Search This Blog

Friday, 23 September 2016

குரு தலம் :::: தென்குடித்திட்டை

 
  • குரு தலங்களாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் ஆகியவை விளங்குகின்றன. இவற்றுள் திட்டை திருத்தலம் தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
  • பிரளய காலத்தில் அழியாமல் இருந்து, மந்திர ஒலிகள் தோன்றிய மகத்தான தலம் என்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு. இந்தக் கோவிலில் வசிஷ்டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இறைவியின் நாமம் மங்களாம்பிகை என்பதாகும். இறைவனுக்கும், இறைவிக்கும் நடுவில் நின்ற நிலையில் குருபகவான் ராஜ குருவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்த தலத்தில் காண முடியாத தனிச்சிறப்பாகும்.

பஞ்சலிங்க தலம் :
  • திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில், ஒரு பஞ்சலிங்க ஸ்தலமாக விளங்கி வருகிறது. இந்தக் கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. மத்தியில் மூலவர் ஐந்தாவது லிங்கமாக உள்ளார். பஞ்ச பூதங்களுக்கும் உரிய தலமாகவும் இது விளங்குகிறது.

மங்களம் தரும் மங்களாம்பிகை :
  • மகாப்பிரளய காலத்தில் உலகைக் காக்க இறைவனுடன் ஓடம் ஏறி வந்ததால், இத்தலத்தில் உள்ள இறைவியை லோகநாயகி என்று அழைக்கின்றனர். சகல மங்களங்களையும் தருவதால் மங்களாம்பிகை என்றும், மங்களேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறார்.
  • கும்பகோணத்தில் சோமநாதன் என்பவர் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் இவரது வீட்டுக்கு வந்த ஜோதிடர் ஒருவர், ‘உங்கள் மகள் மங்களா 16-வது வயதில் விதவையாகி விடுவாள்’ எனக் கூறினார். அதைக்கேட்டு சோமநாதன் வருந்தினார்.
  • சிறிது காலத்தில் தஞ்சைக்கு அருகே உள்ள திட்டையில் உள்ள ஒருவருக்கும், மங்களாவிற்கும் திருமணம் நடைபெற்றது. திட்டைக்கு வந்த நாள் முதல் மங்களா, தனது கணவன் நீண்டநாட்கள் வாழ வேண்டும் என திட்டையில் உள்ள லோகநாயகி அம்மனை வணங்கி வந்தாள். பவுர்ணமி தினத்தன்று எமன் மங்களாவின், கணவனின் உயிரை பறிக்க நெருங்கினான்.



  • இதனை அறிந்து அலறித் துடித்த மங்களா, லோகநாயகி அம்மனை சரணடைந்து, ‘எமனிடம் இருந்து என் கணவனின் உயிரை காப்பாற்றி, எனக்கு மாங்கல்ய பிச்சை கொடு’ என கண்ணீர் மல்க வேண்டினாள். அவளது பிரார்த்தனைக்கு மனம் இரங்கிய லோகநாயகி, மங்களாவின் கையில் விபூதியை கொடுத்து ‘இதை எமன் மீது இடு. உன் கணவன் நீண்ட ஆயுளுடன் இருப்பான். நீயும் நீண்ட நாட்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாயாக’ என ஆசி கூறி மறைந்தார்.
  • மங்களாவும், இறைவியின் ஆணைப்படியே செய்தாள். எமன் மறைந்தான். பின்னர் மங்களா நீண்ட நாட்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்தாள். மாங்கல்ய பிச்சை கொடுத்ததால் இத்தலத்தில் அன்னை மங்களாம்பிகா, மங்களேஸ்வரி என அழைக்கப்படுகிறார்.

குரு பகவான் :
  • நவக்கிரகங்களில் மகத்தான சுப பலம் கொண்டவர் குரு. தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இடங்களை தன் பார்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை படைத்தவர். மேலும் ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களை, தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர். எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி ஏற்பட்டது.
  • இத்தகைய குருபகவான் திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். நவக்கிரகங்களின் வரிசையில் ஐந்தாவதாக இருப்பவர் வியாழ பகவான் எனப்படும் குரு. மற்ற கிரகங் களுக்கு இல்லாத சிறப்பு குருவுக்கு உண்டு. நவக்கிரகங்களில் சூரியன் ராஜா. சந்திரன் ராணி. செவ்வாய் கிரகம் சேனாதிபதி. புதன் இளவரசர். குரு பகவான் ராஜ மந்திரி. மதி நிறைந்த அமைச்சர் என்ற அந்தஸ்தில் உள்ளவர் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
  • இவருக்கு இந்தத் தலத்தில் ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழாவும், அதனையொட்டி லட்சார்ச்சனையும் குருபரிகார ஹோமங்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இங்குள்ள குரு பகவானை வேண்டினால் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இறைவன் மீது சொட்டும் நீர்:
  • நமசிவாய என்பது ஐந்தெழுத்து மந்திரம். அந்த ஐந்து எழுத்தை மனதில் நிறுத்தும் அற்புத வடிவம் லிங்க உருவம். திட்டையில் லிங்க வடிவமாக எழுந்தருளியிருக்கும் மூலவர் வசிஷ்டேஸ்வரர் விமானத்தில், சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. அதற்கும் ஒரு வரலாறு உண்டு.
  • தன் மாமனார் தட்சனால் தினம் ஒரு கலையாக தேய்ந்து அழியும் சாபம் பெற்றார் சந்திர பகவான். தினமும் தேய்ந்து கொண்டே வந்த அவர் திங்களூர் வந்து கயிலாயநாதரை, வணங்கி தவம் இருந்தார். கயிலாயநாதரும் சந்திரனின் சாபத்தை நீக்கி, மூன்றாம் பிறையாக தனது தலையில் சந்திரனை அணிந்து கொண்டார்.
  • திங்களூரில் தன் சாபத்தை போக்கிய சிவபெருமானுக்கு திட்டையிலே தன் நன்றிக் கடன் செலுத்துகிறார் சந்திரன். இறைவனுக்கு மேலே சந்திரக்காந்தக் கல்லாக அமர்ந்து காற்றிலிருந்து ஈரப்பதத்தை ஈர்த்து ஒரு நாழிகைக்கு ஒரு சொட்டாக இறைவனுக்கு நித்யாபிஷேகம் செய்கிறார். 24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒரு முறை இறைவன் மீது ஒரு சொட்டு நீர் விழுவதை இன்றும் காணலாம். உலகில் வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாத அற்புதம் இது.

மகாவிஷ்ணு உருவாக்கிய தீர்த்தம் :
  • இந்த தலத்தில் பசு தீர்த்தம், சூல தீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. பசு தீர்த்தத்தில் ஒரு துளி நீரானது, நம்முடைய சகல பாவங்களையும் போக்கிவிடும் வல்லமை கொண்டது. சூல தீர்த்தமானது சிவ பக்தியில் நம்மை திளைக்கச் செய்து சிவனின் திருப்பாதத்தில் நம்மை ஆட்கொள்ள செய்யும் வல்லமை கொண்டது என்று புராணங்கள் கூறுகின்றன.
  • மகாவிஷ்ணு ஒரு சமயம் யோக நித்திரையில் இருக்கும் போது, மது, கைடவர் என்ற இரு அரக்கர்கள் தோன்றி தேவர்களை துன்புறுத்தினர். நித்திரை அகன்று எழுந்த மகாவிஷ்ணு, அசுரர்களை எதிர்த்து போர் புரிந்தார். அப்போது விஷ்ணு தன் பலம் குறைவதை உணர்ந்தார். தன் பலத்தை புதுப்பித்துக்கொள்ள திட்டையில் தன் சக்ராயுதத்தால் ஒரு குளம் உண்டாக்கி, அதில் நீராடி இறைவனை வழிபட்டார். அதனால் பலம் ஏற்பட்டு அரக்கர்களை அழித்தார். மகாவிஷ்ணுவால் உருவாக்கப்பட்ட குளம் ‘சக்கர தீர்த்தக்குளம்’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.

குரு கிரக பரிகாரங்கள் :
  • வியாழ பகவானுக்குரிய நாளாகிய வியாழக்கிழமையில் விரதம் இருந்து பரிகாரம் செய்யலாம். நீராடி மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து வழிபட வேண்டும். குருபகவானுக்கும் மஞ்சள் நிற ஆடையும், சரக்கொன்றை, முல்லை மலர் களும் கொண்டு அலங்கரிக்க வேண்டும். கடலைப்பொடி சாதம், வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட்ட பின்னர், மற்றவர்களுக்கு தானம் செய்தல் அவசியம்.
  • மஞ்சள் நிற ஆடையையும் தானம் செய்யலாம். கடலை, சர்க்கரை கலந்து குருவுக்கு நிவேதனம் செய்து குழந்தைகளுக்கு தானம் செய்வது சிறப்பு தரும். குரு பகவானின் அதி தேவதைகளான பிரம்மன், இந்திரன் ஆகியோரை வழிபட்டாலும் குரு மகிழ்ச்சி கொண்டு பலன்களை வழங்குவார். ‘அடாணா’ ராகத்தில் குருபகவானின் கீர்த்தனைகளைப் பாடி பிரார்த்தனை செய்வதும் நலம் தரும். ஜாதகத்தில் குரு பலவீனமாகவோ, தோஷத்துடனோ இருந்தால், நவமி அன்று சண்டி ஹோமம் செய்வது சிறப்பான பலனை தரும்.

அமைவிடம் :
  • தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் திட்டை என்னும் கிராமத்தில் இத்தலம் அமைந்துள்ளது. தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பள்ளியக்கிரகாரம் என்ற பகுதியில் இருந்து திட்டைக்கு சாலை பிரிந்து செல்கிறது. தஞ்சையில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது.



No comments:

Post a Comment

[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]