🙌இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருத்தல தரிசனம், நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருக்செங்கோடு.
.
🙏திருத்தல அமைப்பு:
கொடிமாடச் செங்குன்றத்தூர் என்னும் பெயருடைய திருச்செங்கோடு திருத்தலம், கொங்குநாட்டு பாடல் பெற்ற திருத்தலங்கள் ஏழில், மூன்றாவது திருத்தலமாக அமைந்துள்ளது. ஏறக்குறைய 2000 வருடங்களைத் தாண்டி இன்றும் செந்நிற மலை மேலே கம்பீரமாய் அமையப் பெற்றுள்ளது இத்தலம்.
இந்த திருச்செங்கோடு திருமலை சோணகிரி, இரத்தகிரி, சேடமலை, வாயுமலை, மேருமலை என பல்வேறு பெயர்களைக் கொண்டு விளங்குகிறது.
ராசிபுரத்தில் இருந்து சாலை மார்க்கமாக இத்திருத்தலத்தினை காணச் செல்லும்போது, சுமார் 15 km முன்பாகவே இந்த தெய்வீக மலையின் முழுத் தோற்றம் காணக் கிடைக்கிறது. ஆயிரக்கணக்கான தென்னை மரங்களைத் தாண்டி இந்த மலையின் தோற்றம் காணும்போதே சிலிர்க்க வைக்கும் காட்சி. திருவண்ணாமலை போல மலையே தெய்வமாக அமைந்துள்ளது. திருவண்ணாமலை கிரிவலம் போல இங்கும், இந்த மலையை அமாவாசை தோறும் கிரிவலம் வந்து வணங்குகின்றனர் பக்தர்கள். இந்தப் பாதை 6 km தூரம் கொண்டது. இந்த மலையின் வடிவழகைக் காண்பதற்கே ஒருமுறையாவது எல்லோரும் திருச்செங்கோடு செல்ல வேண்டும். ராசிபுரத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் பாதையில் ஊருக்குள் செல்வதற்கு முன்பாகவே இத்திருத்தலம் வந்து விடுகிறது.
🙏சிவனும் சக்தியும், அம்மையும் அப்பனும் இணைந்து கலந்த நிலையில், அம்மையப்பன் எனும் தோற்றத்தில் இறைவன் எழுந்தருளி உள்ளது உலகிலேயே இத்தலத்தில் மட்டும்தான். இதுவே இத்திருக்கோயிலின் பெருஞ்சிறப்பு. தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், திருப்புகழ், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் என பல்வேறு தெய்வீக நூல்களில் இத்திருக்கோயில் போற்றி பாடப்பட்டுள்ளது.
🙏இத்திருக்கோயில் அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலன், ஆதி கேசவ பெருமாள் என மூன்று தெய்வங்களுக்கும் தனித்தனிச் சன்னதிகள், ஒவ்வொரு தெய்வங்களுக்கும் தனித்தனி பரிவார தெய்வங்கள் என மூன்று தனித்தனி கோயில் அமைப்புடன், ஒரே திருக்கோயிலாய் அமையப் பெற்ற திருத்தலம். ஒற்றுமையின் சின்னமாய் திகழ்கிறது இத்திருத்தல அமைப்பு. இந்த திருச்செங்கோடு மலைக் கோயிலை மலைத்தம்பிரான் என்றும் அழைக்கின்றனர்.
🙌திருத்தல வரலாறு:
திருச்செங்கோடு திருமலை உருவான வரலாறு:
🙏ஆதி காலத்திலே ஆதி சேஷனுக்கும், வாயு பகவானுக்கும் இடையே உண்டான சண்டையில் யார் பெரியவன், வலியவன் என்ற வாக்குவாதத்தில், இருவரும் போர் புரிந்து கொண்டனர். இப்போரினால் உலகமெங்கும் பேரழிவுகள் உண்டாயின. இது போதாதென்று மேரு மலையின் உச்சியை பலம் கொண்ட மட்டும் ஆதிசேஷன் அழுத்திப் பிடிக்க, வாயுதேவன் அந்தப் பிடியினை தளர்த்திட வேண்டும் என்பற்கு இருவருக்கும் ஏற்படத் ஒப்பந்தம். அவ்வாறு நடந்த வேளையில், இவர்களது சண்டையால் உலகம் அழிந்து விடப்போகிறது எனும் பயத்தில் தேவர்கள் அனைவரும் திரண்டு வந்து நாகரை வணங்கி இந்தப் போரை நிறுத்துமாறு வேண்டிக் கொண்டனர். அவர்களது பேச்சிற்கிணங்க ஆதிசேஷனும் தன பிடியினை சற்று தளர்த்த, இதுதான் சமயம் என்று வாயு அடித்த வேகத்தில் மேரு மலையின் ஒரு சிகரப் பகுதியும், ஆதிசேஷனின் ஒரு தலையும் பெயர்ந்து ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு தென்திசைப் பக்கமாக வந்து விழுந்தன.
🙏இவ்வாறு ஆதிசேஷனின் தலையுடன் மோதிய வேகத்தில் அதன் இரத்தம் தோய்ந்து செந்நிற மலையாக மாறியது. இதுவே திருச்செங்கோடு மலையாக உள்ளது. இவ்வாறு பறந்து வந்து தென் திசையில் விழுந்த மேரு மலையானது, மூன்று பாகங்களாக சிதறி ஒன்று திருவண்ணாமலையாகவும், மற்றொன்று இலங்கையாகவும், இன்னொன்று திருசெங்கோடாகவும் உருமாறியது.
🙏உமையவள் இடப்பாகம் பெற்ற வரலாறு:
கைலாசபுரியில் இருந்து தங்களை பிரிந்து சென்ற முருகப் பெருமானை நினைத்து உள்ளம் வருந்திய நிலையில் இருந்த சிவபிரான், தன் மனைவி பார்வதி தேவியை அழைத்துக் கொண்டு இயற்கையைக் கண் குளிரக் கண்டு, தன் மனதை ஆறுதல் படுத்திக் கொள்ள எண்ணினார். அவ்வாறு சென்று கொண்டிருக்கையில், தன் கணவருடன் உடன் செல்லும் களிப்பின் மிகுதியால், தன் திருக்கரங்களால், பெருமானது இரு கண்களையும் விளையாட்டுத் தனமாய் மூடி விட்டார். இதனால் சூரியன் ஒரு கண்ணும், சந்திரன் மறு கண்ணுமாய் விளங்கும் சிவபெருமானது கண்களை மூடியதன் பலனாய் உலகமே இருளில் மூழ்கியது. இதனைக் கண்ட தேவர்கள், முக்கண்ணனை சந்தித்து இவ்வாறு பார்வதி தேவி தங்களது கண்களை மூடிய காரணத்தால் உலகில் பல்வேறு உயிரினங்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிய காரணத்தால், உனக்கு பாவம் சேர்ந்தது. அந்த பாவத்தை பூவுலகில் பிறந்து, கேதாரம், காசி, காஞ்சிபுரம் போன்ற க்ஷேத்திரங்களில் தவம் மேற்கொள்ள நான் உன்னை வந்து சந்தித்து என்னுடன் அழைத்துச் செல்வேன் என கூறியருளினார். இதனால் வருத்தமுற்ற பார்வதி தேவி தனித்தனி உருவாய் உள்ளதாலேயே இத்தனை கஷ்டங்களும், ஆகையால் இறைவன் சொல்லுக்கிணங்க கேதாரம், காசி, காஞ்சி சென்று எல்லா இடங்களிலும் தவம் புரிந்தார்.
🙏இவ்வாறாக காஞ்சியில் மணலைக் கூட்டி சிவலிங்கள் செய்து அதையே சிவபிரானாக எண்ணி தவமியற்றும் வேளையில் பெரு வெள்ளம் வந்தது. எங்கே தன் மணல் லிங்கமும் தண்ணீரோடு சென்று விடுமோ என பயந்து அதனைக் கட்டி அணைத்துக் கொண்டார். இக்காட்சியைக் கண்ட சிவபிரான் மனமிரங்கி கருணையுடன் வேண்டும் வரம் கேள் என்றார் உமையிடம். உலக நாயகி, சிவபெருமானிடம் தங்களது திருமேனியில் இடப் பாகம் தந்தருள வேண்டும் என்று கேட்டார். அதற்கு, நீ எனது கண்களை மூடிய பாவத்தினை இந்த காஞ்சியில் தவம் புரிந்ததால் நீங்கப் பெற்றாய். திருவண்ணாமலைக்குச் சென்று அங்கு தவம் மேற்கொள்வாயாக எனக் கூறினார்.
🙏அங்கு தவமிருந்த தேவியிடம், உனது எண்ணம் அறிந்தேன், ஆனாலும், நிறைவாக நீ செந்நிற மலையான திருச்செங்கோடு சென்று தவமியற்ற எனது இட பாகத்தை வழங்கி அருளுவேன் என்று கூறிச் சென்றார்.
🙏இதனை நிறைவேற்ற திருச்செங்கோடு சென்று பல காய் கனிகளுடனும், பல்வேறு பூஜை பொருட்களுடனும் புரட்டாசி மாதம், வளர்பிறை, அஷ்டமி திதியில் கேதார கௌரி விரதம் தொடங்கினார் அன்னை. புரட்டாசி மாதம், தேய்பிறை சதுர்த்தியன்று தேவியின் முன்னே தோன்றி, அன்னையின் தவத்தை மெச்சி, தனது இடபாகத்தை பார்வதி தேவிக்கு கொடுத்தருளினார். இத்திருத்தலத்தில் கேதார கௌரி விரதம் 21 நாட்கள் கொண்டாடப்பட்டு, புரட்டாசி அமாவாசையன்று எழுந்திருத்தும் விழா வெகு சிறப்பாக நடைபெறும்.
🙌🙌🙌நமச்சிவாயம்!! நமச்சிவாயம்!!🙌🙌🙌
No comments:
Post a Comment