- கும்பகோணத்துக்கு வடக்கே சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சூரியனார் கோயில். இங்கு நவக்கிரகங்களில் முதன்மையானவரும் உலகிற்கே ஒளி கொடுப்பவருமான சூரிய பகவான் சிவ சூரியப் பெருமாளாக எழுந்தருளியிருக்கிறார். சூரிய பகவானுக்குரிய நிறம், தானியம் போன்ற விபரங்கள் பின்வருமாறு:-
- நிறம்: சிவப்பு
தானியம்: கோதுமை
வாகனம்: ஏழு குதிரைகள் பூட்டிய தேர்
மலர்: செந்தாமரை
உலோகம்: தாமிரம்
கிழமை: ஞாயிறு
ரத்தினம்: மாணிக்கம்
பலன்கள்: சகல காரிய சித்திகள் மற்றும் ஆகர்ஷணம்
- சூரியனார் கோயிலுக்கு வெகு அருகிலுள்ளது திருமங்கலக்குடி எனும் திருத்தலம். ஐதீகப்படி திருமங்கலக்குடியில் சென்று அங்குள்ள பிராணநாதர் எனப்படும் சிவபெருமானை தரிசனம் செய்த பிறகு தான் சூரியனார் கோயிலுக்கு செல்ல வேண்டும் என கேள்விப்பட்டதால் முதலில் திருமங்கலக்குடிக்கே நாங்கள் சென்றோம். இக்கோயிலை பற்றிய விபரங்கள் தனியாக பிரசுரித்துள்ளேன்.
- உலகம் தோன்றிய பொழுது முதன்முதலாக உலகெங்கும் வியாபித்த நாதம் ஓம் எனும் ஓம்காரநாதமாகும். அதிலிருந்து தோன்றியவர் தான் சூரிய பகவான் என ஸ்ரீ மார்க்கண்டேய புராணம் கூறுகின்றது. மாரீசி எனும் மஹாரிஷியின் புதல்வரான கசியப முனிவருக்கு பிறந்தவர் தான் சூரிய பகவான் என்றும், விஸ்வகர்மாவின் புதல்வியான சூர்வர்சலா தான் சூரிய பகவானின் பத்தினி எனவும் புராணம் கூறுகின்றது. வைவஸ்வத மனு, யமதர்மன் என்ற புதல்வர்களும் யமுனை என்ற புதல்வியும் சூரிய பகவானின் குழந்தைகள் என அறிகிறோம். அதே நேரம் சாயா தேவியின் புதல்வராக சனி பகவானும், குந்தி தேவியின் புதல்வராக கர்ணனும், சூரிய பகவானுக்கு பிறந்தவர்கள் எனவும் மற்ற புராணங்களிலிருந்தும் மகா பாரதத்திலிருந்தும் அறிகிறோம்.
- சூரிய பகவானின் தேருக்கு ஒரே ஒரு சக்கிரம் மட்டுமே உள்ளது என்றும் அத்தேரை இழுக்கும் குதிரைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறத்தை உடையவை என்பதும் சிலருக்கு தெரியாது. தனது பக்தர்களுக்கு ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் என்பவற்றோடு புகழையும் எதையும் சமாளிக்கும் ஆற்றலையும் வழங்குகிறார் சூரிய பகவான். அதர்வண வேதத்தின் படி சூரியனை தியானிக்கும் பக்தர்களுக்கு பார்வை மற்றும் இதய கோளாறுகள் நீங்குவதாக நம்பப்படுகிறது.
- காலை 6-லிருந்து மதியம் 12:30 வரைக்கும் திறந்திருக்கும் இத்திருக்கோவில் மீண்டும் மாலை 4-லிருந்து இரவு 8-வரை தினமும் திறக்கப்படுகின்றது. மூன்று அடுக்குகளை கொண்ட இக்கோயிலின் கோபுரம் சுமார் பதினைந்தரை அடி உயரம் உள்ளதாகும். இராஜகோபுரத்தின் வடக்கே சூரிய புஷ்கரிணி என்ற திருக்குளம் உள்ளது. இங்கு குளித்து விட்டு தரிசனம் செய்தல் சாலச் சிறந்தது.
- கோயிலுக்குள் நுழைந்தவுடன் பலிபீடத்தின் கிழக்கே ஒற்றைக் குதிரையை தரிசிக்கலாம். சூரிய பகவானின் வாகனமான குதிரைக்கு "சப்த" என்ற பெயரிடப்பட்டுள்ளது. கோயிலுக்குள் நுழையும் பக்தர்கள் முதலில் "கோள் தீர்த்த விநாயகர்" சன்னதியை தரிசித்த பின்னர் காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாக்ஷி தாயாரை தரிசித்து, உஷா மற்றும் பிரத்யுஷா (சாயா தேவி) ஆகியோருடன் சயனித்திருக்கும் சூரிய பகவானை தரிசிக்கலாம். இக்கோயிலின் சிறப்பு என்னவெனில் இங்கு மற்ற கிரகங்கள் யாவும் சூரிய பகவானை நோக்கிய படி இருப்பது தான். சூரிய பகவானுக்கு நேர் எதிரே அவரது உக்கிரத்தை தணிக்கும் படியாக குரு பகவான் நின்றிருப்பதை காணலாம். கிரக தோஷம் நீங்குவதர்க்காக வரும் பக்தர்களை இங்கு அதிகமாக காணலாம். குறிப்பாக, அஷ்டம சனி, ஜன்ம சனி மற்றும் சனியின் இதர தோஷங்களால் அவதியுறும் பக்தர்கள் இங்கு வந்து சூரிய பகவானை தரிசிதார்களேயானால் தோஷ நிவாரணம் பெற முடியும் என நம்பப்படுகிறது.
- சூரிய பகவானை தரிசித்த பிறகு, இதர கிரகங்களையும் தரிசிக்கும் பக்தர்கள் மீண்டும் கோள் தீர்த்த விநாயகரை தரிசித்து பலிபீடத்துக்கு அருகில் நமஸ்கரித்து பிறகு கோயிலை வலம் வர வேண்டும் என்ற சம்பிரதாயம் இங்கு உள்ளது.
**************
No comments:
Post a Comment