Search This Blog

Saturday, 30 July 2016

திருப்பதி வேங்கடாஜலபதிக்கு உகந்த நாளாக சனிக்கிழமையை ஏன் கொண்டாடுகிறோம்.?



🙏அதுவும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமை வேங்கடவனை விரதம் இருந்து வழிபட்டால் மிகவும் சிறப்பான வரங்களை தந்து வருடம் முழுவதும் நமது துன்பங்களை நீக்கி ஆனந்தம் தருவார். அதிலும் ஏழரை சனி பீடிக்கப்பட்டவர்கள் மேற்படி விரதம் இருந்தால் சனியின் தொல்லை நிச்சயம் நீங்கும்.

ஏனெனில் சனி பகவான் கலியுகத்தில் முதல் முதலாக வரும் வழியில் நாரதர்  சனிபகவானிடம் தாம் பூலோகத்தில் எங்கு வேண்டுமானாலும் உங்கள் சக்தியின் மூலம் யாரை வேண்டுமானால் துன்பப்படுத்தலாம் .

ஆனால் திருமலை பக்கம் சென்று விடாதீர்கள் என்று அவரை தூண்டி விட எதை செய்ய வேண்டாம் என்று நாம் சொல்கிறோமோ அதையே  செய்யும் துடுக்கான குழந்தைகள் போல்!  என்னை யார் என்னசெய்ய முடியும் என்று திருமலையில் மேல் தன் காலை வைக்க!  பயங்கரமாக தூக்கி வீசப்பட்டார் சனி. 

🙏திருமலையில் யாரிருக்கிறார் என தெரிந்தும் மற்றவரை துன்பபடுத்தி இன்பம் காணும் சனி தானே துன்பப்பட்டு நடு நடுங்கி  தன்னையும் படைத்து வழிநடத்தும்  சட்சாத் மகாவிஷ்ணுவே இங்கு திருவேங்கடவனாக இருப்பதை கண்டு அவர் பாதம் பணிந்து மன்னிப்பு கேட்க!

பெருமாளும்  என்னையே நினைத்து வாழும் என்னுடைய பக்தர்களுக்கு நீ எந்த துன்பமும் கொடுக்க கூடாது என்ற நிபந்தனையுடன் மன்னிப்பு வழங்கினார் கருணைக்கடல் நம் கோவிந்தராஜன்.

🙏சனியும் பணிவுடன் உங்களின் உண்மையான பக்தர்களை நான் என்றும் துன்பபடுத்த மாட்டேன் ஸ்வாமி.

மகாபிரபு எனக்கு ஒரு வரம் தரவேண்டும் என்றார். நான் பிறந்தது புரட்டாசி சனிக்கிழமை ஆனதால் அந்த நாளை தங்களுக்கு உகந்த நாளாக தங்கள் பக்தர்கள் பூஜித்து வேண்டினால் அவர்களுக்கு வேண்டிய வரத்தை தாங்கள் தரவேண்டும் சுவாமி என்றார்.

திருவேங்கடவனும் சனிதேவனுக்கு வரத்தை அளித்து சனிக்கிழமையை தனக்கு உகந்த நாளாக ஏற்று கொண்டார்.

🙏இப்படித்தான் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக உருவானது.


சனிபகவானை ஆயுள்காரகன் என்பர்.  இவர் சூரியன் மற்றும் சாயா தேவியின் புதல்வர் ஆவார். இவர் பிறந்ததும் புரட்டாசி சனி அன்றுதான். 

சனி கிரகத்தைக் கட்டுப்படுத்துபவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதி அவரே. எனவே, சனிக்கிழமைகள் பெருமாளுக்கு மிகவும் உயர்ந்த  உகந்த நாள்  ஆயிற்று.

🙏🙏🙏🙏🙏🙏🙏

Friday, 29 July 2016

🙏🙏அருள்மிகு மேகநாதர் கோயில் - லலிதாம்பிகை ஆலயம் திருமீயச்சூர், திருவாரூர் மாவட்டம்🙏🙏



சுவாமி : சகலபுவனேஸ்வரர், மேகநாதர்.
அம்பாள் : மேகலாம்பிகை, சௌந்தர்ய நாயகி, லலிதாம்பிகை.
தீர்த்தம் : சூரிய தீர்த்தம்.
தலவிருட்சம் : வில்வம் மரம்.

🙏தலச்சிறப்பு : லலிதா சகஸ்ர நாமம் உருவான தலம் அம்மனின் அருள் பெருக்கு அதிகமான  ஆலயம். ஆபரணம் கொலுசு ஆகியவை அணிந்து பார்க்க பரவசிக்கும் அம்மன் திருமுகம், சிவ சக்தி வடிவம் பிரகாரத்தில் சிறப்பாக வடிவமைக்கப் பட்டுள்ளது.  நான்முக சண்டேசுவரர் சிறப்பு  ஆகும்.  கச்சூரிலும் நான்முக சண்டேசுவரர் உண்டு.  ஸ்ரீசனிஸ்வரின் அவதாரத் திருத்தலம்.   ஸ்ரீசூரியனாரின் சாபம் போக்கிய தலம்.  ஆகவே இங்கே நவக்கிரகங்களுக்குச் சந்நிதி இல்லை.   மாறாக 12 ராசிகளுக்கு உரிய 12 நாகர்களும் உள்ளனர்.  இவர்களுக்கு தீபமேற்றி, அர்ச்சனை செய்து  வழிபட்டால், ராகு - கேது முதலான சகல தோஷங்களும் விலகும், திருமணம் முதலான அனனத்து  வரங்களும் கிடைக்கும்.
🙏தலவரலாறு : இருப்பதிலேயே மிகப் பெரிய பாவம், இறைவனை தரிசிப்பதற்கு ஆசைப்படும்  ஒருவருக்கு, முட்டுக்கட்டை போடுவதுதான்! ஒருவரது அங்கக் குறைபாட்டினைச் சுடிக்காட்டி  ஏளனம் செய்வதும் மகாபாவம்.  சூரிய பகவான் இந்த இரண்டும் பாவங்களையும்  செய்தார்! சூரியனின் ரதத்தினைச் செலுத்துகிற அருணன் அங்கஹீனம் கொண்டவன்; அவனுக்கு  திருக்கயிலாயத்துக்குச் சென்று சிவனாரை தரிசிக்க வேண்டும் என விருப்பம்.  சூரியனிடம்  அனுமதி கேட்டதற்கு, மறுத்ததுடன் உடற் குறையைச் சொல்லி ஏளனம் செய்தான்.  சிவபக்தியில்  திளைத்திருந்த அருணன், மோகினிப் பெண்ணாக உருவெடுத்தான். திருக்கயிலாயம் புறப்பட்டான்;  மோகினியின் அழகில் மயங்கினான் இந்திரன்.  இதில் உருவானவன் தான் வாலி.  எண்ணம்  ஈடேறியது.  சிவதரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில், திரும்பி வந்த அருணன்,  சூரியனாரிடம் விஷயத்தைச் சொன்னான். 'மோகினிப் பெண்ணாகவா? உருவம் மாறிச் சென்றாயா? எங்கே  மாறிக்காட்டு' என்றார்.
🙏அருணன், மோகினியாக மாறினான்.  அழகில் சூரியனை மயக்கினான்.  விளைவு.. சுக்ரீவன்  பிறந்தான். தனது பக்தனைத் தடுத்து, அவனது ஊனத்தைக் கிண்டல் செய்ததைச் சும்மா விடுவாரா,  சிவனார்? சூரியனைச் சபித்தார்.  இருளடைந்து போனார் சூரியனார்.  ஏழு மாதங்கள்,  மேகமண்டலத்தில் எங்களை யானை மீது வைத்து பூஜித்து வா. அப்போது தான் உனது பாவம் தீரும்'  என அருளினார்.  இதை அடுத்து சூரியனார், மேகமண்டலத்தில் யானை மீது, சிவ-பார்வதியை  வைத்து பூஜை செய்யத் துவங்கினார். ஆனால், ஏழு மாதங்கள் நிறைவுறுவதற்கு முன்பே,  சிவனாரிடம் சென்று, 'என்ன இது... இன்னும் சாப விமோசனம் தரவில்லையே?' என்று  கேட்க...  வெகுண்டாள் ஸ்ரீபார்வதி.  'உரிய நேரம் வரும் வரை பொறுக்க மாட்டாயா?' என்று கடும்  உக்கிரத்துடன் சூரியனாருக்குச் சாபம் கொடுக்க எழுந்தாள்.  பதறிப்போன சிவனார், 'எற்கெனவே  கொடுத்த சாபத்தால் இருளில் மூழ்கினான் சூரியன்.  இன்னொரு சாபம் கொடுத்தல், இந்த உலகம்  இருளில் விழிபிதுங்கித் தவிக்கும்.  வேண்டாம் தேவி, சாந்தமாக இரு!' என்று உமையவளை அமைதிப்படுத்தினார்.  பிறகு உரிய காலம் வந்ததும், சூரியனாருக்கு சாப விமோசனம் அளித்தார்.  அவரின் திருமுகமும் இந்த உலகமும் பழையபடி இருளில் இருந்து வெளிச்சத்துக்கு வந்தது!  சூரியனாருக்கு அருளிய ஈசன், ஸ்ரீமேகநாதர் எனும் திருநாமத்துடன், கஜபிருஷ்ட விமானத்தின்  கருவறையில், அனைவருக்கும் அருள் புரிந்து வருகிறார், அந்தத் திருத்தலம், திருமீயச்சூர்  எனப்படும்.                                                                                                                       🙏 இங்கே, ரதசப்தமி விழா விமர்சையாகக் கொண்டாடப் படுகிறது. அது மட்டுமா?  சித்திரை மாதம் 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை, ஸ்வாமியின் மீது கதிர்களால், பூஜிக்கிறார்  சூரிய பகவான்!
🙏வழிபட்டோர் :  ஸ்ரீசனிஸ்வரர், எமதருமர், அருணன், கருடன், வாலி, சுக்ரீவன் ஆகிய ஆறு பேரின் அவதாரத் தலம் இது!
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை மாலை 4.30 மணி முதல் 8.30  மணி  வரை.
🙏அருகிலுள்ள நகரம் : மயிலாடுதுறை.

🙏🙏🙏🙏🙏

Thursday, 28 July 2016

ஸ்ரீ சரபேஸ்வரர், திருபுவனம்


🙏🙏ஸ்ரீ சரபேஸ்வரர் தோன்றிய காரணம்🙏🙏

🙏இரணியன் என்ற அசுரர் குல தலைவன் பரமனை நோக்கி சாகா வரம் வேண்டி தவம் செய்தான். கடும் தவத்தின் பயனாக பரமனிடம் இருந்து, " தேவர், மனிதர், விலங்குகள் முதலிய யாவராலும், பகலிலோ அல்லது இரவிலோ, வீட்டின் உட்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ, எவ்வித ஆயுதங்களாலோ தமக்கு மரணம் ஏற்படக் கூடாது " என்ற அரிய வரத்தினை பெற்றான்.

🙏தன்னை எதிர்ப்பார் யாரும் இன்றி தானே கடவுள் எனக் கூறிக் கொண்டு, தன்னையே கடவுளாக வணங்க வேண்டும், மற்ற யாரையும் தெய்வமாக தொழக்கூடாதெனக் கூறி கொடுமையான ஆட்சி புரிந்து வந்தான். அவனுக்கு பிறந்த மகன் பிரகலாதன். தன் தாயின் வயிற்றில் இருக்கும் வேளையிலேயே நாரத முனிவர் மூலம் திருமால் உபன்யாசம் கேட்டு சிறந்ததொரு பரந்தாமன் பக்தனாய் பிறந்தான்.

🙏எந்நேரமும் நாராயணன் நாமம் சொல்லி வளர்ந்தான். இதனை கண்ட இரணியன் கடும் கோபம் கொண்டான். எவ்வளவு சொல்லியும் தன் நாமம் சொல்லாத பிரகலாதனை, தன் மகன் என்றும் பாராமல் பல வழிகளில் அழித்திட முயன்றான். பரந்தாமனின் அருளால் அனைத்திலிருந்தும் தப்பிய பிரகலாதனை நோக்கி "எங்கெ உன் நாராயணன்'' எனக் கேட்க, பிரகலாதணோ " என் நாராயணன் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் " என்று கூறினான்.

🙏கோபம் கொண்ட இரணியன் அருகில் இருந்த தூணை தன் கதை கொண்டு தாக்க, அதிலிருந்து நரசிம்ம உரு கொண்டு வெளிப்பட்டார் பரந்தாமன். இரணியனது வரத்தின் படியே, மனிதனாகவோ, தேவராகவோ, விலங்காகவோ இல்லாது அனைத்தும் கலந்த கலவையாய் நரசிம்மமாய் வந்து, இரவோ பகலொ இல்லாத அந்தி நேரத்தி, எவ்வித ஆயுதங்களுமின்றி தன் நகத்தினை கொண்டு, வீட்டின் உள்ளும் இல்லாது வெளியும் இல்லாது வாசற்படியில் வைத்து இரணியனை வதம் செய்தார்.

🙏அசுரனின் குருதி குடித்ததால் மதி மயங்கி ஆக்ரோஷமானார். நரசிம்மத்தின் கோபம் தணிக்க வேண்டி தேவர்கள் அனைவரும் பரமனை நாட, பரமன் சரபேசப் பறவை உரு கொண்டு வந்து நரசிம்மத்தின் கோபம் தணித்தார். இவ்வாறு பிரகலாதன் மற்றும் தேவர்களது நடுக்கத்தினை தீர்த்ததால் இவர் நடுக்கந்தீர்த்த பெருமான் என்றானார்.

🙏இந்த சரபேசரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை தான் சரபேஸ்வரர். தங்க நிறப் பறவையின் உடலும், மேலே தூக்கிய 2 இறக்கைகளும், 4 கால்கள் மேலே தூக்கிய நிலையிலும், 4 கால்கள் கீழேயும், மேலே தூக்கிய ஒரு வாலும், தெய்வீகத் தன்மை கொண்ட மனிதத் தலையும், அதில் சிங்க முகமும் கொண்ட ஒரு விசித்திரப் பிறவியாக உருமாறினார்.

🙏இந்த அபூர்வப் பிறவி தோன்றியதும் போட்ட சப்தத்தில் நரசிம்மர் அடங்கியதாய்ச் சொல்வார்கள். சந்திரன், சூரியன், அக்னி ஆகியவை மூன்று கண்களாகவும், கூர்மையான நகங்களோடும், நாலு புறமும் சுழலும் நாக்கோடும், காளி, துர்க்கா ஆகியோரைத் தன் இறக்கைகளாகவும் கொண்டு வேகமாய்ப் பறந்து, பகைவர்களை அழிக்கும் இந்த சரபேஸ்வரரைப் "பட்சிகளின் அரசன்'' என்றும் "சாலுவேஸ்வரன்'' என்ற திருநாமத்துடனும் குறிப்பிடுகின்றனர்.

🙏இவரின் சக்திகளாய் விளங்குபவர்கள் ப்ரத்யங் கிரா, மற்றும் சூலினி. இதில் தேவி பிரத்யங்கிரா சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதாகவும், இவள் உதவியுடன் தான் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாகவும் சில குறிப்புக்கள் கூறுகின்றன.

🙏இதில் திருபுவனம் கோவிலில் தனி சன்னதி இருக்கிறது. ஞாயிற்றுக் கிழமைகளில் இவரை வணங்குவது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.


 🙏துக்கங்கள் நீங்க, தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிட்ட சரபேஸ்வரர் ஸ்லோகம்

ஹராய பீமாய ஹரிப்ரியாய
பவாய சாந்தாய பராத்பராய
ம்ருடாய ருத்ராய த்ரிலோசனாய
நமோஸ்து துப்யம் சரபேச்வராய        


- இத்துதியை ஞாயிற்றுக்கிழமை, ராகு காலத்தில் பாராயணம் செய்தால் துக்கங்கள் நீங்கும்; தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிட்டும்.


🙏ஸ்ரீ சரபேஸ்வரர் பூசை செய்வதற்கு உகந்த நேரம் ஞாயிறு மாலை 4.30 முதல் 6.00 மணி வரையிலான ராகு கால நேரமாகும். இந்த ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடுபவர்களின் எதிரிகள் அழிக்கப்படுவார்கள். அவர்களின் நோய்கள் நீங்கும். செயல்களில் வெற்றி பெறுவார்கள்.

🙏எத்தகைய விதியையும் மாற்றும் வல்லமை சரபேசுவரருக்கு மட்டுமே உண்டு. இந்தக் கலி யுகத்தில் மனிதன் தன்னுடைய அபரிமிதமான அறிவியல் வளர்ச்சியால் ஏற்படுத்திக் கொடுக்கும் எல்லாவிதமான ஆபத்துகளிலிருந்தும் தப்புவதற்குச் சரணடைய வேண்டிய ஒரே தெய்வம் சரபேசரே.

🙏இவரை வேதங்கள் அழிக்கும் கடவுளான அக்கினி தத்துவத்திற்கு உரியவராகக் குறிப்பிட்டாலும் நமக்குக் கண்ணுக்குப் புலப்படாத எதிரிகளையும் அழித்து நம்முடைய துன்பங்களைத் தீர்த்து, தன்னிடம் சரணடைந்தவர்களுக்கு அபளமளிக்கும் தெய்வம் சரபேஸ்வரராகும்.

🙏இயற்கையின் சீற்றங்களான நிலநடுக்கம், இடி, புயல், மழை, சூறாவளி, ஆழிப்பேரழிவும், தீவிபத்து, விஷக்கடிகள், மருத்துவத்தால் கைவிடப்பட்ட மாறாத உடல் உபாதைகள் மற்றும் மனோ வியாதிகள், தொடர்ந்து வந்து உறுத்தும் ஊழ்வினையின் காரணமாக பரிகாரமே காணமுடியாது என்று தீராத துன்பம் தர முயலும் கொடிய தரித்திரங்களும் சரபரை வழிபடும் பக்தனைத் தாக்காமல் விட்டு ஓடிவிடும்.

🙏இப்படி விதியையே புரட்டிப்போட்டு நல்லதை செய்யும் சக்தி சரபேசுவரருக்கு மட்டுமே உண்டு. எதிரிகள் குலநாசம், பில்லி, சூனிய ஒழிப்பு, மரண பயம் அகலுதல், நீடித்த ஆயுள், எந்த வியாதியும் நெருங்காத சூழ்நிலை என்று பாதுகாப்பு வளையங்களாக சரபேஸ்வரர் வழிபாடு திகழ்கிறது.🙏🙏🙏🙏🙏

Wednesday, 27 July 2016

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில்


🙏திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு எனும் ஊரில் அமைந்துள்ள ‌ஒரு பழைமையான வைணவக் கோயிலாகும். இது 108 வைணவத் திருத்தலங்களுள் 76 ஆவதாக வைத்து எண்ணப்படுகிறது. மேலும் இது 13 மலைநாட்டுத் திருத்தலங்களுள் ஒன்றாகும்.


🙏திருவட்டாறு – பெயர்க்காரணம்
இந்த ஊரை வட்டமடித்துக் கொண்டு ஆறு ஓடுவதால் திருவட்டாறு எனும் பெயர் பெற்றது. கோதை மற்றும் பறளியாறு ஆறுகள் இந்நகரை சுற்றிக்கொண்டு ஒடுகிறன்றன அவை மூவட்டுமுகம் என்னும் இடத்தில் இணைகின்றன.



🙏கோவிலின் சிறப்புகள்
இத்தலம் சேரநாட்டு முறையில் கட்டப்பட்டு உள்ளது. கோவிலுக்குள் நுழையும் ஆடவர் அனைவரும் இறைவனுக்கு மரியாதை தரும் பொருட்டு தங்கள் சட்டைகளைக் கழற்றியே நுழைய வேண்டும். ஆதிசேடனைப் படுக்கையாகக் கொண்டு அறிதுயிலில் ஆழ்ந்துள்ள பெருமாளின் திருமேனி 22 அடி நீளம் உடையது. இது 16,008 சாளக்கிராமக் கற்களைக் கொண்டு செய்யப்பட்ட சடுசக்கரை படிமம் என்று சொல்லப்படுகிறது. கருவறையில் மூன்று நிலைவாயில்கள் உள்ளன. திருமுகம், திருக்கரம், திருப்பாதம் எனும் 3 பகுதிகளை ஒவ்வொரு நுழை வாயிலிலும் காணலாம். திருமுக நிலைவாயிலில் அறிதுயிலில் ஆழந்துள்ள முகத்தையும் நீட்டிய இடக்கையையும் ஆதிசேடனையும் கருடாழ்வாரையும் காணலாம். திருக்கர வாயிலில் சின்முத்திரை காட்டும் வலக்கரத்தையும் சங்கு சக்கரம் உள்ளிட்ட ‌ஐம்படையினையும் காணலாம். தரையில் தாயாருடன் கூடிய பெருமாளின் உலோகத் திருமேனியும் வைக்கப்பட்டுள்ளது. கடைசியாக திருப்பாத வாயிலில் திருப்பாதங்களையும் இருவர் பயந்து ஒளிந்திருக்கும் சிலைகளையும் காணலாம். திருமுகம், திருக்கரம், திருப்பாதம் இவ‌ற்றை இதே வரிசைக்கிரமத்தில் தரிசிப்பது இக்கோவிலின் மரபு ஆகும். இக்கோயிலின் பிரதான வாயில் மேற்க்கு நோக்கி அமைந்துள்ளது.


🙏போத்திமார்
இக்கோயிலின் இன்னொரு தனித்துவம் இங்கு இறைவனுக்குப் பூசனைகள் செய்யும் போத்திமார் ஆவர். இவர்கள் பிராமணர்கள் அல்லர். இது மட்டுமின்றி, இக்கோயிலில் பிராமணர்கள் பூசை செய்ய இயலாது என்பதும் குறிப்பிடத்தக்கது.



🙏மங்களாசாசனம்
இத்தலத்தை நம்மாழ்வார் 11 பாடல்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். “உண்டு உறங்கி சாதாரண வாழக்கை வாழும் நாட்டினரோடு இருப்பதை விடுத்து இறைவ‌னின் பாடல்களைப் பலவாறாய்ப் பாடி பழவினைப் பற்றறுத்து ஆதிகேசவன் எனும் திருப்பெயருடன் எழுந்தருளியுள்ள நாரணன் திருவடிகளை இவ்வாற்றாட்டில் வணங்கிப் பிறப்பறுப்பேன் எனும் பொருளமைந்த பாடல் இவற்றுள் ஒன்றாகும்”



🙏தலபுராணம்
பரந்தாமன் ஆதிகேசவபெருமாள் என்பது 'மிகவும் முக்கியமான நண்பனைக்' குறிப்பதாகும். தலபுராணங்களின் கூற்றின் படி பரந்தாமன் ஆதிகேசவபெருமாள் கேசி என்ற பெயருடைய அரக்கனை வீழ்த்தியதாக ஐதீகம். அரக்கனின் மனைவியானவள் கங்கை ஆறு மற்றும் தாமிரபரணி ஆற்றின் தேவதைகளை வணங்கி ஒரு பெரிய பிரளயத்தையே வரவழைத்து விட்டாள். ஆனால் இது ஒரு விதத்திலும் பயனளிக்கவில்லை மேலும் அவள் ஈசனிடம் சரணடைந்து விட்டாள். இப்படியாக வட்டமாக நதிகள் இந்த இடத்தை சூழ்ந்து கொண்டதால், இந்த இடத்திற்கு திருவட்டாறு என்ற பெயர் அமைந்தது.


🙏திருவிழாக்கள் மற்றும் பிரசாதங்கள்
வைகுண்ட ஏகாதசி இங்கே மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தக்கோவிலில் வழங்கப்படும் பிரசாதங்களான பால் பாயாசம் (பால் அமுது), அவல் மற்றும் அப்பம் மிகவும் பெயர் பெற்றதாகும் மற்றும் சுவை நிறைந்ததாகும். திருவனந்தபுரத்திலுள்ள ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலில் உள்ளதைப்போலவே இங்கே பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நிறைவேற்றப்படுகின்றன.🙏🙏🙏🙏🙏

Friday, 22 July 2016

தேவிப்பட்டினம் நவக்கிரக கோவில்




🙏தமிழகம் என்றாலே கோவில்கள்தான். மாநிலம் முழுவதும் ஏராளமான கோவில்கள் தமிழகத்தில் உள்ளன. அதில் தேவிப்பட்டினம் நவக்கிரக கோவில் வித்தியாசமானது. தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்தக் கோவில். இதில் என்ன வித்தியாசம் என்றால் இந்த நவக்கிரக கோவில் கடலில் உள்ளது.


🙏இந்துக்களின் நம்பிக்கையின் படி சூரியனை சுற்றும் ஒன்பது கோள்களும் , இவ்வுலகில் வாழும் மக்களின் விதியை தீர்மானிக்கின்றன. அந்த ஒன்பது கோள்களை வழிபட தமிழகம் முழுவதும் ஏராளமான கோவில்கள் இருந்தாலும், இந்த நவக்கிரக கோவில் மிகப் பிரசித்தி பெற்றது.


🙏வால்மீகி இராமயணத்தின் கதாநாயகனான ஸ்ரீராமபிரான் எழுப்பிய கோவிலாகும் இது. ராமபிரான் இலங்கைக்குச் செல்லும் முன்னர் உப்பூரில் விநாயகரை வழிபட்டுவிட்டு, தேவிப்பட்டினத்தில் கடலிலே ஒன்பது கற்களை ஒன்பது கோள்களாக பாவித்து வழிபட்டார். ராமபிரான் வழிபட்டுக்கொண்டிருந்த சமயம் கடல் அலைகள் குறுக்கிட்டதால், விஷ்ணுவை வேண்டினார் அவர். பின்னர் கடல் அலைகள் அமைதியடைந்தன. இதனாலேயே இன்றுவரை இங்கு கடல் அலைகள் அதிகம் காணப்படுவதில்லை என்று கூறலாம்.


🙏இந்த இடத்தில்தான் ராமர் சனிதோஷத்தில் இருந்து விடுபட்டார் என்ற வரலாறும் உண்டு. இந்த கோவிலின் அருகே கடற்கரையில் திலகேஸ்வரர் கோவிலும் உள்ளது. இங்கு சிவபெருமானும் பார்வதி தேவியும் காட்சியளிக்கின்றனர். (சிவபெருமான் - திலகேஸ்வரர், பார்வதி தேவி - செளந்திரநாயகி.)

🙏இந்தக் கோவிலுக்கு நவபாஷனக் கோவில் என்று ஓர் பெயரும் உள்ளது. (பாஷனம் - கல்). இங்கு நவதானியங்களை கொண்டு மக்கள் பூஜை செய்கின்றனர். அமாவாசை தினங்களில் ஏராளமானோர் குவிந்து அவர்களின் மூதாதையர்களையும் வழிபடுகின்றனர். ஆடி அமாவாசை தினத்தன்று இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பிரார்த்தனை நடத்துகின்றனர்.


🙏இராமருக்கு சனி தோஷம் நீங்கியதால், இங்கு வழிபட்டால் நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம். மேலும் இந்தக் கோவில் மூதாதையர்களை வழிபட மிகச்சிறந்த இடமாக கருதப்படுகிறது. சென்று வழிபடுங்களேன்!


🙏எப்படி செல்வது?
தேவிப்பட்டினம் இராமநாதபுரத்தில் இருந்து 15 கி.மீ தொலைவிலும், சிவகங்கையில் இருந்து 47 கி.மீ தொலைவிலும் உள்ளது. 🙏🙏🙏🙏🙏

Thursday, 21 July 2016

Sri Vishwamithra Magirishi




🙏இராமாயண கால சிறப்பு பெற்றதும்,  நவக்கிரக பரிகார ஸ்தலங்களுள் ஒன்றான  கூடம்குளம் அருகில் உள்ள விஜயாபதி என்ற ஊரில் அருள்புரியும். அருள்மிகு மகாலிங்க சுவாமி உடனுறை அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலை பத்தி இப்பப் பதிவில் பார்க்கலாம்.  இக்கோவிலின் மிக முக்கியமான சிறப்பு என்னன்னா.., விஸ்வாமித்திரருக்கென தனிக்கோவில் தமிழகத்துலயே இங்குதான் இருக்கு.

🙏விஜயாபதி என்றால் வெற்றிக்குச் சொந்தமான இடம் என்று பொருள்படும். .ஆனால், விஸ்வாமித்திர மகரிஷி இழந்த தன் சக்தியை மீட்டெடுக்க வேண்டி தேர்ந்தெடுத்த இடம்தான் இந்த விஜயாபதி.  கடற்கரை கிராமமான இந்த விஜயாபதி, கூடங்குள அணுமின் நிலையத்திலிருந்து வெறும் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த திருக்கோவில் என்பது கூடுதல் தகவல்.

🙏இராம, லட்சுமணன் இருவரும் விஸ்வாமித்திரனின் யாகத்திற்கு இடையூறு செய்த தாடகை மற்றும் சில அரக்கர்களை கொன்றனர். அதனால் அவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அதை தீர்க்க ஒரு யாகம் செய்ய இடம் தேடி அலைந்து, முடிவில் தில்லைவன காடான சிதம்பரம் வந்து காளியை பிரதிஷ்டை செய்தார்கள். பொதுவா இந்த மாதிரி பரிகாரங்கள், நீத்தார் கடன்லாம் கடலோரங்களில் தான்  நடத்தவேண்டும் எனபது மரபு. சிதம்பரம் அருகில் கடல் இல்லாததால இராம, இலட்சுமணனோடு தெற்கு நோக்கி வந்தார் விஸ்வாமித்ரர். பின்பு, அதேப்போல தில்லைவனம் இங்கே இருப்பதை கண்டார் .உடனே அங்குள்ள தில்லைவன தோப்பில் காளியை பிரதிஷ்டை செய்து காவல் தெய்வமாக்கினார். பின்னர் ஹோமக்குண்ட விநாயகர், விஸ்வமிதிர மகாலிங்க சுவாமி, அகிலாண்டேஸ்வரி ஆகிய தெய்வங்களை பிரதிஷ்டை செய்தார்.  பின்னர் ஹோம குண்டம் வளர்த்து இராம, லட்சுமணனது பிரம்மஹத்தி தோஷத்தை போக்கினார்.

🙏ஹோமம் முடிந்த உடன் அருகில் உள்ள கடலில் குளித்து இருவரையும் அங்க பிரதட்சனை செய்ய வைத்து, தானும் அங்க பிரதட்சணம் செய்து இராம, லட்சுணனரின் தோஷத்தையும், தான் இழந்த சக்தியையும் மீட்ட இடம்தான் இது. இன்றும் அவர் குளித்த இடம் விஸ்வமித்திரர் தீர்த்த கட்டம் என்று அழைக்கப்படுகிறது .


🙏ஆகமொத்தம் இக்கோவிலும், கிராமமும் யுகங்கள் பல கடந்து இந்திருக்கின்றன. பின்னர் எக்காலத்திலோ அவையெல்லாம் அழிந்து விட்டன. தில்லைவன தோப்பும் அழிந்து விட்டது, இப்பொழுது இரண்டு தில்லை மரங்களுடன், இலங்கையை நோக்கி பார்த்தபடி தில்லைவன காளி மட்டும் கடற்கரை பக்கம் காவல் இருக்கிறாள். தமிழ்நாட்டில் வேறு எங்கும் தில்லை மரங்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.இந்த கோவிலுக்கு வருவது மூலம் ஒருவருடைய குடும்பத்தில் இறந்த சிறு கன்னி தெய்வங்களின் ஆத்மா மற்றும் முன்னோர்களின் ஆத்மாக்கள் சாந்தி அடைய வழி கிடைக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. மேலும்,  மாதந்தோறும் அனுஷம் நட்சத்திரத்தில் அபிஷேகம், புஷ்பாஞ்சலி, அன்னதானம் எல்லாம் நடைபெறுகிறது. இன்றும் இங்கு விஸ்வாமித்திர மகரிஷி சூட்சுமமாக தவம்  செய்து வருகிறார்  என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.

🙏விஸ்வாமித்திரர் இந்தியாவின் பிரம்மரிஷிகளில் ஒருவர்.  இவர் குசநாபரின் மகன் கௌசிகன் என்னும் மன்னராவார்.  இவர் வசிஷ்ட முனிவரோடு ஏற்பட்ட போட்டியின் காரணமாக, கடுமையான தவங்களைச் செய்து பிரம்ம ரிஷி பட்டம் பெற்றவர்.  இவர் காயத்ரி மந்தரம் உட்பட பழமையான ரிக் வேதத்தின் பல பகுதிகளை எழுதியதாக கருதப்படுகிறார். புராணங்களின்படி ஆதி முதல் 24 ரிஷிகளே முழு ஞானத்தையும் சக்தியையும் பெற்றவர்களாக இருந்தாக கூறப்படுகிறது. அதில் விஸ்வாமித்திர முனிவரும் ஒருவர் அப்படிப்பட்ட விஸ்வாமித்திரரின் சன்னதி தான் இது.

🙏இங்க விஸ்வாமித்திர மகரிஷி அரூபமாக தவம் செய்து கொண்டு இருக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது.

இந்த விஜயாபதி ஒரு பரிகார ஸ்தலம் ஆகும். அதனால் இங்கு பித்ரு தர்ப்பனமும் செய்யலாம்,  நவக்கலச பூஜையை பகல் 12 மணிக்கு மேல் இறங்கு பொழுதுதில்தான் செய்யவேண்டும் என்று சொல்லப்படுகிறத.. நவக்கலச யாகம் முடிந்ததும் உடனே, வேறு எந்த கோவிலுக்கும், யாருடைய வீட்டுக்கும் செல்லாமல் நேராக தங்களுடைய வீட்டுக்குச் செல்ல வேண்டும். இப்படிச் செய்வதால், நமது 64 விதமான தோஷங்கள் நீங்கிவிடும். இந்த தோஷங்களில் பிரேத சாபம், நவக்கிரக சாபம், குரு சாபம், குலத்தெய்வ சாபம் நீங்கும் எனச் சொல்லப்படுகிறது. மேலும், இங்கு செய்யப்படும் பூஜையின் பலனாக நம்முடைய முற்பிறவி மற்றும் இப்பிறவியில் செய்த பாவகர்மாக்கள் மற்றும் நவக்கிரக தோஷங்கள் நீக்கப்படுகிறது அல்லது கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம்
1. தீராத கர்ம வியாதிகள், ஆயுள் கண்டம்.
2. எதிர்ப்புகள்,கோர்ட், கேஸ் விவகாரங்கள்.
3. குழந்தை பாக்கிய தடை பிரச்சனைகள்.
4. தொழில் முடக்கம், புத்தி மாறாட்டம்
போன்ற பிரச்சனைகள் நூறு சதவீதம் தீர்ந்து விடுகிறது என இங்கே பூஜை செய்தவர்கள் கூறுகின்றார்கள்.
🙏🙏🙏🙏

பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாளில், இந்த ஆண்டு பெரியளவில் மாற்றம்


இனி, மனப்பாட பதிலுக்கு முழு மதிப்பெண் கிடைக்காது. மருத்துவம், இன்ஜி., மற்றும் சட்டம் போன்ற மேல் படிப்புகளில், பிளஸ் 2 மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

ஆனால், மாணவர்கள், கல்லுாரியில் சேர்ந்த பின், முதல் ஆண்டு பருவத்தேர்வில் பல பாடங்களில், 'பெயில்' ஆகின்றனர்.

மாணவர்கள் திணறல் :

இதுகுறித்து ஆய்வு செய்ததில், மனப்பாட கல்வியில், அதிக மதிப்பெண் பெறும் மாணவர் பலர், கல்லுாரி பாடங்களை புரிந்து படித்து, பதில் எழுத திணறுவது தெரிய வந்தது. இது தொடர்பாக, கடந்த ஆண்டு பள்ளிக்கல்வித் துறை, தேர்வுத் துறை மற்றும் உயர்கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதன்பின், பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள் முறையில்மாற்றம் கொண்டு வரப்பட்டது. பாடப் புத்தகத்தின் பின்பக்க கேள்விகள் மட்டுமின்றி, பாடத்தின் உள்பகுதிகளில் இருந்தும் புதிய கேள்விகள் கேட்கப்பட்டன.இந்த மாற்றம் தொடர்பாக, கடந்த கல்வி ஆண்டு துவக்கத்திலேயே, அரசு பள்ளிகளுக்கு தேர்வுத் துறையில் இருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இந்த தகவல், நமது நாளிதழில், கல்வி ஆண்டு துவக்கத்திலேயே வெளியானது. பொதுத்தேர்விலும் அதேபோல், புதிய வினாக்கள் இடம் பெற்றன. இதை தொடர்ந்து, பிளஸ் 2 பொதுத்தேர்வில், இந்த ஆண்டும் புதிய மாற்றங்களை கொண்டு வர, தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக உயரதிகாரிகள், கல்வியாளர்கள், வினாத்தாள் தயாரிப்பு ஆசிரியர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த மாற்றங்களை முடிவு செய்வது குறித்து,குழு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசின், சி.பி.எஸ்.இ., மற்றும் உயர்கல்விக்கான கல்வி நிறுவனங்களில், மனப்பாட முறை இல்லை. வினாத்தாளில் உள்ள கேள்வியை புரிந்து கொண்டு, அதற்கான பதிலை சரியாக எழுதினால் போதும். ஆனால், தமிழகபள்ளிக்கல்வி மாணவர்கள், இது போன்று புதிய பதிலை எழுதஇன்னும் பழகவில்லை.எனவே, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், பாடப்புத்தகத்தில் உள்ள வரிகளை, அப்படியே மனப்பாடம் செய்து எழுதுகின்றனர். புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கேள்வியை தவிர, வேறு கேள்வியை கேட்டால், மாணவர்கள் திணறுகின்றனர்.

புரிந்து பதில் எழுத... :

 புதிய கேள்விகளுக்கு பதில் எழுதும் பழக்கத்தை, கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் அறிமுகம் செய்தோம். இந்த ஆண்டு, வினாக்களின் பொருள் மாறாமல், வினாக்களின் வார்த்தைகளை மாற்றி கேட்கப்பட உள்ளது. எனவே, கேள்வியை மாணவர்கள் நன்றாக புரிந்து, பதிலை எழுத வேண்டும். இதற்கு, பள்ளியிலேயே மாணவர்கள் புரிந்து படிக்க வேண்டும்.

பாடத்தில் கூறப்படும் கருத்தையும், தொழில்நுட்பத்தையும் புரிந்து கொண்டு, சரியான பதிலை, பொருள் மாறாமல் எழுத வேண்டும். அதனால், மாணவர்களின் விடை எழுதும் முறையில் மாற்றம் வரும். வரும் தேர்வுகளில், இந்த அடிப்படையில் எழுதும் மாணவர்களுக்கு மட்டுமே, முழு மதிப்பெண்ணான, 'சென்டம்' அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு ஏற்ற வகையில்,ஆசிரியர்கள் பாடம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]