Search This Blog

Friday, 5 August 2016

அம்பிகை அருள் பெருக்கும் ஆடிப்பூரம்





🙏ஆடி மாதம் மற்றும் தை மாதம் அம்பிகைக்கு மிகவும் விசேஷம். ஆடி மாதம் தட்சிணாயனத்தின் தொடக்கம். இதுவரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சூரிய பகவான் தெற்கு நோக்கி பயணத்தைத் தொடங்கும் மாதம். உத்தராயணம் சிவபெருமானை வழிபட உகந்தது என்றால் தட்சிணாயனம் அவரது வாம பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு உரிய காலமாகும். மேலும் தட்சிணாயனத்தின் தொடக்கமான ஆடியும், உத்தராயணத்தின் தொடக்கமுமான தை மாதமும் உலகாளும் அம்பிகைக்கு உகந்த மாதங்களாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

🙏வடக்கே இமாசலத்தில் பர்வத ராஜகுமாரியாகப் பிறந்தவள், தென்கோடியில் கன்னியாகுமரியாக நிற்கிறாள். மலையாளத்தில் பகவதியாகவும், கர்நாடகத்தில் சாமுண்டீஸ்வரியாகவும், சோழ தேசத்தில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரியாகவும், பாண்டி நாட்டில் மீனாட்சியாகவும், ஆந்திரத்தில் ஞானாம்பிகையாகவும், மராட்டியத்தில் துளஜா பவானியாகவும், குஜராத்தில் அம்பாஜியாகவும், பஞ்சாபில் ஜ்வாலாமுகியாவும், காஷ்மீரத்தில் க்ஷீர பவானியாகவும், உத்திரபிரதேசத்தில் விந்திய வாசினியாகவும்,
வங்காளத்தில் காளியாகவும், அஸ்ஸôமில் காமாக்யா ஆகவும் இப்படி தேசம் முழுவதிலும் பல ரூபங்களில் கோயில் கொண்டு நமக்கு அருள்பாலிக்கிறாள் அம்பிகை.
தேவிக்குரிய திருநாள்களில் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் "ஆடிப் பூரத் திருநாள்' மிகவும் சிறப்பானது. ஆடிப்பூரத்தன்று வைணவத் திருக்கோயில்களில்
ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. திருமணமாகாத பெண்கள் இந்நன்னாளில் ஆண்டாளை வணங்கினால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

🙏தேவிக்குரிய இத்திருநாளில் சித்தர்களும் யோகிகளும் தங்களது தவத்தை துவக்குவதாகப் புராணங்கள் கூறுகின்றன.தாய்மை பெண்களுக்கே உரித்தான ஒரு தனிச் சிறப்பு. பெண்களுக்கு வளையல் காப்பு நடத்துவதுபோல, நம்மைப் படைத்த அன்னைக்கு வளைகாப்பு நடத்தி மகிழ்ந்திடும் நாளே ஆடிப் பூரம். அம்பிகைக்கு வளையல்களால் அலங்காரம் செய்து வழிபட்டு அந்த வளையல்கள் பெண்களுக்குப் பிரசாதமாக அளிக்கப்படுகிறது. அன்று அம்பிகைக்கு சித்ரான்னங்களும், ஆடிக் கூழும் படைத்து மக்கள் மகிழ்வர்.
🙏திருநெல்வேலி காந்திமதி அம்மனுக்கு ஆடிப்பூர விழாவின் 4 ஆம் நாளன்று ஊஞ்சல் மண்டபத்தில் வளைகாப்பு விழா நடைபெறுகிறது. இந்த அம்பிகையை வழிபடுவோர் திருமணம், பிள்ளைப்பேறு பெறுகின்றனர். சிலர் வீட்டில் முளைப்பாலிகை வைத்து அதை கோயிலில் சேர்க்கின்றனர். ஆடிப்பூர விழா, பல்வேறு ஆலயங்களில் வாகன சேவையுடன் 10 நாள் திருவிழாவாகவும் நடைபெறும்.
ஆண்டாள், ஆடி மாதம், பூர நட்சத்திரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள துளசி தோட்டத்தில் அவதரித்தாள். ஆண்டாளின் இயற்பெயர் கோதை. இவளே வட மாநிலங்களில் கோதாதேவி என்று கொண்டாடப்படுகிறாள். எம்பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில் பூமி பிராட்டியும் ஆடிப்பூர நாளில் அவதரித்தாள். தன்னையே அரங்கனாகப் பாவித்து மகிழ்ந்த ஆண்டாளின் அவதார நன்னாள் ஆடிப் பூரம் ஆகும். இந்நாளில் ஆண்டாளை தரிசிப்போர் ஆனந்த வாழ்வு பெறுவர்.

🙏ஸ்ரீரங்கப் பெருமான் தேவியைக் கரம் பற்றித் தன்னுடன் சேர்த்துக் கொண்ட திருநாளை உணர்த்தும் விதமாக ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆடித் திருவிழாவின் 7ஆம் நாள் ஆண்டாளின் மடியில் சயனித்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார் ஸ்ரீ ரெங்கநாதர். இந்த ஊரில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் நடக்கும் இந்நிகழ்ச்சி மிகவும் விசேஷமானது. இக் காட்சியை தரிசிக்கும் தம்பதியரிடையே ஒற்றுமை மேலும் பலப்படும்.
🙏வளையல் வியாபாரி ஒருவர் பெரியபாளையம் வழியாக வந்து கொண்டிருந்தபோது களைப்பு மேலிட அங்கிருந்த ஒரு வேப்பமரத்தடியில் படுத்து உறங்கியவர், கண்விழித்துப் பார்த்தபோது, அவர் வைத்திருந்த வளையல் பெட்டியைக் காணாது துணுக்குற்றார். அன்றிரவு அம்பாள் அவர் கனவில் தோன்றி, ""நான் ரேணுகா பவானி!
அப்பா, நீ கொண்டுவந்த வளையல்கள் என் கையை அலங்கரித்து இருக்கிறது பார்! பல யுகங்களாக பெரியபாளையம் வேப்பமரத்தினடியில் புற்றில் சுயம்புவாக வீற்றிருக்கும் என்னை வணங்குபவர்களின் வாழ்க்கை செழிக்கும்'' எனக் கூறி மறைந்தாள். வியாபாரி அனைவரிடமும் தாம் கண்ட கனவைப் பகிர்ந்து கொண்டு திருக்கோயில் எழுப்ப உதவினார்.

🙏அம்பாளுக்கு மலர், பழம், காய்கனி, நகை, மஞ்சள், சந்தனம், குங்குமம் இதுபோன்று பல அலங்காரங்கள் நடைபெறுவது போல ஆடிப் பூரத்தன்று அனைத்து ஆலயங்களிலும் விசேஷமாக வளையல்களால் அலங்கார வைபவம் நடைபெறும். பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசியம் தரிசிக்கவேண்டிய திருத்தலம் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஸ்ரீ ஹரி தீர்த்தேஸ்வரர் கோயிலாகும். அம்பாள் பெரிய நாயகி நின்ற திருக்கோலத்தில் அருள்கிறாள்.

🙏கல்மாஷபாதன் மன்னனுக்கு நீண்ட காலமாகியும் பிள்ளைப் பேறு இல்லாததால் அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி இத்தலம் வந்தான். இடையர்கள் கொண்டுவரும் பூஜை பொருட்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இடறி விழுவதை அறிந்த மன்னன், தன் வாளால் பூமியில் கீறிப் பார்க்க, பூமியில் இருந்த சிவலிங்கத்தின் சிரசில் இரத்தம் பீச்சியடித்தது. இதைக் கண்ட மன்னன், தான் மாபெறும் தவறு இழைத்துவிட்டதாக புலம்பி, தன் உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்டான். இறைவன் மன்னனை தடுத்தாட்கொள்ள, பார்வதி தேவியுடன் ஆடிப் பூரத்தன்று திருமணக் கோலத்தில் தரிசனம் கொடுத்தார். இறைவனின் அருளால் மன்னன் கோயில் கட்டினான். ஆண் குழந்தையும் பிறந்தது.

ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திரம் உச்சமாக இருக்கும். இந்நாளில் ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பணம் வைத்து கொடுப்பது நல்லது. இன்று மஞ்சள் தாலி கட்டிக்கொள்ள தீர்க்க சுமங்கலியாய் இருப்பர். ஆடிப்பூரம் அன்று சக்தி ஸ்தலங்களில் அம்மன் ஆலயங்களில் வழிபட கேட்கும் வரம் கிடைக்கும். ஆரோக்யம், செல்வ செழிப்பு உண்டாகும்.

🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]