ருத்ராட்சத்தைக் கழுத்தில் அணிவதால் புற்று நோய் கூட தணியும் என்று சமீபத்தில் வெளியான சில ஆராய்ச்சிக் குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன. பித்தம், தாகம், விக்கல் போன்வற்றிற்கு இது மிகவும் நல்லது. கபம், வாதம், தலைவலி போன்ற நோய்களுக்கு ருத்ராட்சம் சிறந்த மருந்தாகும் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது. ருசியை விருத்தி அடையச் செய்யும். மன நோய்களுக்கு சாந்தம் அளிக்கும். கண்டகாரி, திப்பிலி என்பவற்றுடன் இதைச் சேர்த்து கஷாயம் செய்து அருந்தினால் சுவாச கோசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடையும்.
ஏக முக ருத்ராட்சத்தின் அதிதேவதை பரமசிவன். இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
இரண்டு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை ஸ்ரீகண்ட பரமசிவம். இதை அணிவதால் பசுவைக் கொன்ற பாவம் விலகும். பொருட் செல்வம் பெருகும்.
மூன்று முக ருத்ராட்சத்தின் அதி தேவதை அக்னி தேவன். மும்மூர்த்திகளும் சந்தோஷம் அடைவர். ஸ்திரீகளுக்குச் செய்த தோஷம் விலகும்.
நான்கு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை பிரம்மா. மனிதர்களுக்கு இழைத்த பாவம் விலகும்.
ஐந்து முக ருத்ராட்சத்தின் அதி தேவதை காலாக்னி ருத்ரன். இதை அணிவதால் சதாசிவம் சந்தோஷம் அடைகிறார். செய்யக் கூடாத செயல்களைச் செய்வதால் உண்டாகும் தோஷம் விலகும்.
ஆறு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை சுப்ரமணியர். இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் விலகும்.
ஏழு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை ஆதிசேஷன். களவு தோஷமும் கோபத்தீயும் விலகும்.
எட்டு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை விநாயகப் பெருமான். பாவங்கள் விலகும்.
ஒன்பது முக ருத்ராட்சத்தின் அதி தேவதை பைரவர். இதை அணிவதால் நவ தீர்த்தங்களில் குளித்தால் என்ன புண்ணியமோ அந்தப் புண்ணியம் கிட்டும். பைசாச உபாதைகளும் துஷ்டப் பிரயோகங்களும் விலகும்.
பத்து முக ருத்ராட்சத்தின் அதி தேவதை விஷ்ணு. நாக தோஷமும், பைசாச தோஷமும் விலகும்.
பதினோரு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை பதினோரு ருத்ரர்களாகச் சொல்லப்பட்டுள்ளது. பல அஸ்வமேத யாகம் செய்த பலன்களும் பல வாஜபேய யாகம் செய்த பலனும் கிட்டும்..
ருத்ராட்சம் அணிவதால் அனைத்து நற்குணங்களும், நன்மைகளும் கிடைக்கும். அத்தகைய ருத்ராட்சத்தை அணிந்து வாழ்வில் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று உய்வோம்.
இலங்கை அரசன் ராவணன், சீதையின் அழகில் மயங்கி, அவளை கடத்தி சென்றான். சீதையை தேடி ராமனும், லட்சுமணனும் அலைந்தனர். அப்போது ராமருக்கு ஆஞ்சநேயர் நட்பு கிடைத்தது. இலங்கையில் சீதை இருப்பதை கண்டுபிடித்த ஆஞ்சநேயர் அவரிடமிருந்து சூடாமணி பெற்று வந்து, அதை ராமரிடம் கொடுத்தார்.
இலங்கையில் சீதாப்பிராட்டியார் இருப்பதை அறிந்த ராமர் பாலம் கட்டி செல்ல தீர்மானித்தார். இதற்காக தரிபசயனம் என்று கூறப்படும் இடத்தில் சமுத்திர ராஜனை தியானித்தார். ஆனால் அவன் வராதது கண்டு கோபம் கொண்டு வில்லில் நாணை பூட்டி பாணத்தை தொடுத்ததார். இதனால் சமுத்திரராஜன் தோன்றி சரண் அடைந்தான். அவன் ராமரிடம் கடலில் பாலம் கட்ட வழி சொன்னான்.
சேதுவில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. அதன் வழியாக வானர வீரர்களும் ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயரும் இலங்கைக்குச் சென்றனர். இந்திரனால் அனுப்பப்பட்ட ரதத்தில் ராமர் எழுந்தருளினார். அகஸ்திய முனிவரால் ஆதித்தய ஹிருதய மந்திரம் உபதேசம் பெற்றுக் பிரம்மாஸ்திரத்தினால் ராவணனை அன்றே சம்காரம் செய்து வெற்றி கொண்டார்.
ராவணன் அழிக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கையின் புதிய அரசனாக விபீஷ்ணருக்கு ராமர் முடிசூடி பட்டாபிஷேகம் செய்து வைத்தார். பிறகு ராமபிரான் சீதாபிராட்டியருடனும், லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயருடனும் அன்ன விமானத்தில் அமர்ந்து கந்த மாதனம் (ராமேஸ்வரம்) வந்து சேர்ந்தார்கள்.
ராமர் அகஸ்தியரிடம் ராவணனை கொன்றதால் தனக்கு நேர்ந்த பிரம்மஹத்தி தோஷம் போக வழி செல்லுமாறு கேட்டார். மகரிஷிகள், இந்த இடத்தில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தால் தோஷங்கள் விலகி, பாவம் நீங்கும் என்று கூறினார்.
அகத்திய முனிவர் சொன்னபடி ராமேஸ் வரத்தில் சிவபூஜை செய்வதற்காக ராமர் எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். பிறகு அவர் ஆஞ்சிநேயரிடம், கைலாசம் சென்று சிவலிங்கம் கொண்டு வருமாறு உத்தரவிட்டார்.
ஆஞ்சநேயர் புறப்பட்டு சென்ற பிறகு சீதாப்பிராட்டியார் ராமேஸ்வரத்தில் கடற்கரையில் விளையாட்டாக மண்ணில் சிவலிங்கம் ஒன்று செய்தார். அதை ராமரும் லட்சுமணரும் பார்த்து வியந்தனர்.'' கயிலைக்குச் சிவலிங்கம் கொண்டுவரச் சென்ற ஆஞ்சநேயர் வெகுநேரமாகியும் வரவில்லை. இதனால் ராமர் பூஜை செய்வதற்கு தாமதம் ஏற்பட்டது. அப்போது அகத்திய முனிவர், "குறிப்பிட்ட நல்லநேரம் வந்துவிட்டது சீதாப்பிராட்டியார் விளையாட்டாக செய்த மண் லிங்கத்திற்கு பூஜை செய்யுங்கள்'' என்றார்.
அகத்தியர் சொன்னதை ஏற்று ராமபிரான் சீதாபிராட்டியார் மண்ணில் செய்த சிவலிங்கத்தின் அருகில் அமர்ந்து ஆகம முறைப்படி பிரதிஷ்டை செய்து தன் பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவபிரானை பூஜை செய்தார். வானில் சிவபெருமான் உமாதேவியாருடன் தோன்றி "ராகவர்'' தனுஷ்கோடியில் ஸ்நானம் செய்து, நீர் பிரதிஷ்டை செய்த இந்த லிங்கத்தைப் பார்ப்பவர்கள் செய்த எல்லா பாவங்களும் தொலைந்து போகும் என்றும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும் என்று அருளி மறைந்தார். ராமர் பூஜை செய்தபடியால் இந்த சிவலிங்கத்திற்கு ராமலிங்கம் என்றும், இந்த ஊருக்கு ராமேஸ்வரம் என்றும் பெயர் வந்தது.
இதற்கிடையே ஆஞ்சநேயர் கயிலை சென்று சிவனை எங்கு தேடியும் கிடைக்காததால் சிவனை நினைத்து கடுந்தவம் புரிந்தார். சிவன் தாமதமாக தரிசனம் தந்தார். ஆஞ்சநேயர் தான் வந்த காரணத்தைக் கூறி சிவனிடமிருந்து இரண்டு சிவலிங்கங்களைப் பெற்றுக் கொண்டு வேகம், வேகமாக ராமேஸ்வரம் நோக்கி திரும்பினார்.
ஆஞ்சநேயர் கயிலையிலிருந்து கொண்டு வந்த சிவலிங்கங்களை ராமரிடம் கொடுத்தார். அப்போது அவருக்கு தான்வரும் முன்பே சீதாப் பிராட்டியாரால் மண்ணில் சிவலிங்கம் செய்து ராமர், பூஜை செய்து விட்டதை அறிந்தார். ஆஞ்சநேயருக்கு கோபம் வந்தது. அதே சமயம் ஆஞ்சநேயர் தான் கொண்டு வந்த சிவலிங்கத்தை, ராமபிரான் பூஜை செய்ய முடியாமைக்கு வருத்தமடைந்தார். ஆஞ்சநேயரிடம் ராமர் பலவாறு ஆறுதல் கூறி, முடிந்தால் இந்த லிங்கத்தை அகற்றிவிட்டு நீர் கொண்டு வந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்யும்படி சொன்னார்.
ராமபிரான் சொன்னபடி மண் லிங்கத்தை அகற்றிவிட்டு, தான் கயிலையிலிருந்து கொண்டு வந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய ஆஞ்சநேயர் எண்ணம் கொண்டு தன் கைகளால் மண்லிங்கத்தை பெயர்த்தெடுக்க முயற்சி செய்தார். ஆனால் அந்த பயனில்லாமல் போகவே தன் வாலால் லிங்கத்தை கட்டி இழுக்க முயற்சி செய்தார். அதிலும் அவர் தோல்வி அடையவே ராமர் பிரதிஷ்டை செய்த மண் லிங்கத்தின் பெருமையை உணர்ந்தார்.
இதைத் தொடர்ந்து தான் கொண்டு வந்த லிங்கங்கள் பூஜைக்கு பயன்படுத்தப் படவில்லையே என்று ஆஞ்சநேயர் மீண்டும் வருந்தினார். ராமர், சீதை, லட்சுமணரிடம் அவர் தன் கவலையை வெளியிட்டார்.
ஆஞ்சநேயர் வருத்தத்தை போக்க ராமர் முடிவு செய்தார். அவர் ஆஞ்சநேயரிடம், நீர் கொண்டு வந்த லிங்கத்தை, நான் பிரதிஷ்டை செய்த ராமலிங்கத்திற்கு வடபுறத்தில் பிரதிஷ்டை செய்யும். நீர் வைத்த சிவலிங்கத்துக்குத் தான் முதல் மரியாதை செய்யப்படும். அந்த லிங்க தரிசனம் செய்த பின்தான் சீதை உருவாக்கிய ராமலிங்கத்தை தரிசனம் செய்ய வேண்டுமென்று ஆணையிடுகிறேன் என்று கூறி அருளினார். ராமேசுவரம் கோவிலில் இன்றும் இம்முறையே பின்பற்றப்படுகிறது...