  • சாந்தமானவரை தேடி, பிருகு முனிவர் வைகுண்டம் சென்றார். திருமால், பிருகு முனிவரை கண்டு கொள்ளாமல் இருக்கவே, அவரது மார்பில் முனிவர் எட்டி உதைத்தார். திருமால், கோபம் கொள்ளவில்லை; உதைத்த பாதத்தை தடவி கொடுத்தார். பொறுமையும், அமைதியும் நிறைந்த திருமாலுக்கே, யாக பலனைத் தருவதென முனிவர்கள் முடிவெடுத்தனர்.
  • பெருமாளின் மார்பிலேயே லட்சுமி வாசம் செய்கிறாள். பிருகு முனிவர், பெருமாளை மிதிக்கும்போது, அவரது பாதங்கள் லட்சுமியின் மீதும் பட்டன. எனவே, அவரைத் தண்டிக்கும்படி லட்சுமி சொல்ல, திருமால் மறுத்து விட்டார். இதனால், அவள் கோபம் கொண்டு, பாற்கடலில் இருந்து கிளம்பி, பூலோகத்தை அடைந்து, தவத்தில் ஆழ்ந்தாள்.
  • திருமகளைத் தேடி, திருமால் அந்தணராக மாறி, பூவுலகத்தைச் சுற்றி அலைந்து, வேங்கடமலையில் வந்து ஒரு புற்றுக்குள் அமர்ந்தார். அவருக்கு பசியெடுத்தது. இதுபற்றி, தவத்தில் இருந்த லட்சுமியிடம் சொன்னார் நாரதர். கணவர் மீது கோபமிருந்தாலும், அவர் பசியுடன் இருப்பது குறித்து லட்சுமி வருத்தமடைந்தாள்.
  • அவளிடம், திருமாலின் பசியைப் போக்க உபாயம் சொன்னார் நாரதர். அதன்படி, பிரம்மாவும், சிவனும் பசுவாகவும், கன்றாகவும் மாற, லட்சுமி தாயார் அவற்றின் எஜமானி போல் வேடமணிந்து, அப்பகுதியை ஆட்சி செய்த மன்னனிடம் விற்கச் சென்றாள். மன்னன் வாங்கிய பசு, மேய்ச்சலுக்குச் செல்லும்போது, சீனிவாசன் இருந்த புற்றுக்குச் சென்று பால் சொரிந்தது. அதைக் குடித்து சீனிவாசன் பசியாறினார்.
  •  பசுவை மேய்த்த இடையன், பசுவின் பின்னால் சென்று, புற்றில் பால் சொரிவதைக் கண்டான். கோடரியால் பசுவை அடிக்க முயன்றான். கோடரி தவறி, புற்றுக்குள் இருந்த பெருமாளின் தலையில் பட்டு, ரத்தம் சிந்தியது.  தன் காயம் தீர மூலிகை தேடிச் சென்ற பெருமாள், ஆசிரமம் ஒன்றைக் கண்டார்.
  • அது வராஹ மூர்த்தி என்பவரின் ஆசிரமம். அங்கிருந்த வகுளாதேவி (முற்பிறவியில் கண்ணனின் அன்னை யசோதையாக பிறந்தவள்) தன் பிள்ளையான திருமாலின் முகத்தைக் கண்டவுடன், பாசத்தில் மூழ்கினாள். திருமாலும், அன்புடன் வகுளாதேவியை, “அம்மா’ என்று அழைத்தார். வகுளாதேவி தன் பிள்ளைக்கு, “ஸ்ரீனிவாசன்’ (செல்வம் பொருந்தியவன்) என்று பெயரிட்டாள்.
  • இந்நிலையில், சந்திரகிரி என்ற பகுதியை ஆண்ட ஆகாசராஜன், பிள்ளை வரம் வேண்டி, தன் குலகுரு சுக முனிவரின் ஆலோசனைப்படி, புத்திர காமேஷ்டி யாகம் செய்ய, நாள் குறித்தான். யாகம் செய்யும் இடத்தை செம்மைப்படுத்தும் போது, பூமியில் புதைந்திருந்த பெட்டிக்குள் இருந்த தாமரையில், படுத்த நிலையில் ஒரு பெண் குழந்தை இருந்தது. எனவே, குழந்தைக்கு, “பத்மாவதி’ என்று பெயரிட்டான். ராமாவதாரத்தின் போது வேதவதி எனும் பக்தை, ராமனை மணாளனாக பெற வேண்டி, தவம் செய்தாள். ராமனும் அவளிடம், பின்னாளில் அவளை மணம் செய்து கொள்வதாக வாக்குறுதி தந்தார்.
  • அதன்படியே, வேதவதி, பத்மாவதியாகப் பிறந்து, ஆகாசராஜனின் மகளானாள். சீனிவாசப் பெருமாளுக்கும், பத்மாவதிக்கும் திருமணம் இனிதே நடந்தது. பத்மாவதி, திருச்சானூரில் அருளாட்சி செய்கிறாள். சீனிவாசப் பெருமாள் தினமும் திருச்சானூர் வந்து தங்கிவிட்டு காலையில் திருமலைக்கு திரும்பி விடுவதாக ஐதீகம் நிலவுகிறது. திருச்சானூரில் கார்த்திகை மாதம் நடக்கும் பிரம்மோற்சவத்தில், தாயார் தேரில் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சி. நீங்களும் சென்று தாயாரைத் தரிசித்து வாருங்கள்.

திருப்பதி ஏழுமலையான் தரிசனம்..!
  •  நேரடியாக திருமலையேறி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கக் கூடாதாம். ஒரு தனி மரபே இருக்கிறது.முதலில் கீழே, திருப்பதியில் கோவிந்தராஜப் பெருமாளை சேவிக்க வேண்டும், பிறகு அலர்மேல்மங்காபுரம் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்து உளமாற வணங்க வேண்டும்.அதற்குப் பிறகு திருமலையேறி, வராக தீர்த்தக் கரையில் கோயில் கொண்டிருக்கும் வராகரை தரிசிக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் மலையப்பன் என்று சொல்லப்படும், ஏழுமலையானை, கோவிந்தனை, வேங்கடவனை சேவிக்க வேண்டும்!
  •  ராமானுஜர் காலத்திலிருந்து அவர் தொடங்கி, பின்னால் வந்த அனைத்து ஆசார்யார்களும் கடைபிடித்து வந்த சம்பிரதாயம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷
[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]