"இத்திருக்குளத்தில் குளித்தெழுந்தால்
சகல நோய்களும் தீரும் என்பது திண்ணம்.
இத்தலத்தில் அடி வைப்பதால் பில்லி சூனியம்
முதலானவையும் கூட அகலும் என்பர்."
- தென் நாட்டின் தலைசிறந்த பிரார்த்தனைத் தலங்களுள் ஒன்றானது. புள்ளிருக்கு வேளூர் எனப்படும் பாடல் பெற்ற தலம். பலராலும் பொதுவாக வைத்தீஸ்வரன் கோயில் என்றே அழைக்கப்பெறுகின்றது. சோழ வளநாட்டில் தஞ்சை மாவட்டத்தில் காவிரியின் வடகரைத் தலங்களில் 16வது தலமான இத்திருத்தலம் இந்திய இருப்புப் பாதையில் வைத்தீஸ்வரன் கோயில் எனும் பெயருடன் புகை வண்டி நிலையமாகவும் அமைந்துள்ளது. தருமையாதீனத்திற்குச் சொந்தமான 27 கோயில்களுள் மிகவும் புராதனமான, பிரபலமான ஒன்றாகும் இங்குள்ள கோயில்.
- திருச்சாந்துருண்டை: இது வைத்தியநாதப் பெருமானின் பிரசாதமாக நோய் நீங்கும் பொருட்டு அளிக்கப்பெறுவது. ஆலயத்தில் விபூதி குண்டத்தில் (ஜடாயு குண்டத்தில்) உள்ள விபூதியையும் சித்தாமிர்த தீரத்த நீரையும் சேர்த்துக் குழைத்து, ஐந்தெழுத்து மந்திரமாகிய ‘நமசிவாய’ என்பதனை ஓதிக்கொண்டே முத்துக்குமார சுவாமி சந்நிதியில் உள்ள குழியம்மியில் அரைத்து உளுந்தளவில் உருட்டி, அம்பாள் திருவடியில் வைத்து அர்ச்சித்து எடுத்துச் சேகரித்து வைத்துக் கொண்டு வேண்டியவர்களுக்கு அந்த உருண்டை வழங்கப் பெறுகின்றது. இதனை உண்டோர் நோய் (தீவினை) நீங்கி வாழ்வாங்கு வாழ்ந்து, பின் முக்தி எய்துவர். இங்கு அர்த்த சாமப் பூஜை செல்வ முத்துக்குமார சுவாமிக்குச் செய்த பின்புதான் ஸ்வாமிக்குச் செய்யப் பெறுகின்றது. அர்த்தசாமப் பூஜையின்போது முத்துக்குமார சுவாமிக்கு அணிவிக்கப் பெறும் சந்தனமான ‘நேத்திரிப்படி’ சந்தனமும் வேண்டிய வரம் தரவல்ல மகிமையுடையது. இந்தச் சந்தனத்தை ‘புழுகாப்பு’ என்பர்.
- மாதந்தோறும் வரும் கார்த்திகைவிழா இங்குச் சிறப்பானது. இந்நாளில் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளைத் தரிசிக்க மக்கள் பல்லாயிரக்கணக்கில் கூடுவர். அபிஷேகங்களில் சந்தன அபிஷேகம் மிகவும் சிறப்புடையது. தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் மாதந்தோறும் கார்த்திகையன்று எழுந்தருள, அவர்கள் திரு முன்னி லையில் இந்த அபிஷேகம் நடைபெறுவது கண்கொள்ளக் காட்சி. அங்காரக் க்ஷேத்திரமாதலால் செவ்வாயக் கிழமைகளில் அங்காரகர் பிரகாரத்தில் வலம் வருவார். கார்த்திகை மாத சோம வாரங்களில் ஈசுவரனுக்குச் சங்காபிஷேகமும் உண்டு.
No comments:
Post a Comment