Search This Blog

Thursday, 22 September 2016

திருவெண்காடு – புதனுக்கான நவக்கிரக கோயில்!

இங்கு தவம் செய்த இந்திரனின் வெள்ளை யானையாகிய ஐராவதத்தின் பெயரில் இருந்தே இத்தலத்தின் பெயர் இவ்வாறு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இது தென்னிந்தியாவின் ஒன்பது நவக்கிரக கோயில்களுள் ஒன்றாகும்.
இங்கு தான் சிவபெருமான் தன் ஆறு விதமான தாண்டவங்களை நிகழ்த்தியதாக கருதப்படுகிறது. இது “ஆதி சிதம்பரம்” என்றும் அழைக்கப்படுகிறது.

திருவெண்காட்டின் வரலாறு:

  • முருதுவன் என்னும் அசுரன் சிவபெருமானிடம் இருந்து நிறைய வரங்களைப் பெற்று, அவற்றைக் கொண்டு, தேவர்களை பலவாறாக துன்புறுத்தி வந்தான். அவனிடமிருந்து தம்மை காத்தருளுமாறு, தேவர்கள் சிவபெருமானை வேண்டினர்.
  • சிவபெருமான், தேவர்களை திருவெண்காட்டுக்குச் சென்று மறைவாக இருக்கும்படி அறிவுறுத்தி விட்டு, தன் வாகனமாகிய நந்தியை அவ்வசுரனை அழிப்பதற்கு அனுப்பினார். நந்தியும், அவ்வசுரனை தோற்கடித்து, பின் அவனை கடலுக்குள் தூக்கி எறிந்தது.
  • அதன் பின், அந்த அசுரன் சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்து, அதன் பலனாக, அவரது சூலாயுதத்தை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டான். சூலாயுதத்தோடு திரும்பிய அசுரன், பெரும் பலத்தோடு தேவர்களை தாக்கத் துவங்கினான். மீண்டும் தேவர்கள் சிவனை நாடி, தங்களை காக்கும்படி வேண்டினர். இம்முறையும், சிவன் நந்தியை அனுப்பி வைத்தார்.
  • ஆனால், இம்முறை அசுரனிடம் சிவபெருமான் அளித்த சூலாயுதம் இருந்ததனால், நந்தியால் அவனை தோற்கடிக்க முடியவில்லை. அவன் அந்த சூலாயுதத்தைக் கொண்டு நந்தியை படுகாயமுறச் செய்தான்.
  • அவ்வாறு பெற்ற விழுப்புண்களை இக்கோயிலில் உள்ள நந்தி சிலையில் இன்றும் காணலாம். நந்தி காயமுற்றதைக் கண்ட சிவன், பெருங்கோபமுற்று, தன் மூன்றாவது கண்ணாகிய நெற்றிக் கண்ணைத் திறந்து, அவ்வசுரனை வதம் செய்தார்.
  • அகோரமூர்த்தி வடிவில் உள்ள சிவனின் சிலை, அவரது இப்பெருங்கோபத்தினை நன்கு வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. இந்த அகோரமூர்த்தி வடிவில் உள்ள சிவனை வழிபடுவோருக்கு எப்போதும் எதிரிகளே இருக்கமாட்டார்கள் என்று கூறப்படுகிறது.   
புதன் வரலாறு:
  •  நவகிரகங்களில் நான்காவதாக இடம் பெற்றிருப்பவர், புதன். ‘‘பொன் அகப்பட்டாலும், புதன் அகப்படாது’’ என்ற பெருமைக்குரியவர். மற்ற கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லாத போதுகூட, புதன் அதைச் சரிசெய்து நமக்கு அருள் செய்வார். இதன் காரணமாகவே, புதனுக்குக் கிரக பீடாஹரன் என்ற பெயர் உண்டு. அறிவுத் தெய்வம் இவர். கையில் புத்தகம் வைத்திருப்பார். இவரை வழிபட்டால், கவிபாடும் திறமை வரும். புதனுக்கு பலவிதமான திருநாமங்கள் உள்ளன. அவற்றிலிருந்து, புதனுடைய இயல்புகள் பலவற்றை நாம் அறியலாம்.
  • புதன் அறிவில் சிறந்தவராக இருப்பதால் புத்திமதாம் சிரேஷ்டன், புதன், ஞானி, ஞானிநாயகன் ஆகிய பெயர்கள் அவருக்கு உண்டாயின. அறிவை வழங்குவதால் புத்திதாதா எனவும் அறிவை வளர்ப்பதால் புத்தி விவர்த்தனன் எனவும் புதன் அழைக்கப்பட்டார். பொருள் முதலான செல்வ வளங்களை வழங்குவதால், தனப்ரதன், தயாகரன், தார புத்ர தான்ய பசுப்ரதன் என்ற திருநாமங்களாலும் புதன் அழைக்கப்பட்டார். புதன் மிகுந்த அழகு கொண்டவராக இருப்பதால் கஞ்சநேத்ரன், மனோகரன், சௌமிய மூர்த்தி என்றும் திருநாமங்கள் கொண்டார்.
  • விஷ்ணுவைப் போன்ற  திருவுருவம் உடையவர் ஆதலால், விஷ்ணுரூபி என்றும் இவர் அழைக்கப்பட்டார். நட்சத்திரேசன், லோகப்ரியன் என்ற பெயர்களும் புதனுக்கு உண்டு. இவற்றைத் தவிர ஞானரூபன், ப்ரியாங்கன், சாந்தரூபி, குதிரை வாகனன் என்ற திருநாமங்களையும் கொண்டவர் அவர். மஞ்சள் நிறக் குடையும் சிங்கக் கொடியும் கொண்ட தேரில், புதன் வலம் வருவார். அத்தேரில் நான்கு குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். (எட்டுக் குதிரைகள் என்றும் சொல்வதுண்டு). புதன், ஒருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டவர். மேல் வலக்கையில் வாளையும் இடக்கையில் கேடயத்தையும் ஏந்தி இருப்பார். கீழ் கைகளில் கதையும் வரதமும் இருக்கும்.
  • சங்கீத மூம்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீமுத்துசாமி தீட்சிதர், புதனைப் பற்றி விரிவாகவே பாடியிருக்கிறார். அவர் சொல்லும் தகவல்கள்: புத பகவான், தேவர்களால் துதிக்கப்படுபவர். சந்திரனுக்கும் தாரைக்கும் திருமகன். புலவர் தெரிந்து போற்றும் பிரான். அந்தணரால் மகிழ்ச்சியைப் பெறுபவர். சீரும் செல்வமும் வழங்குபவர். குஜனுக்கு (அங்காரகனான செவ்வாய்க்கு)ப் பகைவர். மணி பதித்த திருமுடி கொண்டவர். மணிமாலை, மணிவளையம் , மணிக்காப்பு ஆகியவற்றை அணிந்தவர். மிதுன ராசிக்கும் கன்னி ராசிக்கும் தலைவர். புத்தகத்தைக் கையில் கொண்டவர்.
  • ஆணும், பெண்ணும் அல்லாத வடிவினர் (ஏன் என்பதற்கான விளக்கம், புதன் வரலாற்றைக் கூறும்போது, பின்னால் வரும்). அடியவர் போற்றும் புகழ் கொண்டவர். சிவனடியார் நலனை விரும்புபவர். எப்போதும் ஆனந்தத்தோடு இருப்பவர். சகல கலைகளையும் கற்று, அறிவில் தலை சிறந்தவராக விளங்கி ஞானி என்ற பெயரைப் பெற்ற புதனின் மனைவி பெயர் ஞானதேவி. இவள் தவிர பிரசங்கி, அப்ரசங்கி என வேறு இரு தேவியர்களும் உண்டு என சித்தாந்த சேகரம் என்னும் நூல் குறிப்பிடுகிறது. புதனுக்கு, அர்த்தப் பிரகரணன் என்ற புதல்வன் ஒருவன் உண்டு என, ஜோதிட நூல் கூறுகிறது. (அப்புதல்வனுக்கு வேறு பெயரும் உண்டு).

புதனுக்கு உரியவை:

வாகனம்- குதிரை;
தானியம் - பச்சைப்பயறு;
மலர் - வெண்காந்தள்;
ஆடை - பசுமை வண்ணஆடை;
மணி - மரகதம்;
உலோகம் - பித்தளை;
அன்னம்  - பச்சைப்பயிறு பொடி அன்னம், வெல்ல அன்னம்;
சமித்து - நாயுருவி;
சுவை - உவர்ப்பு;
கோத்திரம் - ஆத்திரேய;
இனம் - வைசியர்;
நாடு - மகதம்;
மனைவி - ஞானதேவி;
மகன் - கர்த்தவாசுரன்;
வடிவம் - நெடியது;
குணம் - சமத்துவம்;
 ராசி - மிதுனம், கன்னி;
 திசை - வடகிழக்கு;
அதிதேவதை - திருமால்;
பிரத்யதி தேவதை - இரு கரங்கள் கொண்ட நாராயணர்;
தலம் - திருவெண்காடு, மதுரை.

  • ஜோதிட நூல்களின்படி புதன், சுபகிரகம். ஞானத்தையும் அறிவையும் கொடுக்கக்கூடியவர். வாக்கு சாதூரியத்தை அளிப்பவர். மேலும், தாய்மாமன் வகையினர், கல்வி வளர்ச்சி, மகாவிஷ்ணுவின் அருள், வியாபார சம்பந்தமானவை, தூதுவன், தேர்ப்பாகன், ஜோதிட அறிவு, பிரசங்கம் செய்யும் ஆற்றல், வியாபாரத்திறமை, சிற்பத் தொழில் செய்வது, தேர் வாகனம் அமைப்பது ஆகியவற்றிற்கெல்லாம் புதனே காரணமானவர். நவகிரக மண்டலத்தில் சூரியனுக்கு வடகிழக்காக, புதன் அமர்ந்திருப்பார். அவருக்கு வலப்பக்கத்தில் அவரது அதிதேவதையாகிய விஷ்ணு, தன் பரிவாரங்களுடனும், மனைவி மக்களுடனும் எழுந்தருளி இருப்பார்.
  • புதனுடைய பிரத்தியதிதேவதையான நாராயணன், இரண்டு திருக்கரங்களோடு இருப்பார். பிருகு முனிவர், நாராயணருடைய சாந்த இயல்பைச் சோதனை செய்வதற்காக அவரைத் தன் வலது காலால் உதைத்தார். அதனால் சிறிதும் கோபம் கொள்ளாமல், நாராயணன், ‘‘தேவரீர் திருவடிகன் நோகுமே’’ என்று பிருகு முனிவரின் பாதங்களை வருடினாராம். பிருகு முனிவருடைய வலது திருவடியின் சுவடு, நாராயணரின் இடது தோள் அருகில் இருக்கும். இந்த வர்ணனையின்படி அமைந்த, பழைய கால ஓவியம் ஒன்று உண்டு.

No comments:

Post a Comment

[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]