Search This Blog

Thursday, 8 September 2016

விநாயக சதுர்த்தி வரலாறு!


 
  •  விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.
  • பரமசிவன் கணேசனை கணங்களின் தலைவனாக ‘கணபதி'யாக நியமித்தார். அவருக்கு அனிமா, மகிமா முதலிய அஷ்டசித்திகளையும் மனைவிகளாக பிரம்மதேவன் அளித்து கணபதியைப் பலவாறு துதி செய்தார். கணபதியும் மகிழ்ந்து ‘பிரம்மனே, வேண்டிய வரம் கேள் ' என்று கூற பிரம்மன் ‘என் படைப்பெல்லாம் தங்கள் அருளால் இடையூரின்றி நிறைவேற வேண்டும்' என்று வரம் கேட்க விநாயகரும் பிரம்மனுக்கு வரமளித்தார்.
சந்திரனின் சாபம்!
  • பூஜையில் பிரம்மன் அளித்த மோதகங்களை (கொழுக்கட்டை) கையில் எடுத்துக் கொண்டு, உயரக் கிளம்பி உலகெல்லாம் சுற்றி, சந்திரலோகம் சென்றார். அங்கு பெருத்த தொந்தியும், ஒடிந்த தந்தமும், நீண்ட தும்பிக்கையும், கையில் கொழுக்கட்டையும் தாங்கி வருகின்ற விநாயகனைக் கண்டு சந்திரன் வாய் விட்டுச் சிரித்துப் பரிகசித்தான். அதைப் பார்த்த விநாயகர் கோபம் கொண்டு, ‘ஏ! சந்திரனே நீ தான் அழகன் என்று கர்வம் கொண்டிருக்கிறாய். இன்று முதல் உன்னை யாரும் பார்க்கக் கூடாது. அப்படி யாராவது உன்னைப் பார்த்தால் அவர்களுக்கு வீண் அபவாதம் ஏற்படுவதாகுக' என்று சபித்தார். சந்திரனும் ஒலி மழுங்கித் தண்ணீருக்குள் ஆம்பல் மலரில் மறைந்தான்.

சாபம் நீங்கிய விதம்!
  • சந்திரன் அழிந்ததைக் கண்டுவருந்திய தேவர்களும் முனிவர்களும் இந்திரன் தலைமையில் பிரம்மாவிடம் சென்று முறையிட்டனர். பிரம்மனோ, தானோ, ருத்திரனோ, விஷ்ணுவோ இதற்கு ஒன்றும் செய்ய முடியாதென்றும், கணபதியையே சரணடைவது தான் ஒரே வழியென்றும் கூறினார். எந்த முறையில் வழிபட்டால் சந்திரனின் சாபம் நீங்கும் என்று தேவர்கள் கேட்க ‘ஒவ்வொரு கிருஷ்ணபக்ஷ சதுர்த்தியன்றும் (பௌர்ணமிக்குப் பின் வருவது) விரதம் ஏற்று, பலவகையான பழங்கள், அப்பம், மோதகம் இவைகளுடன் சித்ரான்னங்கள் முதலியவற்றை கணபதிக்கு அளித்து, அந்தணருக்கு பக்தியோடு தாம்பூல, தக்ஷிணைகளை அளித்தால் எண்ணிய வரங்களை அளிப்பார் ' என்று பிரம்மன் கூறினார்.

  • பிறகு தேவர்கள் பிருகஸ்பதி(குரு)யைச் சந்திரனிடம் அனுப்பி விவரம் தெரிவித்தனர். சந்திரனும் இந்த முறையில் பூஜை செய்ய, கணபதியும் மகிழ்ந்து பாலகணபதியாக, விளையாட்டு விநாயகனாக அங்கே காட்சியளித்தார். சந்திரனின் மனம் களிப்புற்று, அவரைப் பணிந்து தன் செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டான்.

  • பிரம்மாதி தேவர்களும் சந்திரனுக்கு கணபதியிட்ட சாபத்தை நீக்கியருள வேண்டினர். கணபதியும் அவ்வாறே சாபவிமோசனம் அளித்தார். ‘ஒவ்வொரு கிருஷ்ணபக்ஷ சதுர்த்தி'யிலும் மோதகம், அப்பம் முதலியவைகளுடன் என்னைப் பூஜித்த பின், ரோகிணியுடன் கூடிய சந்திரனான உன்னைப் பூசிப்பவர்களுக்கு கஷ்ட நிவாரணம் செய்கிறேன்' என்று விநாயகரே கூறினார். இது சங்கடஹரண சதுர்த்தி எனப்படுகிறது.

  • பொதுவாக சதுர்த்தி தினங்களில் சந்திரனைக் கண்டால் ஓர் ஆண்டு வரை தெடர்ந்து வீண் அபவாதங்கள் வந்து சேரும் என்பது சிலரின் நம்பிக்கை.

விநாயக சதுர்த்தி!
  • எனவே, ஆண்டு தோறும் ‘ஆவணி மாத சுக்ல சதுர்த்தியன்று மண்ணாலான என் உருவத்தை பொன்னால் செய்த பாவனையுடன் அமைத்து பல பூக்களால் பூஜித்த பின் இரவில் கண் விழித்து முறையாகப் பூஜித்தால் அவ்வாறு செய்பவனுக்கு அவன் தெடங்கிய காரியத்தில் வெற்றியையும், ஸகல காரியங்களில் சித்தியையும் அளிக்கிறேன்' என்று விநாயகரே சந்திரனுக்குக் கூறுவதாக அமைந்துள்ளது.

  • சியமந்தக மணி என்ற ரத்தினத்தின் காரணமாகப் பல அபவாதங்களுக்கு ஆளான கிருஷ்ணனுக்கு நாரதர் இக்கதையைக் கூறி, கிருஷ்ணனே சங்கடஹரண சதுர்த்தி பூஜை செய்து அவப்பெயர் நீங்கப் பெற்றார் என்று அறிகிறோம்.
விநாயகர் சதுர்த்தி விரதம் இருக்கும் முறை
  • விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களாகிய உள்ளத்தையும், உடலையும் சுத்தம் செய்த பின்பு விநாயகரை மனம் உருகப் பிரார்த்தனை செய்ய வேண்டும். சூரியன் உதிக்கும் வரை எந்த உணவையும் உட்கொள்ளாமல் விநாயகரை நினைத்திருந்து என் சங்கடங்களை நீயே தீர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூஜையைத் தொடங்க வேண்டும்.
  • முதலில் விநாயகர் பூஜை செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு விநாயகரிடம் நான் என்னுடைய சதுர்த்தி விரதத்தை முறைப்படி அனுஷ்டிக்கப் போகிறேன். எனவே நீ எந்தவித தடைகளும் இல்லாமல் அருள்புரிய வேண்டுகிறேன் என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பின் தங்கத்தாலோ அல்லது தாமிரத்தாலோ அல்லது படத்திலோ விநாயகர் செய்து பூஜை செய்ய வேண்டும்.
  • விதிமுறைப்படி நெய், சர்க்கரை, எள் சேர்த்த கொழுக்கட்டைகளைத் தயாரித்து கொண்டு விநாயகருக்கு நிவேதனம் செய்ய வேண்டும். மேலும் தரித்திரம் நீங்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் காலணி, குடை, பசு மாடு ஆகியவற்றை சக்திக்கேற்றவாறு தானம் செய்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.
  • இவ்வாறு பூஜை செய்து வந்தால் விநாயகப் பெருமான் கட்டாயம் வேண்டிய வரங்களைத் தருவார். விநாயகர் சதுர்த்தியை மிகவும் சிரத்தையுடன் கடை பிடிப்பவர்கள் சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப் பேறும் துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள். காரிய அனுகூலமும் உண்டாகும்.
  • இடையூறு விலகும். பெரும் புகழுடன் சகல நோய்களும் நீங்கி, சகல பாக்கியங்களுடன் வாழ்வார்கள். விநாயகர் விரதத்தை ஸ்ரீகற்பக விநாயகர் வீற்றிருக்கும் பிள்ளையார்பட்டியிலும் மற்றும் திருவலஞ்சுழி (கும்பகோணம்), உப்பூர் (ராமநாதபுரம்), ஈச்சனாரி (கோயம்புத்தூர்) ஆகிய இடங்களில் செய்யலாம்.
  • சிலர் இந்த இடங்களில் விரதத்தை தொடங்கியும் அதே இடங்களில் நிறைவு செய்வதும் உண்டு. இவ்வாறு செய்ய இயலாதவர்கள் அவரவர் ஊர்களில் உள்ள கோவில்களிலும், வீடுகளிலும் விரதத்தை கடைபிடிக்கலாம். எங்கு விரதம் இருந்தாலும் அதற்கேற்ற பலன் உண்டு.*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருள்மிகு வடபழனி முருகன் திருக்கோவில்

தலச்சிறப்பு :  
  • இத்தலத்தில் பாத ரட்க்சையுடன் (காலணிகள்) முருகன் அருள்பாலிப்பது மற்றும் சுவாமி தாமரைப் பீடத்தின் மீது இருப்பது சிறப்பு சுவாமி வலது பாதத்தை முன் வைத்து இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • தமிழ்நாட்டின் சிறப்புகள் என்று எத்தனையோ இருந்தாலும் அதில் முதலிடம் பிடிப்பது தமிழ் கடவுள் முருகன் தான். ராமன் எத்தனை ராமனடி என திரைப்படப் பாடல் இருக்கிறது அதுப் போல முருகன் எத்தனை முருகனடி என்றே பாடலாம். தமிழ்நாட்டில் அத்தனை முருகன் பெயர்கள் இருக்கிறது. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு போகும் போது எதிரில் வரும் வாகனங்கள் மற்றும் கடைப் பெயர்களை கவனித்துக் கொண்டு வந்தால் முருகனுக்குத் தான் எத்தனை பெயர்கள் என பிரமிப்பாக இருக்கும். தமிழ்நாட்டில் அறுபடைவீடுகள் இருப்பது மட்டுமின்றி நிறைய பிரபலமான முருகன் கோயில்கள் இருக்கிறது. அதில் ஒன்று வடபழனி முருகன் கோயில்.
  • இது 125 ஆண்டுகளுக்கு கீற்று கொட்டகையாய் தனிப்பட்ட வழிப்பாட்டிற்காக அமைக்கப்பட்ட இத்திருக்கோயில் இன்று உலகெங்கும் பிரசித்தமான கோயிலாக உள்ளது. அண்ணாசாமி தம்பிரான் எனும் முருக பக்தர் தான் வழிப்படுவதற்காக என சிறிதளவே முதல் போட்டு சிறுக் குடிசையாய் வடபழனி முருகன் கோயிலைக் கட்டினார். அதில் முருகன் திருவுருவ ஓவியத்தையே வைத்து வழிப்பட்டார். சில நாட்களில் அவர் அங்கே தியானம் செய்யும்போது ஏதோ ஒரு தெய்வீக சக்தி அவருள் புகுவது போல உணர்ந்து ஏதேதோ கூற ஆரம்பித்துவிட்டார். அப்படி அவர் கூறும் அனைத்தும் உண்மையில் நடக்க ஆரம்பித்து மக்களின் பல குறைகள் தீர ஆரம்பித்துவிட்டது. அதனால் அருள்வாக்கு கூறுவதில் அவர் பிரபலமாகிவிட்டார்.
  • சில நாட்களில் அவர் நோய் வாய்ப்பட்டார். அப்பொழுது ஒரு சாதுவின் அறிவுரைப்படி திருத்தணி முருகனை வழிப்படச் சென்றார். அவ்விடத்தில் அவர் முருகனுக்கு காணிக்கையாக தனது நாக்கை சிறுக்கத்தியால் துண்டித்து பலிப்பீடத்தில் போட்டார். அவர் வடபழனிக்கு திரும்பி வந்ததும் அவருக்கு வந்த நோய் வந்த இடம் தெரியாமல் ஓடிவிட்டது. இறைப்பணியில் தொடர்ந்து ஈடுப்பட்டு வந்த அவர் தனது கடைசிக்காலம் நெருங்குவதை உணர்ந்து அவரது தோழன் ரத்னசாமியை தனது இறைப்பணியை தொடர்ந்து செய்யுமாறுக் கேட்டுக்கொண்டார். அவர் முருகனுக்கு சிறு சன்னதி அமைத்து பூஜை செய்ய ஆரம்பித்ததும் அவருக்குள்ளும் ஒரு மாற்றம் ஏற்பட ஆரம்பித்து அவரும் அருள்வாக்கு கூற துவங்கிவிட்டார்.
  • முருகனுக்கு கோயில் கட்ட மக்களிடமிருந்து நிதி குவிய ஆரம்பித்துவிட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக ரத்னசாமியும் இறந்துவிட்டார். அவருக்கு பின்னர் பூஜை செய்ய ஆரம்பித்தவர்களும் தங்களது முன்னோர்களைப் போலவே அருள்வாக்கு கூறும் சக்தியைப் பெற்றனர். ஆனால் திருக்கோயில் பணி நிறைப்பெறும் முன்னரே அவர்களும் இறக்க நேரிட்டது.
  • பின்னர் முருக பக்தர் கிருபானந்த வாரியாரால் இத்திருக்கோயில் கட்டிமுடிக்கப்பட்டது. இக்கோயிலின் மூலவர் திருவுருவம்  எல்லாவகையிலும் பழனியாண்டவரை ஒத்திருக்கும். இத்திருக்கோயிலில் வள்ளி தெய்வானையுடன் கூடிய சண்முகர் சன்னதி, அன்னை பார்வதி, வரசித்தி விநாயகர், தட்சிணாமூர்த்தி என பல தனிச் சன்னதிகள் உண்டு.
🙏🙏🙏🙏🙏🙏🙏

வேதாத்திரி மகரிசி

வாழ்க வையகம்         வாழ்க வளமுடன்



வாழ்க்கைக் குறிப்பு:
  • அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி கூடுவாஞ்சேரி என்னும் கிராமத்தில் நெசவுத் தொழில் செய்யும் வரதப்பன், முருகம்மாள் (சின்னம்மாள்) தம்பதியர்களுக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தார். சிறுவயது முதலே வேதாத்திரி மகரிஷி அவரது தாயார் சின்னம்மாளிடம் நிறைய பக்தி கதைகளையும், புராணக்கதைகளையும் அறிந்து கொண்டார்.
  • இவரது குடும்பசூழல் இவருக்கு அதிகம் படிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. தன்னுடைய சொந்த ஊரில் மூன்றாவது வகுப்பு வரை படித்த இவர், பின்னர் தங்கள் குடும்ப தொழிலான தறி நெய்தலை செய்யத் தொடங்கினார்.
  • 18வது வயதில் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு ஏற்பட்டது. சென்னையில் இவருக்கு ஆயுர்வேத மருத்துவர் எஸ். கிருஷ்ணாராவின் நட்பு கிடைக்க, அவர் மூலமாக தியானம், யோகா போன்றவைகளை கற்றார் மகரிஷி.
  • தனது வாழ்க்கையின் குறிக்கோளாகிய முழுமையை உணரும் நோக்கத்தால் உந்தப்பட்டு; சித்த, ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி போன்ற மருத்துவ துறைகளைக் கற்று தேர்ச்சிப் பெற்றார். மேலும் இரண்டாவது உலகப் போரின் போது முதலுதவிப் பயிற்சியாளராகவும் பணிபுரிந்தார். பின்பு பொருளாதாரத் தன்னிறைவு பெற வேண்டும் என்று, தனது சுய முயற்சியினால் பல்லாயிரம் நபர்களுக்கு வேலை அளிக்கக்கூடிய அளவிற்கு ஒரு பெரிய நெசவுத் தொழிற்சாலையை உருவாக்கினார்.
  • அச்சமயத்தில் அரசாங்கத் தொழிற்கொள்கை மாற்றம் காரணமாக வியாபாரம் திடீர் சரிவு நிலையை அடைந்தது, இருப்பினும் தன்னிடம் பணிபுரிந்த 2000 குடும்பங்களையும் காப்பாற்றுவதற்காக ஈட்டிய பொருள் அனைத்தையும் அவர்களுக்கே செலவழித்து அனைத்து பொருள் வளத்தையும் இழந்தார். அப்படியிருந்தும் மனத்தை தளரவிடாது மீண்டும் கடுமையாக உழைத்து படிப்படியாக பொருளாதாரத்தில் தன்னை மேம்படுத்திக் கொள்ள அரிசி வியாபாரம் போன்ற பல்வேறுபட்ட தொழில்களை செய்து தனக்கும், தன்னை சுற்றியுள்ளவர்களின் துன்பத்தை போக்கவும் பாடுபட்டவர். தன் இரண்டு மனைவியருடைய மனத்தையும் நன்கு புரிந்தவராய் இருவரிடமும் பிணக்கின்றி அன்புடன் வாழ்ந்து காட்டினார்.
  • வறுமையிலேயே வாழ அடியெடுத்து வைத்த அவரது உள்ளத்தில் வறுமை என்றால் என்ன? கடவுள் என்பது எது? அதை ஏன் காண முடியவில்லை? மனித வாழ்க்கையிலேயே ஏன் துன்பங்கள் தோன்றுகின்றன போன்ற கேள்விகள் அவ்வப்போது ஒலித்துக் கொண்டே இருந்தன. இவற்றிற்கு காரணங்கள் கண்டு தெளிவு பெறுவதற்காக ஆராய்ச்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். விளைவாக தனது 35வது வயதில் தன்னிலை விளக்கமாக இறைநிலையை உணர்ந்தார். அதன் அடிப்படையில் உலக மக்களுக்காக அவர் அளித்த வாழ்க்கை நெறியே மனவளக்கலை ஆகும்.
ஆன்மிகத் தேடல்:
  • தனது சகோதரியின் மகளை (லோகாம்பாள்) மணந்து இல்லற வாழ்க்கையைத் தொடங்கினார். இல்லறத்திலும், நெசவுத் தொழிலிலும் ஈடுபாடு அதிகமிருந்த போதிலும் தனது ஆன்மீகத்தேடலில் மிகுந்த ஆர்வத்துடன் நாட்டம் கொண்டிருந்தார். சித்தர்களின் நூல்களைக் கற்று, தியானத்தில் வெகுவாக ஈடுபட்டு தன்னை அறிதல் என்ற அகத்தாய்வு முறையில் விடாமுயற்சியுடன் ஈடுபட்டார்.
  • இவரது ஆழ்ந்த ஆன்மீகத் தேடலின் விளைவாக தனது 35வது வயதில் ஞானம் பெற்றார். அதிலிருந்து அடுத்த 15 ஆண்டுகளில் பல உன்னதமான ஆன்மீகக் கருத்துக்களை தனது எழுத்துக்களின் மூலமாகவும், உரைகளின் மூலமாகவும் மக்களுக்கு எடுத்துரைத்தார். பின்னர் தனது நெசவு தொழிலை முற்றிலும் விட்டு விட்டு தன்னை முழுமையாக ஆன்மீகத் துறையில் ஈடுபடுத்திக் கொண்டார்.
நூல்கள் இயற்றல்:
  • இந்தப்பிரபஞ்சத்தைப் பற்றியும் மனித வாழ்க்கையைப் பற்றியும் தவநிலையில் தான் பெற்ற கருத்துக்களை பல கவிகளாகவும், கட்டுரைகளாகவும் புத்தக வடிவங்களில் இந்த உலகுக்கு மகரிஷி அவர்கள் அளித்துள்ளார்கள். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் கலந்த தமிழ்ப்பாடல்களை இயற்றியிருக்கிறார். பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய தமிழில் தனது தத்துவங்களை எடுத்துரைத்தார். எல்லா மதங்களின் சாரம் ஒன்றே என்பதை மகரிஷி அவர்கள் வலியுறுத்துகிறார்.
  • 1957ல் மகரிஷி 'உலக சமாதானம்' என்னும் நூல் ஒன்றை வெளியிட்டார். தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு இவருக்கு கிட்ட அங்கெல்லாம் ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்த்தினார். மனிதகுலம் அமைதியாக வாழ ஏற்ற கருத்துகளையும் சாதனை முறைகளையும் உலகமெங்கும் பரப்பிட 1958-ஆம் ஆண்டில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் நிறுவிய உலக சமுதாய சேவா சங்கம் இன்று இந்தியாவிலும், சிங்கப்பூர் மலேசியா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா, போன்ற நாடுகளிலும் பல கிளைகளைக் கொண்டு இயங்கி வருகிறது.
அருட்பெருஞ்சோதி நகர்:
  • கொங்கு நாட்டில் பொள்ளாச்சி நகருக்கு அருகே வால்பாறை மலையோரத்தில் ஆழியாறு நீர்த்தேக்கம் அமைந்துள்ள இடத்தில் அருட்பெருஞ்ஜோதி நகர் எனும் நகரம் வேதாத்திரி மகரிஷியால் 1984 கால கட்டத்தில் அமைக்கப்பட்டது. அன்பொளி என்னும் ஆன்மீக இதழ் ஒன்றையும் வெளியிட்டார்.
மறைவு:
  • அருட்தந்தை வேதாத்திரி அவர்கள் தனது 95வது வயதில் மார்ச் 28, 2006 செவ்வாய்க்கிழமையன்று மறைந்தார்.
மகரிஷியின் வைர வரிகள்:

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

மனவளக்கலை பயிற்சி:   

   
  • 'வாழ்க வையகம், வாழ்க வளமுடன்' என்ற மந்திரம் மனவளக்கலைப் பயிற்சி மூலம் வட அமெரிக்கா முழுவதும் ஒலிக்கிறது.நவம்பர் மாத சனி, ஞாயிறுகளில் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் வடிவமைத்த மனவளக்கலை மூலம் எளிமையான முறையில் உடல் நலம், மன அமைதி, மன உறுதி ஆகியவற்றைப் பெருக்க உதவிடும் உடற்பயிற்சி, தியானம், காயகல்பப் பயிற்சி, அகத்தாய்வுப் பயிற்சிகள் பல இடங்களில் வழங்கப்படுகின்றன.

  • வேதாத்திரி மகரிஷி அவர்கள் 'தனிமனித வாழ்க்கை முறைக்கு ஏற்பத் துன்பம் வருகிறது. வாழ்க்கை சிக்கல்களுக்குக் காரணம் மனிதனே தான். இன்பம், துன்பம் என்பவை bio-magnetism என்பதன் செலவுதான். இதை முறையாக அளவு, தன்மை தெரிந்து பயன்படுத்தினால் என்றும் வாழ்வில் இனிமையே இருக்கும்' என்கிறார்.

  • 'ஆன்மிகம் என்பது வாழ்க்கையை முழுமையாக வாழக் கற்றுக் கொடுக்கும் ஒரு கலை. ஆசைகளைத் துறப்பதல்ல. முறையான ஆசைகளோடு வாழ்வதும், அதை வாழ்க்கை நலன்களாக மாற்றிக் கொள்வதும் ஆன்மீகம் என்கிறார் வேதாத்திரி மகரிஷி.

  • மனவளக்கலை சமுதாயத்தை வலிமையாக்கக் கூடிய, மதத்துக்கு அப்பாற்பட்ட, ஆண், பெண், சிறுவர், பெரியவர் அனைவரும் பழகக்கூடிய பொதுவான பயிற்சி. வாழ்க்கையில் மலிந்திருக்கும் கோபம், கவலை, வஞ்சம், பேராசை ஆகியவற்றின் தோற்றுவாயை அறிந்து, முழுவதுமாகச் சரிசெய்து கொள்ள எளிமையான வழிமுறைகள் மனவளக்கலைப் பயிற்சியில் கிடைக்கின்றன.

  • பதினைந்துக்கும் மேற்பட்ட ஆசிய ஐரோப்பிய நாடுகளில் இப்பயிற்சிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ள மூன்று பேராசிரியர்கள் இப்பயிற்சிகளை நடத்துகிறார்கள். அவரவர் எண்ணங்களே அவரவரது வாழ்க்கையைச் செதுக்குகின்றன. மனதைத் தூய்மையாக்கி வளப்படுத்தி வாழ்வோம் வாருங்கள்.
🌻🌻🌻🌻🌻🌻🌻

[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]