கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் கரூரில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் அமராவதி ஆற்றின் கரையில் அமைந்து உள்ளது அருங்கரை அம்மன் கோவில். இந்த கோவிலுக்கு உள்ளே சென்று வழிபட ஆண்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. சிறப்பு வாய்ந்த இந்த கோவிலின் தல வரலாற்றை இங்கே காண்போமா!
வலையில் சிக்கிய அம்மன் :
- முன்னொரு காலத்தில் இந்தப் பகுதியில் வசித்த மீனவர்கள் அமராவதி ஆற்றில் மீன்பிடிக்கும் தொழில் செய்து வந்தனர். ஒரு முறை மீனவர் ஒருவர் ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் வீசிய வலையில் மீன்களோடு சேர்ந்து ஒரு பெட்டியும் சிக்கியது. அந்தப் பெட்டியை அவர் திறந்து பார்த்தார். அதற்குள் ஒரு அம்மன் சிலை இருந்தது. அந்தச் சிலையைப் பார்த்ததும் மீனவர் ஆச்சரியத்தில் உறைந்து போனார். தனக்கு அருள்புரிவதற்காகவே அந்த அம்மன், தனது வலையில் வந்து இருப்பதாக எண்ணினார்.
- பின்னர் அந்தப் பெட்டியை, ஆற்றங்கரையில் இருந்த ஒரு மரத்தின் அடியில் வைத்து தினமும் அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டு வந்தார். அவரை பார்த்து மற்ற மீனவர்களும் மரத்தின் அடியில் இருந்த அம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபடத் தொடங்கினார்கள். காலப்போக்கில் மீனவர்கள் அந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்தனர். இதனால் அம்மன் இருந்த பெட்டி மணல் மூடி மண்ணுக்குள் புதைந்து விட்டது. பெட்டி வைத்திருந்த இடத்தில் ஒரு சிறிய மேடு மட்டும் இருந்தது.
- இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு பின்னர் அந்த பகுதியில் சிலர், கால்நடைகளை மேய்க்கும் தொழிலை செய்து வந்தனர். அவர்களில் நல்லதாய் என்ற சிறுமியும் இருந்தாள். ஒரு முறை அந்தச் சிறுமி, கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது அதிசயம் ஒன்று நிகழ்ந்தது. பசுக் கூட்டத்தில் இருந்து தனியாக பிரிந்து சென்ற பசு ஒன்று, மணல் மேடாக இருந்த இடத்தின் கீழ் நின்றபடி தானாகவே பாலை சுரந்தது.
- அதனை கண்ட சிறுமி வியப்படைந்து அருகில் சென்று பார்த்தாள். அப்போது பசுமாடு பால்சொரிந்த இடத்தில் ஒரு மேடான பகுதி இருந்தது தெரிய வந்தது. அந்த மேட்டின் மீது சிறுமி அமர்ந்தாள். அவ்வாறு அமர்ந்த அந்த சிறுமி, அதன் பின்னர் அந்த இடத்தை விட்டு எழவே இல்லை. சிறுமி மேய்ப்பதற்காக ஓட்டி வந்த கால்நடைகள் மட்டும், மாலையில் அந்தந்த வீடுகளுக்கு திரும்பிச் சென்றன. சிறுமியைக் காணாததால், அந்தக் கிராமத்தில் இருந்த ஆண்கள் அனைவரும் சிறுமியை தேடி அமராவதி ஆற்றுப் பகுதிக்கு சென்றனர்.
- அந்தப் பகுதி முழுவதும் சல்லடை போட்டு சிறுமியை தேடிப்பார்த்தனர். அப்போது அங்கு உள்ள ஒரு மரத்தின் அடியில் இருந்த மணல் திட்டின் மேல் சிறுமி கண்களை மூடி அமர்ந்திருப்பதைக் கண்டனர். அந்தச் சிறுமியின் அருகில் சென்ற அவர்கள், சிறுமியை வீட்டிற்கு வருமாறு அழைத்தனர். ஆனால் சிறுமியோ அங்கிருந்து வர மறுத்து விட்டாள். ‘ஏன் வர மறுக்கிறாய்?’ என்று அவர்கள் சிறுமியிடம் கேட்டபோது, ‘நான் இங்குதான் இருக்க விரும்புகிறேன். என்னை கண்ட இந்த நாளில், இதே நேரத்தில் மட்டும் எனக்கு பூஜை செய்து வழிபடுங்கள்’ என்று சொல்லி விட்டு அந்த இடத்தில் இருந்து ஜோதியாக மாறி மறைந்து விட்டாள்.
- இதனால் ஆச்சரியம் அடைந்த ஆண்கள் அனைவரும் அங்கு நடந்த சம்பவத்தை ஊருக்குள் சென்று தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் அந்த கிராம மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக அந்த இடத்துக்கு திரண்டு வந்து பார்த்தனர். பின்னர் அவர்கள் அந்த சிறுமியை அம்பாளாக எண்ணி உருவம் எதுவும் இல்லாமல் வழிபட்டு வந்தனர். நீண்ட காலத்திற்கு பின்னர் அந்த இடத்தில் கோவில் கட்டப்பட்டது. சிறுமியை தேடி ஆண்கள் இந்த பகுதிக்கு வந்தது செவ்வாய்க்கிழமை நள்ளிரவு என்பதால் செவ்வாய்க்கிழமை மட்டும் இந்த கோவில் திறக்கப்பட்டு நள்ளிரவில் பூஜை நடக்கிறது. மற்ற நாட்களில் இரவும், பகலும் கோவில் நடை அடைக்கப்பட்டே இருக்கும்.
- ஆண்கள் மட்டுமே இந்த கோவிலுக்குள் சென்று வழிபடுகின்றனர். பெண்களுக்கு இந்த கோவிலுக்குள் சென்று வழிபடுவதற்கு அனுமதி இல்லை. கோவில் வாசலில் மட்டும் அவர்கள் நின்று வழிபடலாம். பெண் குழந்தைகள் கூட கோவிலுக்குள் செல்வதற்கு அனுமதி கிடையாது. வெளியில் நின்று அம்மனை வணங்கும் பெண்கள், அமராவதி ஆற்றில் குளித்து விட்டு தலையை முடியாமல், ஈரத்துணியுடன் அம்மனை வழிபட வேண்டும்.
- கோவிலில் அம்மனுக்கு பூஜைகள் முடிந்த பின்னர் அம்பாளுக்கு படைக்கப்பட்ட பூஜை பொருட்கள் மற்றும் நேர்த்திக்கடனாக செலுத்தும் வாழை உள்பட பல்வேறு தானியங்கள் போன்றவற்றை கோவிலின் முன் மண்டபத்தில் இருந்து சூறை விடுகின்றனர். அப்போது அங்கு உள்ள பெண்கள் சூறை விடும் பொருட்களை தங்களது சேலை தலைப்பில் பிடித்து கொள்கின்றனர். பிரசாத பொருட்களின் வடிவில் அம்மன் பெண்களுக்கு அருளுவதாக பக்தர்களின் நம்பிக்கை.
- அருங்கரை அம்மன் கோவிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் தங்களது குடும்பம் சிறக்க, விவசாயம் செழிக்க அம்மனிடம் வேண்டிக்கொள்கின்றனர். இந்த கோவிலில் உள்ள காவல் தெய்வங்களுக்கு கிடா வெட்டியும், குதிரை பொம்மைகள் செய்து வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அம்மன் மற்றும் கோவிலில் உள்ள காவல் தெய்வங்களுக்கு கிடா வெட்டியும், அன்னதானம் செய்தும் தங்கள் நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்துகிறார்கள்.
- தொடக்கத்தில் இந்த அம்மன் நல்லதாய் என்று அழைக்கப்பட்டார். பின்னர் ஆற்றங்கரையின் அருகே அமர்ந்த அம்மன் என்பதால் இவரை அருங்கரை அம்மன் என்று பக்தர்கள் அழைக்க தொடங்கினர். காலப்போக்கில் இந்த பெயரே நிலைத்து விட்டது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வேண்டுமானால் கரூரில் இருந்து சின்னதாராபுரம் வந்து பின்னர் அங்கிருந்து வெள்ளக் கோவில் செல்லும் டவுன் பஸ்சில் ஏறி கோவில் வாசலில் இறங்கி கொள்ளலாம்.
- மற்ற பிற வாகனங்களில் செல்ல விரும்புபவர்கள் சின்னதாராபுரம், அணைப்புதூர், பெரியமதியாகூடலூர் வழியாகவும், தென்னிலை, கருநெல்லிவலசு, பெரியதிருமங்கலம் வழியாகவும் கோவிலுக்கு செல்லலாம். செவ்வாய்க்கிழமை தோறும் இந்த கோவிலுக்கு சின்னதாராபுரத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
**************************
No comments:
Post a Comment