தென்னாட்டில் மிக சிறந்து விளங்கும் சிவ ஸ்தலங்களில் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நாராயண சுவாமி கோவிலும் ஒன்றாகும். முன்பு இத்திருத்தலத்தின் பெயர் புன்னைவனப்பேரி என்றும், சங்கரரும், நாராயணரும் இணைந்து ஒரு சேரகாட்சி அரு ளியதால் சங்கரநயினார் கோவில் என்றும் இதுவே நாளடைவில் மறுவி சங்கரன்கோவிலாக இன்று வழக்கத்தில் இருந்து வருகிறது.
இந்து சமயத்தில் உட்பிரிவுகளான சைவம், வைணவம், சாத்தேயம், கானாபத்தியம், கௌ மாரம், பேரவம் போன்ற யாவும் அன்பே உருவான ஒரே இறைவன் தம் சக்தியை பல உருவங்களில் வெளிப்படுத்தி நம்மை ஆட்கொண்டுள்ளார் எனும் பெருமை நிலை நாட்டப்பட்டு இருப்பதை நாம் இத்திருத்தலத்தின் மூலம் காண முடிகிறது.
சங்கரநாராயண சுவாமி கோவிலை கி.பி. 11ம் நூற்றாண்டில் உக்கிரன்கோட்டையை ஆண்டு அரசாட்சி செய்து வந்த உக்கிரம பாண்டியன் மாமன்னன் கட்டினான். இவர் மணிக்கிரீவன் என்ற காவலின் சொல் கேட்டு புன்னை வனத்தின் புற்றின் அருகே இருந்த புன்னை வனக்காட்டினை சீர் செய்து, கோவிலை கட்டியதுடன், கோவிலின் முன் மண்டபங்களையும் கட்டி சுற்றுச்சுவரையும் எழுப்பினார்.
இக்கோவில் 4.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்து மக்கள் சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளப்படுவதை தடுத்து நிறுத்தவும், நாட்டில் இந்து மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்தவும், பாம்பரசர்களான சிவ பக்தன் சங்கனும், விஷ்ணு பக்தன் பதுமனும் சேர்ந்து திருக்கயிலை மலையில் அருந்தவம் மேற்கொண்டனர். பாம்பரசர்களின் அருந்தவத்தை கண்ட பார்வதி தேவியார் பாம்பரசர்கள் முன்பாகத் தோன்றி என்னவரம் வேண்டும் என்று கேட்க, அதற்கு அவர்கள் இருவரும் சிவன், விஷ்ணு இந்த இருவரில் உயர்ந்தவர்கள் யார் என்று வினா எழுப்பினார்கள்.
இதில் அம்பிகை யாரை உயர்ந்தவர் என்று கூற இயலும். ஒருபுறம் கணவர் சிவபெருமான், மறுபுறம் சகோதரர் விஷ்ணு, இதற்கு தீர்வை அம்பிகை சிவபெருமானிடமே கேட்க, அதற்கு ஈசனோ பொதிகை மலைச் சாரலில் புன்னைவனத்தில் தவம் மேற்கொள் உன் கேள்விக்கு பதில் கிடைக்கும் என்று அம்பிகைக்கு அருளினார்.
அதன்படி உமையம்மை தமைசூழ்ந்த பசுக்களாகிய வேதமாதர்களுடன் பார்வதி தேவி கோமதியம்மை, ஆவுடையம்மை எனும் காரணப் பெயர்களை தாங்கி புன்னைவனத்தில் தவம் மேற்கொண்டார். அம்மையின் அருந்தவத்திற்கு இணங்கி சிவபெருமான் ஆடித்திங்கள் உத்திராடம் நன்னாளில் அருள்தரும் கோமதி அம்பிகைக்கு அரியும், சிவனும் இணைந்த சங்கரநாராயணர் கோலத்தில் காட்சி கொடுத்து அருளினார்.
இந்த காட்சியைத்தான் ஆடித்தபசு திருவிழாவாக லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி, அம்பாளை தரிசனம் செய்து இறையருள் பெற்று வருகின்றனர். இக்கோவிலின் தீர்த்தமாக நாகசுனை நீரும், ஸ்தல விருட்சமாக புன்னைமரமும் விளங்குகிறது. இக்கோவிலின் இராஜகோபுரம் 125 அடி உயரத்தில் 9 நிலைகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
புன்னைவனக் காட்டில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட பாம்பு புற்றின் அருகே அமையப்பெற்ற சன்னதியாக சங்கரலிங்க மூர்த்தி சன்னதியும், சிவனும், அரியும் இணைந்து காட்சி அருளிய இடத்தில் சங்கரநாராயணசுவாமி சன்னதியும், சிவபெருமானை நோக்கி உமையம்மை கடுந்தவம் மேற்கொண்ட இடத்தில் கோமதி அம்பாள் சன்னதியும் அமைந்துள்ளது.
இங்கு ஒவ்வொரு தைத்திங்கள் பௌர்ணமி தினத்தன்று நடைபெறும் தெப்பத் திருவிழாவும், 41 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவும், இத்திருத்தலத்தின் பிரம்மோற்சவம் ஆகும். உத்ராயண, தட்சிணாயன காலங்களில் சூரிய பகவான் தனது சாலைகளுடன் வந்து சிவபெருமானை பூஜிக்கும் தினத்தில் சூரிய பூஜை வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த காலங்களில் சூரிய பூஜை என்ற விழா கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்ச் 21,22,23 மற்றும் செப்டம்பர் 21,22,23 ஆகிய நாட்களில் சங்கரலிங்க மூர்த்தியை சூரிய பகவான் தரிசிப்பதை நாம் இன்றும் காண முடியும். கோவிலின் நுழைவு வாயிலின் வடபுறம் அமைந்துள்ள நாகசுனைத் தெப்பக்குளம் அமைந்துள்ளது. இதை பாம்பரசர்களான சங்கனும், பதுமனும் ஏற்படுத்தினார்கள். இந்த தெப்பக்குளத்தில் மூழ்கி புற்றுமண் பூசி வழிபடுபவோர்களுக்கு விஷசந்துகளின் தொந்தரவில் இருந்து விடுதலை கிடைக்கும்.
தமிழ்நாட்டில் நாகதோஷங்களை தீர்க்கும் புண்ணிய ஸ்தலமாக விளங்குவதற்கு இக்கோயிலின் சங்கரலிங்கசுவாமி சன்னதியின் கன்னி மூலையில் 6 அடி உயரத்தில் சர்ப்பத்தை கையில் பிடித்தபடி சர்ப்ப விநாயகர் வீற்றிருக்கிறார். இவரை வழிபாடு செய்பவர்கள் சர்ப்ப தோஷத்தில் விடுபட்டு, திருமணத்தடை நீங்கி வாழ்க்கையில் மேன்மை அடைகின்றனர் என்பது இக்கோயிலின் ஐதீகம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தந்து அன்னை கோமதியின் அருள் பெற்று செல்கின்றனர்.
பாண்டிய நாட்டு பஞ்ச ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் சங்கரன்கோவில் பாண்டிய நாட்டு பஞ்ச ஸ்தலங்களில் முக்கிய பிரதான ஸ்தலமாக சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோவில் விளங்கி வருகிறது. சோழ நாட்டில் புகழ் பெற்ற பஞ்ச ஸ்தலங்கள் அமைந்திருக்கிறது. இதே போன்று பாண்டிய நாட்டிலும் புகழ் பெற்ற பஞ்ச ஸ்தலங்கள் அமைந்திருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சுற்றிலும் பஞ்ச ஸ்தலங்கள் அமைந்துள்ளது. இதில் நிலம் (மண்) ஸ்தலமாக சங்கரன்கோவில் சங்கரலிங்க சுவாமி கோவிலும், நீர் (தண்ணீர்) ஸ்தலமாக தாருகாபுரம் மத்தியஸ்த நாத சுவாமி கோவிலும்,நெருப்பு ஸ்தலமாக கரிவலம்வந்த நல்லூர் பால்வண்ணநாத சுவாமி கோவிலும், காற்று (வாயு) ஸ்தலமாக தென்மலை திரிபுரநாத சுவாமி கோவிலும், ஆகாய ஸ்தலமாக தேவதானம் நச்சாடை தவிர்த்த சிவலிங்கேஸ்வரர் சுவாமி கோவிலும் அமைந்துள்ளது.இந்த பஞ்ச ஸ்தல ஆலயங்களில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் மஹா சிவராத்திரி அன்று பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் இந்த 5 ஆலயங்களுக்கும் சென்று இறைவனை வழிபட்டு வருகின்றனர்.
ஸ்ரீசங்கரநாராயணசுவாமி கோயிலின் முக்கிய திருவிழாக்கள்
சித்திரைப் பெருந்திருவிழா - 48 நாட்கள்.
ஆடித்தபசு திருவிழா - 12 நாட்கள்.
நவராத்திரி லட்சார்ச்சனை - 9 நாட்கள்.
ஐப்பசி திருக்கல்யாணம் - 10 நாட்கள்.
கந்தசஷ்டி திருவிழா - 6 நாட்கள்.
திருவெம்பாவை திருவிழா - 10 நாட்கள்.
தை மாதம் கடைசி - ஆவுடைப்பொய்கை
வெள்ளி அன்று - தெப்பத் தேரோட்டம்
ஸ்ரீநந்தீஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு - மாதம் 2 முறை.
No comments:
Post a Comment