Search This Blog

Monday, 17 October 2016

சீதை பூமிக்குள் மறைந்த இடம் :::: “சீதா சமாஹித் ஸ்தல்’


  • இராமாயண பெருங்காப்பியம் சொல்லும் அறவழிகள் ஏராளம். அதேசமயம், அவற்றை மக்களுக்கு உணர்த்த வந்த இறையவதாரங்களான ராமன், சீதை, லட்சுமணன், பரதன், சத்ருக்னன் ஆகியோர் அடைந்த துன்பங்களோ அதைவிட ஏராளம். அதிலும் சீதாபிராட்டி பட்ட துயரம் சொல்லித் தீராது.
  • சீதாப்பிராட்டியின் முதற்கட்ட வாழ்க்கை இனிமையாகத்தான் இருந்தது. ராமபிரான் கரம் பற்றியபின் அது பன்மடங்கு இனியதாக மாறியதும் உண்மை. ஆனால் இராவணனால் அபகரிக்கப்பட்டபின் அத்தனையும் தலை கீழாய் மாறிப்போனது.அசோக வனத்தில் அவள் அனுபவித்த கொடுமை கொஞ்சமல்ல. “உலகங்கள் யாவும் என் சொல்லினால் சுடுவேன்- அது தூயவன் வில்லின் ஆற்றலுக்கு மாசென்று வீசினேன்’ என சீதையின் நிலையைச் சொல்லுகிறார் கம்பர்.
  • தன் சொல்லாலேயே உலகங்களையெல்லாம் எரிக்கவல்ல ஜானகிதேவி, அத்தனை துயரத்திலும் அந்த ஆற்றலைப் பயன்படுத்த வில்லை. ராமனால் மீட்கப்பட்டு அவன் வில்லுக்குப் பெருமை சேர்க்கவேண்டும் என்பதற்காகவே பெருந்துன்பங்களையும் தாங்கிக் கொண்டு உயிரையும் விடாமல் காத்திருந்தாள். அவள் நினைத்தது நடந்தது. இராமன் அம்புகள் அரக்கர்களை அழித்தன. சீதையும் விடுவிக்கப்பட்டாள். நெடும்பிரிவுக்குப்பின் மணாளனைக் கண்ட மகிழ்ச்சியை அவளால் வெகுநேரம் அனுபவிக்க முடியவில்லை.
  • அக்னி பரீட்சை என்னும் சோதனை அப்போதே ஆட்கொண்டது. அதிலிருந்து மீண்ட சீதையால் சிலகாலம் மட்டுமே நிம்மதியுடன் இருக்க முடிந்தது. யாரோ ஒரு குடிமகன் சொன்ன பழிச்சொல், சீதையின் வாழ்வில் பெரும் துயரமலையைக் கொண்டுவந்து போட்டது.
  • எந்தக் கணவனின் நினைவிலேயே அனுதினமும் வாழ்ந்தாளோ- அந்த ராமனாலேயே காட்டுக்கு அனுப்பப்பட்டாள் சீதாபிராட்டி- அதுவும் கருவுற்ற நிலையில்!
  • கானகத்திலிருந்த வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் அவளது பிற்கால வாழ்க்கை கழிந்தது. ஜனக மன்னனின் மகளாகப் பிறந்தவள்- தசரத சக்கரவர்த்தியின் மருமகளாக ஆனவள்- எதிர்ப்பாரற்ற ராஜாராமனின் பத்தினியாக வந்தவள்- தற்போது கானகத்தில் ஒரு ஏழைப்பெண்ணின் எளிய வாழ்க்கையை மேற்கொண்டாள். அங்கே அவளுக்கு ஆறுதல் தந்தவர்கள்- கானகத்தில் பிறந்த சீதாராம புத்திரர் களான லவனும் குசனும்தான்.
  • அயோத்தியில் ஸ்ரீராமன் அஸ்வமேத யாகம் நடத்தினார். அதற்கான யாக குதிரை பல நாடுகளுக்கும் சென்றுவரும். அந்த குதிரையை யாராவது கைப்பற்றினால், அவரை வென்று குதிரையைக் கொண்டுவந்து யாகத்தை நிறைவு செய்யவேண்டும். அவ்வாறு வந்த யாக குதிரையை லவனும் குசனும் கைப்பற்றுகிறார்கள்.அவர்களை வென்று குதிரையை மீட்க லட்சுமணனாலும் இயலாமல் போகிறது. இறுதியில் ராமனே போருக்கு வருகிறார். இவர் தங்கள் தந்தையென்று பிள்ளைகளுக்குத் தெரியவில்லை; இவர்கள் தம் மக்கள் என்று ராமனுக்குத் தெரியவில்லை. போர் தொடங்குகிறது. ராமனின் அனைத்து பானங்களையும் எதிர்கொள்கிறார்கள் பிள்ளைகள்.
  • அதற்குள் இந்த விவரம் சீதாபிராட்டிக்குத் தெரியவர, பதறிப்போய் ஓடிவருகிறாள் சீதை. அப்போது ராமபிரான் தன் ராமாஸ்திரத்தையே எடுத்துவிட்டார். சீதாபிராட்டியின் ஓலம் அவரை ஸ்தம்பிக்கச் செய்கிறது. நெடுநாள் பிரிந்திருந்த கணவனை போர்க்கோலத்தில்- அதுவும் தன் பிள்ளைகளுக்கெதிராகக் காணுகிறாள் சீதை. அவள் மனம் என்ன பாடுபட்டிருக்கும்!
  • அங்கே போர் நின்று விடுகிறது. உண்மையை உணர்ந்த பிள்ளைகள் தந்தையின் பாதம் பணிகிறார்கள். தந்தையும் தன் வாரிசுகளை மார்புறத் தழுவிப் பேரானந்தம் அடைகிறார். அங்கே தனியாக நிற்கிறாள் சீதை.
  • ராமபிரானுடன் அயோத்தி செல்ல அவள் விரும்பவில்லை. தான் பரிசுத்தமானவள் என்பதை நிரூபிக்கவேண்டிய கடமை இன்னும் மிச்சமிருப்பதாக உணர்கிறாள். அதுவும் தனக்காக இல்லை- தன் கணவனுக்காக!
  • அப்போது- தான் எந்த பூமித்தாயின் மடியிலிருந்து பிறந்தாளோ அந்த பூமித்தாயை அழைக்கிறாள். “தாயே! பூமி மாதா! என் கணவரின் திருவடிகளையே நான் எப்போதும் எண்ணியிருந்தது உண்மையானால்- என் மணாளனின் திருநாமத்தை எப்போதும் உள்ளத்தில் உச்சரித்த வண்ணமிருந்தது உண்மையானால், என்னை உனக்குள் ஏற்றுக்கொள்” என்கிறாள்.
  • அடுத்த கணம் அது நடக்கிறது. வானமும் பூமியும் நடுங்கும் வண்ணம் பேரோசை உண்டாகிறது. சிவ- பார்வதி தரிசனம் காண்கிறாள் சீதை. அடுத்து பூமி பிளவுபடுகிறது. அதிலிருந்து வெளிப்பட்ட பொன்னாசனத்தில் அமர்ந்திருக்கும் பூமாதேவி சீதாபிராட்டியை தன்னோடு அமரவைத்து தழுவிக்கொள்கிறாள். ஆசனம் பூமிக்குள் சென்று மறைய, பூமி முன்புபோல மூடிக்கொள்கிறது. பாரத பூமியைப் புனிதப்படுத்த வந்த சீதை எனும் மாபெரும் தியாகத்தின் சகாப்தம் அங்கே நிறைவு பெறுகிறது.
  • உத்தர ராமாயணம் கூறும் இந்த சம்பவம் நடந்த இடம் தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது. இதை “சீதா சமாஹித் ஸ்தல்’ என்று அழைக்கிறார்கள். அதாவது சீதாபிராட்டி பூரணமடைந்த தலம். இங்கே சீதைக்கென்று ஒரு ஆலயம் அமைந்துள்ளது. மூன்று பக்கமும் குளம். ஒரு பக்கம் கோவில். ஆலயத்திலுள்ள சீதையின் சிற்பம், எல்லா நிகழ்வுகளையும் நமக்கு உணர்த்திவிடும் உயிரோவியமாயத் திகழ்கிறது.
  • இந்த ஆலயம் சுமார் இருபது ஆண்டு களுக்குமுன் கட்டப்பட்டதுதான். அதற்குமுன் வெட்டவெளியாக இருந்த இடத்தையே பக்தர்கள் தரிசித்து வந்தார்கள். ஆலயத்தின் அருகே கயிலையில் சிவன் வீற்றிருப்பதுபோன்ற தோற்றம் அமைக்கப்பட்டுள்ளது. ஆஞ்சனேயரின் திருவுருவமும் உள்ளது. இங்கிருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் வால்மீகி ஆசிரமம் உள்ளது.
  • அங்கே சிவலிங்கப் பிரதிஷ்டையும், ஆஞ்சனேயர், வால்மீகி, லவன், குசன் உருவங்களும் உள்ளன.இந்த தலத்திற்குச் செல்லும்போது மாபெரும் தியாகத்தின்- அன்பின்- கருணையின் மடியில் இருப்பதாகவே உணர்கிறோம்.seedha3
  • கணவன்- மனைவி பிணக்கு தீர்ந்து ஒற்றுமை உண்டாகவும்; மனக்குழப்பம் நீங்கவும்; மனஅமைதி கிட்டவும் பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.
  • அலகாபாத்திலிருந்து காசி செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 60 கிலோமீட்டர் சென்று, அங்கிருந்து செல்லும் பிரிவுச்சாலை யில் 14 கிலோமீட்டர் சென்றால் இந்த தலத்தை அடையலாம். உத்தரப்பிரதேச மாநில சுற்றுலாத்துறை பயண ஏற்பாடுகளைச் செய்து தருகிறது.

No comments:

Post a Comment

[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]