- பிரம்மாவிற்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தனர். இவர்களுள் தக்கன் சிவனை நோக்கித் கடுந்தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றிருந்த போதிலும் இறுதியில் சிவனால் தோற்றுவிக்கப் பெற்ற வீரபத்திரக் கடவுளால் கொல்லப்பட்டார். காசிபனும் கடுந்தவம் புரிந்து சிவனிடம் இருந்து மேலான சக்தியைப் பெற்றான். ஒருநாள் அசுரர்களின் குருவாகிய சுக்கிரனால் (நவக்கிரகங்களுள் வெள்ளியாக கணிக்கப்படுபவர்) ஏவப்பட்ட மாயை என்னும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமை எல்லாவற்றையும் இழந்தான்.
- இதனைத் தொடர்ந்து காசிபனும் மாயை என்னும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனித தலையுடன் கூடிய சூரனும், இரண்டாம் சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்க முகத்துடன் கூடிய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகத்துடன் கூடிய தாரகனும், நான்காம் சாமத்தில் ஆட்டின் உருவத்தில் இருவரும் இணைந்து ஆட்டுத் தலையுடன் கூடிய அசமுகி என்னும் அசுரப் பெண்ணும் பிறந்தனர்.
- மாயை காரணமாக தோன்றிய இந்நால்வரும் ஆணவ மிகுதியால் அகங்கார மமகாரம் (செருக்கு) கொண்டு காணப்பட்டனர். இவர்களுள் சூரபதுமன் சிவனை நோக்கி கடுந் தவம் புரிந்து; 108 யுகம் உயிர்வாழவும் 1008 அண்டம் அரசாளும் வரத்தையும், இந்திரஞாலம் எனும் தேரையும், சிவன் சக்தி அன்றி வேறு ஒரு சக்தியாலும் அழிக்க முடியாது எனும் வரத்தையும் பெற்றிருந்தான். இவ்வரத்தினைப் பெற்ற சூரன் முதலானோர் தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்ட சராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலிட்டு சொல்லொணா துன்பங்களைக் கொடுத்து அதர்ம வழியில் ஆட்சி செய்தனர்.
- அசுரர்களின் இக்கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள் கைலாயம் சென்று சிவனிடம் முறையிட்டனர். இறைவனும் அவர்கள்மேல் திருவுளம் கொண்டு அவர்களை அந்த துன்பத்தில் இருந்து காப்பாற்றும் நோக்குடன் தனது (6) நெற்றிக் கண்களையும் திறக்க (சிவபெருமானுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகிய ஐந்து முகங்கள் உண்டு. இவை தவிர ஞானிகளுக்கு மட்டுமே தெரியக்கூடிய "அதோமுகம்" (மனம்) என்ற ஆறாவது முகமும் உண்டு) அவைகளிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயுபகவான் ஏந்திச் சென்று; வண்ண மீனினம் துள்ளி விளையாடும் தண்மலர் நிரம்பிய சரவணப்பொய்கையில் தாமரை மலர்களின் மீது சேர்க்கப்பெற்றன.
- அந்த தீப்பொறிகள் ஆறும்; உலகின் பொன்னெல்லாம் உருக்கி வார்த்ததென ஆறு குழந்தைகள் தோன்றின. அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் சீராட்டி பாலூட்டி வளர்த்து வரும் வேளை; அகிலலோக நாயகி பார்வதி தன் மைந்தர்களை அன்புடன் கட்டியணைத்திட அவையாவும் ஒரு திருமேனியாக வடிவங்கொண்டு ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய ஒரு திரு முருகனாக தோன்றினன் உலகமுய்ய. ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய திருவுருவை பெற்றமையால் "ஆறுமுக சுவாமி" எனப் பெயர் பெற்றார்.
- இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீர்யம், வைராக்கியம், புகழ் என்னும் ஆறு குணங்களையும் குறிக்கின்றன. பிரணவ சொரூபியான முருகப் பெருமானிடம் காக்கும் கடவுளான முகுந்தன், அழிக்கும் கடவுளான ருத்ரன், படைக்கும் தெய்வமான கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடக்கம். ஆறுமுகன் சிவாக்னியில் தோன்றியவன். அதனால் "ஆறு முகமே சிவம்; சிவமே ஆறுமுகம்" எனப்படுகிறது.
****************
No comments:
Post a Comment