Search This Blog

Thursday, 27 July 2017

குளிகை பிறந்த கதை

  • ராவணன் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான். காரணம் அவன் தந்தையாகப் போகிறான். குல குருவான சுக்கிராச்சாரியாரிடம் சென்றான்."குருவே! எனக்கு பிறக்க போகும் குழந்தை, பல வித்தைகளில் ஜித்தனாகவும் (வெற்றி வீரன்) எவராலும் வெல்ல முடியாத வலிமை கொண்டவனாக திகழவும் எந்த நேரத்தில் குழந்தை பிறந்தால் நல்லதென கணித்து சொல்லுங்கள்,'' என்றான்.
  • “ராவணா! நல்ல கிரகங்கள் எல்லாம் ஒரே ராசி கட்டத்தில் வந்தால் நல்லது. ஆனால், அது எப்போது வருகிறது என யோசித்து யோசித்து தலையே வெடித்துவிடும் போல் இருக்கிறது. சுபகிரகங்களை ஒட்டுமொத்தமாக சிறையில் அடைத்தால் என்ன என்று கூட தோன்றுகிறது,'' என்றார் வேடிக்கையாக. 
  • அப்படி சொன்னது அவருக்கே வினையாகி விட்டது. “அவ்வளவு தானே! நவக்கிரகங்களையும் ஒன்றாக சிறையில் அடைத்து விடுகிறேன். அதேநேரம், கிரகங்களில் நீங்களும் ஒருவர் என்பதால் உங்களையும் சிறைப்பிடிக்கிறேன்,'' என்றான். 
  • சுக்கிரன் எனப்படும் சுக்கிராச்சாரியாரையும், மற்ற கிரகங்களையும் சிறையில் தள்ளினான். தங்கள் நிலைக்கு காரணம் சுக்கிராச்சாரியார் என்பதால் அவரை நவக்கிரகங்களும் திட்டித் தீர்த்தன. "உங்களுக்கு திறமை இருக்கிற அளவுக்கு புத்தி வேண்டாமா? அவன்தான் ஆணவக்காரன் ஆயிற்றே! தன்னை விட உயர்ந்தவன் இருக்கக் கூடாது என்று நினைப்பவன். அவனிடமா நம்பெருமைகளைச் சொல்வது? அறிவு களஞ்சிய மய்யா நீர்,'' என்றார் சனீஸ்வரர்.
  • "நான் என்னவோ சொகுசாக இருப்பதை போலவும், நீங்கள் மட்டும் துயரப்படுவதை போலவும் அல்லவா பேசுகிறீர்கள்.? வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைப்பவன் என்பதை சற்று மறந்து ஆலோசனை சொன்னேன். இப்போது அனுபவிக்கிறேன்,'' என்றார் சுக்கிரன். 
  • இதனிடையே, மண்டோதரி பிரசவ வலியால் துடித்தாள். சுகப்பிரசவம் ஆவது சிக்கல் என்று வைத்தியர்கள் சொன்னதாக சிறைக்காவலர்கள் பேசியது கிரகங்கள் காதில் விழுந்தது. "சுக்கிரச்சாரியாரே! எல்லா கிரகங்களும் ஒன்று சேர்ந்தால், அதை "யுத்த கிரகம்' என்பார்கள். அப்படி இருக்கும்போது எதற்காக இப்படி ஒரு யோசனை சொன்னீர்கள்? இப்போது பாருங்கள்! மண்டோதரி பிரசவிக்க முடியாமல் வலியால் வேதனைப்படுகிறாள். அவளுக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதாவது பாதிப்பானால் ராவணன் துளைத்து விடுவான் நம் அனைவரையும்,'' என்றார் சனீஸ்வரர். 
  • "அசுரத் தலைவனிடம் இருந்து தப்பிக்க வழியிருக்கிறதா?'' என்றார் பிரகஸ்பதியான குரு. "புதிதாக ஒரு உயிரை உண்டாக்கி, அதை ஒரு நேரத்திற்கு அதிபதியாக்கினால், ராவணனின் வாரிசு பிழைக்கும்,'' என்ற சனீஸ்வரர் தியானத்தில் அமர்ந்து, தன் உடலில் இருந்த சக்தியை திரட்டி, ஓர் அழகான குழந்தையை உருவாக்கினார். குழந்தைக்கு "குளிகன்' என்று பெயரிட்டார். இவன் பிறந்தவுடனேயே மண்டோதரிக்கு சுகப்பிரசவம் ஆகிவிட்டது. "இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது?'' என சனீஸ்வரரிடம் மற்றவர்கள் கேட்டனர். 
  • "யுத்த கிரக வேளையில், குளிகனுக்குரிய குளிகை நேரமாக அது அமைந்தால் பிரச்னையில்லாமல் இருக்கும். வானில் இருக்கும் மேகத்தை காற்று கலைத்து விடுவது போல், குளிகன் பிறந்த நேரத்தில் மண்டோதரிக்கு சுகப்பிரசவம் ஆகிவிட்டது,'' என்றார் சனீஸ்வரர். 
  • குளிகை நேரத்தில் ஒரு செயலை தொடங்கினால் வளர்ந்து கொண்ட போகும். கடன் வாங்குவது, பழைய கட்டடங்களை இடிப்பது, இறந்தவர் உடலை எடுப்பது போன்ற காரியங்களை இந்நேரத்தில் செய்யக்கூடாது. கடனை திருப்பி கொடுப்பது, வீடு, நகை வாங்குவது பற்றி பேச்சு நடத்துவது ஆகிய சுபநிகழ்ச்சிகளை செய்தால் நன்மை ஏற்படும்.

பன்னீரு இலை விபூதி மகிமை

  • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு பன்னீ(னி)ரு இலை விபூதி பிரசாதம் காலம் காலமாக வழங்கப்பட்டு வருகிறது. 

இலை விபூதியின் மகத்துவம்:
  • அபிநபகுப்தர் என்ற சித்தர் ஒருவர் கெடுதல் செய்யும் நோக்கத்தில் ஆதிசங்கரருக்கு செய்வினை, ஏவல், பில்லி, சூனியம் செய்தார். இதனால் சூலைநோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு ஆதிசங்கரர் உட்பட்டார். மனமுடைந்த ஆதிசங்கரர் இறைவனை நாடி மனமுறுக வேண்டினார். இருந்தும் அவருக்கு நோய் குணமாகவில்லை. அவர் ஒவ்வொரு கோவிலாக சென்று இறுதியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு வந்து மனமுறுக வேண்டினார். அப்போது ஆதிசங்கரர் கையில் பன்னீரு இலை விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதத்தை உடலில் பூசிக், அதை உள்கொண்டார். சில நாட்களில் அவரை தொற்றி இருந்த நோய்கள் அனைத்தும் முற்றிலும் குணமடைந்தது.

  • அதன் பின்னர் ஆதிசங்கரர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மீது அதிக பற்று கொண்டு மனமுறுகி 32 பாடல்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகம் பாடினார். அந்த 32 பாடல்களும் கோவிலில் சிறப்பு, சுவாமியின் பெருமை போன்றவை குறித்து இருந்தது. அதில் 25வது பாடலில் இலை விபூதியின் மகிமை பற்றி பெருமை பட பாடினார்.

  • சுப்பிரமண்யா! நின் இலை விபூதிகளை கண்டால் கால் கை வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலிய நோய்கள் நீங்கும். பூதம், பிசாசு, தீவினை யாவும் விட்டு விடும் என்று சுப்பிரம்மண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர் செல்லி இருக்கிறார்.

  • பன்னீர் இலை என்பதற்கு அர்த்தம். இலையில் மொத்தம் 12 நரம்புகள் இருக்கும். முருக பெருமான் தனது 12 கரங்களால் இந்த பிரசாதத்தை வழங்கியதால் இந்த பன்னீர் இலையில் முருக பெருமானின் பன்னிரு கைகள் போன்று இருக்கும். பன்னிரு இலை என்ற பெயர் காலப்போக்கில் மருவி பன்னீர் இலை என்று கூறப்படுகிறது.

  • முருக பெருமானை பூஜித்த தேவர்கள் அனைவரும் இந்த பன்னீர் மரங்களாக இருப்பதாகவும், அதில் இருந்து இருந்த பெறப்படும் பன்னீர் இலைகள் பிரசாதமாக வழங்கப்படுவதால் அதற்கு தனி மகத்துவம் இருப்பதாக கருதப்படுகிறது.

  • இந்த பன்னீர் இலை விபூதி பிரசாதம் தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின் போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக திருச்செந்தூர் கோவிலில் இந்த இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.

  • இந்த இலையை நேராக வைத்து பார்த்தால் முருக பெருமானின் வேல் போன்று காட்சி அளிக்கும்.
  • பன்னீர் இலையில் உள்ள பூவில் உள்ள சாந்த குண சக்தி நிறைவாக உள்ளது. அது நமது உடலுக்குச் சில நன்மைகளைத் தருகிறது என்று சித்தவைத்தியம் கூறுகிறது.
  • இறைவனுடைய பூஜைக்குறியது துளசி வில்வ இலை, வன்னி இலை. அதே போல் இறைவனுடைய பூஜைக்குரியதாகப் பன்னீர் இலை உள்ளது.
  • பன்னீர் இலையில் உள்ள 12 நரம்புகள் முருகப்பெருமானின் பன்னிரு திருக்கரங்களுச் சமம் என்று கூறுவர். .திருவாடுதுறை திருப்பனந்தாள் குரு மகாசந்நிதானங்கள் நடராஜப் பெருமானை வணங்குவோர்க்குப் பன்னீர் இலையில் விபூதிப் பிரசாதம் வழங்கி வருகிறார்கள்.
  • திருநீற்றைப்ப பன்னீர் இலையில் பத்திரமாக வைத்துக் கொள்வது செல்வத்தைச் சேமிப்பது போலாகும் என்று பக்தர்கள பன்னீர் இலை வீபூதியைப் பக்தியுடன் பத்திரமாக வைத்துக் கொள்கிறார்கள்.
  • பக்தர்கள் பன்னீர் இலை விபூதியுடன் இலையையும் உண்டு நோய்களிலிருந்து குணமடைகிறார்கள். அருளாளர் ஆதிசங்கரர் நோய் நீக்கும் உண்மையையும் பெருமையையும் வல்லமையையும் தனது பாடல்களில் எடுத்தியம்புகிறார்.
  • பன்னீர் இலை விபூதியைப் பக்தர்கள் இல்லங்களுக்கு எடுத்துச் சென்று பூஜை அறைகளில் பத்திரப்படுத்தி வியாதிகள் வந்தால் செந்தில் முருகனை வேண்டி அணிந்து கொள்கிறார்கள். ஆடு, மாடுகள் நோய் கண்டால் நோய் நீங்க வழிபட்டுப் பன்னீர் இலை விபூதியினை மருந்தாகக் கொடுத்து நோய் நீங்கியதும் திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாக ஆடு மாடுகளைச் செலுத்திகிறார்கள். பன்னீர் இலை விபூதியினை மருந்தாக் கொடுத்து நோய் நீங்கியதும் திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாக ஆடு மாடுகளைச் செலுத்துகிறார்கள். பன்னீர் இலையும் நற்சந்தனமும் பக்தர்களுக்கு வழங்கபபடுகிறது.

பன்னீர் இலை விபூதியின் வரலாறு

  • செந்தூரில் சூரபத்மாதியர்களை ஒடுக்கிவிட்டு கடற்கரையில் கலங்கரை விளக்கம் போன்று ஒளி வீசி நின்றான் முருகப் பெருமான். அவனது பெருமையைத் துதித்த வேதங்களனைத்தும் ஒன்று சேர்ந்து செந்திலோனின் மகிமையை விளக்கும் பன்னீர் மரங்களாக இவ்விடத்தில் தோன்றின.
  • எனவே இவற்றின் இலைகளும் வேத மந்திர சக்தியை உடையவை என்கிறது புராணம். பன்னீர் இலையில் பத்திரப்படுத்தப்படும் விபூதியிலும் வேத மந்திர சக்திகள் நிறைந்து விடுகின்றன.தவிர, பன்னீர் இலையில் காணப்படும் 12 நரம்புகள் முருகனது பன்னிரு கரங்களை நினைவூட்டுவனவாக அமைந்துள்ளன.
  • தாடகை எனும் பெண்ணை ராமபிரான் மூலமாக வதம் செய்த காரணத்தினால் தனக்கு ஏற்பட்ட குன்மம் முதலான நோய்கள் தீர, ராமபிரான் தன் கனவில் கூறியபடி, செந்திலாண்டவன் இலை விபூதியைத் தரித்துக் கொண்டு நோய்கள் நீங்கப் பெற்றார் விசுவாமித்திர மகரிஷி.
  • ஆதி சங்கரரது வாழ்விலும் இலை விபூதி மகிமையை விளக்குவதான ஒரு சம்பவம் ஏற்பட்டது. அவருடன் ஏற்பட்ட வாதங்களில் தோற்ற அபிநவகுப்தர் என்பவர், ஆபிசார வேள்வி செய்து சங்கரருக்கு உடலை வருத்தும் நோய் உண்டாகச் செய்து விட்டார்.
  • அக்காலத்தில் அவர் வட கர்நாடகாவிலுள்ள கோகர்ணத் திருத்தலத்தில் தங்கி வழிபாடு செய்து வந்தார். ஒரு நாள் இரவு, இறைவன் அவர் கனவில் தோன்றி, "என் குமாரன் ஷண்முகன் குடியிருக்கும் புண்ணியத் தலமான செயந்திபுரம் எனும் திருச்செந்தூர் சென்று அவனைத் தரிசித்தால் உன் நோய் முற்றிலுமாக நீங்கப் பெறுவாய்" என்று கூறினார். உறங்கி எழுந்து பார்த்த சங்கரரின் அருகில் விபூதி இருந்தது.
  • கோகர்ணேஸ்வரர் ஆணைப்படி, செந்தூர் வந்தடைந்தார், ஆதிசங்கரர். கடலில் நீராடி, பின் இறைவன் சன்னதியில் மனமுருகி நின்றபோது, ஆதிசேஷனாகிய பாம்பு ஊர்ந்து ஊர்ந்து இறைவன் சன்னதியை அடைந்ததைக் கண்டார். அதே நேரம் அவருக்கும் இறை தரிசனம் கிட்டியது.
  • அவன் அருளாலே, மடை திறந்த வெள்ளம் போல அவர் திருவாயிலிருந்து சுலோகங்கள் வெளிவந்தன. வடமொழியில் பாம்பைப் புஜங்கம் என்பர். வடமொழி இலக்கணப்படி, புஜங்க விருத்தமாக அமைந்தன பாடல்கள். பாடி முடித்து இலை விபூதியைப் பெற்று அணிந்து கொண்ட சங்கரருக்கு வெகு விரைவில் நோய் குணமாயிற்று.
  • தெய்வ அவதாரமாகக் கருதப்படும் ஆதிசங்கரர் நினைத்திருந்தால், தானே நோயை விரட்டி இருக்க முடியும்.ஆனால் மானுட அவதாரத்தில், அத்துயரை, தானே அனுபவித்து உலகோருக்குப் பத்ர பூதியின் பெருமையை வெளிப்படுத்த அவர் நிகழ்த்திய திருவிளையாடலே இது என்று கூறலாம்.
விபூதியே கூலி
  • சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த ஸ்ரீலஸ்ரீ தேசிகமூர்த்தி தம்பிரானவர்கள் செந்தூர் மேலக் கோபுரத்தை நிர்மாணித்தார். பொருள் பற்றாக் குறை ஏற்படவே, கூலியாட்களுக்குக் கூலிக்குப் பதிலாக இலை விபூதியைக் கொடுத்து, தூண்டுகை விநாயகர் கோயிலைத் தாண்டிச் சென்றபின் திறந்து பார்க்கும்படிக் கூறினாராம். அதன்படி திறந்து பார்த்தபோது, தத்தம் வேலைக்குரிய கூலி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து மெய் சிலிர்த்தனர் என்கிறது கோயில் வரலாறு.
  • திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் பாடிய பகழிக் கூத்தர் வாழ்விலும் இலை விபூதி பெரும் அற்புதத்தை நிகழ்த்தியது. தீராத வயிற்று வலியால் துடித்த அவரது கனவில் கோயிலில் பூஜை செய்யும் உரிமையுடைய திரிசுதந்திரர் போல ஒருவர் தோன்றினார்.
  • "என் புகழைப் பிள்ளைத் தமிழால் பாடு, உன் நோய் குணமாகும்" என்று கூறி இலை விபூதியைக் கையில் கொடுத்திட்டு மறைந்தாராம். உரையாசிரியர் குகஸ்ரீ ரசபதி அவர்கள், திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் உரையில் இதுபற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
  • கந்தர் கலி வெண்பா பாடிய குமரகுருபரரின் சரித்திரத்தை எழுதியருளிய வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள், செந்தூர் ஆலயத்தில் அர்ச்சகர்கள் இலை விபூதிப் பிரசாதத்தை எடுத்து வழங்குவதைக் குமரகுருபரர், தான் கண்டபடி அழகாகப் பாடியுள்ளார்.
"இலையமில் குமரவேள் முன் வணங்குவார்க்கு என்றும் துன்பம்
இலை.அடுபகை சற்றேனும் இலை.படுபிணி நிரப்பும்
இலை,அளற்றுழன்று வீழ்தல் இலை,பல பவத்துச் சார்பும்
இலை என இலை விபூதி எடுத்தெடுத்துதவல் கண்டார்"
என்று பாடுகிறார்.
விபூதியின் மகிமையைப் பாடவந்த அருணகிரிநாதரும்,
"ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடும் அடியார்கள்
பதமே துணையதென்று..."
  • என்று பாடுகிறார். நாமும் "ஆறுமுகம்" என்று ஆறு முறை ஓதி இலை விபூதியைத் தரித்து செந்திலாண்டவன் திருவருளுக்குப் பாத்திரமாவோமாக.

ரிக் வேதம்

  • பல நூறு ரிஷிகளால் உணரப்பட்ட மிக அரிய மந்திரங்களையும், ஆழ்ந்த தத்துவங்களையும் கொண்டுள்ளது. உலகிலேயே மிகப் பழைமையான நூல் ரிக்வேதம். இந்த வேதம் தான் இந்துதர்மத்தின் ஆணிவேர். 
  • ரிக்வேதத்தின் வானவியல் சார்ந்த குறிப்புகளைக் கொண்டு விண்வெளி ஆராய்ச்சியாளர்களும், இந்துதர்ம யோகிகளும் ரிக்வேதத்தை 12,000 ஆண்டுகளுக்கு முந்தையது எனக் குறிப்பிடுகின்றனர். ஆயினும் அது காலவரையற்றது. 
  • எப்போதும் இருந்தது. அதை ரிஷிகள் 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் உணர்ந்துள்ளனர். ரிக்வேதம் இறைதுதிகளை உள்ளடக்கியது. ’ரிக்’ என்றால் போற்றுதல் எனப் பொருள்படும். ரிக்வேதத்தில் 33 தெய்வங்களைப் (11 ருத்திரர்கள், 12 ஆதித்யர்கள், 8 வசுக்கள், 2 அஸ்வின்கள்) போற்றி பாடல்கள் உள்ளன. இவர்களே 33 பிரம்மாண்டமான தெய்வங்கள் ஆவர். 
  • வேதஞானம் இல்லாதவர்கள் 33 பிரம்மாண்டமான தெய்வங்கள் என்பதை 33 கோடி தெய்வங்கள் எனக் கருதி இந்துதர்மத்தைப் பற்றி பொய்யான பிரச்சாரம் செய்கிறார்கள். ரிக்வேதத்தின் ஒவ்வொரு எழுத்தும் மிகவும் சக்திவாய்ந்த முறையில், ஒலியியல் ஞானம் பொருந்திய வகையில் உள்ளன. 
  • ரிக்வேதம் 10 மண்டலங்களை உடையது. 1028 மந்திரங்களும், 10,600 வரிகளையும் உடையது. ரிக்வேதத்தை அடிப்படையாகக் கொண்டே மற்ற மூன்று வேதங்களும், இந்துதர்ம நூல்களும் அமைக்கப்பட்டுள்ளன. வேதங்களுக்கெல்லாம் வேதமாக ரிக்வேதம், அழிவற்ற பேரறிவு பெட்டகமாக அமைந்துள்ளது.

சிவநாமங்களில் உயர்ந்தது “சிவாயநம’

  • ஒருமுறை நாரதர் பிரம்மாவிடம் சென்றார். “”தந்தையே! சிவநாமங்களில் உயர்ந்தது “சிவாயநம’ என்கிறார்கள். இதன் பொருளை எனக்கு எடுத்துரையுங்கள்,” என்றார்.
  • பிரம்மா அவரிடம்,””மகனே! அதோ! அந்த மலத்தில் அமர்ந்துள்ள பூச்சியிடம் போய் அதைக்கேள்,” என்றார். நாரதரும் அப்படியே கேட்டார். இதைக் கேட்டதோ இல்லையோ, வண்டு சுருண்டு விழுந்து இறந்தது. நாரதருக்கு அதிர்ச்சியாகி விட்டது. அவர் பிரம்மாவிடம் ஓடிவந்து, ”தந்தையே! சிவாயநம என்பதன் பொருளைத் தெரிந்து கொண்டேன். இந்த நாமத்தை யார் கேட்கிறார்களோ அவர்கள் இறந்து போவார்கள்,” என்றார்.
  • பிரம்மா சிரித்தபடியே,”” நாரதா! நீ தவறாகப் புரிந்து கொண்டாய். அதோ! அந்த மரத்தில் அமர்ந்திருக்கும் ஆந்தையிடம் கேள், அது பதிலளிக்கும்,” என்றார்.நாரதர் பயந்தபடியே அதனிடமும் இதே கேள்வியைக் கேட்க, அதுவும் அதே போல கீழே விழுந்து உயிர்விட்டது. நாரதர் பதறிவிட்டார்.
  • பிரம்மா அவரிடம் “”நாரதா! இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் முயற்சி செய்து விட்டு நீ கிளம்பலாம். அதோ! அந்த அந்தணர் வீட்டில் இப்போது தான் பிறந்துள்ள அந்த கன்றுகுட்டியிடம் போய் கேள், அது பதிலளிக்கும்,” என்றார். “”தந்தையே! கன்றுக்கு ஏதாவது ஒன்றானால், அந்தணர் என்னை சும்மா விடமாட்டார். வேண்டாம், வேண்டாம்,” என நடுங்கினார். ”நீ போ!’ ‘ என தள்ளாத குறையாக அவரை அனுப்பவே, கன்றிடமும் இதே கேள்வியைக் கேட்டார். அன்று பிறந்த கன்று அன்றே மாய்ந்தது. 
  • நாரதர் விக்கித்துப் போனார். இவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரமா இது! ஐயோ! பூச்சிகள், பறவைகள், விலங்குகளின் கதி இப்படி! மனிதனிடம் கேட்டால் இன்னுமல்லவா சிக்கலாகும்!” என நினைத்த போதே, பிரம்மா அவரிடம்,””கன்றும் இறந்து விட்டதா! பரவாயில்லை. 
  • இன்று இந்நாட்டு மன்னனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தையிடம் போய் இதற்கு விளக்கம் கேள்,” என்றதும், “”அப்பா! என்ன இது! மன்னன் என்னைக் கொன்றே விடுவான். அது மட்டுமல்ல, அந்த பச்சைப்பிள்ளை பலியாவதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? என்றாலும், பிரம்மா விடவில்லை. ”இதுவரை இறந்தவைக்கு என்னால் எழுதப்பட்ட விதி முடிந்து விட்டது. அவ்வளவு தான். அதனால் குழந்தையிடம் கேள். பொருள் நிச்சயம் தெரியும்,” என்றார். 
  • நாரதர் கைகால் நடுங்க குழந்தையிடம் இதைக் கேட்டார். அந்தக் குழந்தை பேசியது. “”முனிவரே! இந்த மந்திரத்தைக் கேட்டதால் வண்டாக இருந்த நான் ஆந்தையானேன். பிறகு கொக்கானேன். அதன்பின் கன்றானேன். இப்போது மனிதன் ஆனேன். பிறவியில் உயரிய மானிடப்பிறப்பை இந்த மந்திரம் எனக்குத் தந்தது. இந்தப் பிறவியே என்னை இறைவனிடம் சேர்க்கும் ஒப்பற்ற பிறவியாகும்.  
  • சுருக்கமாகச் சொன்னால், “சிவாயநம’ என்று உளமார ஓதுபவர்கள் பிறவியில் இருந்து விடுபடுவர்,” என்றது. பிறவிப்பிணியில் இருந்து விடுபட “சிவாயநம’ என்போம்


ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும்!!!

  • சிவனாருக்கு ( சிவபெருமானுக்கு) அர்ச்சனைக்கு உகந்தது வில்வம் என்பதை அறிவோம். வில்வத்தில் பல வகைகள் உள்ளன அதில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம், என பல வகைகள் உள்ளன குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்குப் பயன்படுத்து கிறோம். ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்களும் உள்ளன. 
  • பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு ( சூரியன் உதிப்பதற்கு முன்னதாக) முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம். வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம். 
  • தினமும் சிவனாருக்கு வில்வம் சார்த்தி அர்சனை செய்து வழிபடுவது சிறப்பு. மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்.
வில்வ வழிபாடும் பயன்களும்:
  • சிவபெருமானுக்கு பிரியமான பத்திரம் வில்வமாகும். ஒரு வில்வத்தினால் பூசை செய்தால் அது லட்சம் ஸ்வர்ண புஷ்பத்துக்குச் சமமாகும் வில்வத்தில் லட்சுமி வசம் செய்கிறாள். வடமொழியில் வில்வம் ஸ்ரீபலம். சிரேஷ்ட வில்வம். கந்தபலம் எனப் பல பெயர்களால் சுட்டப்படுகிறது. மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் ( உயிர்களின்) பாவங்களைப் போக்குவன ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம். எனவே சிவபெருமானின் தலவிருட்சம் ஆகும் இவ்விருட்சத்தைப் பூசிப்பவர்கள் சகல சித்திகளும் ,நன்மைகளும் அடைவார்கள். 
  • வில்வத்தின் பெருமையை சாஸ்திரங்கள் ,புராணங்கள் மிக தெள்ளத் தெளிவாக விளக்கமாகக் கூறுகின்றன. வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பனவாகவும் விளங்குகின்றன. 
  • ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்னவழி என ஈசனிடம் கேட்க ஈசனும் திருவைகாவூர் ( திருகருகாவூர்) திருத்தலத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யமாறு அருளினார். அதன்படி வேதங்களும் வில்வமரங்களாகத் தவமியற்றியதால் திருவைகாவூர் என்ற ஊர் வில்வராண்யம் எனச் சிறப்புப் பெயர் பெற்றது.  
  • சிவன் திருவாதிரை நட்சத்திரம். அது எரி நட்சத்திரங்களாக விளங்குவதால் சிவனின் சூட்டினைத் ( வெப்பத்தை) தணிக்க எம் முன்னோர்கள் குளிர்மை பொருந்திய வில்வத்தை சாத்தி வழிபட்டுள்ளனர். அத்துடக் சிவன் இமயமலையில் இருப்பவன். இமயத்தில் பனி அதிகம். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நன்மையாகத் தனக்குச் செய்யப்படும் பூசைகளுக்கும், அர்ச்சனைக்கும் வில்வத்தை ஏற்றுக் கொண்டான். ஏனெனில் வில்வம் பனியாலும் சளியாலும் வரும் துன்பங்களைப் போக்க வல்ல சிறந்த மருத்துவ குணம் கொண்டதாகும்.  
  • வில்வமரத்தை வீட்டிலும், திருக்கோவில்களிலும் வளர்ப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். ஒரு வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணிப்பதால் சகல பாவங்களும் ,துன்பங்களும் சூரியனைக் கண்ட பனி போல் நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகும். வில்வத்தின் இலை பல வகையான நோய்களுக்கு மருந்தாக விளங்குகின்றது. 
  • சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதற்கு தேவையான வில்வத்தை மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, ஆகிய தினங்களில் வில்வத்தைப் பறிக்கக் கூடாது மேலும் இந்நாட்களில் பூசைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க வேண்டும். 
  • வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்துப் பூசை செய்யலாம். உலர்ந்த வில்வம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதலியவற்றாலும் பூசை செய்யலாம். அவ்வளவு புனிதமானது. சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.
  • வீடுகளில் வில்வ மரம் வளர்ப்பது நல்லது. நாம் வீட்டில் வில்வமரம் நாட்டி வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை மேலும் அஸ்வமேதயாகம் செய்த பலன் ஏற்படும்.
  • மேலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் ( திருவமுது) செய்த புண்ணியம் உண்டாகும். கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும். 108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும். இம் மரத்தின் காற்றை நுகர்ந்தாலோ அல்லது அதன் நிழல் நமது சரீரத்தில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும். சிவனிற்கு பிரியமான வில்வார்ச்சினை மூலம் சிவனின் திருவருட் ( சிவபெருமானின் திருவருளை) கடாட்சத்தைப் பெறமுடியும். வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும். 
  • வீட்டில் வில்வமரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு ஒருபோதும் நரகமில்லை மேலும் எமபயம் ஒரு போதும் வாராது. ஒரு வில்வ இதழைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் ஸ்வர்ணபுஸ்வங்களால் இறைவனை அர்ச்சிப்பதற்கு சமமானதாகும். வில்வம் பழத்தின் சதையை நீக்கி அதனை உலர்த்திக் குடுவை யாக்கி அதில் விபூதியை வைத்துப் பயன்படுத்துவது மேலான செயலாகக் கொள்ளப்படுகிறது. 
வில்வ இதழின் மருத்துவக் குணங்கள்:
  • இவற்றைவிட வில்வம் மருத்துவரீதியில் பயன்மிக்கதாகும். இதனை “சிவமூலிகைகளின் சிகரம்” எனவும் அழைப்பர். வில்வம் இலையை அரைத்து பொடி செய்து காலை வேளையில் பயன்படுத்திவர கண்பார்வை சிறப்பாக அமையும். மூக்கடைப்பு, சளி, இருமல், சைனஸ் போன்றவற்றால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். பல்வலி, பல்சொத்தை, பல்கூச்சம் போன்றவற்றால் அவதியுறுபவர்களுக்கு அருமருந்தாகும்.
வில்வம் பறிக்கும்போது என்ன சொல்ல வேண்டும்? 
  • சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையைப் பறிக்கும்போது, பயபக்தியுடன், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் மனோபாவத்துடன் பறிக்க வேண்டும் மேலும், அவ்வாறு பறிக்கும்போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக மனத்தில் ( மானசீகமாக நினைத்து) எண்ணிக்கொண்டு இந்த சுலோகத்தைச் சொல்ல வேண்டும். 

நமஸ்தே பில்வதரவே ஸ்ரீபலோதய ஹேதவேஸ்வர்காபவர்க ரூபாய நமோ மூர்தி த்ரயாத்மனேஸம்ஸ---ர விஷவைத்யஸ்ய ஸ--ம்பஸ்ய கருணாநிதே:அர்சனார்த்தம் லுனாமி த்வாம் த்வத்பத்ரம் தத்க்ஷமஸ்வ மகே

பொருள் விளக்கம்:
  • போகமோட்சம் உருவாகவும், மும்மூர்த்திகளின் உருவாகவும், லட்சுமி கடாட்சத்தை அளிப்பதற்குக் காரணமாகவும் உள்ள வில்வ மரத்தை வணங்குகிறேன். ஓ வில்வ மரமே! பிறப்பு இறப்பாகிற விஷயத்துக்கு மருத்துவனும், கருணைக்கடலுமுமான சாம்பசிவனின் பூஜைக்காக தங்கள் வில்வ இலையைக் கிள்ளி எடுக்கிறேன். அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். -இவ்வாறு பிரார்த்தனை செய்து, பிறகு இலையைப் பறிக்க வேண்டும்.


கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஏன் கீதையை உபதேசித்தார்?

  • அர்ஜுனனின் சந்தேகம் என்ன தெரியுமா? ஸ்ரீ கிருஷ்ணர், மனிதகுலம் முழுவதற்குமான மாபெரும் தத்துவச் சுரங்கமாக கீதையை அருளியிருக்கிறார். நுட்பமான அரிய பல உண்மைகளை எடுத்துச் சொல்ல கிருஷ்ணர் நம்மை ஏன் தேர்ந்தெடுத்தார்? பிதாமகர் பீஷ்மரிடம் சொல்லி இருக்கலாம். தத்துவ உபதேசங்களுக்குத் தகுதி வாய்ந்தவர் அவர். ஒரு வேளை, அவர் எதிர்முகாமில் இருப்பதால் அவரைத் தவிர்த்தது நியாயமாக இருக்கலாம்.
  • ஆனால் அண்ணன் தருமன் இருக்கிறாரே அவரைவிட கீதையைக் கேட்கப் பொருத்தமானவர் வேறு யார் இருக்க முடியும்? மூத்தவர், தரும நீதிகளை உணர்ந்தவர். அவரை ஏன் கிருஷ்ணர் புறக்கணித்தார் ? அண்ணன் பீமன் வெறும் பலசாலி மட்டுமல்ல; மிகச் சிறந்த பக்திமானும்கூட பூஜா நியமங்களை ஒழுங்காகச் செய்து வருபவர். இப்படி நல்லவர்களை எல்லாம் விட்டுவிட்டு, உலக சுகங்களில் அதிக நாட்டமுள்ளவனும், உணர்ச்சிவசப்பட்டு பல தவறுகளை அடிக்கடி செய்துவிடுபவனும், ஆத்திரக்காரனுமான என்னைப் போய் கீதை போன்ற புனித உபதேசங்களைக் கேட்கத் தகுதி உள்ளவனாக கிருஷ்ணர் கருதியிருக்கிறாரே, இது எவ்வகையில் நியாயம்? அர்ஜுனனின் இந்தச் சந்தேகத்தைக் கேட்டதும் கண்ணபிரான் கூறினார்.
  • அர்ஜுனா ! நீ என்னோடு நெருங்கிப் பழகுபவன். என் மீது தோழமை கலந்த அன்புடன் இருப்பவன் என்பதால் நான் உனக்கு கீதையைச் சொல்லவில்லை. நீ நினைப்பதுபோல் பிதாமகர் பீஷ்மரை அறங்கள் அனைத்துமுணர்ந்த ஒரு மகாத்மாவாக என்னால் கருதமுடியவில்லை. சாஸ்திரங்கள் உணர்வதால் மட்டும் ஒரு மனிதனுக்கு சிறப்பு வந்துவிடாது; கடைப்பிடித்தால்தான் சிறப்பு. கௌரவர்கள் அதர்மம் புரிகிறார்கள் என்பதறிந்தும் பீஷ்மர் அவர்கள் பக்கமே இருக்கிறார். அதேசமயம் பாண்டவர்களை தனியே பார்க்க நேரும்போது தர்மம் வெல்ல ஆசிர்வதிப்பதாகவும் கூறுகிறார். இது இரட்டை வேடம். ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்வது சாத்தியமற்றது. எண்ணம், சொல், செயல் இவை ஒன்றாக எவனிடம் இணைந்திருக்கிறதோ அவனே உத்தமன். பீஷ்மர் அப்படிப்பட்டவராக இல்லை. தர்மர் கீதை கேட்கத் தகுதியானவர் என்பது உன் எண்ணம். அவர் நல்லவர்தான்.
  • ஆனால் முன்யோசனை இல்லாதவர். தவறு செய்துவிட்டுப் பிறகு வருந்திக்கொண்டிருப்பது அவர் இயல்பு. தர்மர் நீதியையும் தருமத்தையும் கடைப்பிடிப்பவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவரால் தக்க நேரத்தில் தன் கடமை என்னவென்று உணர இயலவில்லை. பீமனைப் பற்றிச் சொன்னால் பீமன் அளவற்ற பலசாலி. பக்திமானும்கூட. ஆனால் அவனிடம் மனோபலமும் இல்லை; அறிவு பலமும் இல்லை. வீண் கோபத்தில் அவன் விளைவித்த விபரீதங்கள் அநேகம்.
  • அர்ஜுனா ! நீ இவர்களைப் போன்றவனல்ல மகாவீரன். அதிநுட்பம் வாய்ந்த அஸ்திர வித்தை பல கற்றவன் என்ற போதும்கூட நீ முன் யோசனை உள்ளவனாய் இருக்கிறாய். அதுதான் உன் தனிச்சிறப்பு. இதோ பார், உன்னைவிட வயதான, அறிவிலும் பெரியவர்களான பலரையும் மதித்து நீ இத்தனை வாதிக்கிறாய் என்னிடம். களத்திலே நின்றபோதும் உற்றார், உறவினர் மதிப்பிற்குரிய பெரியோர்களையெல்லாம் எப்படிக் கொல்வது – தேவைதானா இந்த யுத்தமும் இழப்பும் என்றெல்லாம் நீ யோசித்தாய் அத்தனை பேரையும் இழந்து அரசாட்சியைப் பெறுவதால் என்ன பெருமை இருக்க முடியும் என்று கலங்கினாய். நீ பதவி வெறியனல்ல. பழைய விரோதங்களுக்குப் பழி வாங்க வேண்டுமென்று முன்பு நினைத்திருந்தபோதும், களத்தில் அவர்களை மன்னித்து போரே வேண்டாம் என்று எண்ணுகிற உள்ளம் உன்னிடம் இருக்கிறது. இதெல்லாம்தான் நான் உனக்கு கீதையை உபதேசிக்கக் காரணங்கள். நீதியான வழியில் நடக்க அனைத்தையும் தியாகம் செய்யும் மனவலிமையும் தேவை. தன்னுடைய புனிதமான கடமையை உணர்பவனுக்குத்தான் கீதை கேட்கும் தகுதி உண்டு. 
  • இப்போது புரிகிறதா அர்ஜுனா, நான் உனக்கு கீதை சொல்லக் காரணம் தனிச்சலுகை எதுவுமல்ல; தகுதிச் சிறப்புதான் காரணம். அர்ஜுனன் அப்போதும்கூட அகந்தை எதுவுமற்றவனாய் அடக்கத்தோடு ஸ்ரீகிருஷ்ணரை நோக்கி வணங்கி நின்றான்.

ஸ்ரீ லலிதாசஹஸ்ரநாம வரலாறு

  • திரிலோக சஞ்சாரியும் தமிழ் மொழியை உண்டு பண்ணித் தமிழ் வளர்த்தவரும் சிறந்த சித்தரும் ஆகிய அகத்திய முனிவர் ஒருமுறை இமயமலைக்குச் சென்றார். அங்கு ஒரு இடத்தில் சில ரிஷிகள் தலைக்கீழாக தவம் செய்து கொண்டிருப்பதை கண்டார். அகத்தியர் அவர்களை பார்த்து "ரிஷிகளே தாங்கள் ஏன் இவளவு கடுமையான தவத்தைச் செய்து கொண்டு இருக்கீர்கள் ? காரணம் என்ன? " என்று வினவினார்.அதற்க்கு அந்த ரிஷிகள் பூலோகத்தில் எங்கள் பரம்பரையில் அகத்தியன் என்று ஒருவன் இருக்கிறான். அவனுடைய மூதாதையர் நாங்கள். அவனது ஊழ்வினை (ப்ராப்தம்) அவன் திருமணம் செய்துக்கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தந்தை ஆகா வேண்டும். இல்லறத்தால் உண்டாகும் கஷ்டங்களையும் இன்பங்களையும் அனுபவிக்க வேண்டும் என்பதாகும். அனால் அவனோ பிரமச்சரிய விரதம் பூண்டு திருமணம் வேண்டாம் என்று உறுதியாக இருக்கிறான். அவன் அனுபவிக்க வேண்டிய கஷ்ட நஷ்டங்களை நாங்கள் அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம் என்றனர். 
  • உடனே அகத்தியர் அந்த ரிஷிகளின் பாதங்களில் விழுந்து வணங்கி, அந்த அகத்தியன் என்பவன் நான் தான். எனக்காக தாங்கள் துன்புற வேண்டாம். நான் திருமணம் செய்து கொள்கிறேன், ஒரு குழந்தைக்குத் தந்தையும் ஆகிறேன், இது சத்தியம் என்று வாக்குறுதி அளித்தார். 
  • உடனே அந்த ரிஷிகள் தவத்தை விட்டு விட்டு அகத்தியருக்கு ஆசி வழங்கினர். பின்னர் மகிழ்ச்சியுடம் பிதுர் லோகம் சென்றனர். அன்றிலிருந்து அகத்தியர் தனது பிரமச்சரிய விரதத்திற்கு குந்தகம் விளைவிக்காத, தன்னை அனுசரித்து நடக்ககூடிய பெண் எங்கு இருக்கிறாள் என மூவுலகையும் சுற்றி தேடி வந்தார். அப்படித் தேடி வரும்போது பிரம்ம லோகத்திற்கும் சென்றார். அங்கு பிரம்ம தேவர் விஷ்ணு மாயையை ஓர் அழகிய கன்னிகையாக ஆக்கி வைத்திருந்ததைப் பார்த்தார். பிரம்மாவை வணங்கி விட்டுப் பூலோகத்திற்கு வந்து விட்டார்.
  • இது இப்படி இருக்க....... விதர்ப்ப தேசத்தில் கவேரன் என்னும் அரசன் குழந்தை வேண்டிப் பல ஆண்டுகள் தவம் செய்தார். பலன் இல்லை. கடைசியாக மனைவியுடன் சேர்ந்து சிவ பெருமானைக் குறித்து கடுமையாகத் தவம் செய்தார். சிவபெருமான் அவர்முன் தோன்றி "இப்பிறவியில் உனக்கு புத்திர பாக்கியம் இல்லை. ஆதலால் வீணாக உன் உடலை வருத்திக் கொண்டிருக்காதே. தவத்தை விட்டுவிடு" என்றார். கவேரரும் தவத்தை விட்டுவிட்டு மனச் சோர்வுடன் வாழ்ந்து வந்தார். வயதும் ஆகிவிட்டது. இந்நிலையில் அகத்தியர் பெண் தேடிக்கொண்டு விதர்ப்ப மன்னன் கவேர ரிஷியிடம் வந்தார். கவேரரும் அவரது மனைவியும் அகத்தியர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர். அப்போது அவர்களது சோகத்தைத் தனது சித்தியினால் அறிந்த அகத்தியர் "புத்திர பாக்கியம் உண்டாவதாக!" என்று ஆசீர்வதித்தார். 
  • இருவரும் திடுக்கிட்டு "ஸ்வாமி, எங்களுக்கு இப்பிறவியில் புத்திர பாக்கியம் கிடையாது என்று சிவபெருமானே கூறிவிட்டார், அப்படி இருக்க தாங்கள் புத்திர பாக்கியம் பெருக என ஆசீர்வதித்து உள்ளீர்கள். இது நடக்க கூடியதா,? நாங்களும் மிகுந்த வயோதிகர்கள் ஆகிவிட்டோம் , தங்கள் வார்த்தை பொயிக்கலாமா? என்று கண்ணீர் மல்க வினவினர்..அகத்தியர் புன்முறுவலித்து கூறுகிறார். "தாங்கள் கூறியது அனைத்தும் உண்மை. ஆனால் எனது தபோ வலிமையால் நான் இப்போது ஒரு பெண் குழந்தையை கொடுக்கின்றேன். இவளைத் தக்க வயதில் எனக்கே திருமணம் செய்து தர வேண்டும்" என்று கூறி தனது இரு கரங்களையும் முன் நீட்டி கண்மூடி, பிரம்ம லோகத்தில் விஷ்ணு மாயையாக உள்ள கன்னிகையைத் தனது தவ வலிமையால் அப்போது பிறந்த குழந்தையைப் போல் ஆக்கி கவேர அரச-அரசியின் கையில் கொடுத்தார். 
  • ஒரு நாள் ஸ்ரீ சர்யானந்தநாதர் என்னும் ஸ்ரீவித்யா குருவானவர் வந்து அரசனிடம் " நான் சாதுர்மாஸ்ய விரதம் இருக்க விரும்புகிறேன், ஆதலால் உன்னுடைய நந்தவனத்தில் ஒரு குடிசையமைத்து என் கருத்தறிந்து பணிகள் செய்ய ஒரு பணியாளையும் ஏற்படுத்தி தருவாயாக!" என்று கூறினார். அரசர் சிந்தித்தார். சர்யனந்தநாதரோ மிகவும் கோபக்காரர். நந்தவனத்தில் பர்ணகசாலை அமைத்து கொடுத்துவிடலாம். இம்முனிவர் கருத்துணர்ந்து பணி செய்ய ஆட்களுக்கு என்ன செய்யலாம்? நாமே செய்யலாம் என்றால் அதிக வயசாகிவிட்டது. அரசிக்கும் வயதாகி விட்டது. இக்கட்டில் மாட்டிக்கொண்டோமே என்ன செய்வது என மனவருத்தத்துடன் மிகவும் சோகமாக இருந்தார். இவ்வாறு தாய் தந்தையர் சோகமே உருவாக இருப்பதைப் பார்த்த லோபாமுத்திரை அவர்களைப் பார்த்து ஏன் வருத்தமாக இருக்கிறீர்கள்? இது நாள் வரை தங்களை நான் இவ்வாறு பார்த்தது இல்லையே ? என்ன காரணம்? என வினவினாள்.
  • அரசர் "காவேரி! கண்மணி! நமது நந்தவனத்தில் தவம் இயற்ற ஒரு முனிவர் வந்துள்ளார். அவரது மனம் அறிந்து பணியாற்ற ஒரு பணியாளும் கிடைக்கவில்லை. வயோதிகர்களாகிய எங்களாலும் இயலாது. என்ன செய்வது? அவருக்கோ சீக்கிரம் கோபம் வந்து சாபமிட்டுவிடுவார். அதுதான் பயமாக உள்ளது " என்றார்.உடனே லோபாமுத்திரை "நான் உள்ளேன், ஏன் கவலைப் படுகிறீர்கள்? நான் அவர் மனமறிந்து பணிவிடைகள் செய்து அவரை மகிழ்விப்பேன் " என்றால். 
  • காவேரிதேவியின் பணிவிடையால் மனம் மிக மகிழ்ந்த சர்யானந்தநாதர் லோபமுத்திரைக்கு ஸ்ரீவித்தையை உபதேசித்து இவ்வித்தையை செபித்து வந்தால் உனக்கு எல்லா சிரேயசும் உண்டாகும், எல்லா சித்திகளும் பெற்று நினைத்த உருவம் பெறலாம். இவ்வித்தை ஞானத்தை அளிக்கக்கூடியது என்று ஸ்ரீவித்தையின் பெருமையைச் சொல்லி ஆசீர்வதித்து சாதுர்மாஸ்ய விரதத்தை முடித்து அரசன் அரசியை ஆசீர்வதித்து சென்றார். 
  • அன்றிலிருந்து லோபாமுத்திரை ஸ்ரீவித்தையை இடைவிடாது ஜெபித்து சகல சித்திகளையும் ஞானத்தையும் பெற்றுச் சிறந்து விளங்கினாள். காவேரி தேவிக்கு 16 வயது ஆயிற்று. அகத்தியர் விதர்ப்ப தேசத்து கவேர அரசரிடம் வந்து உனது பெண்ணைக் கன்னிகா தானம் செய்து கொடு என்று கேட்டார். அரசனும் அரசியும் மகளைப் பிரிந்து இருக்க வேண்டுமே, பதினாறு வருடம் வளர்த்துக் காடும் மழையும் சுற்றித் திரியும் இம்முனிவருக்குத் திருமணம் செய்து கொடுத்தால் இது நாள் வரையும் ஒரு துன்பமும் சிறிதும் அறியாத இவள் கஷ்டப்பட வேண்டுமே என்று மனம் வருந்தினர்.
  • எனக்கு ஒரு குறையும் வராது. தாங்கள் அவருக்கு வாகளிதபடி என்னைக் கன்னிகாதானம் செய்து கொடுங்கள் என்று கூறி அவர்கள் மனதைத் தேற்றினாள். அகத்தியர் லோபாமுத்திரை திருமணம் சிறப்பாக நடந்தேறியது. ஆடை ஆபரணங்களைக் களைந்து மர உரி தரித்து அகத்தியருடன் லோபாமுத்திரை புறப்பட்டாள். கண்களில் நீர்மல்க கவேரரும் அவரது மனைவியும் சேடியரும் நாட்டு மக்களும் வழியனுப்பி வைத்தனர். 
  • அவ்விருவரும் பாரத நாடு முழுவதும் உள்ள தளங்களுக்கு சென்று மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகியவற்றை தரிசித்து நீராடிக் கடைசியாக காஞ்சிபுரம் வந்தடைந்தனர். காஞ்சிபுரத்தில் பகவன் ஹயக்ரீவர் சாட்சாத் காமேஸ்வர-காமேஸ்வரியிடம் ஸ்ரீவித்தை உபதேசம் பெற்று காமட்சியம்மனுக்கு ஸ்ரீவித்யா உபாசனை முறைப்படி நவாவரண பூஜை ஸ்ரீவித்யா ஜபம், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம த்ரிசதீ நாம அர்ச்சனைகள், ஆராதனைகள் செய்து கடைசியில் லோபாமுத்திரையையே சுவாசினி பூஜா செய்து வந்தார். இது அநேக வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. ஹயக்ரீவர் செய்யும் பூஜையைத் தரிசிக்க முப்பது முக்கோடி தேவர்களும் வருவார்கள்.காஞ்சிபுரத்திற்கு வந்த அகத்தியர் காமாட்சியாம்மனைத் தரிசிக்க சென்றார். வழியில் வந்த தேவர்கள் அவரைப் பார்த்து நீங்கள் எவ்வளவுக் பாகியவான். 
  • உங்கள் மனைவி லோபாமுத்திரையை சாட்சாத் விஷ்ணு பகவானாகிய ஹயக்ரீவர் தினந்தோறும் தான் செய்யும் பூஜையின் கடைசியில் அம்பிகையாகப் பாவித்து பூஜை செய்கிறார். அவரும் அப்பூசையை ஏற்று அவரை ஆசீர்வதிக்கின்றார். என்ன அதிசயம்? பூஜையின் முடிவில் மனைப் பலகையைப் போட்டதும் லோபாமுத்திரை வருகிறார். பூஜை முடிந்ததும் மறைந்துவிடுகிறார் என்றனர். அகத்தியர் இல்லை இல்லை. அது என் மனைவி இல்லை. நீங்கள் வேறு யாரையோ பார்த்து என் மனைவி லோபாமுத்திரை என்று தவறாக எண்ணி உள்ளீர்கள். 
  •  தாங்களே நேரில் வந்து பாருங்கள் என்று கூறினார். என்ன ஆச்சரியம் !!!! தேவர்கள் கூறியது போலவே பூஜையின் முடிவில் சாட்சாத் லோபாமுத்திரையே நேரில் வந்து ஹயக்ரீவரால் கொடுக்கப்பட்ட குலாம்ருதத்தை சிறிது பருகிவிட்டு மீதத்தை கொடுக்க, அதை ஹயக்ரீவர் பய பக்தியுடன் வாங்கி அருந்தி, எல்லோருக்கும் பிரசாதமாக கொடுத்தார். 
  • அதை அகத்தியர் உற்று உற்று பார்த்து "ஆமாம் லோபாமுத்திரையேதான்". இது அநேக வருடங்களாக நடைபெறுவதாக தேவர்கள் கூறினார்கள். ஆனால் அவளோ நம்மை விட்டு ஒரு நிமிடம் கூடல் பிரியாமல் கூடவே தான் இருந்தால். சித்தி பெறுவதற்காக ஜபமோ, தவமோ செய்து நான் ஒரு நாளும் பார்க்கவில்லையே? இது எப்படி முடியும்? என ஆச்சரியப்பட்டார். பரணக சாலைக்கு வந்து லோபாமுத்திரையிடம் நீ ஹயக்ரீவர் செய்யும் சுவாசிநீ பூஜைக்கு போகிறாயா? சித்தி எப்படி உண்டாயிற்று ? நீ தவமோ, த்யானமோ, ஜெபமோ செய்து நான் பார்க்கவே இல்லையே ? என்று கேட்டார். அதற்க்கு லோபாமுத்திரை "எனக்கு 7 வயது இருக்கும் போது எங்கள் நாட்டிற்கு சர்யானந்த நாதர் என்னும் முனிவர் சாதுர்மாஸ்ய விரதத்திற்கு வந்தார். அவருக்கு மனம் குளிரப் பணிவிடைகள் செய்தேன். அதனால் மகிழ்ந்த அவர் ஸ்ரீவித்யா மந்திரத்தை உபதேசித்தார். அன்றிலிருந்து இடைவிடாது அம்மந்திரத்தை ஜெபித்து வருகிறேன். அம்மந்திர மகிமையால் எனக்கு நினைத்த உருவம் எடுக்கக்கூடிய ஆற்றல் கிடைத்தது என்றார். நானும் நிறைய கேள்விப்பட்டுள்ளேன். படித்துள்ளேன். எல்லா மந்திரங்களையும் விட மிக உன்னதமான மந்திரம் ஸ்ரீவித்தையே என்ரும் . ஆனால் நீ அம்மந்திரத்தின் மகிமையால் எம் முயற்சியும் இன்றி சித்திகளையும், மேன்மைகளையும் பெற்றுள்ளாய் என்பதை நேரடியாகக் காண்கிறேன். 
  • எனக்கு அந்த மந்திரத்தை உபதேசிக்கிறாயா? என கேட்டார். மனைவியிடத்தில் கணவன் உபதேசம் பெறுவது சரியல்ல. மனைவிதானே சொன்னாள் என்று சிரத்தை இருக்காது. அது மட்டுமல்ல. தங்களுக்கு உபதேசிப்பதர்க்காகவே இங்கு ஹயக்ரீவர் காத்துக்கொண்டிருக்கிறார். அம்பிகை கட்டளை. தங்களுக்கு உபதேசித்த பிறகுதான் அவருடைய இவ்வுருவம் மறைந்து வைகுண்டத்திருக்குச் செல்ல வேண்டும் என்பது. ஆகவே அவரிடம் சென்று உபதேசம் பெறுங்கள் என்று சொல்லிவிட்டார். சில நாட்கள் கழிந்தன. 
  • லோபாமுத்திரை அகத்தியரைப் பார்த்து "என்ன? உபதேசம் பெற்றுக் கொண்டீர்களா? என்ன என்ன உபதேசம் செய்துள்ளார்? இன்னும் எவ்வளவு பாக்கி உள்ளது?" என்று கேட்டார். என்ன? உபதேசமா? கூட்ட நெரிசலில் அவர் சமீபம் செல்லவே முடியவில்லை. நான் வேறு குள்ளன். எல்லோரும் வணங்கியதும் கை அசைத்து உட்கார சொல்லிவிடுகிறார். அவ்வளவுதான். கிட்டவே போக முடியவில்லை என்றார் அகத்தியர். 
  • நாளை நீங்கள் சென்று எல்லோரும் அமர்ந்த பின்னரும் நின்று கொண்டே இருங்கள். ஹயக்ரீவர் ஏன் நிற்குரீர்கள் என கேட்பார். அப்போது லோபாமுத்திரை அனுப்பினாள் என்று கூறுங்கள் என்று உபதேசம் பெற வழி சொல்லி அனுப்பினாள் காவேரி.லோபாமுத்திரை சொல்லியவாரே அகத்தியரும் தேவர்கள் எல்லோரும் அமர்ந்த பின்னரும் நின்றுக்கொண்டே இருந்தார். 
  • ஹயக்ரீவர் பார்த்து ஏன் நிற்கின்றீர்? உட்காரும் எனக் கூறியபோது, லோபாமுத்திரை அனுப்பினாள் என்றார். அப்படியா? வாரும் வாரும், உங்களுக்காகத்தானே இத்தனை நாட்கள் காத்துக் கொண்டுள்ளேன். முதலிலேயே சொல்லி இருந்தால் இதற்குள் எல்லாவற்றையும் உபதேசித்து விட்டு வைகுண்டம் சென்றிருப்பேனே? பரவாயில்லை இன்றிலிருந்து ஆரம்பிக்கிறேன் என்று கூறி உபதேசிக்க ஆரம்பித்தார். என்ன என்ன உபதேசித்தார் என்பதை அகத்தியர் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம மகாத்மியம் என்ற வரலாற்றில் பட்டியலிட்டுக் கூறுகின்றார்
[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]