Search This Blog

Wednesday, 31 August 2016

திருச்செந்தூர் - இரண்டாவதுபடை வீடு

 
  • முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் இரண்டாவது படை வீடாகத் திகழ்வது திருச்செந்தூர். செந்தில் ஆண்டவர் திருநாமத்துடன் இங்கு எழுந்தருளியுள்ள முருகப்பெருமான், சூரபத்மனுடன் இங்குதான் போர் புரிந்து அவனை சம்ஹாரம் செய்தார்.
  • திருச்செந்தூருக்கு செந்தி மாநகர், திருச்சீரலைவாய் என்ற பெயர்களும் உண்டு. இத்தலம் ஓயாமல், கடல் அலைகளால் மோதப்படுவதால் அலைவாய் என்றும் அழைக்கப்படுகிறது.திருநெல்வேலியில் இருந்து கிழக்கே சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது திருச்செந்தூர்.

தல வரலாறு :
  • தேவர்களை துன்புறுத்தி வந்த சூரபத்மன் மீது படையெடுத்துப் போரிட முருகப்பெருமான் வரும்போது, வழியில் எதிர்ப்பட்ட தாரகாசுரனையும், அவனுக்கு துணையாக நின்ற கிரவுஞ்ச மலையையும் அழித்துவிட்டுத் தன் படைகளுடன் வந்து திருச்செந்தூரில் தங்குகிறார். வீரவாகு தேவரை சூரபத்மனிடம் தூது அனுப்புகிறார். ஆனால், அசரன் சூரபத்மனோ அதை நிராகரிக்கிறான். மேலும் சூரபத்மன் வீரவாகு தேவரை மரியாதை குறைவாக நடத்தி அனுப்பினான்.
  • இதையடுத்து, முருகப்பெருமான் அம்பிகையிடம் வேல் பெற்று, சூரபத்மன் மீது போர் தொடுக்கச் சென்றார். சூரபத்மன் அப்போது முருகப் பெருமானுடைய எதிரில் மாமரமாக நின்றான். மரத்தின் ஒரு பாதி மயிலாகவும், மறுபாதி சேவலாகவும் மாறியது. மயிலை வாகனமாக அமைத்துக் கொண்டார். சேவலைக் கொடியாக ஏற்றுக்கொண்டார் முருகப்பெருமான்.
  • முன்னதாக,மாமரமாக உரு மாறிகாட்சியளித்த சூரபத்மனை கொல்வதற்காக, முருகப் பெருமான் வேலாயுதத்தை ஏவியபோது அதன் கொடூரம் தாங்காமல் கடலும் பின் வாங்கியதாக அருணகிரிநாதர் தனது திருப்புகழில் குறிப்பிடுகிறார்.
  • இவ்வாறு சூரபத்மனுடன் போரிட்டு, வெற்றி வாகை சூடி, தேவர்களை சூரபத்மனிடம் இருந்து காப்பாற்றியதால், இன்றைய திருச்செந்தூரானது ஜெயந்திபுரம் என்று வடமொழியால் அழைக்கப்பட்டு வந்தது. பின்னாளில், அந்த பெயரே மருவி செந்தூர் என்றாகி, திருச்செந்தூர் என்று வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. திருச்செந்தூர் என்ற சொல்லுக்கு புனிதமும் வளமும் மிகுந்த வெற்றி நகரம் என்றும் ஒரு பொருள் உண்டு.

திருச்செந்தூர் புகழ்பாடும் பதிகங்களும், புராணங்களும், பிரபந்தங்களும் ஏராளம். "சிக்கலில் வேல்வாங்கிச் செந்தூரில் சூரசம்ஹாரம்" என்பது பழமொழி.

2 மூலவர் :


  • எல்லா கோவில்களிலும் ஒரே ஒரு மூலவர்தான் இருப்பார். ஆனால், திருச்செந்தூரில் மட்டும் இரு மூலவர்கள் உண்டு. முருகப்பெருமானே பாலசுப்பிரமணியசுவாமி என்றும், சண்முகர் என்று இரு மூலவர்களாக இங்கு அருள்பாலிக்கிறார்.
  • பாலசுப்பிரமணியசுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள் பாலிக்கின்றனர். பாலசுப்பிரமணியசுவாமி தனியாகவும், சண்முகர் வள்ளி-தெய்வானையுடனும் எழுந்தருளியுள்ளனர்.

சிறப்புமிக்க நாழிக் கிணறு :
  • சூரசம்ஹாரம் முடித்த பிறகு, முருகப் பெருமான் சிவபூஜை புரிந்த இடமும் திருச்செந்தூரேயாகும். சிவலிங்க அபிஷேகத்திற்காக தன்னுடைய கை வேலினால் முருகப் பெருமான் "ஸ்கந்த புஷ்கரிணி" தீர்த்தத்தை உண்டாக்கினார். இத்தீர்த்தம் இன்றளவும் திருச்செந்தூரில் காணப்படுகிறது. இதை நாழிக் கிணறு என்று அழைக்கிறார்கள்.
  • ஒரு சதுர அடி அளவே உள்ள இந்த கிணறு கடற்கரையில் அமைந்துள்ள போதிலும் இத்தீர்த்தம் உப்புச் சுவையின்றி தூய நீராகவும், நோய்களைத் தீர்க்கும் குணமுடையதாகவும் இருப்பது அதிசயமாகும்.
வீரவாகு தேவருக்கே முதல் மரியாதை :
  • திருச்செந்தூருக்கு வீரவாகு தேவர் காவல் தெய்வமாக இருப்பதால் இத்தலத்திற்கு வீரவாகு பட்டினம் என்றும் ஒரு பெயர் உண்டு. இங்கு வீரவாகு தேவருக்கு பூஜை நடந்த பிறகே மூலவருக்கு பூஜை நடக்கிறது. வீரவாகு தேவரின் வலது பக்கத்தில் கரிய மாணிக்கப் பிள்ளையாருக்கும், பார்வதி அம்மனுக்கும் சன்னதிகள் உள்ளன.
  • கர்ப்பக் கிரகத்தில் வீற்றிருக்கும் மூலவரான முருகப் பெருமான் பாலசுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு வெள்ளை ஆடையே அணிவிக்கப்படுகிறது. செம்பட்டு அணிவிப்பதும் உண்டு. இவர் சிவபூஜை செய்யும் வகையில் இவருடைய நான்கு திருக்கரங்களுள் இரண்டு அபய வரத ஹஸ்தங்களையும், மற்றொன்று புஷ்பமேந்தி அர்ச்சனை செய்யும் கரமாகவும், இன்னொரு கரம் ருத்ராட்ச மாலையைத் தாங்கிக் கொண்டும் அமைந்துள்ளன. இவர் தவக்கோலத்தில் இருப்பதால் வள்ளி, தெய்வானை இருவரும் அவருடன் இல்லை.
  • மூலவருக்குப் பின்னால் காணப்படும் அறை "பாம்பறை" என்று அழைக்கப்படுகிறது. இது சுரங்க அமைப்பினை உடைய அறையாகும். இந்த அறையின் மேற்கு பாகத்தில் முருகப்பெருமானால் பூஜிக்கப் பெற்ற பஞ்சலிங்கங்கள் இருக்கின்றன.
இதுதான் விபூதிப் பிரசாதம் :  
  • திருச்செந்தூர் என்றதுமே நினைவுக்கு வருவது விபூதி பிரசாதம்தான்.  பன்னீர் இலைகளில் விபூதியை வைத்து மடித்து கொடுப்பதே இலை விபூதியாகும். வேதங்களே இங்கு பன்னீர் மரங்களாக இருந்து முருகப்பெருமானை வழிபடுவதாகவும், விஸ்வாமித்திரர் இங்கு வந்து முருகப் பெருமானை வழிபட்டு, இலைப் பிரசாதத்தை சாப்பிட்டுத் தனக்கு ஏற்பட்ட குன்ம நோயைப் போக்கிக் கொண்டதாகவும் புராண வரலாறு தெரிவிக்கின்றது.
  • ஆதிசங்கரர், தனக்கு ஏற்பட்ட காசநோயை செந்தூர் முருகனை வழிபட்டு, இதே இலை விபூதியை உட்கொண்டுதான் போக்கிக்கொண்டார். அதன் நினைவாக, வடமொழியில் சுப்பிரமணிய புஜங்கம் என்னும் பாமாலையை இயற்றினார்.
  • இதேபோல், 5 வயது வரை ஊமையாக இருந்து, செந்தில்வேலன் அருளால் பேசும் வல்லமையை பெற்று புகழ்பெற்றவர் குமரகுருபரர். அந்த முருகப்பெருமானே வேலினால் அவரது நாவில் எழுதி பேசவைத்தார். அதன்பின் குமரகுருபரர் இயற்றியதுதான் பிரசித்திப் பெற்ற கந்தர் கலிவெண்பா.

வள்ளிக்குகை :

  • திருச்செந்தூர் செல்பவர்கள் காணத் தவறாத இடம் அங்கு கடற்கரையில் அமைந்துள்ள வள்ளி குகை. முருகப்பெருமானிடம் வள்ளி கோபித்துக்கொண்டு வந்து தங்கிய இடம் இது என்கிறார்கள்.
  • இங்கு குகையை குடைந்து வள்ளிக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சன்னதிக்கு ஒருவர் மட்டுமே சென்று திரும்ப முடியும்.
  • வள்ளி குகைக்கு முன்புள்ள சந்-தனமலையில் தொட்டில் கட்டி வேண்டிக் கொண்டால், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் விரைவில் கிட்டும் என்கிறார்கள்.

நடுக்கடலில் நடந்த அதிசயம்! :
  • இந்தியாவை ஐரோப்பியர்கள் அடிமைப்படுத்திய நேரம், இந்தியாவின் செல்வ வளங்களை முடிந்தவரை சுரண்டினர். சாமி சிலைகளையும் அவர்கள் விட்டு வைக்க-வில்லை.
  • திருச்செந்தூர் முருகன் சிலையையும், நடராஜர் சிலையையும் டச்சுக்காரர்கள் கடத்திக்கொண்டு கப்பலில் தங்கள் நாட்டுக்கு திரும்பியபோது, வழியில் கடும் புயல் வீசியது. பேய் மழை-யும் கொட்டித் தீர்த்தது.இதைக்கண்டு பயந்துபோன அவர்கள், கடத்திக்கொண்டு சென்ற சாமி சிலைகளை கடலுக்குள் வீசிவிட்டனர்.
  • இதற்கிடையில், திருச்செந்தூர் முருகன் சிலை கடத்திச் செல்லப்பட்டதால், அதற்கு பதிலாக வேறு புதிய சிலை செய்யும் பணியை திருநெல்வேலியில் வசித்த வடமலையப்ப பிள்ளை என்பவர் துவங்கினார். அப்போது ஒருநாள் அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், "திருச்செந்தூர் கடலில் குறிப்பிட்ட இடத்தில் எலுமிச்சை பழம் மிதக்கும். அங்கு மூழ்கித் தேடினால் கடத்தப்பட்ட சிலை கிடைக்கும்" என்று அடையாளம் காட்டினார்.
  • அதன்படி, வடமலையப்ப பிள்ளை உள்-ளிட்டவர்கள் படகுகளில் கடலுக்குள் சென்று தேடினர். ஓரிடத்தில் எலுமிச்சைபழம் மிதக்க, அங்கு மூழ்கித் தேடினர். அப்போது கடத்திச் செல்லப்பட்ட முருகனின் திருமேனி கிடைத்தது. அந்த சிலை மீண்டும் சன்னிதானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
  • அதேநேரம், புதிதாக வடிக்கப்பட்ட சிலை திருநெல்வேலி தாமிரபரணி ஆறு பாயும் ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த இடம் தற்போது "குறுக்குத்துறை" என்று அழைக்கப்படுகிறது. குறுக்கு வழியில் முருகப்பெருமானின் அருள் கிடைக்க இங்கு சென்று வழிபடலாம் என்றும் சொல்கிறார்கள்.
தாமரையுடன் கந்தன் :


சூரபத்மனை சம்ஹாரம் செய்து ஆட்கொண்ட பிறகு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தாமரை மலர் கொண்டு சிவபூஜை செய்தார் முருகப்பெருமான். திருச்செந்தூரில் மூலஸ்தானத்தில் அழகாய் வீற்றிருக்கும் அந்த அழகன் முருகன் கையில் இன்றும் அந்த தாமரை மலரை நாம் பார்க்கலாம். இது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும்.

தெரியுமா மாப்பிள்ளை சுவாமி? :


பொதுவாக கோவில்களில் சுவாமிக்கு ஒரு உற்சவர் (விழாக்காலங்களில் இவரை பவனியாக எடுத்து வருவார்கள்) சிலை மட்டுமே இருக்கும். ஆனால், திருச்செந்தூர் கோவிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலை-வாய் பெருமான் என நான்கு உற்சவ மூர்த்-தி-கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்குமே தனித்-தனி சன்னதிகளும் உள்-ளன. இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கிறார்கள்.

முதன் முதலானது முருகனுக்கே... :

திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதி விவசாயிகள், தங்கள் நிலத்-தில் விளைவிக்கும் நெல், தானியங்கள், காய்கறி ஆகியவற்றை அறு-வடை செய்யும்போது, முதலில் அறுவடை செய்ததை திருச்செந்தூர் கோவிலுக்கு கொண்டு வந்து, அங்குள்ள சண்முக விலாச மண்டபத்தில் வைத்து காணிக்கை செலுத்தி விடுகின்றனர்.

இப்படிச் செய்தால் மகசூல் அதிக அளவில் இருக்கும் என்றும், இயற்கையால் பயிர்களுக்கு இடையூறு ஏற்படாது என்றும் நம்புகிறார்கள்.
இதேபோல், ஆடு, மாடு வளர்க்கும் விவசாயிகள், அவை முதன் முதலாக ஈன்றெடுக்கும் குட்டியை இந்த கோவிலுக்கு கொண்டு வந்து காணிக்கை செலுத்துவதும் வழக்கத்தில் இருந்து வருகிறது.

சுப்பிரமணிய காயத்ரி :

"ஓம் தத் புருஷாய வித்மஹே
மஹா ஸேநாய தீமஹி
தந்நோ ஷண்முக: ப்ரசோதயாத்"

-  முருகப்பெருமானுக்குரிய இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி, அவரை வழிபட்டு வந்தால் அவரது அருளுக்கு எளிதில் பாத்திரமாகலாம்.
 
****************

சிவன்மலை கோவிலில் பூமாலை வைத்து பூஜை


அருங்கரை அம்மன் ஆலயம்




கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் கரூரில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் அமராவதி ஆற்றின் கரையில் அமைந்து உள்ளது அருங்கரை அம்மன் கோவில். இந்த கோவிலுக்கு உள்ளே சென்று வழிபட ஆண்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. சிறப்பு வாய்ந்த இந்த கோவிலின் தல வரலாற்றை இங்கே காண்போமா!

வலையில் சிக்கிய அம்மன் :

  • முன்னொரு காலத்தில் இந்தப் பகுதியில் வசித்த மீனவர்கள் அமராவதி ஆற்றில் மீன்பிடிக்கும் தொழில் செய்து வந்தனர். ஒரு முறை மீனவர் ஒருவர் ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் வீசிய வலையில் மீன்களோடு சேர்ந்து ஒரு பெட்டியும் சிக்கியது. அந்தப் பெட்டியை அவர் திறந்து பார்த்தார். அதற்குள் ஒரு அம்மன் சிலை இருந்தது. அந்தச் சிலையைப் பார்த்ததும் மீனவர் ஆச்சரியத்தில் உறைந்து போனார். தனக்கு அருள்புரிவதற்காகவே அந்த அம்மன், தனது வலையில் வந்து இருப்பதாக எண்ணினார்.
  • பின்னர் அந்தப் பெட்டியை, ஆற்றங்கரையில் இருந்த ஒரு மரத்தின் அடியில் வைத்து தினமும் அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டு வந்தார். அவரை பார்த்து மற்ற மீனவர்களும் மரத்தின் அடியில் இருந்த அம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபடத் தொடங்கினார்கள். காலப்போக்கில் மீனவர்கள் அந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்தனர். இதனால் அம்மன் இருந்த பெட்டி மணல் மூடி மண்ணுக்குள் புதைந்து விட்டது. பெட்டி வைத்திருந்த இடத்தில் ஒரு சிறிய மேடு மட்டும் இருந்தது.
  • இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு பின்னர் அந்த பகுதியில் சிலர், கால்நடைகளை மேய்க்கும் தொழிலை செய்து வந்தனர். அவர்களில் நல்லதாய் என்ற சிறுமியும் இருந்தாள். ஒரு முறை அந்தச் சிறுமி, கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது அதிசயம் ஒன்று நிகழ்ந்தது. பசுக் கூட்டத்தில் இருந்து தனியாக பிரிந்து சென்ற பசு ஒன்று, மணல் மேடாக இருந்த இடத்தின் கீழ் நின்றபடி தானாகவே பாலை சுரந்தது.
ஜோதியாக மாறிய சிறுமி :
  • அதனை கண்ட சிறுமி வியப்படைந்து அருகில் சென்று பார்த்தாள். அப்போது பசுமாடு பால்சொரிந்த இடத்தில் ஒரு மேடான பகுதி இருந்தது தெரிய வந்தது. அந்த மேட்டின் மீது சிறுமி அமர்ந்தாள். அவ்வாறு அமர்ந்த அந்த சிறுமி, அதன் பின்னர் அந்த இடத்தை விட்டு எழவே இல்லை. சிறுமி மேய்ப்பதற்காக ஓட்டி வந்த கால்நடைகள் மட்டும், மாலையில் அந்தந்த வீடுகளுக்கு திரும்பிச் சென்றன. சிறுமியைக் காணாததால், அந்தக் கிராமத்தில் இருந்த ஆண்கள் அனைவரும் சிறுமியை தேடி அமராவதி ஆற்றுப் பகுதிக்கு சென்றனர்.
  • அந்தப் பகுதி முழுவதும் சல்லடை போட்டு சிறுமியை தேடிப்பார்த்தனர். அப்போது அங்கு உள்ள ஒரு மரத்தின் அடியில் இருந்த மணல் திட்டின் மேல் சிறுமி கண்களை மூடி அமர்ந்திருப்பதைக் கண்டனர். அந்தச் சிறுமியின் அருகில் சென்ற அவர்கள், சிறுமியை வீட்டிற்கு வருமாறு அழைத்தனர். ஆனால் சிறுமியோ அங்கிருந்து வர மறுத்து விட்டாள். ‘ஏன் வர மறுக்கிறாய்?’ என்று அவர்கள் சிறுமியிடம் கேட்டபோது, ‘நான் இங்குதான் இருக்க விரும்புகிறேன். என்னை கண்ட இந்த நாளில், இதே நேரத்தில் மட்டும் எனக்கு பூஜை செய்து வழிபடுங்கள்’ என்று சொல்லி விட்டு அந்த இடத்தில் இருந்து ஜோதியாக மாறி மறைந்து விட்டாள்.
நள்ளிரவு பூஜை :
  • இதனால் ஆச்சரியம் அடைந்த ஆண்கள் அனைவரும் அங்கு நடந்த சம்பவத்தை ஊருக்குள் சென்று தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் அந்த கிராம மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக அந்த இடத்துக்கு திரண்டு வந்து பார்த்தனர். பின்னர் அவர்கள் அந்த சிறுமியை அம்பாளாக எண்ணி உருவம் எதுவும் இல்லாமல் வழிபட்டு வந்தனர். நீண்ட காலத்திற்கு பின்னர் அந்த இடத்தில் கோவில் கட்டப்பட்டது. சிறுமியை தேடி ஆண்கள் இந்த பகுதிக்கு வந்தது செவ்வாய்க்கிழமை நள்ளிரவு என்பதால் செவ்வாய்க்கிழமை மட்டும் இந்த கோவில் திறக்கப்பட்டு நள்ளிரவில் பூஜை நடக்கிறது. மற்ற நாட்களில் இரவும், பகலும் கோவில் நடை அடைக்கப்பட்டே இருக்கும்.
  • ஆண்கள் மட்டுமே இந்த கோவிலுக்குள் சென்று வழிபடுகின்றனர். பெண்களுக்கு இந்த கோவிலுக்குள் சென்று வழிபடுவதற்கு அனுமதி இல்லை. கோவில் வாசலில் மட்டும் அவர்கள் நின்று வழிபடலாம். பெண் குழந்தைகள் கூட கோவிலுக்குள் செல்வதற்கு அனுமதி கிடையாது. வெளியில் நின்று அம்மனை வணங்கும் பெண்கள், அமராவதி ஆற்றில் குளித்து விட்டு தலையை முடியாமல், ஈரத்துணியுடன் அம்மனை வழிபட வேண்டும்.
  • கோவிலில் அம்மனுக்கு பூஜைகள் முடிந்த பின்னர் அம்பாளுக்கு படைக்கப்பட்ட பூஜை பொருட்கள் மற்றும் நேர்த்திக்கடனாக செலுத்தும் வாழை உள்பட பல்வேறு தானியங்கள் போன்றவற்றை கோவிலின் முன் மண்டபத்தில் இருந்து சூறை விடுகின்றனர். அப்போது அங்கு உள்ள பெண்கள் சூறை விடும் பொருட்களை தங்களது சேலை தலைப்பில் பிடித்து கொள்கின்றனர். பிரசாத பொருட்களின் வடிவில் அம்மன் பெண்களுக்கு அருளுவதாக பக்தர்களின் நம்பிக்கை.
விவசாயம் செழிக்க சிறப்பு வழிபாடு :
  • அருங்கரை அம்மன் கோவிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் தங்களது குடும்பம் சிறக்க, விவசாயம் செழிக்க அம்மனிடம் வேண்டிக்கொள்கின்றனர். இந்த கோவிலில் உள்ள காவல் தெய்வங்களுக்கு கிடா வெட்டியும், குதிரை பொம்மைகள் செய்து வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அம்மன் மற்றும் கோவிலில் உள்ள காவல் தெய்வங்களுக்கு கிடா வெட்டியும், அன்னதானம் செய்தும் தங்கள் நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்துகிறார்கள்.
அருங்கரை அம்மன் :
  • தொடக்கத்தில் இந்த அம்மன் நல்லதாய் என்று அழைக்கப்பட்டார். பின்னர் ஆற்றங்கரையின் அருகே அமர்ந்த அம்மன் என்பதால் இவரை அருங்கரை அம்மன் என்று பக்தர்கள் அழைக்க தொடங்கினர். காலப்போக்கில் இந்த பெயரே நிலைத்து விட்டது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வேண்டுமானால் கரூரில் இருந்து சின்னதாராபுரம் வந்து பின்னர் அங்கிருந்து வெள்ளக் கோவில் செல்லும் டவுன் பஸ்சில் ஏறி கோவில் வாசலில் இறங்கி கொள்ளலாம்.
  • மற்ற பிற வாகனங்களில் செல்ல விரும்புபவர்கள் சின்னதாராபுரம், அணைப்புதூர், பெரியமதியாகூடலூர் வழியாகவும், தென்னிலை, கருநெல்லிவலசு, பெரியதிருமங்கலம் வழியாகவும் கோவிலுக்கு செல்லலாம். செவ்வாய்க்கிழமை தோறும் இந்த கோவிலுக்கு சின்னதாராபுரத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
**************************

🙏ஓதிமலையில் அருளும் அபூர்வ முருகன்! 🙏

  • குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்' என்பது வழக்கு. அதுவும் கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் முருகப் பெருமானுக்கு ஏராளமான மலைக் கோயில்கள் உண்டு. அலகுமலை, அனுவாவி, சென்னிமலை, மருதமலை என்று ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம். இவற்றுள், கோவைக்கு அருகில் உள்ள ஓதிமலையும் ஒன்று. இங்கு அருள் பாலித்து வரும் முருகப் பெருமானின் திருநாமம் - ஸ்ரீகுமார சுப்ரமண்யர். இந்த மலைக்கு எண்ணற்ற சிறப்புகள் உண்டு.
  •  முருகப் பெருமான் குடி கொண்ட மலைகளுள், மிகவும் உயர்ந்தது இந்த ஓதிமலையே என்று சொல்லப்படுகிறது. எழுபது டிகிரி கோணத்தில் செங்குத்தாக மலை அமைந்துள்ளது.
  •  வேறெங்கும் காண்பதற்கு அரிதான நிலையில், ஐந்து திருமுகங்களும், எட்டுத் திருக்கரங்களும் கொண்டு முருகப் பெருமான் இங்கு தரிசனம் தருவது விசேஷம்.

🙏ஓதிமலை தல புராணம்🙏
  • .கயிலாய மலை அன்று கோலாகலமாக இருந்தது. தேவர்கள், ரிஷிகள் மற்றும் முனிவர்கள் அனைவரும் அம்மையையும் அப்பனையும் தரிசித்தபடி இருந்தனர். அப்போது, விநாயகப் பெருமானும் முருகப் பெருமானும் அங்கே இருந்தனர். பிரம்மதேவன், இறைவனை தரிசிக்க அங்கு வந்தான். நந்திதேவர், விநாயகர் என்று துவங்கி அவையில் வணங்கத்தக்க அனைவரையும் வணங்கி, இருக்கையில் அமர்ந்தான். முருகப் பெருமானை மட்டும் கண்டுகொள்ளவில்லை.
  • 'ஈசனின் புதல்வனான என்னைக் கண்டு காணாமல் கர்வத்துடன் இருக்கிறாரே... கயிலையில் கால்பதிப்பவருக்கு இந்த கர்வம் இருக்கக் கூடாது' என்று தீர்மானித்தான் முருகப் பெருமான். பிரம்மனின் ஆணவத்தை தகர்த்தெறியவும் முடிவு செய்தான். உடனே, பிரம்மனை அருகே அழைத்து, அவரிடம் ''தாங்கள் யார்?'' என்றான் முருகன்!
  • ''என்னைத் தெரியாதா? நீ பாலகன் ஆயிற்றே! உனக்குத் தெரியாதுதான்! நான்தான் பிரம்மதேவன். படைக்கும் கடவுள். சர்வ லோகங்களிலும் உள்ள ஜீவன்களை படைத்து வருபவன் நானே!'' என்று செருக்குடன் தெரிவித்தான்.
  • ''அப்படியா? சரி... இந்த உலக ஜீவன்களின் படைப்புக்கு ஆதாரமாக இருப்பது எது? சொல்லுங்கள்'' என்று பிரம்மனிடம் வினவினான் முருகன். ''இதென்ன கேள்வி... படைப்புத் தொழிலின் ஆதாரம் ப்ரணவம்தான்'' என்றான் கம்பீரமாக! முருகன் விடவில்லை. ''ப்ரணவம் என்பதன் பொருள் என்ன?''
  • ''ஓம் எனும் அட்சரம்தான் ப்ரணவம் விளக்கும் பொருள்.'' ''தாங்கள் சொல்வது சரிதான்... ஆனால், ஓம் எனும் அட்சரத்தின் பொருளைப் புரியும்படியாக விளக்குங்களேன்'' என்றான். பிரம்மன் தடுமாறினான்; பதில் தெரியாமல் தலை குனிந்தான்.
  • தந்தைக்கே வேதத்தின் பொருளை உரைத்த அந்த ஸ்வாமிநாதக் கடவுள் வெகுண்டான். பிரம்மனைத் தண்டிக்கவும் தீர்மானித்தான். ''படைப்பின் மூலமான ஓம் எனும் அட்சரத்தின் பொருளை விளக்க முடியாதவர், படைப்புக் கடவுளாக இருப்பதா? அதற்கு உமக்குத் தகுதி இல்லை'' என்று சொல்லி, அவரது தலையில் குட்டி, பூலோகத்தில் இரும்புக் கம்பிகளால் ஆன சிறையில் (இன்றும் அந்த ஊரின் பெயர் இரும்பறை. இரும்பால் ஆன அறை எனும் பொருள் கொண்டது. ஓதிமலையில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது) அடைத்தான்.
  • அது மட்டுமா? அடுத்து படைப்புத் தொழிலையும் தானே ஏற்றான் முருகப் பெருமான். அப்போது அவர் தங்கி இருந்த இடமே ஓதிமலை. பிரம்மதேவன் சிறை வைக்கப்பட்டிருப்பதை அறிந்த சிவனார் அங்கே தோன்றி, முருகப் பெருமானிடம் நைச்சியமாகப் பேசி, பிரம்மனை விடுவித்தார். பின்னர் இரும்பறையிலேயே எழுந்தருளினார்.
  • இங்கு உள்ள இறைவனின் திருநாமம்- கயிலாசநாதர்; சுயம்பு லிங்கம். பிரம்மதேவன் சிறைப்பட்ட அதே இடத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  • ஓதிமலையில் இருந்தபடியே ஓம்காரத்தின் பொருள், வேதத்தின் விளக்கங்கள் ஆகியவற்றைத் தந்தைக்கு எடுத்துரைத்தானாம் முருகப் பெருமான். இதனால்தான், 'ஓதியமலை' எனும் பொருளில் ஓதிமலை ஆனதாகச் சொல்வர்.
  • ஆறு தலையும், 12 திருக்கரமும் கொண்டு ஆதியில் விளங்கிய ஓதிமலை முருகப் பெருமான், இன்று ஐந்து திருமுகத்துடன் எட்டுத் திருக்கரங்கள் கொண்டு காட்சி தருவதற்கு போகரே காரணம்! எப்படி என்கிறீர்களா?
  • இந்தப் பகுதியில், மூன்றாவது யாகத்தை முடித்த பிறகு போகருக்கு தரிசனம் தந்தாராம் முருகப் பெருமான். இதையடுத்து, பழநியம்பதிக்கு சென்று அங்கே நவபாஷாண முருகப் பெருமானது சிலையை வடிக்க எண்ணினார் போகர். ஆனால், ஓதிமலையில் இருந்து பழநிக்குச் செல்லும் வழி தெரியாமல் தவித்த போகர், ஓதிமலை முருகனிடமே இதைத் தெரிவித்தார். உடனே, தன் திருமுகத்தில் இருந்து ஒன்றையும் நான்கு திருக்கரங்களும் கொண்டு வடிவமெடுத்து, போகருக்கு உதவுவதற்காக மலையில் இருந்து இறங்கினாராம் (இதனால்தான், எஞ்சிய ஐந்து திருமுகம் மற்றும் எட்டுத் திருக்கரங்களுடன் இங்கு காட்சி தருகிறார் குமார சுப்ரமண்யர்) முருகப் பெருமான். போகரும் பின்தொடர்ந்தார்.
  • ஓதிமலையில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள கிராமத்தை அடைந்ததும் பழநிக்குச் செல்லும் வழியைப் போகருக்குக் காட்டியருளிய முருகன், அங்கிருந்து மறைந்தார். குமரனது அருளைப் போற்றியபடியே பழநியை நோக்கிப் பயணித்தார் போகர்.
  • ஓதிமலையில் இருந்து இறங்கி வந்து, போகருக்குப் பழநி செல்லும் வழியைக் காட்டிய அதே இடத்தில் - அதே கோலத்தில்... கோயில் கொண்டார் முருகப் பெருமான். அந்த இடம்... குமாரபாளையம் என்று வழங்கப்படுகிறது. ஏக முகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் குமாரபாளையத்தில் அருள் பாலித்து வருகிறார்.
  • பல தலங்களில் தரிசித்திருந்தாலும் ஓதிமலையில் முருகப்பெருமானை தரிசித்து திரும்பும்போது ஏற்படும் பரவச அனுபவம், ஆனந்தமானது; அனுபவித்துப் பாருங்கள், புரியும்!
🙏🙏🙏🙏🙏🙏🙏
[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]