Search This Blog

Friday, 26 August 2016

குரு பகவானின் பரிபூரண அருள் பெற உதவும் - அற்புதமான ஆலயம்

 


கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் திட்டை எனும் ஊரில் அமைந்துள்ளது திருதென்குடித்திட்டை எனும் திட்டை வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற திருத்தலம் இது. திட்டை என்ற பெயர் ஏன்?. புராண காலத்தில் ஊழிப் பெரு வெள்ளத்தால் உலகின் அனைத்து பகுதிகளும் மூழ்கி விட்டது. மும்மூர்த்திகளும் இருள் உலகம் முழுவதையும் சூழ்ந்து விட்டதை கண்டு மனம் கலங்கினர். அச் சமயம், ஒரு பகுதி மட்டும் சற்று மேடாக, திட்டாக காணப்பட்டதை கண்டனர். விரைந்தனர் அப் பகுதிக்கு. அங்கு "ஹம்" என்ற ஒலியுடன் பல விதமான மந்திர ஒலிகளும் கேட்டனர். அப்பொழுது ஜோதி சொரூபமாய் சிவ பெருமான் தோன்றக் கண்டனர். அவரை போற்றி துதித்தனர். மும் மூர்த்திகளின் வேண்டுதலுக்கு இணங்க இத் தலத்திலேயே வீற்றிருந்து அருள் புரியலானார்.

இறைவனும், இறைவியும்
இறைவன் வசிஷ்டேஸ்வரர். தாமாகவே தோன்றிய சுயம்பு மூர்த்தி. தேரூர் நாதர், பசுபதி நாதர், ரதபுரீஸ்வரர், தேனுபுரீஸ்வரர், அனந்தீஸ்வரர் என்றெல்லாம் வணங்கப்படுகின்றார். யம தர்மன் சாப விமோஷனம் பெற்ற தலம் இது. சனீஸ்வரன் நவ கோள்களில் ஒன்றாக விளங்கும் அருள் பெற்றது இத் தல இறைவனை வேண்டியே. பரசுராமர், கார்த்த வீர்யார்ச்சுனன், முருகன், பைரவர் போன்றோர் வழிபட்ட திருக்கோவில் இது. இறைவி உலகநாயகி. சுகந்த குந்தளேஸ்வரி, மங்களேஸ்வரி என்றும் வழிபடப்படுகின்றாள். இத் தல அம்பிகையை வழிபட்டு சுகந்த குந்தலா எனும் பெண்ணொருத்தி இழந்த தன் கணவனை உயிருடன் மீட்டாள் என்கிறது தல புராணம். மங்களா எனும் வைசியப் பெண்ணொருவள் தன் விதவைக் கோலம் நீங்கி நீடூழி வாழ்ந்து மணித்வீபம் சென்றாள். சங்க பால மன்னன் என்பவன் தன் இறந்து போன மத்சலாவை உயிருடன் மீண்டும் பெற்று இழந்த தன் அரசையும் இத் தல இறைவனை வழிபட்டே பெற்றான்.

சிறப்பு மூர்த்தியாய் குரு பகவான்
அனைத்து சிவாலயங்களைப் போலவே இங்கும் தெட்சிணாமூர்த்தி தென் புறத்தில் அமர்ந்திருக்கின்றார். சுவாமிக்கும் அம்பாள் சந்நதிக்கும் இடையில் குரு பகவான் ராஜ குருவாக நின்ற கோலத்தில் தனி விமானத்துடன், தனி சந்நதி கொண்டு காட்சி தருகின்றார். பெரும்பாலான குரு தலங்களில் குருவின் அதிதேவதையான தெட்சிணாமுர்த்தியே குருவாக பாவித்து வணங்கப்படுகின்றார். ஆனால், இத் தலத்தில் மட்டுமே குரு பகவான நவக்கிரக அமைப்பில் உள்ளது போல் தனி சந்நதியில் காட்சி அருள்கின்றார். இவரே இத் திருத்தலத்தின் சிறப்பு மூர்த்தியாவார். இத் தலத்தில் குரு பகவானுக்கு உற்சவ மூர்த்தியும் உண்டு. திருவிழா நாட்களில் இறைவனுடன் இவரும் வீதி உலா செல்வார். இத் திருத்தலத்தை தவிர குரு பகவான் வீதி உலா செல்வதை வேறு எங்கும் காண இயலாது. இது இத் தலத்தின் மிகப் பெரும் சிறப்பு.

குரு பார்க்க கோடி நன்மை
குரு பகவான் சப்த ரிஷிகளில் நடுவரான ஆங்கிரஸ மகிரிஷியின் புதல்வரே. இவரே தேவர்களுக்கு வழிகாட்டியாகவும் திகழ்கின்றார். ஜோதிட ரீதியாக ஐந்தாவது இடத்தில் இருக்கும் குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். உயர் பதவி, கல்வி, செல்வம், குடும்பத்தில் மகிழ்ச்சி இவற்றை சந்தோஷமாக அருள்பவர். குரு பகவான் முழுச் சுபர். தோஷங்களை நீக்குவதில் வல்லவர். கேதுவின் தோஷத்தை ராகுவும், ராகு, கேது இருவரின் தோஷங்களை சனியும், ராகு கேது தோஷத்தை புதனும், புதன் உட்பட ஐவரின் தோஷத்தை சந்திரனும் போக்க வல்லவர்கள். ஆனால் குரு பகவானோ அனைத்து நவக்கிர தோஷங்களையும் போக்க வல்லவர். எனவேதான் " குரு பார்க்க கோடி நன்மை " என்பர்.

பஞ்ச லிங்க ஷேத்திரம்
இத் திருக்கோயிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. மூலவர் சுயம்பு லிங்கமாக ஐந்தாவதாய் எழுந்தருளியுள்ளார். எனவே இத் தலம் பஞ்ச பூதங்களுக்கும் உகந்த ஸ்தலமாக விளங்குகின்றது. திருகாளத்தி, திரு அண்ணாமலை, திருவானைக்காவல், சிதம்பரம் மற்றும் காஞ்சிபுரம் என்ற பஞ்ச பூத தலங்களும் ஒருங்கிணைந்த தலமாக விளங்குகின்றது இத் திருதென்குடித்திட்டை திருக்கோவில்.

திருக்கோவிலின் அமைப்பும், சிறப்பும்
கிழக்கு நோக்கிய ராஜ கோபுரத்துடன் திகழ்கின்ற இத் திருத்தலம் முற்றிலும் கருங்கற்களை மட்டுமே கொண்டு கட்டப்பட்டுள்ளது. நிறைய கோவில்கள் இவ்வண்ணம் கருங்கற் கோவில்களாக விளங்குகின்றன. ஆனால், இத் திருத்தலத்தில் மட்டுமே கொடி, கலசங்களும் கூட கருங்கற்களை கொண்டு வடிவமைக்கப்படுள்ளன. இப் பேரழகினை காண கண் கோடி வேண்டும்.

சந்திர காந்தக் கல்லும், சூரிய காந்தக் கல்லும்
இத் திருக்கோவில் அக்கால கட்டிடக் கலைக்கு ஓர் சிறந்த உதாரணம். கோவிலின் மூலவர் விமானத்தில் சந்திர காந்தக் கல் மற்றும் சூரிய காந்தக் கல் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சந்திர காந்தக் கல் சந்திரனிடமிருந்து குளுமையை வாங்கி 24 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு சொட்டு நீரை மூலவர் லிங்கத்தின் மீது தாமாகவே அபிஷேகம் செய்கின்றது. சிவ பெருமான் , சந்திரனது சாபத்தினை நீக்கி, தன் சிரசில் இருக்க இடம் கொடுத்ததால் சந்திரன் தன் நன்றிக் கடனாக அனு தினமும் இவ்வாறு அபிஷேகம் செய்வதாக ஐதீகம். இந்த அதிசயம் உலகில் வேறெங்குக் காண இயலாத ஒன்று.

தல விருட்சங்கள்
திருக்கோவிலின் முன் உள்ள சக்கர தீர்த்தம் எனும் திருக்குளம் தல தீர்த்தமாகும். இது மஹா விஷ்ணுவின் சக்ராயுதத்தால் உண்டாக்கப்பட்டது. விநாயகர் அருளுடன் சகல சித்திகளையும் அளிக்க வல்லது. இங்கு தேவர்களும், தேவ மாதாக்களும் மரம், செடி, கொடிகளாக மாறி தல விருட்சமாக அருள்கின்றனர். இங்கு மற்ற கோவில்களை போலன்றி தல விருட்சங்கள் பல, ருத்ரன் ஆல மரமாகவும், ருத்ராணி ஸமி மரமாகவும், விஷ்ணு அரச மரமாகவும், லஷ்மி வில்வ மரமாகவும், மற்றைய தேவர் அனைவரும் செடி, கொடிகளாகவும் திருத்தல விருட்சங்களாகவும் அருளுகின்றனர்.

சனி தோஷம் உள்ளவர்கள், அர்த்தாஷ்டம சனி, ஏழரைச் சனி மற்றும் அஷ்டமச் சனி தோஷம் உள்ளவர்கள் ,இத் தல பசு தீர்த்தத்தில் நீராடி, பசுபதீஸ்வரரை வேண்டி, நவக்கிரகங்களை வலம் வந்து, சனி பகவானுக்கு அர்ச்சனை செய்தால் தோஷங்கள் நிவர்த்தியாகின்றன. 

 ************

No comments:

Post a Comment

[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]