Search This Blog
Saturday, 10 September 2016
அர்ஜூனன் தேரின் கொடியில் அனுமன் இடம் பெற்ற கதை
- அர்ஜூனனுக்கு ஒரு முறை ஒரு சந்தேகம் வந்தது. “இராமர் உண்மையிலேயே சிறந்த வில்லாளி எனில், ஏன் அவர் தன் வில்லைக்கொண்டே சேதுவுக்கு பாலம் கட்டவில்லை. வானரங்களை வைத்து ஏன் பாலம் கட்டினார்?” எப்படியாவது இந்த கேள்விக்கு விடை கண்டுபிடிக்கவேண்டும் என்று விரும்பினான்.
- பாசுபதாஸ்திரம் வேண்டி அவன் சென்று கொண்டிருந்தபோது, ஒரு நதிதீரத்தில் அனுமன் தனது சுய உருவை மறைத்து ஒரு சாதாரண வானரம் போல உருக்கொண்டு அமர்ந்து இராமநாமம் ஜபம் செய்துகொண்டிருப்பதை பார்க்கிறான்.
- அவரிடம் சென்று, “ஏய்… வானரமே… உன் இராமனுக்கு உண்மையில் திறன் இருந்திருந்தால் வில்லினாலேயே பாலம் கட்டியிருக்கலாமே… ஏன் வானரங்களை கொண்டு பாலம் கட்டினார்?” என்றான் எகத்தாளமாக.
- தியானம் களைந்த அனுமன், எதிர் நிற்பது அர்ஜூனன் என்பதை உணர்ந்துகொள்கிறார். அவன் கர்வத்தை ஒடுக்க திருவுள்ளம் கொள்கிறார்.“சரப்பாலம், என் ஒருவன் பாரத்தையே தாங்காது எனும்போது எப்படி ஒட்டுமொத்த வானரங்களின் பாரத்தையும் தாங்கும்?”
- “ஏன் முடியாது… நீ நின்றால் தாங்கும்படி இந்த நதியின் குறுக்கே நான் ஒரு பாலம் கட்டுகிறேன். நீயல்ல… எத்தனை வானரங்கள் அதில் ஏறினாலும் அந்த பாலம் உறுதியாக நிற்கும்” என்கிறான் அர்ஜூனன்.தனது காண்டீபதின் சக்தி மேல் அபார நம்பிக்கை கொண்டிருந்த அர்ஜூனன், “பந்தயத்தில் நான் தோற்றால், வேள்வித் தீ வளர்த்து அதில் குதித்து உயிர் துறப்பேன்” என்கிறான்.
- “நான் தோற்றால், என் ஆயுளுக்கும் உனக்கு அடிமையாக உன் தேர்க்கொடியில் இடம்பெறுவேன்” என்கிறான் அனுமன்.அர்ஜூனன் சரப் பாலத்தை கட்டத் துவங்கினான். அனுமன் ஒரு ஓரத்தில் அமர்ந்து இராமநாமம் ஜெபம் செய்யத் தொடங்கினான்.
- அர்ஜூனன் பாலத்தை கட்டி முடித்ததும், அனுமன் அதன் மீது ஏற தனது காலை எடுத்து வைத்தது தான் தாமதம், பாலம் தகர்ந்து சுக்குநூறானது. அனுமன், ஆனந்தக் கூத்தாட அர்ஜூனன் வெட்கித் தலைகுனிந்தான். “பார்த்தாயா என் இராமனின் சக்தியை?” என்கிறான் அனுமன் கடகடவென சிரித்தபடி.
- தனது வில் திறமை இப்படிபோயாகிப் போனதே என்ற வருத்தம் அவனுக்கு. “போரில் வெற்றி பெற பாசுபாதாஸ்திரத்தை தேடி வந்த நான், தேவையின்றி ஆணவத்தால் ஒரு வானரத்திடம் தோற்றுவிட்டேனே… நான் உயிர் துறந்தால் என் சகோதரர்களை யார் காப்பாற்றுவார்கள்… கிருஷ்ணா என்னை மன்னிக்கவேண்டும்” என்று கூறியவாறு சொன்னது போலவே வேள்வித் தீ வளர்த்து அதில் குதித்து உயிர் துறக்க எத்தனித்தான். அனுமன் தடுத்தபோதும், தனது பந்தயத்திலிருந்து பின்வாங்க அவன் தயாராக இல்லை.
- அர்ஜூனன் குதிக்க எத்தனித்தபோது, “என்ன நடக்கிறது இங்கே… என்ன பிரச்சனை?” என்று ஒரு குரல் கேட்டது. குரல் கேட்ட திசையில், ஒரு அந்தணர் தென்பட்டார். இருவரும் அவரை வணங்கி, நடந்ததை கூறினார்.
- “பந்தயம் என்றால் சாட்சி என்ற ஒன்று வேண்டும். சாட்சியின்றி நீங்கள் பந்தயத்தில் ஈடுபட்டதால் அது செல்லாது. மற்றொருமுறை நீ பாலம் கட்டு… மற்றொருமுறை இந்த வானரம் அதை உடைத்து நொறுக்கட்டும்… பிறகு முடிவு செய்துகொள்ளலாம் யார் பலசாலி என்று” அந்தணர் கூற இருவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.
- இரண்டாவது முறை கட்டுவதால் மட்டும் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப்போகிறது என்று கருதிய அர்ஜூனணன் கிருஷ்ணனரை நினைத்துக்கொண்டு “கிருஷ்ண, கிருஷ்ண” என்று சொல்லியபடி பாலம் கட்டினான்.
- தன் பலம் தனக்கே தெரியாது அனுமனுக்கு. இருப்பினும் முதல்முறை பாலத்தை உடைத்திருந்தபடியால், கர்வம் தலைக்கு ஏறியிருந்தது. இம்முறை இராம நாம ஜெபம் செய்யவில்லை. அர்ஜூனன் பாலம் கட்டியவுடன் அதில் ஏறுகிறார்… நிற்கிறார்… ஓடுகிறார்… ஆடுகிறார்… பாலம் ஒன்றும் ஆகவில்லை. “பார்த்தாயா எங்கள் கண்ணனின் சக்தியை ? நீயே சொல் யார் இப்போது பெரியவர்? எங்கள் கண்ணன் தானே?”
- அர்ஜூனனின் கேள்வியால் அனுமனுக்கு குழப்பம் ஏற்படுகிறது. அங்கே சாட்சியாக நின்றுகொண்டிருந்த அந்தணரை நோக்கி வந்து “யார் நீங்கள்?” என்று கேட்கிறார். அந்தணரின் உருவம் மறைந்து அங்கு சங்கு சக்ரதாரியாக பரந்தாமன் காட்சியளிக்கிறார். இருவரும் அவர் கால்களில் வீழ்ந்து ஆசி பெற்றனர்.
- “நீங்கள் இருவருமே தோற்கவில்லை. ஜெயித்தது கடவுள் பக்தியும் நாம ஸ்மரணையும் தான். அர்ஜூனன் முதல் தடவை பாலம் கட்டும்போது, தன்னால் தான் எல்லாம் நடக்கிறது என்கிற அகந்தையில் என்னை மறந்து பாலம் கட்டினான். அனுமன் தனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்று இராம நாமத்தை ஜபித்தான். இராம நாமம் தோற்காது. எனவே முதல் முறை அனுமன் வென்றான். இரண்டாம் முறை, அகந்தை ஒழிந்த அர்ஜூனன் என்னை நினைத்தபடி பாலம் கட்டினான். அனுமன், தன் பலத்தாலே தான் வென்றோம் என்று கருதி இராமநாமத்தை மறந்தான். எனவே இரண்டாம் முறை அர்ஜூனன் வென்றான். எனவே இருமுறையும் வென்றது நாம ஸ்மரணையே தவிர நீங்கள் அல்ல!!” என்றார்.
- கர்வம் தோன்றும்போது கடமையும் பொறுப்புக்களும் மறந்துவிடுகின்றன. எனவே தான் சும்மா இருந்த அனுமனை சீண்டி பந்தயத்தில் இறங்கினான் அர்ஜூனன்.
- “உங்கள் இருவருடைய பக்தியும் அளவுகடந்தது, சந்தேகமேயில்லை. ஆனால், இறைவன் ஒருவனே என்பதை உணர மறந்துவிட்டீர்கள். அதை உணர்த்தவே இந்த சிறிய நாடகம். மேலும் அர்ஜூனா, இந்த வானரன் வேறு யாருமல்ல, சிரஞ்சீவி அனுமனே!”
- உடனே அனுமன் தனது சுய உருவைக் காட்டுகிறார். அர்ஜூனன், அவரின் கால்களில் வீழ்ந்து மன்னிப்பு கேட்கிறான். அனுமனை நோக்கி திரும்பிய கிருஷ்ணர், “ஆஞ்சநேயா, பாரதப்போரில் அர்ஜூனனுக்கு உன் உதவி தேவை. நீ போர் முடியும்வரை அவன் தேர் கொடியில் இருந்து காக்கவேண்டும். அதன் பொருட்டே இந்த திருவிளையாடலை நிகழ்த்தினேன். நீ இருக்கும்வரை அந்த இடத்தில எந்த மந்திர தந்திரங்களும் வேலை செய்யாது!” “அப்படியே ஆகட்டும் பிரபோ!” என்று அவரிடம் மறுபடியும் ஆசிபெற்றான் அனுமன்.
- இன்றும் பாரதப் போர் சம்பந்தப்பட்ட படங்களில் அர்ஜூனனின் தேரில் அனுமனின் உருவம் இருப்பதை பார்க்கலாம். அர்ஜூனன் தேரின் கொடியில் அனுமன் இடம் பெற்ற கதை இது தான்.
திருக்காளத்தி காளத்தீசுவரர் :::: சில அற்புதமான ரகசியங்கள் ! !
- ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்டகாலம் தீராத பிரச்சினையில் சிக்கி திண்டாடுபவர்கள் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக வழிபடக் கூடிய ஆலயமாக இருப்பது ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் இருக்கும் காளஹஸ்தீஸ்வரர் கோயில் என்பது இந்து சமயத்தினரின் நம்பிக்கை.
தல வரலாறு:
- சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த அந்த பாம்பு பாதாளத்தில் இருந்து மாணிக்கங்களை எடுத்து வந்து சிவலிங்கத்திற்கு தினமும் பூஜை செய்தது. பாம்பு பூஜை செய்து முடித்த பின்னர் அங்கு வரும் யானை, மாணிக்கங்களை தனது துதிக்கையால் அப்புறப்படுத்திவிட்டு பூக்கள், தண்ணீர், வில்வ இலை கொண்டு சிவனை பூஜித்தது.
- தான் வைக்கும் மாணிக்கங்களை தள்ளிவிடுவது யார் என்பதை அறிய ஒரு நாள் அந்த பாம்பு பூஜைக்குப் பின்னரும் அங்கேயே காத்திருந்தது. வழக்கம் போல் வந்த யானை, மாணிக்கங்களை தள்ளிவிட்டு பூஜை செய்தது. கோபம் கொண்ட பாம்பு, யானையின் துதிக்கை வழியாக அதன் தலைக்குள் புகுந்து, யானை மூச்சு விட முடியாதபடி செய்தது. பரிதவித்த யானை துதிக்கையால் சிவலிங்கத்தை தொட்டு வழிபாடு செய்துவிட்டு, பாறையில் மோதி இறந்தது. யானையின் தலைக்குள் இருந்த பாம்பும் நசுங்கி இறந்தது.
- இதேபோன்று, சிவன் மீது பக்தி கொண்டிருந்த சிலந்தி ஒன்றும் அதே சிவலிங்கத்தை வழிபட்டு வந்தது. தனது உடலில் இருந்து வரும் நூலினால் சிவனுக்கு கோவில் கோபுரம், பிரகாரம் கட்டி பூஜித்து வந்தது. காற்றில் நூல் அறுந்து போனாலும் மீண்டும் கட்டியது.
- ஒரு முறை சிலந்தி கட்டிய நூல் கோபுரத்தை எரிந்து சாம்பலாகும்படி செய்தார் சிவபெருமான். கோபம் கொண்ட சிலந்தி, எரிந்து கொண்டிருந்த தீபத்தை விழுங்க சென்றது. சிலந்தியின் பக்தியை கண்டு வியந்த சிவபெருமான், அதனிடம் என்ன வர வேண்டும் என்று கேட்டார். மீண்டும் பிறவாமை வேண்டும் என்று வேண்டிய அந்த சிலந்திக்கு முக்தி கொடுத்து தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார் சிவன். இதே போன்று, தன் மீது கொண்டிருந்த அபரிமித பக்தியால் இறந்து போன யானை, பாம்பு ஆகியவற்றுக்கும் முக்தி அளித்தார் சிவன்.
- இந்த அற்புதங்கள் நிகழ்ந்த தலம் தான் ஸ்ரீகாளஹஸ்தி. இங்கு லிங்கமாக காட்சியளிக்கும் சிவனின் திருமேனியை கூர்ந்து கவனித்தால், கீழ் பாகத்தில் யானை தந்தங்கள், நடுவில் பாம்பு, பின்புறம் சிலந்தி ஆகியவற்றை காணலாம். இங்கு எழுந்தருளியுள்ள சிவன், காளஹஸ்தீஸ்வரர் என்றும், அம்மன் ஞானபிரசுனாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர்.
- சீகாளத்தில் என்ற சொல்லில், சீ என்பது சிலந்தியை குறிக்கிறது. காளத்தி என்பது காளம், அத்தி என இரு பெயர் பெறுகிறது. இதில் காளம் என்பது பாம்பினையும், அத்தி என்பது யானையையும் குறிக்கிறது. சிலந்தி, பாம்பு, யானை ஆகிய உயிர்கள் சிவலிங்கத்தை பூஜித்து முக்தி பெற்றதால் அவற்றின் பெயரால் இவ்வூர் சீகாளத்தி எனப் பெயர் பெற்றது என்கிறார்கள் சிலர்.
- ஸ்ரீகாளஹஸ்தி எவ்வாறு உருவானது என்பதற்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது. சிவபெருமான் ஆணைப்படி பிரம்மன் கயிலாயத்தை படைத்த போது அதில் இருந்து ஒரு பகுதி பூமியில் தவறி விழுந்து விட்டது. அந்த இடமே சீகாளத்தி என்ற இப்போதைய ஸ்ரீகாளஹஸ்தி என்கிறார்கள் சிலர்.
கோயில் அமைப்பு - திருக்காளத்தி காளத்தீசுவரர் கோயில் வளாகம்:
- கோவிலின் உள் பிரகாரத்தில் சிவனுக்கும், பார்வதிக்கும் தனி சன்னதிகள் உள்ளன. காசி விஸ்வநாதர், பால ஞானாம்பா, நந்தி, விநாயகர், சுப்பிரமணியர், அஷ்டோத்ரலிங்கம், சுயம்புநந்தி, வாயுலிங்கம், கண்ணப்பன், சகஸ்ரலிங்கம், சனிபகவான், துர்கா, 63 நாயன்மார்களுக்கு தனி சன்னதிகள் உண்டு.
- ஞானபிரசுன்னாம்பிகை சன்னதியை கடந்து சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு சென்றால் அங்கிருந்து கண்ணப்ப நாயனார் மலை சிகரத்தை காணலாம்.
- தென் கயிலாயம் என்று போற்றப்படும் ஸ்ரீகாளகஸ்தி, பஞ்சபூத தலங்களில் வாயு (காற்று) வுக்கு உரிய தலமாகும். இங்குள்ள லிங்கம் வாயு லிங்கமாகும். இன்றைக்கும் காற்றுப்புக முடியாத கர்ப்பக கிரகத்தில், சுவாமிக்கு ஏற்றி வைத்திருக்கும் அகல் தீபம் படிப்படியாக சுடர் விட்டு மேலெழுந்து அங்கும், இங்கும் அசைந்தாடுவது ஓர் அற்புத நிகழ்ச்சியாகும்.
பாதாள விநாயகர்:
- கோவிலின் வெளிப்பிரகாரத்தில் பாதாள கணபதி கோவில் உள்ளது. ஒரு சமயம் அகத்தியர் சிவபெருமானையும், விநாயகரையும் வழிபட மறந்தார். இதனால் விநாயகரின் கோபத்தால் ஸ்ரீகாளஹஸ்தியை ஒட்டி ஓடும் பொன்முகலி என்ற சொர்ணமுகி ஆறு வற்றிவிட்டது. தன் தவறை உணர்ந்த அகத்தியர் விநாயகரை பூஜை செய்து வழிபட்டு விநாயகரின் அருளுக்கு உரியவர் ஆனார் என இக்கோவில் தலபுராணம் கூறுகிறது.
- காலப்போக்கில் விநாயகர் கோவில் இருந்த பகுதியை விட, அதை சுற்றியிருந்த பகுதிகள் எல்லாம் உயர்ந்து விட்டன. அதனால் விநாயகர் கோவில் பாதாளத்திற்கு போய் விட்டது. இதனால் இங்குள்ள விநாயகர், பாதாள கணபதி என்று அழைக்கப்படுகிறார். படிக்கட்டுகள் வழியே 20 அடி கீழே இறங்கிச் சென்று இந்த விநாயகரை வழிபட வேண்டும்.
தோஷங்கள் விலக பரிகார பூஜை
- ஸ்ரீகாளஹஸ்தி, காளஹஸ்தீஸ்வரர் கோவில் ராகு மற்றும் கேது கிரகங்களின் பரிகார தலமாகவும் திகழ்கிறது. ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்டகாலம் தீராத பிரச்சினையில் சிக்கி திண்டாடுபவர்கள் இங்கு வந்து ராகு மற்றும் கேது சர்ப்பதோஷ நிவாரண பூஜை செய்து கொண்டால், பிரச்சினையில் இருந்து விடுபடுகின்றனர்.
பயண வசதி:
- ஆந்திர மாநிலத்தில் திருப்பதிக்கு கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் சென்னை செல்லும் சாலையில் ஸ்ரீகாளஹஸ்தி அமைந்துள்ளது. சென்னையிலிருந்து நேரடியாக இந்த ஊருக்கு பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது
மனதார நம்பியவர்க்கு மட்டுமே நம்பிவேண்டிய அனைத்தும் கிடைக்கும்!!!
- ஒரு முறை "சிவனும் பார்வதியும்" பேசிக்கொண்டிருந்தார்கள்.அப்போது பார்வதி கேட்டார் . “ஐயனே கங்கையில் குளித்தால் அனைவருக்கும் மோட்சம் என சொல்கிறார்களே? குளிக்கும் அத்தனை பேரும் மோட்சத்துக்கு வந்தால் மோட்சம் தாங்காதே, அது ஏன் அப்படி நடக்கவில்லை? “ என கேட்டார். சிவன் சொன்னார் ”அது ஏன் எனும் காரணத்தை விளக்குகிறேன் என்னோடு வா, ஆனால் இப்படியே வராதே இருவரும் வயதான பெரியவர்களாக போவோம் வா” என அழைத்து சென்றார்.
- கங்கைக்கரையினை அடைந்த சிவன் ”நான் இப்போது கங்கையில் விழுந்து விடுவேன். நீ உதவிக்கு யாரையாவது கூப்பிடு. ஆனால் இது வரை பாவமே செய்யாதவர்கள் மட்டுமே வந்து காப்பாற்றுங்கள் என்று சொல் என கூறிச்சென்று ஆற்றில் விழுந்ததை போல நடித்தார். உடன் பார்வதி தேவி அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்தார். அழைத்தவுடன் ஓடி வந்தவர்களிடம் தேவி ”பாவம் செய்யாதவர்கள் மட்டும் போய் காப்பாற்றுங்கள்” என கூறினார்.
- உடனே ஓடி வந்தவர்கள் அனைவரும் பின்வாங்கினார்கள், அனைவரும் தயங்கி தயங்கி செய்வதறியாது சிலையென நின்றார்கள். சிவபெருமானோ நன்றாகவே நடித்து கொண்டிருந்தார். அப்போது எங்கிருந்தோ ஓடி வந்த இளைஞன் ஒருவன் ஓடி சென்று சிவபெருமானை காப்பாற்றி கரை சேர்த்தான்.
- மக்களுக்கு எல்லாம் அதிர்ச்சி எப்படி ஒருவன் பாவமே செய்யாமல் இருக்க முடியும் ? என நினைத்து அவனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.உடன் பார்வதி அன்னை “ அப்பா நீ பாவமே செய்யவில்லையா? என வினவினார். அவன் சொன்னான்” எனக்கு எதுவுமே தெரியாது அம்மா. கங்கையில் குளித்தால் பாவம் போகுமென கேள்விப்பட்டு இருக்கிறேன்.அப்படியிருக்கும்போது கங்கையில் இறங்கியவுடன் என் பாவங்கள் மறைந்து விடுமல்லவா அப்புறம் என்னால் அவரை காப்பாற்ற முடியுமென நினைத்தேன். நம்பி செய்தேன் அவ்வளவுதான் அம்மா” என்றான்.
- முதியவராகிய சிவபெருமான் சொன்னார். " குளிக்கும் அனைவரும் நம்பிக்கையோடு குளிப்பதில்லை கடமைக்கு தான் கங்கை ஸ்நானம் செய்கிறார்கள்." "நம்பி செய்பவர்கள் மட்டுமே மோட்சம் போக முடியுமென்பது அவர்களுக்கு தெரியாது அதனால் தான் மோட்சம் நிரம்பவேயில்லை" " மனதார நம்பியவர்க்கு மட்டுமே நம்பிவேண்டிய அனைத்தும் கிடைக்கும் "".... மனதார நம்புங்கள் உங்களின் நம்பிக்கை வெற்றிக்கு வெகு அருகில் உங்களை அழைத்துச் சென்றுவிடும்.
பக்த பிரஹல்லாதன்
- ஹிரண்யகசுபுவின் மகன் பிரஹல்லாதனுக்கு இறைவனிடம் அசைக்க முடியாத நம்பிக்கை. ஹரி என்னும் பரம் பொருள் எங்கும், எதிலும் வியாபித்துள்ளார் என்பது அவனது உறுதியான கருத்து. ஆனால் அவன் தந்தை ஹிரண்யகசுபுவுக்கு ’தான்’ தான் பரம் பொருள் என்று வாதிடுவார். நாரயணனை துதிக்கும் தன் மகனை பல சோதனைக்கு உள்ளாக்கினான். எல்லா சோதனைகளிலும் இறை அருளால் வெற்றி கண்டான் பிரஹல்லாதன். இதை அவன் தந்தையால் பொருக்க முடியவில்லை. இறைவன் எல்லா இடத்திலும், ஒவ்வொரு துரும்பிலும் உள்ளதாகக் கூறிய பிரஹல்லாதனை நிரூபணம் செய்யச் சொன்னார். துரும்பில்லை தாங்கள் பேசும் பேச்சிலும், ஒவ்வொரு வார்த்தையிலும், எழுத்திலும், எழுப்பப்படும் ஒலியிலும் ஹரி உள்ளார் என்றான் பிரஹல்லாதன். ஆத்திரமடைந்த அவன் தந்தை ’இருந்தால் வரச்சொல் என்று கொக்கரித்த வண்ணம் அருகிலிருந்த தூணை தன் கதையால் ஓங்கி அடித்தார்.
- ஆச்சரியம்! பாதி மனிதனாகவும் [நரன்] பாதி சிங்கமாகவும் [சிம்ஹா] இறைவன் ஹரி அத்தூணிலிருந்து வெளிப்பட்டார். அந்த அந்தி மாலை நேரத்தில், வெளியும் உள்ளும் இல்லாமல் வாசற்படியில் கீழும் [பூமி], மேலும்[ஆகாசம்] இல்லாமல் தனது மடியிலேயே, மனிதனும், விலங்குமில்லா நரஸிம்ஹராக ஹிரண்யகசுபுவை வதம் செய்தார் ஹரி.
- ஹரியின் எல்லா அவதாரங்களிலும் ஸ்ரீ நரசிம்மர் அவதாரம் பெருமை சற்றே அதிகம். தனது பக்தனின் நம்பிக்கையை நிலைநாட்டுவதற்காக பக்தன் வேண்டிய உடன் அவதரித்ததினால் ஹரி பக்தர்களால் ஸ்ரீநரசிம்மர் சற்று உயர்வாக கொண்டாடப்படுகிறார்.
- ஆனால் ஸ்ரீநரசிம்மர் ’உக்ராவதாரம்’ என்பதால் அவர் சாந்தமான நிலையில் இருப்பதை பூசிப்பதை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். ஸ்ரீநரசிம்மர் லக்ஷ்மியுடன் இருக்கும் பொழுது சாந்தமாக இருக்கிறார் என்பதால் இவரை "ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்" என்று பூசனைச் செய்கிறார்கள்.
- அதனால் ஸ்ரீநரசிம்மரை வழிபடுவது கொடுமையான தீயசக்திகளையும் அழிக்க வல்லது என்பது தின்னம். ஸ்ரீநரசிம்மரின் மற்றொரு சாந்த ஸ்வரூபம் யோக நிஷ்டையில் உள்ள "ஸ்ரீயோக நரசிம்மர்". இப்படிப்பட்ட ஸ்ரீயோக நரசிம்மர் தமிழ்நாட்டில் திருத்தணியிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சோளிங்கரில் கண்டு தரிசிக்கலாம். சோழசிங்கபுரம் என்னும் பெயர் மருவி சோளிங்கர் என்று ஆயிற்று. ஒரு நாழிகை என்பது இருபத்து நான்கு நிமிடங்கள் கொண்டது. நாழிகையை கடிகை என்றும் குறிப்பிடுவர். இந்த க்ஷேத்திரத்தில் ஸ்ரீயோக நரசிம்மரை ஒரு கடிகை தியானம் செயதால் முக்தி கிடைப்பது உறுதி. அதனால் இத்க்ஷேத்திரத்திற்கு ’கடிகாசலம்’ என்று ஒரு சிறப்பு திருநாமம் உண்டு.
- ஸ்ரீஆஞ்சநேயர் ஸ்ரீயோக நரசிம்மரை பார்த்த வண்ணம் யோக நிலையிலுள்ளார்.நான்கு திருகரங்களுடன் யோக நிலையில் அமர்ந்திருக்கும் ஆஞ்சநேயரின் மேல் இரு திருகரங்களையும் பகவான் ஸ்ரீயோக நரசிம்மரால் கொடுக்கப்பட்ட சங்கும் சக்ரமும் அலங்கரிக்கின்றன.
- சன்னதிதின் எதிரில் தெரியும் துவாரத்தின் வழி நோக்கினால் ஸ்ரீயோக நரசிம்மர் குடி கொண்டுள்ள கோயில் தெரியும். நித்யம் பகவானை தியானித்து யோக நிலையிலுள்ள ஸ்ரீயோக ஆஞ்சநேயரை கண் குளிர தரிசிப்போம்.இங்குள்ள திருகுளத்திற்கு ’ஹனுமத் தீர்த்தம்’ என்பது திருநாமம்.
தலப்புராணம்:
- ஸ்ரீயோக நரசிம்மருக்கு சோளிங்கரை தவிர இடங்களிலும் கோயில்கள் உண்டு. ஆனால் யோக ஆஞ்சநேயருக்கு இங்கு மட்டுமே கோயில். அவர் இங்கு யோக மூர்த்தியாக மட்டுமல்லாமல், அஹிம்சை மார்க்கத்தை நிலை நாட்டியவரும் ஆவார்.
- இந்திரதூமன் என்னும் அரசர் ஒருமுறை கவரிமானை வேட்டையாடி அதனை துரத்திக் கொண்டே சோழசிம்மபுரம் காட்டுக்குள் நுழைந்தார். அவர் துரத்தி வந்த மான் அங்கு சின்ன மலையில் ஏறத்தொடங்கியது. மன்னனும் விடாமல் மலை மீது ஏறினான். ஆனால் அவன் கண்முன்னே அம்மான் ஜோதி ஸ்வரூபமாக மாறி பின் மறைந்துவிட்டது. ஆச்சரியமடைந்த மன்னர் அன்று முதல் அஹிம்சையை பின்பற்றினார். ஸ்ரீயோக நரசிம்மரின் விருப்பப்படி மன்னனை அஹிம்சை பாதையில் திருப்ப, ஸ்ரீயோக ஆஞ்சநேயர் மானை ஆட்கொண்டு ஜோதி ஸ்வரூபமாக மன்னருக்கு அருளினார்.
- சோழசிம்மபுரத்தில் கும்போதரன் என்னும் அரக்கனின் அட்டகாசத்தை மன்னர் இந்திரதூமன் அஹிம்சை முறையிலேயே அடக்கி, அந்த ஊருக்கு அமைதியைக் கொணர்ந்தார்.
- ஸ்ரீயோக ஆஞ்சநேயர், மனநோயாளிகளை குணப்படுத்தும் வலிமையுள்ளவர். நோயாளி இந்த க்ஷேத்திரத்திலுள்ள ’ஹனுமத் தீர்த்தம்’ என்னும் குளத்தில் நீராடிய பின் ஸ்ரீயோக ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய வேண்டும். நம்பிக்கையுடன் இதை செய்யும் நோயாளி தனது மனநிலை சரியாவதை கண்கூடாகப் பார்க்கலாம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தர்ப்பணத்தைப் பற்றிய சில விஷயங்கள்
- வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்றபொருட்களை நிவேதனம் செய்வதாலும் ஆடை இன்றி பெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களைஅணிவிப்பதாலும் எந்த பலனும் கிடைக்காது. பித்ருதோஷம்தான் ஏற்படும்.
- பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் தர்ப்பணம் நடைபெறும் நாளுக்கு முன்பாக தர்ப்பணம் செய்பவர் தனது வீட்டில் தினசரி தெய்வங்களுக்கு செய்யும் பூஜையைத் தவிர வேறு எந்த ஒரு விசேஷமான பூஜைகளையோ ஹோமத்தையோ செய்யக் கூடாது.
- தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்றுபலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும்.அதுதான் சிறப்பானது. முழு பலன்களையும் தரவல்லது.
- ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14 மன்வாதிநாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மஹாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4,அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
- தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் சிராத்தம் செய்யும் முன்பாக தங்கள் வீட்டு மங்கள நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடை பெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக் கூடாது.
- சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசையன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும்என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. பசியையும் தாகத்தையும் போக்க கறுப்பு எள் கலந்ததண்ணீரால் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் இறந்தவர் களின் பசியும் தாகமும் விலகி ஆசி வழங்குவார்கள்.
- அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்ததண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள் என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
- மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்யும் சிராத்தங்களும், தர்ப்பணங்களும் நமது குடும்பத்தினரின் நன்மைக்காவே செய்யப்படுகிறது.அகவே தவறாது சிராத்தத்தையும் தர்ப்பணங்களையும் செய்ய வேண்டும்.
- மன்வாதி 14 நாட்களிலும் யுகாதி 4 திதிகளிலும் பித்ருக்களுக்கு கொடுக்கப்படும் தர்ப்பணம் ஆயிரம் ஆண்டுகள் வரை முன்னோர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
- தமிழ் மாத பிறப்பன்று பித்ருக்களை வழிபட்டு சூரியனை வணங்குவதற்கு மிகச் சிறந்த நாள். அன்று சூரியனுக்குச் செய்யும் பூஜை மற்றும் ஏழைகளுக்குச் செய்யப்படும் தானம் ஆகியவை அளவற்ற பலனைத்தரும்.
- துவாதியை விட அமாவாசையும், அமாவாசையை விட தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்யும் நாட்களும் மிகவும் புண்ணியங்களைத்தரும். ஆகவே அதிக புண்ணி யங்களைத் தரும் தந்தையரின் சிராத்தத்தை எக்காரணம் கொண்டும் செய்யாமல் விட்டு விடக் கூடாது.
- ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிராத்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும்சிவனும் கூறியுள்ளனர்.
- இறந்தவருக்கு வருஷம் ஒரு முறையாவது சிராத்தத்தைச் செய்ய வேண்டும். ஏனென்றால் அன்றைய நாளன்று இறந்த ஜீவன் காற்றுவடிவில் இறந்தவரின் குழந்தைகள் வாழும் வீட்டின் வாசலில் வந்து அவர்கள் செய்யும் சிராத்தத்தில் தரும் உணவை சாப்பிடுவதற்காககாத்துக் கொண்டிருக்குமாம்.
- முறையாக உணவு செய்து வைத்து, ஹோமம், பிண்டதானம் செய்து, நடத்தப்படும் சிராத்தத்துக்கு பார்வணசிராத்தம் என்று பெயர். ஹோமம் பிண்டதானம் போன்ற சில காரியங்கள் இல்லாமல், உணவு மட்டும் வைத்து செய்யப்படும் சிராத்தம் சங்கல்ப சிராத்தம்எனப்படும். ஒருவருக்கு சாப்பாடு போட என்னென்ன பொருட்கள் தேவையோ அரிசி காய்கறிகள், பருப்பு போன்ற பொருட்கள் அனைத்தையும்,சமைக்காமல் அப்படியே தட்சணையுடன் அளித்துச் செய்யும் சிராத்தம் ஆம சிராத்தம் எனப்படும்.
- சிராத்தம் செய்தால் எவ்வளவு பணம் செலவாகுமோ அந்த பணத்தை நான்கு மடங்கு அதிகமாக்கி தட்சணையாக தந்து செய்வதுஹிரண்ய சிராத்தம் எனப்படும். சிராத்தம் செய்ய எந்த ஒரு வசதியும் இல்லாதவர்கள் கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணமாக செய்யலாம்.
- பெற்றோர் இறந்த மாதம் பட்ச திதியன்று உறவினர்களின் இறப்புத்தீட்டு அல்லது உறவினர்களுக்குக் குழந்தை பிறந்த தீட்டு ஏற்பட்டுவிட்டால், தீட்டு எப்போது முடிவடைகிறதோ அன்று பிராயசித்தம் செய்தல் வேண்டும். பிறகு விட்டுப்போன சிராத்தத்தைச் செய்ய வேண்டும்.
- இறைவனின் ரூபமான தேவதைகளை விட பித்ருக்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவர்கள். எனவே முதலில் உங்கள் மறைந்த முன்னோர்வழிபாட்டை பிரதானமாக நடத்துங்கள்.
- தர்ப்பணம் செய்யாதவன் சண்டாளனாகப் பிறப்பான் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
- எள், உப்பு, பொன், பருத்தி ஆடை, இரும்பு ஆகியவற்றை தானம் அளிப்பது மிகவும் நல்லது. தானம் பெற வருபவரை மிகுந்தமரியாதையுடன் நடத்தி தானமளிக்க வேண்டும்.
- ஒருவர் மரண படுக்கையில் அவதிப்படும்போது அவரது மகன் அல்லது மகள் மகம் நட்சத்திரத்தன்று அகத்திக்கீரையை எருமைமாட்டிற்கு தானம் அளித்தால் மரண அவதி நீங்கும். பாய், தலையணை, படுக்கை விரிப்பு போன்றவற்றை தானம் செய்வது நன்மைஅளிக்கும். எள்ளுருண்டை, கடலை உருண்டை போன்றவற்றை அளிப்பது பித்ருக்களின் ஆசியைக் கூட்டும்.
- துவாதசி பன்னிரெண்டாம் நாளன்று பித்ரு பூஜை செய்பவன் சொர்ண லாபம் பெறுவான். திரயோதசி பதிமூன்றாம் நாளன்று பித்ரு காரியங்களை சரிவர நடத்துபவனுக்கு அறிவு, ஞான சக்தி, பசுக்கள் தேக ஆரோக்கியம்,சுதந்திரத்தன்மை, சிறந்த விருத்தி, தீர்க்கமான ஆயுள் பலம், ஐஸ்வர்யம், அனைத்து பலன்களும் தவறாமல் கிடைக்கும்.
- சதுர்த்தசி அன்று பித்ரு வழிப்பாட்டை சிறப்பாக செய்பவர்களுக்கு அவர்களுடைய பித்ருக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டுஇறந்திருந்தால் திருப்தி அடைவார்கள்.
- மஹாளய அமாவாசை என்பது மிகவும் புண்ணிய நாளாகும். அன்று நம் பித்ருக்களை நினைத்து மனதார வணங்கினால் சகலசவுபாக்கியங்களும் தேடி வரும். மாகளாய பட்சத்தின் 16 நாட்களும் சிராத்தம் செய்வது ஒப்பற்ற உயர்ந்த வாழ்வை அளிக்கும்.
- கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு. திருவாலாங்காடு, திருவள்ளூர், ராமேஸ்வரம், திருமயம் அடுத்து வரும் அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், காசி,திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது. திலதர்ப்பணபுரி எனும் ஊரில் (திருவாரூர்- பூந்தோட்டம் இடையில் உள்ளது) தர்ப்பணம் செய்வது மிக, மிக விசேஷமாககருதப்படுகிறது. இங்கு ஸ்ரீராமரும் லட்சுமணரும் தம் தந்தையான தசரத மகாராஜாவிற்கு தர்ப்பணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
மஹாளய அமாவாசை :::: 30-09-2016, வெள்ளிக்கிழமை
- பித்ருக்களுக்காகவே 15 நாட்கள் நோன்பிருந்து, அந்தந்த நாட்களுக்குரிய பித்ரு பூஜைகளை செய்துகொண்டிருந்த நம் அனைவரையும் மேல் உலகில் இருக்கும் அனைத்து பித்ருக்களும் ஆசி கூற ஆவலுடன் நம் அருகில் வந்து நிற்கும் புண்ணிய நாள் மஹாளய அமாவாசை நாள்(30-09-2016,வெள்ளிக்கிழமை) ஆகும். இந்த 15 நாட்களில் தாம்பத்தியம் செய்யக்கூடாது. காமரீதியான நடவடிக்கைகளை கட்டாயம் நிறுத்திட வேண்டும். இது நமது முன்னோர்களுக்குச் செய்யும் மரியாதை ஆகும்.
- பிதுர்கள் எனப்படும் பித்ருக்கள் நம்மை ஆசிர்வாதித்தப் பின்னர்தான், அம்பாளே நம் வீட்டிற்கு வருகிறாள் எனில்,பித்ரு பூஜையின் மகிமையை என்னவென்று கூறுவது.
- பூமியில் பிறந்த எந்த ஜாதி,மதம்,மொழியைச் சேர்ந்தவராக இருந்தாலும்,அவரவர் கட்டாயமாக இந்த நாளில் தானிய வகைகள்,கரும்பு,அன்னம்(சோறு),பழம் போன்றவைகளை தங்களால் இயன்ற வரையிலும் தானம் செய்திடல் வேண்டும்.புளியங்குடி சிவமாரியப்பன் ஐயா அவர்களின் ஆய்வு முடிவுப்படி,ஒரு புரட்டாசி அமாவாசையன்று அன்னதானம் செய்தால்,14 ஆண்டுகள் பித்ரு தர்ப்பணம் செய்தமைக்கான புண்ணியம் நம்மை வந்து சேரும்.
- பலரது பிறந்த ஜாதகப்படி,பலவித யோகங்கள் இருந்தாலும்,கடன் அல்லது நோய் அல்லது விபச்சாரம் அல்லது சோரம் போகுதல் அல்லது வாழ்க்கைத்துணைக்குத் துரோகம் செய்தல் அல்லது மீளாத பிரச்னைகளில் மாட்டுதல் இவற்றில் ஏதாவது ஒன்று அல்லது ஒன்றிற்கும் மேற்பட்டவைகளால் உலகிற்கு நாகரீகம் கற்றுத்தந்த நம் தமிழினம் தற்போது நாத்திகம் என்னும் நரகலால் பித்ரு தர்ப்பணத்தின் பெருமையை உணராமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாத்திகம் பேசும் நமது தலைவன்கள், திருட்டுத்தனமாக பித்ரு தர்ப்பணங்களை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். எவ்வளவு சுயநலம்? தனது தொண்டர்கள் மீது எவ்வளவு அக்கறை?
சரி போகட்டும். நாம் இந்த மஹாளயபட்சத்தன்று (30-09-2016, வெள்ளிக்கிழமை) செய்ய வேண்டியது என்ன?
- நாம் தர்ப்பணம் செய்கையில் ஆள்காட்டி விரலுக்கும்,சுக்கிரவிரல் எனப்படும் கட்டைவிரலுக்கும் இடையே சுக்கிர ரேகைகள் வழியாக கீழே விழும் தர்ப்பண நீரின் சக்தி பூமியின் ஆகர்ஷண சக்தியை மீறி மேல் நோக்கி எழும்புகிறது.
- அங்கிருந்து பல கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள பித்ரு லோகத்தை சென்றடைகிறது. மஹாளயபட்சத்து அமாவாசை அன்று பிரபஞ்சத்தின் அண்டவெளியில் மிக அபரிதமான பித்ருக்களின் ஆசி இருக்கிறது.நாம் அளிக்கும் நீரையும், எள்ளையும் தேடி கோடானுகோடி பித்ருக்கள் பூமிக்கு வருவார்கள். அதனால் வாழும் காலத்தில் எண்ணற்ற துன்பங்களுக்கு ஆளான இவர்கள் ஆன்மா சாந்தியடைய அனைவரும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
- தர்ப்பண காரியங்கள் செய்யும் ஆண்களுக்கு துணையாக பெண்கள் உதவி புரிய வேண்டும்.மனைவியின் அனுமதியை தர்ப்பண பூஜைகளை நிகழ்த்த ஆண்கள் பெற வேண்டும். அப்பொழுதுதான் தர்ப்பண நிகழ்ச்சிகள் நிறைவு பெறும். மகரிஷிகள்,சித்தர்களின் ஆசி கைகூடும்.பித்ருக்களின் ஆசியும் கிடைக்கும்.இந்த 15 நாட்களில்(15.9.16 முதல் 30.9.16 வரை) தர்ப்பணம் செய்ய இயலாதவர்கள், புரட்டாசி அமாவாசை எனப்படும் மஹாளயபட்ச அமாவாசை நாளான 30.9.16 அன்று மட்டுமாவது அரிசி,கோதுமை, துவரம் பருப்பு, உளுந்தம்பருப்பு, ரவை, மைதா, கனிகள், சாத வகைகள், உலர்ந்த கனிகள், ஆடைகள், பாதணிகள், ஆபரணங்கள் தானம் அளிக்கலாம். வசதியுள்ளவர்கள் ராமேஸ்வரம் முதலான சிவாலயங்களில் செய்யலாம்;சராசரி மக்கள் தமது சொந்த ஊரில் இருக்கும் எந்தக்கோவில் வாசலிலும் தானம் செய்யலாம். அயல்நாடுகளில் இருப்போர் அனாதை இல்லங்களில் செய்யலாம்.
- இது எதுவும் முடியாதவர்கள்,நமது ஊரில் அல்லது நமது வீட்டின் அருகில் அல்லது நமது ஊரில் இருக்கும் பழமையான கோவிலில் இருக்கும் பசுவுக்கு ஆறு வாழைப்பழங்கள்(எந்த ரகமாக இருந்தாலும்) அளிக்கவேண்டும்.
மஹாளய பக்ஷம் திதிகள் தேதிகள்
17/09/16 சனி ப்ரதமை
18/09/16 ஞாயிறு த்விதியை
19/09/16 திங்கள் திருதியை
20/09/16 செவ்வாய் சதுர்த்தி, மஹாபரணி
21/09/16 புதன் பஞ்சமி,ஷஷ்டி(2திதிகள்)
22/09/16 வியாழன் சப்தமி
23/09/16 வெள்ளி மத்யாஷ்டமி,வியதிபாதம்
24/09/16 சனி நவமி
25/09/16 ஞாயிறு தசமி
26/09/16 திங்கள் ஏகாதசி
27/09/16 செவ்வாய் த்வாதசி, சன்யஸ்தமஹாளயம்
28/09/16 புதன் த்ரயோதசி
29/09/16 வியாழன் சதுர்த்தசி
30/09/16 வெள்ளி சர்வஅம்மாவாஸ்யை 01/10/16 சனி ப்ரதமை
Subscribe to:
Posts (Atom)