- மூவர் பாடல் பெற்ற தலம் என்ற பெருமையுடைய திருப்புகலூர் அக்னீசுவரர் ஆலயம் ஒரு பெரிய கோவில். மூலவர் அக்னீசுவரர் சந்நிதிக்கு உள்ள நுழைவு வாயில் கோபுரம் 5 நிலை உள்ளதாகவும் சுமார் 90 அடி உயரமும் உள்ளது. உள்ளே நுழைந்ததும் நாம் முதலில் காண்பது இறைவி கருந்தாழ்குழலியின் தெற்கு நோக்கிய சந்நிதி. இந்த சந்நிதியை ஒட்டியே மூலவர் அக்னீசுவரர் சந்நிதி அமைந்துள்ளது. சுயம்பு லிங்கமான மூலவருக்கு கோணப்பிரான் என்ற பெயரும் உண்டு. மூலவருக்குப் பக்கத்தில் சந்திரசேகரர் தனிச்சந்நிதி உள்ளது. இங்கு இவரே பிரதானமாவார். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், நடராசர், தட்சிணாமூர்த்தி, அகத்தியர், லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, பிட்சாடனர் ஆலிங்கனகல்யாண சுந்தரர் முதலிய மூர்த்தங்கள் உள்ளன.மூலவர் சந்நிதிக்கு வடக்கே வர்த்தமானீசுவரர், அவர் துணைவி மனோண்மனிக்கும் தனி சந்நிதிகள் இருக்கின்றன. இந்த வர்த்தமானீசுவரரைப் பாராட்டி சம்பந்தர் தனியாக ஒரு பதிகம் பாடி இருக்கிறார். மூலவரைச் சுற்றி உள்ள உட்பிரகாரத்தில் சந்திரசேகரர், திரிபுராந்தகர், அக்னி, பிரம்மா ஆகியோரின் செப்புச் சிலை வடிவங்களைக் காணலாம். நவக்கிரகங்கள் இங்கு மற்ற கோவில்களில் இருப்பதைப் போல் இல்லாமல் "ட" என்ற அமைப்பில் இருக்கிறார்கள். அனுக்கிரக சனீஸ்வர பகவானும், நளச்சக்கரவத்தியும் ஒரு சன்னதியில் உள்ளனர்.
- ஸ்தலத்தின் சிறப்பம்சம்: இத்தலத்தில் அக்னி பகவான் இறைவனை நோக்கி தவம் செய்து பேறு பெற்றிருக்கிறார். அக்னி பூஜித்த தலமாதலால் இறைவனுக்கு அக்னீஸ்வரர் என்ற திருநாமம். அக்னி தவம் செய்யும் போது தன்னைச் சுற்றி ஒரு தீர்த்தம் அமைத்துக் கொள்கிறார். அதுவே கோவில் வெளிப்புறத்தில் அகழியாக, அக்னி தீர்த்தமாக விளங்கிறது.
- இத்தலத்து இறைவன் கோணப்பிரான் என்று அழைக்கபடுவதற்கும் காரணம் உண்டு. பாணாசுரன் என்ற அசுரனின் தாயார் சிவபூஜை செய்பவள். தாயாரின் பூஜைக்காக சுயம்பு லிங்கங்களைப் பெயர்த்து எடுத்து வருகிறான் பாணாசுரன். ஆணால் திருப்புகலூர் அக்னீசுவரரை பெயர்த்து எடுக்க முடியாமல் போகவே தன்னையே பலி கொடுக்க முயர்ச்சி செய்யும் போது இறைவன் அவனை தடுத்து ஆட்கொள்கிறார். பாணாசூரன் தோண்டிய அகழியே நாற்புறமும் தீர்த்தமாக உள்ளது. அவன் தாயாரின் பூஜையை இருந்த இடத்தில் இருந்தே ஏற்றுக் கொண்டதின் அடையாளமாக தலை சாய்த்து காட்சி அளிக்கிறார். அதனாலேயே இறைவன் கோணப்பிரான் என்றும் அறியப்படுகிறார்.
- இத்தலத்தில் வாஸ்து பூஜை செய்வது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இத்தலத்தில் சுந்தரருக்கு செங்கற்களை பொன்கற்களாக மாற்றி கொடுத்து அருளியதாலும் அக்னி பகவான் பாபவிமோசனம் பெற்றதாலும் புதியதாக வீடு கட்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து செங்கல் வைத்து மனைமுகூர்த்தம் செய்த பிறகே வீடுகட்ட ஆரம்பிப்பது வழக்கம்.
- செங்கற்கள் பொற்கட்டிகளாக மாறியது: திருவாரூரில் பங்குனி விழா ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக நடைபெறும். ஒரு சமயம் அவ்வாறு பங்குனி விழாவின் போது தனது மனைவி பரவையார் செலவிற்குப் பொன் பெற விரும்பி சுந்தரர் திருப்புகலூர் வந்தார். திருப்புகலூரில் கோயில் கொண்டுள்ள இறைவனை வணங்கி தனது கருத்தைப் பதிகத்தில் வைத்துப் பாடினார். பிறகு மற்ற அடியார்களுடன் கோவிலில் சிறிது நேரம் இளைப்பாறினார். தூங்குவதற்காக அங்கிருக்கும் செங்கற்களை தலைக்கு உயரமாக வைத்துத் தம் மேலாடையாகிய வெண்பட்டை விரித்துப் படுத்தார். துயில் நீங்கி சுந்தரர் எழுந்தபோது தம் தலையணையாக வைத்திருந்த செங்கற்களெல்லாம் பொற்கட்டிகளாக மாறி இருக்கக் கண்டு வியப்படைந்தார். இறைவனை 'தம்மையே புகழ்ந்து' என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி வணங்கினார்.
- அப்பர் (திருநாவுக்கரசர்) தனது 81-ம் வயதில் இத்தலத்தில் உழவாரப் பணி செய்த போது, இறைவன் சித்திரை சதய நட்சத்திர நாளில் அவருக்கு முக்தி கொடுத்தார். எனவே, இது சதய நட்சத்திர தலமாக விளங்குகிறது. இவருக்கு இக்கோவிலில் தனி சந்நிதியும் இருக்கிறது. சித்திரை சதயத்தை ஒட்டி இவ்வாலயத்தில் பத்து நாள் திருவிழா நடக்கிறது. அப்பர் சித்திரை சதயம் நான்காம் சாமத்தில் இறைவனிடம் ஜோதியாக கலக்கும் நிகழ்ச்சி இப்போது ஐதீகமாக நடத்தப்படுகிறது.
Search This Blog
Monday, 31 July 2017
அக்னீஸ்வரர் கோவில், திருப்புகலூர் (இத்தலத்திற்கு வந்து செங்கல் வைத்து மனைமுகூர்த்தம் செய்த பிறகே வீடுகட்ட ஆரம்பிப்பது வழக்கம்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment