Search This Blog

Monday, 31 October 2016

கந்த சஷ்டி

  • முருகப்பெருமான் அசுரர்களான சூரபத்மாதியரை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே நாம் கந்தசஷ்டி விழாவாகக் கொண்டாடுகிறோம். சூரபத்மனின் ஒரு பாதி "நான்' என்கிற அகங்காரம்; மற்றொரு பாதி "எனது" என்கிற மமகாரம்.


  • பன்னிரண்டு கைகளுடன் ஆறு திருமுகமும் கூடிய அழகின் அழகாய் தேவசேனாதிபதியாய், தேவரும் முனிவரும் வாழ்த்த சர்வ சத்தியாம் பார்வதி தந்த தனிப்பெரும் ஞான வேலை சக்தியாகக் கொண்டு சூரபன்மனைச் சம்ஹாரம் செய்யப் புறப்பட்டு சென்றார்.  அவர்களுடன் முருகப் பெருமான் மேற்கொண்ட போர் ஐப்பசித் திங்கள் வளர்பிறையில் பத்து நாட்கள் நடைபெற்றது. முதல் நான்கு நாட்களில் சூர பத்மனைச் சேர்ந்த வீரர்களை அழித்து அவனது பலத்தை துவம்சம் செய்தார்.


  • தாரகனையும் அவனுக்குத் துணை நின்ற கிரௌஞ்சத்தையும் பிளந்து, சிங்கமுகனை அழித்து பின் சூரனின் சேனை அழிந்த போதும் சூரபதுமனின் ஆணவம் அழிய இல்லை.   அதனால் முருகன் தன் திருப்பெரு வடிவம் (விஸ்வரூபம்) காட்டி, எல்லாம் வல்ல பரம்பொருள் தாமே என பரமேசுர வடிவம் காட்டி, சிவனும் அவன் மகனும் மணியும் ஒலியும் போல ஒருவரே என்றுணர்த்தியும், தன் தன்மை மாறாது மாயைகள் பல புரிந்து போர் செயலானான்.
  • கடைசியாக; நடுக்கடலில் மாமரமாய் நின்ற சூரபத்மனைத் முருகன்; தன் வேலாயுதத்தால் இரு கூறாக்கினார். ஆணவம் அழியப் பெற்ற சூரன் தம் தவறை உணர்ந்து; தன்னை மன்னித்து, ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடி வேண்டி நிற்க; (”ஈருடலும் ஓர்ருயுருமய் இருந்த சூரபதுமன்”) அவை இரண்டையும் முருகன் தன் அருளால் சேவலாகவும் மயிலாகவும் மாற்றி, மயிலை வாகனமாகவும் சேவலைக் கொடியிலும் தன்னுடன் பிணைத்துக் கொண்டார்.
  • ஞானசக்தியான வேலின் தாக்கத்தால் ஆணவ மலம் வலியிழந்து ஆன்ம பரம்பொருளின் திருவடி அடைந்ததெனும் மறைபொருளை உணர்த்த அனுஷ்டிக்கப்படும் விரதமே கந்தர் சஷ்டி விரதம். இந்த அருட்பெருங்கருணைச் செயலை வியந்து இப்போர் நிகழ்ந்த காலமாகிய ஐப்பசி மாத வளர்பிறை முதலாறு நாட்களையும் விரத நாட்களாகக் கொண்டு முனிவரும் தேவரும் நோற்று வந்தனர். இதுவே ஸ்கந்தசஷ்டி என்ற நாமத்தோடு நாம் அநுஷ்டிக்கும் விரதமாகும்.
விரத அனுஷ்டானங்களும், விதிமுறைகளும்:



  • இவ்விரதம் ஆறு வருடங்கள் தொடர்ந்து கைக்கொள்ளப்பட வேண்டும்  உபவாசம் அல்லது ஒரே நேர உணவு என்பது உணவு நியதி ஆறு வருடமும் அல்லது பன்னிரண்டு வருடங்களும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.
  • கந்த சஷ்டி என்னும் போது அதற்கென சில விரத நியதிகள் தனித்துவம் பெற்றுத் திகழ்கின்றன. இவ்விரதம் அனுஷ்டிக்க விரும்புவோர் விரத நாட்களில் வைகறையில் துயில் எழுந்து சந்தியாவந்தனம் முதலிய காலைக்கடன்களை முடித்து, ஆற்றில் இறங்கி நீரோட்டத்தின் எதிர்முகமாக நின்று, தண்ணீரில் ஷட்கோணம் வரைந்து, அதில் சடாக்ஷர மந்திரத்தை எழுத வேண்டும். "ஓம்' என்ற பிரணவ மந்திரத்தையும் நடுவில் எழுதி, முருகனை மனதில் இருத்தி; நீரில் மூழ்கி எழ வேண்டும்.
  • கிணறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடுபவர்கள் வடதிசை நோக்கி நின்று மேற்கூறியவாறு தூய நீராடி, தோய்த்துலர்ந்த ஆடையணிந்து அமைதியான இடத்திலோ அல்லது ஆலயத்திலோ அமர்ந்து அல்லல் தீர்க்கும் ஆறுமுகப் பெருமானை நினைந்து தியானம் செய்ய வேண்டும். தியானத்துடன் நில்லாது மனம் பொறிவழிச் செல்லாது இறையருளை நாடி வேறு சிந்தனையின்றி களிப்புற வேண்டும். விரத காலங்களில் மனம் வேறு எண்ணங்களில் ஈடுபடாதிருக்க கந்தசஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரனு பூதி, கந்தர் கலிவெண்பா போன்ற நூல்களைப் படிக்க வேண்டும். முருகனாலயங்களில் இவ்விரத நாட்களில் கந்தபுராண படனம் நடைபெறும். இதை தவறாது கேட்டல் மிகவும் ஆன்மிக நன்மை பயக்கும்.
  • இந்த ஆறு நாட்களும் பூரண உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது. மிளகுகளை விழுங்கி, பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து, இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப "கந்தசஷ்டி" விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கர்ப்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கவேண்டும்.
  • உரிய நேரத்தில் பாரணை பண்ணுவதற்குத் தடைகள் ஏற்பட்டால் பாரணைக்காக சமைத்த உணவைச் சாமிப்படத்திற்கு முன்படைத்து அதனை இந்த உரிய நேரத்தில் முகர்ந்து விடுதல் போதுமானது. பின்னர் இயன்ற பொழுதில் சாப்பிடலாம்.

No comments:

Post a Comment

[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]