Search This Blog

Friday, 26 August 2016

குரு பகவானின் பரிபூரண அருள் பெற உதவும் - அற்புதமான ஆலயம்

 


கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் திட்டை எனும் ஊரில் அமைந்துள்ளது திருதென்குடித்திட்டை எனும் திட்டை வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற திருத்தலம் இது. திட்டை என்ற பெயர் ஏன்?. புராண காலத்தில் ஊழிப் பெரு வெள்ளத்தால் உலகின் அனைத்து பகுதிகளும் மூழ்கி விட்டது. மும்மூர்த்திகளும் இருள் உலகம் முழுவதையும் சூழ்ந்து விட்டதை கண்டு மனம் கலங்கினர். அச் சமயம், ஒரு பகுதி மட்டும் சற்று மேடாக, திட்டாக காணப்பட்டதை கண்டனர். விரைந்தனர் அப் பகுதிக்கு. அங்கு "ஹம்" என்ற ஒலியுடன் பல விதமான மந்திர ஒலிகளும் கேட்டனர். அப்பொழுது ஜோதி சொரூபமாய் சிவ பெருமான் தோன்றக் கண்டனர். அவரை போற்றி துதித்தனர். மும் மூர்த்திகளின் வேண்டுதலுக்கு இணங்க இத் தலத்திலேயே வீற்றிருந்து அருள் புரியலானார்.

இறைவனும், இறைவியும்
இறைவன் வசிஷ்டேஸ்வரர். தாமாகவே தோன்றிய சுயம்பு மூர்த்தி. தேரூர் நாதர், பசுபதி நாதர், ரதபுரீஸ்வரர், தேனுபுரீஸ்வரர், அனந்தீஸ்வரர் என்றெல்லாம் வணங்கப்படுகின்றார். யம தர்மன் சாப விமோஷனம் பெற்ற தலம் இது. சனீஸ்வரன் நவ கோள்களில் ஒன்றாக விளங்கும் அருள் பெற்றது இத் தல இறைவனை வேண்டியே. பரசுராமர், கார்த்த வீர்யார்ச்சுனன், முருகன், பைரவர் போன்றோர் வழிபட்ட திருக்கோவில் இது. இறைவி உலகநாயகி. சுகந்த குந்தளேஸ்வரி, மங்களேஸ்வரி என்றும் வழிபடப்படுகின்றாள். இத் தல அம்பிகையை வழிபட்டு சுகந்த குந்தலா எனும் பெண்ணொருத்தி இழந்த தன் கணவனை உயிருடன் மீட்டாள் என்கிறது தல புராணம். மங்களா எனும் வைசியப் பெண்ணொருவள் தன் விதவைக் கோலம் நீங்கி நீடூழி வாழ்ந்து மணித்வீபம் சென்றாள். சங்க பால மன்னன் என்பவன் தன் இறந்து போன மத்சலாவை உயிருடன் மீண்டும் பெற்று இழந்த தன் அரசையும் இத் தல இறைவனை வழிபட்டே பெற்றான்.

சிறப்பு மூர்த்தியாய் குரு பகவான்
அனைத்து சிவாலயங்களைப் போலவே இங்கும் தெட்சிணாமூர்த்தி தென் புறத்தில் அமர்ந்திருக்கின்றார். சுவாமிக்கும் அம்பாள் சந்நதிக்கும் இடையில் குரு பகவான் ராஜ குருவாக நின்ற கோலத்தில் தனி விமானத்துடன், தனி சந்நதி கொண்டு காட்சி தருகின்றார். பெரும்பாலான குரு தலங்களில் குருவின் அதிதேவதையான தெட்சிணாமுர்த்தியே குருவாக பாவித்து வணங்கப்படுகின்றார். ஆனால், இத் தலத்தில் மட்டுமே குரு பகவான நவக்கிரக அமைப்பில் உள்ளது போல் தனி சந்நதியில் காட்சி அருள்கின்றார். இவரே இத் திருத்தலத்தின் சிறப்பு மூர்த்தியாவார். இத் தலத்தில் குரு பகவானுக்கு உற்சவ மூர்த்தியும் உண்டு. திருவிழா நாட்களில் இறைவனுடன் இவரும் வீதி உலா செல்வார். இத் திருத்தலத்தை தவிர குரு பகவான் வீதி உலா செல்வதை வேறு எங்கும் காண இயலாது. இது இத் தலத்தின் மிகப் பெரும் சிறப்பு.

குரு பார்க்க கோடி நன்மை
குரு பகவான் சப்த ரிஷிகளில் நடுவரான ஆங்கிரஸ மகிரிஷியின் புதல்வரே. இவரே தேவர்களுக்கு வழிகாட்டியாகவும் திகழ்கின்றார். ஜோதிட ரீதியாக ஐந்தாவது இடத்தில் இருக்கும் குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். உயர் பதவி, கல்வி, செல்வம், குடும்பத்தில் மகிழ்ச்சி இவற்றை சந்தோஷமாக அருள்பவர். குரு பகவான் முழுச் சுபர். தோஷங்களை நீக்குவதில் வல்லவர். கேதுவின் தோஷத்தை ராகுவும், ராகு, கேது இருவரின் தோஷங்களை சனியும், ராகு கேது தோஷத்தை புதனும், புதன் உட்பட ஐவரின் தோஷத்தை சந்திரனும் போக்க வல்லவர்கள். ஆனால் குரு பகவானோ அனைத்து நவக்கிர தோஷங்களையும் போக்க வல்லவர். எனவேதான் " குரு பார்க்க கோடி நன்மை " என்பர்.

பஞ்ச லிங்க ஷேத்திரம்
இத் திருக்கோயிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. மூலவர் சுயம்பு லிங்கமாக ஐந்தாவதாய் எழுந்தருளியுள்ளார். எனவே இத் தலம் பஞ்ச பூதங்களுக்கும் உகந்த ஸ்தலமாக விளங்குகின்றது. திருகாளத்தி, திரு அண்ணாமலை, திருவானைக்காவல், சிதம்பரம் மற்றும் காஞ்சிபுரம் என்ற பஞ்ச பூத தலங்களும் ஒருங்கிணைந்த தலமாக விளங்குகின்றது இத் திருதென்குடித்திட்டை திருக்கோவில்.

திருக்கோவிலின் அமைப்பும், சிறப்பும்
கிழக்கு நோக்கிய ராஜ கோபுரத்துடன் திகழ்கின்ற இத் திருத்தலம் முற்றிலும் கருங்கற்களை மட்டுமே கொண்டு கட்டப்பட்டுள்ளது. நிறைய கோவில்கள் இவ்வண்ணம் கருங்கற் கோவில்களாக விளங்குகின்றன. ஆனால், இத் திருத்தலத்தில் மட்டுமே கொடி, கலசங்களும் கூட கருங்கற்களை கொண்டு வடிவமைக்கப்படுள்ளன. இப் பேரழகினை காண கண் கோடி வேண்டும்.

சந்திர காந்தக் கல்லும், சூரிய காந்தக் கல்லும்
இத் திருக்கோவில் அக்கால கட்டிடக் கலைக்கு ஓர் சிறந்த உதாரணம். கோவிலின் மூலவர் விமானத்தில் சந்திர காந்தக் கல் மற்றும் சூரிய காந்தக் கல் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சந்திர காந்தக் கல் சந்திரனிடமிருந்து குளுமையை வாங்கி 24 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு சொட்டு நீரை மூலவர் லிங்கத்தின் மீது தாமாகவே அபிஷேகம் செய்கின்றது. சிவ பெருமான் , சந்திரனது சாபத்தினை நீக்கி, தன் சிரசில் இருக்க இடம் கொடுத்ததால் சந்திரன் தன் நன்றிக் கடனாக அனு தினமும் இவ்வாறு அபிஷேகம் செய்வதாக ஐதீகம். இந்த அதிசயம் உலகில் வேறெங்குக் காண இயலாத ஒன்று.

தல விருட்சங்கள்
திருக்கோவிலின் முன் உள்ள சக்கர தீர்த்தம் எனும் திருக்குளம் தல தீர்த்தமாகும். இது மஹா விஷ்ணுவின் சக்ராயுதத்தால் உண்டாக்கப்பட்டது. விநாயகர் அருளுடன் சகல சித்திகளையும் அளிக்க வல்லது. இங்கு தேவர்களும், தேவ மாதாக்களும் மரம், செடி, கொடிகளாக மாறி தல விருட்சமாக அருள்கின்றனர். இங்கு மற்ற கோவில்களை போலன்றி தல விருட்சங்கள் பல, ருத்ரன் ஆல மரமாகவும், ருத்ராணி ஸமி மரமாகவும், விஷ்ணு அரச மரமாகவும், லஷ்மி வில்வ மரமாகவும், மற்றைய தேவர் அனைவரும் செடி, கொடிகளாகவும் திருத்தல விருட்சங்களாகவும் அருளுகின்றனர்.

சனி தோஷம் உள்ளவர்கள், அர்த்தாஷ்டம சனி, ஏழரைச் சனி மற்றும் அஷ்டமச் சனி தோஷம் உள்ளவர்கள் ,இத் தல பசு தீர்த்தத்தில் நீராடி, பசுபதீஸ்வரரை வேண்டி, நவக்கிரகங்களை வலம் வந்து, சனி பகவானுக்கு அர்ச்சனை செய்தால் தோஷங்கள் நிவர்த்தியாகின்றன. 

 ************

திருமால் சங்கு பெற்ற கதை


  • சங்கு சக்கரம் பார்த்தவுடன் நமக்கு சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. 
  • அதெப்படி? சங்கு சக்கரம் பார்த்தவுடன் திருமால் ஞாபகம் தானே வரும்! சங்கு சக்கரம் இரண்டும் திருமாலின் கருவிகள் அல்லவா?.உண்மைதான். சங்கு சக்கரம் இரண்டும் திருமாலின் கருவிகள்தான். 
  • அதை யார் அவருக்குக் கொடுத்தது? எப்படி திருமால் அதைப் பெற்றார் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?  பரம்பொருளின் ஐந்து தொழில்களுள் ஒன்றான காக்கும் தொழிலைச்செய்யும் தொழிற்கடவுளான திருமால் சங்கு சக்கரம் இரண்டையும் சிவபூசை முறையாகச் செய்து அதனைப் பரம்பொருள் சிவபெருமானிடமிருந்து பெற்றார்.
  • சகோதர்களான அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட பலப்பல தெய்வீக அற்புதப் பொருட்களில் சங்கும் ஒன்று. பாற்கடலில் தோன்றிய இந்தச் சங்கு ‘நமசிவாய’ என்ற பஞ்சவனான (ஐந்தெழுத்தன்) பரம்பொருளை அடைந்ததால் பாஞ்ச சைனம் எனப்பெயர் பெற்றது.
  • காப்போனைக் காக்கும் கடவுளான சிவபெருமான் திருக்கரத்தில் இருந்த இந்தச் சங்கினைப் பெறுவதற்குக் காக்கும் தொழிலைச் செய்யும் திருமால் விரும்பினார். சிவலிங்கத்தை பிரதிட்டை செய்து நியமம் தவறாமல் சிவ பூசை செய்தார்.
  • திருமால் ஆசைப்பட்ட மங்கலப்பொருளை சங்கினை சிவபெருமான் திருமாலுக்கு அருளிச் செய்தார். திருமால் சிவபூசை செய்து தெய்வீகச் சங்கினைக் கைக்கொண்ட திருத்தலம் திருச் சங்க மங்கை (திருச் சங்கம் அங்கை) எனப்பெயர் பெற்றது. திருமாலுக்குச் சங்கினை அருளித் திருச்சங்க மங்கையில் எழுந்தருளியுள்ள சிவனுக்குச் சங்கநாதர், சங்கேசுவரர் என்ற திருநாமம் உண்டு.

Kind Attention to All Devodees...

Good Morning to All,

Warm Greetings.days.  Sunday is holiday to all. So excluding Sunday, I plan to publish articles. Anybody want to get articles in mail, kindly register your email in FOLLOW BY MAIL text box. Whenever we publish articles which is automatically published in facebook and also twitter.

Whatsapp             : +919788852706, +919788852707
twitter account     : https://twitter.com/cityarun
facebook              : https://www.facebook.com/thinamorukovil
Website                : www.cityxerox.in (or) www.tnkovils.blogspot.in

Using any one way, you may get the details of temples in TamilNadu. We believe this facility is more useful for collecting information about temples in TamilNadu.

With Regards...

Arun

🙏🙏திருஐயாறு (திருவையாறு) கோயில் தலவரலாறு🙏🙏


இறைவர் திருப்பெயர் : 
பஞ்சநதீஸ்வரர், ஐயாற்றீசர், செம்பொற்சோதீஸ்வரர், பிரணதார்த்திஹரன்.

இறைவியார் திருப்பெயர் : 

அறம்வளர்த்த நாயகி, தர்மசம்வர்த்தினி.

தல வரலாறு:

  • ஐந்து ஆறுகள் சேரும் இடம் என்பதால், இப் பெயர் பெற்றது.  சிவாச்சாரியார் ஒருவர் காசியாத்திரை சென்று உரிய காலத்தில் வர தாமதம் ஏற்பட, இறைவன், சிவாச்சாரியார் வடிவம் கொண்டு தம்மைத் தாமே பூசித்துக்கொண்டார். (இதனை மாணிக்கவாசகர் ஐயாறு அதனிற் சைவனாகியும் என்பார்.)
  • நந்திதேவர் இப்பதியில் ஏழுகோடி முறை உருத்திர ஜபம் செய்து இறைவனால் தீர்த்தமாட்டப் பெற்றார். அது ஐந்து தீர்த்தங்களாகப் புகழ் பெற்றன. அந்த ஐந்து தீர்த்தங்களின் காரணமாக திருவையாறு என அழைக்கப்படுகின்றது.
  • இறைவர், நந்திதேவருக்கு சுயம்ப்ரகாசை என்னும் பெண்ணைத் திருமணம் செய்துவைத்த தலம். இதனைச் சுற்றி ஏழூர்த் தலங்கள் (சப்தஸ்தானம்) இதனோடு தொடர்புடையன. அப்பர் பெருமானுக்குக் கயிலைக் காட்சி அருளிய தலம்.
  • சுந்தரரும் சேரமான் நாயனாரும் தரிசிக்க வரும்போது, காவிரியின் இரு மருங்கிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, சுந்தரர் பதிகம் பாட, வெள்ளம் ஒதுங்கி நின்று வழி தந்த பதி.
  • இத்திருக் கோயிலுள் ஐயாறப்பர் கோயில், தென் கயிலைக் கோயில், ஒலோகமாதேவீச்சரம் ஆக மூன்று கோயில்கள் உள்ளன.
  • சிறப்புகள் :
  1. சப்த ஸ்தான தலங்களுள் முதன்மையானது.
  2. நந்தி தேவர் திருமண உற்சவமும், சித்திரைப் பெருவிழா உற்சவமும் இன்றும் சிறப்பாக நடைபெறுகிறது.
  3. பிற்காலச் சோழர், பாண்டியர் மற்றும் பல்லவர் காலக் கல்வெட்டுகள் உள்ளன. 
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
            
             

🙏🙏பொன்மயமான வாழ்வை தருவார் கிருஷ்ண பகவான்!🙏🙏


🙏அஷ்டமி திதியின் மகிமையை உணர்த்திய கண்ணன் அஷ்டமி திதியில் அவதரித்தவர் ஸ்ரீகிருஷ்ணர். இதனால் இந்த திதியானது கோகுலாஷ்டமி என்று போற்றப்படுகிறது. அஷ்டமி, நவமி திதியில் சுபகாரியங்கள் செய்யக் கூடாது என்பார்கள். காரணம், இந்த திதிகளில்தான் கிருஷ்ணரும், இராமரும் பிறந்து, அதிக கஷ்டங்களை சந்தித்துவிட்டார்கள் என்ற காரணம் சொல்லப்படுகிறது. (இராமர் பிறந்த நாள், இராம நவமி) ஆனால் முதலில் துன்பங்களை கண்ட இந்த இருவருமே, பிறகு சாதனையும், சக்தியும் படைத்தவராக திகழ்ந்தார்கள்.

🙏தாங்கள் பிறந்த திதி-நட்சத்திர நாட்களை, மிக நல்ல சக்தி படைத்த நாட்களாக மாற்றினார்கள், அஷ்டமி, நவமி என்பது புனிதமான திதிகள். அவை இறைவனுக்கு உரியவை. தோஷ பரிகாரங்களுக்கு ஏற்ற நாட்கள் இவை. கிருஷ்ணா, முகுந்தா… கிருஷ்ணபரமாத்மாவின் மகிமைகளை சொல்லிக்கொண்டே போகலாம். அத்தனை சிறப்புமிக்கது. தனக்காக இல்லை என்றாலும் பிறருக்காக வாழ்ந்தவர். அதனால்தான் இவரை “கண்ணா“ என்கிறோம். அதாவது கண்ணைபோல் காப்பவன், “முகுந்தா”, ”மு” என்றால் முக்தியை அருள்வது என்ற பொருள். “கு” என்றால் இவ்வுலக இன்பங்களை அருள்வது. இவ்வூலகில் வாழ்வதற்கும், முக்தியை பெறுவதற்கும் கிருஷ்ணரே மூலவர் என்ற பொருளின் அடிப்படையில்தான் “முகுந்தா” என்று அழைக்கிறோம்.

🙏தர்மன் செய்த தவறு துரியோதனன் சூதாட்டத்திற்கு பாண்டவர்களை அழைத்தபோது, தர்மர் மறுத்தாலும் பிறகு சபையில் கர்ணன், பாண்டவர்களை கிண்டல் செய்ய, அர்ஜூனன் கோபமாக பேச, தேவை இல்லாமல் வாக்குவாதம் ஏற்பட்டுவிடுமோ என்ற கவலையில் துரியோதனன் சூதுக்கு அழைத்த பிறகு தர்மரும் சூதாட்டம் ஆட தொடங்கினார். “என் சார்பாக என் மாமா சகுனி ஆடுவார்“ என்றான் துரியோதனன். “பாண்டவர்களின் சார்பாக நான் ஆடுவேன்” என்றார் தர்மர் யோசிக்காமல். சகுனியின் தந்திரத்தால் பாண்டவர்கள் சூதில் தோற்றார்கள். தன்னால் எல்லாம் முடியும் என்று எண்ணிய தர்மர், கிருஷ்ணரை அழைக்கவில்லை. ஒருவேலை, “எங்கள் சார்பாக கிருஷ்ணர் விளையாடுவார்” என்று தர்மர் சொல்லி இருந்தால் நிச்சயம் மாயகண்ணன் கௌரவர்களை ஜெயித்து இருப்பார். இதை திரௌபதி உணர்ந்ததால்தான், துச்சாதனன் திரௌபதியின் துகில் உரித்தபோது, அண்ணனை நினைத்து “கோவிந்தா” என்று கண்ணனை அழைத்தாள்.

🙏அதனால் திரௌபதியின் மானம் சபையில் காக்கப்பட்டது. அதேபோல், போர் களத்தில் கிருஷ்ணனால்தான் ஜெயித்தேன் என்று அர்ஜுனனும் கடைசியில் உணர்ந்தான் என்கிறது வில்லிபாரதம். கிருஷ்ணபரமாத்மாவை நம்பினால் நிச்சயம் வெற்றிதான். மனதால் கண்ணனை நினைத்தாலே நன்மைகள் தேடி வரும் என்பதற்கு பக்தர்களின் வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்களை செய்து இருக்கிறார் பகவான். கிருஷ்ணபரமாத்மா பாண்டவர்களுக்கு மட்டுமல்ல, எவரும் மனதால் நினைத்தாலேபோதும், மனித உருவத்தில் நமக்கும் உதவிட பகவான் வருவார்.


🙏பூரி ஜகன்நாதர் ஆலயத்தில் கிருஷ்ண பகவான் வடித்த சிலை

🌷இஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்த மன்னன் இந்திரத்யும்னன். இவருக்கு பிள்ளைபாக்கியம் இல்லாததால் ஒரு பிள்ளையை தத்தெடுத்து வளர்ந்தார். அந்த வளர்ப்பு மகனின் பெயர் யக்ஞ நாராயணன். அவர் தன் தந்தையிடம், அசரீரி தன்னிடம் ஒரு ஆலயம் கட்ட சொன்னதாகவும், அந்த ஆலயத்திற்கு இறைவனின திருமேனியை உருவாக்க, சமுத்திரத்தில் இருந்து மூன்று கட்டைகள் வரும், அந்த கட்டைகளில் இருந்துதான் இறைவனின் உருவத்தை உருவாக்க வேண்டும் என்று அசரீரி சொன்னதாகவும் சொன்னார். தன் வளர்ப்பு மகன் சொன்னதுபோல் அரசரும் கோவில் கட்டும் பணியை சிறப்பாக செய்து வந்தார். அசரீரி சொன்னதுபோல சமுத்திரத்தில் இருந்து இறைவனின் உருவம் செய்ய கட்டைகள் மிதந்து வந்தன. மிதந்து வந்த கட்டைகளை கொண்டு பகவானை சிலையாக வடிக்கும்படி சிற்பிகளிடம் சொன்னார். ஆனால் எவராலும் அதில் பகவானின் திருஉருவத்தை உருவாக்க முடியவில்லை. வருத்தத்தில் இருந்தார் அரசர். அப்போது ஒரு கிழவன், “நான் இந்த கட்டைகளிலிருந்து மூன்று சிலைகள் செய்கிறேன். என்னென்ன சிலைகள் செய்ய வேண்டும்?” என்று கேட்க, ஸ்ரீபலராமர், ஸ்ரீகிருஷ்ணன் மற்றும் சுபத்திரை சிலைகளை வடித்து தரும்படி அரசரும் விருப்பத்தை சொல்ல, அதற்கு அந்த கிழவன், “சரி. அப்படியே செய்கிறேன். ஆனால் அதற்கு 22 நாட்கள் ஆகும். அதுவரை யாரும் ஆலய கதவை திறக்கக்கூடாது” என்றார். அரசரும் சம்மதித்தார்.

🙏நாட்கள் பறந்தது. 22 நாட்கள் ஆவதற்குள், “ஆக்க பொறுத்தவனுக்கு ஆற பொறுக்க முடியவில்லை” என்பதுபோல், ஒருநாள் அவசர அவசரமாக ஆலய கதவை திறந்தார் அரசர். சிலை வடித்துக்கொண்டிருந்த கிழவர் அப்படியே மறைந்து விட்டார். கிழவன் வடிவில் வந்தது கிருஷ்ணபரமாத்மா என்பதை உணர்ந்தார் அரசர். இறைவனின் சிலை முழுமையாக இல்லாமல் இருந்ததை கண்டு, தன் அவசரத்தால் இப்படி நடந்தவிட்டதே என்று மனம் வருந்தினார். அப்போது அசரீரி குரல் ஒலித்தது. “மனம் வருந்த வேண்டாம் இப்படியே அங்கஹீனனாக என்னை பிரதிஷ்டை செய்து வணங்கு” என்றது அசரீரி. கிருஷ்ணபகவானால் உருவாக்கபட்டதுதான் பூரி ஜகன்நாதர் ஆலயத்தில் இருக்கும் தெய்வசிலை.

🌷முராரி என்று ஏன் பரமனை அழைக்கிறோம்.?

🙏கிருஷ்ண பரமாத்மாவை முராரி என்று அழைப்போம். ஏன் கிருஷ்ண பரமாத்மாவை இப்படி அழைக்கிறோம் என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம். கேரளாவில் முகத்தல என்ற இடத்தில் முரன் என்ற அசுரன் இருந்தான். அவன் அந்த பகுதி மக்களுக்கு பெரும் துன்பத்தை கொடுத்து வந்தான். அவனிடம் மாட்டினால் கொன்றுவிடுவான். இதனால் அந்த ஊர் மக்கள் வேதனை அடைந்தார்கள். “தங்களுக்கு விமோச்சன காலம் எப்போது வரும் நாராயணா?” என்று தினமும் ஸ்ரீமந் நாராயணனை வேண்டி வந்தார்கள். ஒருநாள் ஒரு மூதாட்டியின் வீட்டு கதவை யாரோ தட்டுவது போல் இருந்தது. இதை கேட்ட அந்த வீட்டின் கிழவி, தன்னை கொல்ல அசுரன் முரன் வந்துவிட்டானோ என்று பயந்தபடி கதவை திறந்தாள்.

🙏ஆனால் வாசலில் ஒரு சிறுவன் நிற்பதை கண்டாள். அந்த சிறுவன் கறுப்பாக இருந்தாலும் அழகாக இருந்தான். அவனை பார்த்தவுடன் அந்த மூதாட்டிக்கு பயம் நீங்கியது. “நீ யாரப்பா. எங்கிருந்து வருகிறாய்?“ என்று கேட்டாள். “நான் யார் எங்கிருந்து வருகிறேன் என்பதை பிறகு சொல்கிறேன் பாட்டி, எனக்கு பசியாக இருக்கிறது. உணவு தருவாயா?” என்று கேட்டான் அந்த சிறுவன். அவனை வீட்டுக்குள் அழைத்து உட்கார வைத்து, அரிசி கஞ்சியை கொண்டு வந்து அந்த சிறுவனிடம் கொடுத்தாள். “அப்பா.. நான் ஒரு ஏழை கிழவி. உனக்கு ருசியான சாப்பிட கொடுக்க என் வீட்டில் எதுவும் இல்லை. இந்த ஏழை பாட்டியால் இந்த அரிசி கஞ்சியைதான் தர முடிந்தது.” என்று சொல்லி தந்தாள். அதை வாங்கி சாப்பிட்டான் சிறுவன். “பாட்டி.. நீ எனக்கு அன்பாக கொடுத்த அரிசி கஞ்சி அமுதமாக இருந்தது. அன்புள்ளம் கொண்ட நீ ஏழை இல்லை. நீ கொடுத்த இந்த அரிசி கஞ்சிக்கு நான் உனக்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டும். என்ன உதவி வேண்டும் கேள்.” என்றான் சிறுவன். அந்த சிறுவன் பேசியதை கேட்டு சிரித்துவிட்டால் பாட்டி. “ஏன் சிரித்தாய்?” என கேட்டான் சிறுவன். “அட சுட்டி பயலே. நீ என்ன பகவான் கிருஷ்ணனோ. நீ அப்படி என்ன எனக்கு உதவி செய்துவிடுவாய்.?” என்றாள் பாட்டி. “ஆமாம் பாட்டி. நான் படுசுட்டிதான். என் அம்மாவும் அப்படிதான் சொல்வாள். இந்த சுட்டி பயலுக்கு எல்லோரும் சின்ன வேலையாக தருகிறார்கள். நீயாவது பெரிய வேலையை தா” என்றான் சிறுவன். “நீ என் பேரனை போல இருக்கிறாள். அதனால் சொல்கிறேன்.

🙏இந்த ஊரில் முரன் என்ற அசுரன் இருக்கிறான். அவன் கண்ணில் நீ படாமல் இருந்தாலே போதும். நேரம் இருட்டிவிட்டது. இங்கேயே தூங்கிவிட்டு காலையில் பத்திரமாக வீடு போய் சேர்.” என்றாள் பாட்டி. “எங்கள் ஊரில் நான் பாம்பின் மேல் தூங்கி பழகியவன். வீட்டுக்குள் தரையில் படுத்தால் எனக்கு தூக்கம் வராது. திண்ணையில் படுத்துக்கொள்கிறேன் பாட்டி விடிந்ததும் புறப்படுகிறேன்.” என்ற சிறுவன், திண்ணையில் படுத்துக் கொண்டான். மறுநாள் பொழுது விடிந்தது. அப்போது – “படார்” என்று குண்டு வெடிப்பது போல பலத்த சத்தம் அந்த ஊரையே அதிர வைத்தது. என்ன ஏது என்று புரியாமல் பாட்டியும், அவ்வூர் மக்களும் அலறி அடித்துக்கொண்டு வெளியே வந்து பார்த்தார்கள். நடுதெருவில் அசுரன் முரன் இறந்து கிடந்தான். “யார் இந்த அசுரனை கொன்றது?” என்று ஒருவரையோருவர் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

🙏பாட்டி திண்ணையை பார்த்தாள். அந்த சிறுவன் இல்லை. நேற்றிரவு வந்தது கண்ணன்தான் என்பதை தெரிந்துக்கொண்டாள். “இந்த அசுரனின் தொல்லையில் இருந்து காப்பாற்ற தினமும் நாம் ஸ்ரீமந் நாராயணனிடம் வேண்டுவோமே. அந்த கண்ணனின் லீலைதான் இது.” என்றாள். முரன் என்ற அசுரனை கொன்றதால் கிருஷ்ண பரமாத்மாவுக்கு “முராரி” என்று பெயர் ஏற்பட்டது. “ஜெயகிருஷ்ண முகுந்தா முராரே” என்று பாடினாலே எந்த அசுர சக்தியாலும் நம்மை வீழ்த்த முடியாது.பகவான் கிருஷ்ணர், நம்மை எப்போதும் காப்பார்.


🙏அர்ஜுனன் போருக்கு செல்ல தேரில் ஏறும்போது, தேரில் ஏறுவதற்கு வசதியாக அர்ஜுனனை தன் தோள் மீது ஏற்றி தேர் ஏற வைத்தார் பகவான். இப்படி தன் பக்தர்களின் வெற்றிக்காக ஒரு சேவகனாகவே இருந்து நமக்காக உதவி செய்வார் பகவான் கிருஷணர். இறைவனின் குழந்தை நாம். ஆனால் கிருஷ்ணன் ஒருவன்தான் பூலோக மக்களுக்கு செல்லக் கண்ணனாக யுகயுகமாக இருக்கிறான். பகவான் கிருஷணர் என்றும் நமக்கு குழந்தைதான். அவன், குழந்தை வடிவில் உள்ள தெய்வம்.

🙏🌷கிருஷ்ணனுக்கு கொடுக்க வேண்டிய பாகத்தை ஏமாற்றிய குசேலர்


🙏கிருஷ்ணருடைய பால்ய சினேகிதராக விளங்கியவர்களில் குசேலர் என்கிற சுதாமாவும் ஒருவர். ஒன்றாக குருகுலத்தில் படித்தவர்கள். ஒருநாள் குருபத்தினி, கிருஷ்ணருக்கும் குசேலருக்கும் அவல் தயாரித்து கொடுத்தார். ஆனால் குசேலரோ கிருஷ்ணணுக்கு அதை சரிபங்கு கொடுக்காமல் அத்தனை அவலையும் குசேலனே சாப்பிட்டார். அதை நினைத்து கிருஷ்ணர் கவலைப்படவில்லை. ஆனால் குருவோ, “குசேலன் செய்த மிகப் பெரிய பாவச்செயல் இது.” என்றார். “இதனால் குசேலா நீ வறுமையில் வாடுவாய்.” என்றார். சிறு வயதில் நடந்த இந்த சம்பவத்தை காலம், மறக்கச் செய்தது. குசேலருக்கு திருமணம் நடந்தது. குழந்தைகள் பிறந்தனர். சந்தர்பத்திற்காக காத்திருந்த விதி, தன் வேலையை தொடங்கியது. குசேலன் வறுமையில் வாடினார். “எனக்கு இல்லையெனாலும் பராவாயில்லை, ஆனால் நம் குழந்தைகள் உடுக்க மாற்று ஆடை கூட இல்லாமல் இருக்கிறதே. உயிர் வாழ அடுத்த வேளை சாப்பாடும் இல்லையே.” “திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்பார்களே. தெய்வம் போல இருக்கிறாரே உங்கள் நண்பர் கிருஷ்ணர். அவரை சந்தித்து வாருங்கள்.” என்றாள் சுசீலை.


🙏மனைவியின் யோசனையை ஏற்று குசேலன், கிருஷணரை சந்திக்க புறப்பட்டார். அப்போது சுசீலை தன் கையில் சிறு மூட்டையுடன் வந்தாள். “பல வருடங்களுக்கு பிறகு உங்கள் நண்பரை சந்திக்க செல்கிறீர்கள். கிருஷ்ணருக்கு அவல் என்றால் மிக பிடிக்கும் என்பீர்களே. இதோ இதில் கொஞ்சம் அவல் இருக்கிறது. கொண்டு செல்லுங்கள்.” என்றால் மனைவி கொடுத்த அவுள்முட்டையுடன் புறப்பட்டார் குசேலர். கிருஷ்ணபரமாத்மாவை பார்க்க. குசேலர் என்பவர் வந்திருப்பதாக கிருஷ்ணரிடம் பணியாளர்கள் சொன்ன உடன் வாசலுக்கு ஓடோடி வந்தார் கிருஷ்ணர். குசேலனை கட்டித்தழுவி உள்ளே அழைத்துச் சென்றார். “அண்ணி எப்படி இருக்கிறார்கள் சுதாமா.? எனக்கு என்ன தந்தனுப்பினார்கள்.? அது என்ன மூட்டை?.” என்றார் கிருஷ்ணர். குசேலன் மூட்டையை பிரித்து அவலை கையில் எடுத்தான். அதை ஆசையாக வாங்கி சாப்பிட்டார் கிருஷ்ணர். “அடேங்கப்பா, என் பங்கு அவல் கிடைக்க எத்தனை வருட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது பார்த்தாயா.” என்று சிரித்தார் கிருஷ்ணர். குசேலரும் சிரித்துவிட்டார். கிருஷ்ணரிடம் உதவி கேட்காமல் திரும்புகிறோமே என்ற வருத்தம் குசேலனிடம் இல்லை. நண்பனின் அன்பே போதும் என்று வீடு திரும்பினார்.

🙏அங்கே தன் இல்லம் பொன்மயமாக ஜொலிப்பதை கண்டு, எல்லாம் கிருஷ்ணரின் செயலே, என்று மகிழ்ந்து போனார் குசேலர். குழந்தை கிருஷ்ணரின் பாதத்தை ஏன் வீட்டில் கோலமாக வரைகிறோம் தெரியுமா? நாரதமுனிவர் ஒருசமயம் ஒவ்வோரு கிருஷ்ண பக்தர்களின் வீட்டுக்கும் சென்றபோது எல்லோரின் இல்லத்திலும் கண்ணன் இருப்பதைக் கண்டு அதிசயித்தார். அதேபோல் பிருந்தாவனத்தில் ஒவ்வோரு வீட்டிலும் கிருஷ்ணர் ஆடிப் பாடினார்.

இந்தக் காட்சியை சிவபெருமானே தரிசித்து பரவசமும் ஆனந்தமும் அடைந்தார். இப்படி ஒரே நேரத்தில் பல்லாயிரம் இடங்களில் இருக்கிறார் நம் கிருஷ்ணபரமாத்மா.“ நான் எங்கும் இருப்பேன். எத்தனை கோடி பக்தர்கள் இருந்தாலும், அத்தனை பக்தர்களையும் பார்ப்பேன, காப்பேன் என்பதைக் குறிப்பிடவே ஒவ்வோருவர் வீட்டிலும் கிருஷ்ணஜெயந்தியன்று கிருஷ்ணதிருவடிக் கோலம் போடுகிறார்கள். கிருஷ்ணஜெயந்தி பூஜைமுறை வீட்டின் நுழைவாயிலில் குழந்தை நடந்து வந்தது போன்ற பாதச்சுவட்டினை மாவால் பதியச் செய்ய வேண்டும். கிருஷ்ணர் சிலைக்கு பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். அதில் துளசி இருந்தால் இன்னும் சிறப்பு. பிறகு கிருஷ்ணருக்கு பிடித்த தயிர், வெண்ணை, அவல் கண்டிப்பாக வைக்க வேண்டும். சீடை, முருக்கு, லட்டு போன்ற இனிப்பு உணவுகளை வைக்கவேண்டும். முடிந்த அளவுக்கு பூஜையை மாலை 6.00 – 7.00மணிக்குள் செய்தால் சிறப்பு. நீ எனக்கு ஒரு இலையைக் கொடு ; அல்லது பூவை கொடு ; இல்லை ஒரு பழத்தைக் கொடு ; அதுவும் இல்லையென்றால் கொஞ்சம் தண்ணீர் கொடு ; எதைக் கொடுத்தாலும் பக்தியோடு கொடு. சுத்தமான மனம் உள்ளவன் பக்தியோடு கொடுப்பதை நான் சாப்பிடுவேன்.“ என்றார் கீதையில் கண்ணன். பாகுபாடு பாராமல் குழந்தை உள்ள படைத்த கண்ணனை வணங்கினால் வாழ்நாள் முழுவதும்

🙏கிருஷ்ணபரமாத்மா, தம் பக்தர்களை தன் கண்ணைபோல் காப்பார். கண்ணனின் அருளாசியால் சகலநலங்களும் பெற்று வளமோடும் நலமோடும் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வோம்.
 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]